modi in punjabகடந்த 5 ஆம் தேதி தன் பஞ்சாப் பயணத்தைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு தில்லி திரும்பிய பிரதமர் மோடி, “தான் உயிர் பிழைத்து வந்ததே பெரிய காரியம்” என்பதுபோல் சொல்லியதைக் கேட்டு நாடே அதிர்ந்து போய்விட்டது! பாஜக ஆட்சியில் பிரதமருக்கே உயிருக்குப் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டதோ என்ற எண்ணம் நாடெங்கும் எழுந்தது!

இந்திய உள்துறை, உளவுத்துறை, சிறப்புப் பாதுகாப்புப் படை (SPG) எல்லாம் என்ன செய்கின்றன என்று மக்கள் கேட்கத் தொடங்கி விட்டனர்.

மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தைத் தவிர்த்த பிரதமர், பதிண்டாவிலிருந்து பெராஸ்பூர் வரையில் சாலை வழியாகவே 110 கி.மீ. தூரத்தையும் கடக்க முயன்றது திடீரென்று எடுக்கப்பட்ட முடிவு. எனவே அது விவசாயிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிறகு எப்படி அவர்கள் பெருமளவில் கூடிநின்று, பிரதமரின் காரை வழிமறித்தனர்?

இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. சம்யுக்த கிஸ்ஸான் மோர்ச்சா என்னும் விவசாயிகளின் கூட்டமைப்பு நேற்று சில காணொலிகளை வெளியிட்டுள்ளது. அவற்றில் அந்தக் கேள்விக்கான விடை இருக்கிறது.

பிரதமர் கார்கள் வரும் பாதையில் கூடியிருப்போரின் படத்தைப் பெரிது செய்து பார்த்தால் (Zoom), பறக்கும் கொடிகளெல்லாம் பாஜக கொடிகள் என்பது தெரிய வருகிறது! அவர்கள் கட்சிக்காரர்கள்தாம் பிரதமரை வரவேற்க அங்கு காத்திருந்திருக்கிறார்கள்! அவர்களிடமிருந்து தப்பி உயிர் பிழைத்து வந்தது பெரிய காரியம் என்றா நம் பிரதமர் சொல்கிறார்?

இல்லை, இன்னொரு உண்மையும் இப்போது வெளிவந்துள்ளது.

பிரதமர் கலந்துகொள்வதற்காக இருந்த பெரோஸ்பூர் கூட்டத்தில் 70000 நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. ஆனால் எவ்வளவு முயற்சித்தும் 300 நாற்காலிகள்தாம் நிரம்பியுள்ளன. அந்தக் கூட்டத்தில் எப்படி பிரதமர் கலந்து கொள்வது?

இந்த உண்மையைச் சொல்ல முடியாமல்தான், விவசாயிகள் பாதையை மறித்து விட்டனர் என்று புதுக்கதை சொல்லப்படுவதாக பஞ்சாப் அரசும், மக்களும் கூறுகின்றனர்! அதனால்தான், பிரதமரின் பஞ்சாப் பயணம் பஞ்சாய்ப் பறந்து தில்லிக்கே திரும்ப வந்து விட்டது!

சுப.வீரபாண்டியன்