நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது பா.ஜ.க.

இப்படி ஒரே வரியில் பா.ஜ.க ஆட்சி அமைத்ததைச் சொல்லிவிடுகிறோம். ஆனால் இனி நடைபெறவிருக்கும், இந்த ஆட்சியின் அக்கிரமங்களைப் பக்கம் பக்கமாக எழுத வேண்டுமே. அதில் முதல் பக்கத்தை அமைச்சரவைப் பட்டியலில் இருந்து தொடங்க வேண்டியிருக்கிறது.

brahmins in parliamentஇந்த அமைச்சரவை மக்கள் பயன்பெறுவதற்காக அமைக்கப்பட்டதா? அல்லது மக்களைப் பயமுறுத்துவதற்காக அமைக்கப்பட்டதா?

தேர்தல் முழுக்க ‘இந்து’ மக்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள் போல் நாடகமிடுவது. ஆனால் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளைப் பார்ப்பனர்கள் தாங்களே எடுத்துக் கொள்வது. 25 அமைச்சர்களில் 9 பேர் பார்ப்பனர்கள். பாராளுமன்றமா அல்லது பார்ப்பனர் மன்றமா? ஆட்சியைப் பா.ஜ.க கைப்பற்றியது. ஆனால் அமைச்சரவையைப் பார்ப்பனர்கள் கைப்பற்றியிருக்கிறார்கள். ‘இந்து’ என்று சொல்லி ஏமாற்றப்படும் மக்களே தயவு செய்து நீங்கள் பார்ப்பனர் அல்லாதோர் என்பதை உணருங்கள்.

ஒரே நாடு என்று உரிமை கொண்டாடுபவர்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்த மூவரை மட்டுமே அமைச்சர்களாகியிருக்கின்றனர். அந்த மூவரும் யார் என்றால் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், சதானந்த கவுடா. இதில் நிர்மலா சீதாராமனும், ஜெய்சங்கரும் தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் தான். இவர்கள் தென்னிந்திய நலனுக்காக உழைப்பவர்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை.

ஓரே நாடு என்று அவர்கள் உரிமை கொண்டாடுவது எல்லாம் தென்னிந்தியாவின் வளர்ச்சியில் குளிர்காய்வதற்குத் தான். தென்னாட்டு மக்களே, திராவிடர் இனத்தை இழிவு செய்யும் ஆரிய ஆதிக்கத்தை அறிந்திடுங்கள்.

ஆரியப் பார்ப்பன ஆட்சியின் அமைச்சரவை என்பது அதிகார வேட்டைக்காக அமைக்கப்பட்டது. இந்த அதிகார வேட்டைக்குத் தலைமை ஏற்றிருப்பவர்கள் தான் மோடியும், அமித்ஷாவும். இப்போதே கர்நாடகத்தில்ஆட்சி கவிழும் என்று எடியூரப்பா நம்பிக்கையோடு பேசி வருகிறார். மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரசில் குழப்பம் விளைவித்து கட்சி மாறி வருகின்றனர். இவர்கள் தேர்தலில் மட்டும் நேர்மையாகவா வெற்றி பெற்றிருப்பார்கள்?

10 ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.கவில் இணைந்த நிர்மலா சீதாராமன், தேர்தலில் போட்டியிடாத நிர்மலா சீதாராமன், சென்ற அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர், தற்போது நிதியமைச்சர். பார்ப்பனர்களின் வளர்ச்சியைப் பாரீர்! இந்தியாவில் நிர்மலா சீதாராமனைத் தவிர இந்தப் பத்து ஆண்டுகளில் வேறு யாரும் இப்படிப்பட்ட வளர்ச்சியைப் பெற்றிருக்கமாட்டார்கள். அவர்கள் நாட்டின் வளர்ச்சி பற்றிப் பேசுவதெல்லாம் பார்ப்பனர்கள் வளர்ச்சிக்காக மட்டுமே.

யாருமே எதிர்பாராத வண்ணம், முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலாளர், மோடியின் கட்டளைகளை நிறைவேற்றுபவர், ஆனால் பா.ஜ.கவில் இல்லாதவரான ஜெய்சங்கர் வெளியுறவுத் துறை அமைச்சராக்கப்பட்டிருக்கிறார். பா.ஜ.க வில் உள்ளவர்கள் கூட இதனையெல்லாம் தட்டிக் கேட்க முடியாது. பா.ஜ.க.வில் இருக்கும் பார்ப்பனர் அல்லாதோரே, நீங்கள் பாடுபடுவதெல்லாம் பார்ப்பனர்களின் உயர்வுக்குத் தானே அன்றி வேறு எந்த ஒன்றிற்காகவும் அன்று.

சென்ற அமைச்சரவையைப் போலவே, மதவாதிகளால் இந்த அமைச்சரவையும் அமைக்கப்பட்டிருக்கிறது. மதவாதிகளாக அமைச்சர்கள் இருந்தால் மக்கள் மனிதர்களாக வாழமுடியாது. மதம் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் பாயும், மனிதவளம் வளராது தேயும்.

நாம் எதை வேண்டுமானாலும் இழக்கலாம் ஆனால் சுயமரியாதையையும், மனிதவளம் - கல்வியையும் இழந்து விடக்கூடாது. இப்படிக் கேட்பாரின்றி கட்டவிழ்த்துவிடப்படும் பார்ப்பன ஆதிக்கத்தைப் பதம் பார்க்கும் இயக்கம் இந்தியாவில் இருக்கிறதென்றால் அது திராவிட இயக்கம் ஒன்றுதான். திராவிட இயக்கம் நேரடியாகத் தேர்தல் அரசியலில் ஈடுபடாத போதே, இந்திய அரசியலமைப்பின் முதல் சட்டத் திருத்தம் ஏற்படுவதற்குக் காரணமாயிருந்தது என்பதை நாம் டில்லியில் இருப்போர்க்குச் சொல்லி வைப்போம்.