பெண் விடுதலை, கைம்மை மறுமணம், ஜாதி மறுப்பு, பகுத்தறிவு, புராண எதிர்ப்பு – இத்தனை செய்திகளையும் ஒரே ஒரு கட்டுரையில் எழுத முடியுமா? அதுவும் 500-க்கும் குறைவான சொற்களைக் கொண்ட ஒரு சிறிய கட்டுரையில்? முடியும் என்றால் அதற்கான விடைதான் கலைஞர். அந்தக் கட்டுரையின் பெயர் இளமைப்பலி. பேரறிஞர் அண்ணா நடத்திய திராவிட நாடு இதழில் 26.04.1942-இல் கலைஞரின் முதல் படைப்பாக வெளியானது இக்கட்டுரை. கட்டுரையை எழுதியபோது கலைஞரின் வயது 18.karunanidhi 376பதினாறு வயதே நிரம்பிய சிறுமிக்கு ஒரு முதியவனை மணம் முடிக்கிறார்கள். அவள் காதலித்த இளைஞனை ஜாதியின் காரணத்தால் மணம் முடிக்க மறுக்கிறார்கள். அந்தோ பரிதாபம்! அம்முதியவர் ஆண்டொன்று தாண்டவில்லை. முதுமையால் மடிகிறார். அந்தக் கைம்பெண்ணின் கவலையை எழுத்தோவியமாக வடிக்கிறார் கலைஞர். அவளுக்கு மறுமணம் செய்வதல்லவா நியாயம் என்கிறார். கைம்பெண்ணின் துயரத்தைக் கலைஞரின் வார்த்தைகளிலேயே காணலாம்.

”கடவுளின் பேரால் மனிதரை ஏமாற்றி வாழும் கூட்டத்தினரின் வைதீக போதனையால் அவள் நல்லுடை அணியாவண்ணம் தடுத்தது. விதவை என்ற பட்டம் விரும்பிக் கொடுத்தது. துயரக் கணையைத் தொடுத்தது. என்னென்றியம்புவது பெற்றோரின் மடமையை? யாதென்றுரைப்பது கைம்மைக் கொடுமையை? மறுமணந்தான் உண்டா மங்கை நல்லாள் இன்பமுற ?”

”மனைவி இறந்தால் மறுதாரம் மணம் புரியும் நீ மங்கையரின் மறுமணத்தை வெறுப்பது நன்றா?” என்று ஆண்களை நோக்கிச் சமத்துவக் கேள்வி கேட்கிறார் சமூகநீதி நாயகர் கலைஞர்.

இந்தக் கட்டுரை வெளியான பின்பு, அண்ணா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு, கலைஞருக்குக் கிடைத்தது. “எழுதாதே” என்கிறார் அண்ணா, கலைஞரிடம். இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு அரசியலுக்கு வர வேண்டும் என்பது அண்ணாவின் அக்கறை. அவர்களது அரசியல் வேட்கையினால், படிப்பு பாழாகி விடக் கூடாது என்பது அவர்தம் உள்ளக் கிடக்கை.

 கலைஞரின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கான அரசியல் பாடம். அவரது எழுத்து இளைய தலைமுறைக்கான அரசியல் வழிகாட்டி. கற்றுத் தெளிவோம் கலைஞரை!

- வெற்றிச்செல்வன்