கல்வெட்டுப் படியெடுத்தல், ஏடுபார்த்து எழுதுதல், செப்பேடுகளைத் தேடி ஆய்வு செய்தல் ஆகியனவற்றில் தேர்ந்த இலக்கிய - இலக்கண ஆய்வறிஞர், உரைவேந்தர், நாவலர், பேரவைத் தமிழ்ச்செம்மல், சித்தாந்த கலாநிதி என்று தமிழ் உலகத்தால் போற்றப்பட்டவர் ஔவை சு.துரைசாமி பிள்ளை அவர்கள்.

Avvai duraisamy pillaiகவிஞர் சுந்தரம் பிள்ளை, சந்திரமதி அம்மையாரின் ஐந்தாம் மகனாக பிறந்தவர் இவர்.

பிறந்த ஆண்டு 1902 செப்டம்பர் 5.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவரின் சொந்த ஊர் ஔவையார் குப்பம் என்பதனால், இவர் ஔவை துரைசாமி என்று அழைக்கப்பட்டார்.

இவரின் தொடக்கக் கல்வி உள்ளூரில். அதில் திண்ணைக்கல்வியும் அடங்கும்.

திண்டிவனத்தில் அமெரிக்கன் ஆர்க்காடு நற்பணி உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்பு வரை பயின்றார். ஊரிசு கல்லூரியில் அவரின் கல்வி தொடர்ந்தது.

குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி. அதனால் கல்லூரி இடை நிறுத்தமாகி, ‘உடல் நலத் தூய்மை’ மேற்பார்வையாளராகப் பணியாற்றினார்.

அக்காலத்தில் ‘துப்புரவு’ பணித்துறை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பணியில் 6 மாதங்கள் பணியாற்றிப் பின் அதிலிருந்து விலகினார், காரணம் அவரின் ஆழ்ந்த தமிழ்க் காதல்தான்.

பாவரசு வேங்கடாசலம் அவர்களிடம் ஔவை துரைசாமி தமிழ் இலக்கிய, இலக்கணங்களைப் பயின்றார். நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களிடமும் தன் தமிழ் அறிவை வளர்த்துக்கொண்டார்.

சைவ சமயம் குறித்த கல்வியைக் கந்தசாமித் தேசிகர், தவத்திரு வாலையானந்தா அடிகள் ஆகியோரிடம் பயின்றார்.

அன்றைய வட ஆர்க்காடு மாவட்டத்தில் சில பள்ளிகளில் தமிழாசிரியர் பணி -

இராணிப்பேட்டை காரைத் தொடக்கப்பள்ளியில் தமிழ் ஆசிரியர் -

1929 தொடக்கம் சில ஆண்டுகள் செங்கம், போளூர், காவிரிப்பாக்கம், செய்யாறு ஆகிய இடங்களில் பள்ளித் தலைமையாசிரியர் பணி.

கரந்தைத் தமிழவேள் உமா மகேசுவரனார் அவர்களால் கரந்தைத் தமிழ்ச் சங்கப் பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப் பெற்ற ஔவை துரைசாமி, அப்பணியில் இருந்துகொண்டே சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘வித்வான்’ படிப்பில் தேர்ச்சி பெற்றார்.

1942ஆம் ஆண்டு திருப்பதி திருவேங்கடவன் கீழ்திசைக் கல்லூரியில் பேராசிரியர் ஆனார்.

1943 தொடக்கம் 8 ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வுத்துறை விரிவுரையாளராக இருந்தபோது இவர் எழுதிய சைவ சமய இலக்கிய வரலாறு என்ற நூல் அப்பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பெற்றது.

1951ஆம் ஆண்டில் இவர் மதுரை, தியாகராயர் கல்லூரியில் பேராசிரியர் ஆனார்.

தொடர்ந்து மதுரைப் பல்கலைக்கழக ஆய்வுப் பேராசிரியராக இருந்தபொழுது இவரால் எழுதப் பெற்ற ‘ஊர் பெயர் வரலாற்று ஆராய்ச்சி’ என்ற நூல் இறுதிவரை அச்சாகாமலே போய் விட்டது.

புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க இலக்கியங்களுக்கு மிகச் சிறந்த உரை எழுதியிருக்கிறார்.

திருவருட்பா 9 தொகுதிகளுக்கும், ஞானாமிர்தம், சிவஞானபோதம் ஆகியவைகளுக்கும் இவரின் உரை குறிப்பிடத்தக்கது.

‘யசோத காவியம்‘ என்ற சமண இலக்கிய நூலை ஒலைச்சுவடியில் இருந்து ஆய்ந்து உரை எழுதியவர் ஔவை துரைசாமி.

