modi eps opsநாளேடுகளைத் திறந்தால், ‘‘வெற்றிநடை போடுகிறது தமிழகம்’’. ஆனால் நடைமுறையிலோ, ‘‘தடுப்பணைகள் இடிந்து விழும் தமிழகம்’’ என்ற நிலையே உள்ளது!

தமிழ்நாடு கடனில் தத்தளிக்கிறது. 4.56 இலட்சம் கோடி ரூபாயாகத் தமிழ்நாட்டின் கடன் உயர்ந்துள்ளது. இந்த ஒன்றைத் தவிர, மற்ற எல்லாம் தாழ்ந்தே நிற்கிறது. ