தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு வகையான திரைப்படங்கள் பெரிய அளவில் வெளியாகும்.. நகைச்சுவைப் படங்கள், “பேய்ப்” படங்கள் என்கிற வரிசையில் தற்போது த்ரில்லர் படங்களின் காலமாக இது இருக்கிறது. தமிழ் சினிமா மட்டுமல்ல, தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சியும் த்ரில்லர் ஆட்சியாகவே இருக்கிறது. இத்திரைப்படங்களின் இயக்குநர்கள் காட்சியமைப்புகளை யாரும் எளிதில் கணித்துவிட முடியாதபடி திறம்பட அமைத்திருப்பர். ஆனால் தமிழ்நாட்டு அரசியலை நேரடியாகவும் மறைமுகமாகவும் இயக்குபவர்கள் இந்த த்ரில்லர் பட இயக்குநர்களுக்கே சவால் விடும் அளவிற்கு திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.

mugilan with police141 நாட்களுக்குப் பிறகு சென்ற வாரம், தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் மனித உரிமைச் செயற்பாட்டாளர் முகிலன். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடும் அதன் பின்னணியுமே புரியாத புதிராக இருக்கும் போது, தற்போது முகிலன் காணாமல் போய், மீண்டும் வந்தது புதிருக்குள் புதிராக இருக்கிறது. இதன் பின்னணியில் யார் இருப்பார்கள் என்பதை அனைவரும் எளிதில் கணித்துவிட முடியும். ஆனால் அதைச் சட்டத்தின் முன் நிரூபணம் செய்வது தான் இயலாத காரியமாக இருக்கிறது.

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு, திட்டமிட்ட படுகொலை என்பதற்கான ஆதாரங்களை வெளியிட்ட அன்று இரவு காணாமல் போனார் முகிலன். எல்லா முற்போக்கு அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. இந்த நிலையில் 141 நாட்களுக்குப் பிறகு திருப்பதி இரயில் நிலையத்தில் முகிலன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு முழக்கங்கள் இட்டார். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் உண்டாகும் என்று சொல்வார்கள். ஆனால் திருப்பங்கள் எல்லாம், அவர்கள் ஏற்படுத்துவதுதான் என்பது முகிலன் விவகாரத்தின் மூலம் விளங்குகிறது. பாலியல் புகாரில் முகிலன் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து தங்களுக்கு வேண்டாதவர்கள் மீது மட்டும் பாலியல் புகார்கள் போடப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மடங்களில் நடக்கும் பாலியல் குற்றங்கள் எதுவும் வெளிவருவதில்லை. வந்தாலும் அவை மூடி மறைக்கப்படுகின்றன. பொள்ளாச்சி, திருப்பூர், நிர்மலா தேவி விவகாரம் என எந்த ஒன்றிலும் முக்கியக் குற்றவாளிகள் யாரும் அடையாளப்படுத்தப்படவில்லை. ஆனால் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், மத எதிர்ப்பாளர்கள் போன்றோர் மீது மட்டும் பாலியல் வழக்குகள் போடப்படுவது, பெண்கள் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகிறார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது. எதுவாக இருந்தாலும் விசாரணை செய்து மெய்ப்பிக்கப்பட்டு உரிய தண்டனை வழங்குவதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் சமூகத்திற்காகப் போராடுபவர்களை நசுக்குவதற்காகவும், மிரட்டுவதற்காகவும் இது செய்யப்படுமானால் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

முகிலன் காணாமல் போய் வந்து கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் நாம் எழுப்பும் வினாக்களுக்கு மட்டும் இன்னும் அரசிடம் இருந்து விடை வரவில்லை. முகிலன் நல்ல மனிதர்! அதனால் அவராகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். ஆனால் விடைகளும் தானாக வந்துவிடாது என்பதை அரசுக்குச் சொல்லிக்கொள்வோம்.

இப்போது கதையில் அடுத்த திருப்பம் மாட்டுக்கறி! பொதுவாக தயாரிப்பாளர் நஷ்டமடைந்துவிடக் கூடாது என்பதற்காகத் திரைக்கதைகள் உருவாக்கப்படும். ஆனால் இங்கு மட்டும்தான் நஷ்டமடைந்த ஒரு தயாரிப்பாளருக்காகத் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.