வடமொழியில் பல்லவ மகேந்திரன் இயற்றிய ‘மத்த விலாசம்’ என்ற நாடக இலக்கியத்தை தமிழில் மொழியாக்கம் செய்தவர் இவர்.

சிலப்பதிகாரச் சுருக்கம் - மணிமேகலைச் சுருக்கம் - சீவகசிந்தாமணிச் சுருக்கம் - சூளாமணிச் சுருக்கம் - சிலப்பதிகார ஆராய்ச்சி - மணிமேகலை ஆராய்ச்சி - சீவகசிந்தாமணி ஆராய்ச்சி - திருவோத்தூர் தேவார திருப்பதிக உலா - சைவ இலக்கிய வரலாறு - பண்டைய சேர மன்னர் வரலாறு என 34 நூல்கள் இவரால் எழுதப்பெற்றுள்ளன.

இவை தவிர ஊர்ப் பெயர் வரலாற்றாராய்ச்சி - தமிழ்த்தாமரை - மருள்நீக்கியார் நாடகம் - ஊழ்வினை என இவர் எழுதிய 7 நூல்கள் அச்சாகாமலே போய்விட்டன.

ஔவை துரைசாமி அவர்கள் தான் எழுதிய நூல்களுக்கான உரைகள் அனைத்தையும் முழுமையாக எழுதியிருந்தாலும், மணிமேகலைக்கு கடைசி 4 காதைகளுக்கு மட்டுமே உரை எழுதினார்.

பாகனேரி மு.காசி விஸ்வநாதம் அவர்கள் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களைக் கொண்டு சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதச் செய்தது போல மணிமேகலைக்கும் அவரைக் கொண்டே உரை எழுதச் செய்தார்.

30 காதைகள் கொண்ட மணிமேகலையின் 26 காதைகளுக்கு மட்டுமே உரை எழுதிய நாட்டார் அவர்கள், உடல்நிலை தொய்வு காரணமாகத் தொடர்ந்து உரை எழுத இயலாநிலை ஏற்பட்டது.

இதனால் பாகனேரி காசி. விசுவனாதருடன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளராக இருந்த வ.சுப்பையா அவர்களும் இணைந்து அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பேரறிஞராக இருந்த ஔவை துரைசாமி அவர்களை வேண்டி, இறுதி நான்கு காதைகளுக்கு உரை எழுதச் செய்தனர்.

1. சமயக் கணக்கர் தந்திரம் கேட்டகாதை

2. கச்சிமாநகர் புக்க காதை

3. தவத்திறம் பூண்டு தருமம் கேட்டகாதை

4. பவத்திறமறுகெனப் பாவை நோற்ற காதை.

இந்நான்கு காதைகளில் கச்சிமாநகர் புக்க காதையைத் தவிர்த்து ஏனைய 3 காதைகளுக்கும் அவ்வளவு எளிதில் உரை எழுதிவிடமுடியாது.

சைவவாதி, பிரம்மவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி எனப் பல்வெறு சமயக் குரவர்களின் தத்துவ விளக்கங்கள் -

பௌத்தத்தின் 12 நிதானங்கள், அவற்றின் மண்டில, கண்ட, சந்தி, தோற்ற, கால வகைகள் - நால்வகை வாய்மை, ஐவகை கந்தம், அறுவகை வழக்கு போன்ற தத்துவ விளக்கங்களை, வட மொழி பௌத்த நூல்களின் நுண்மான் நுழைபுலத்துடன் உரைவேந்தர் எழுதிய உரையினைப் படித்துப் படித்து மகிழ்ந்து போற்றலாம்.

இப்படிப்பட்ட பேரறிஞருக்கு 1960 ஆம் ஆண்டு மதுரை, திருவள்ளுவர் கழகம் ‘பல்துறை முற்றிய புலவர்’ பட்டத்தையும் -

1980ஆம் ஆண்டு தமிழக ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி ‘பேரவைத் தமிழ்ச் செம்மல்’ பட்டத்தையும் -

தமிழ் எழுத்தாளர் சங்கம் ‘தமிழ்த் தொண்டு செய்த பெரியார்’ பட்டத்தையும் வழங்கியிருக்கிறார்கள்.

ஔவை துரைசாமி அவர்களின் மாணவர் இராதா. தியாகராசன் ‘உரைவேந்தர்’ என்ற பட்டத்தையும், தங்கப் பதக்கத்தையும் வழங்கிப் பெருமை சேர்த்துள்ளார்.

உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் 1981ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் காலமானார்.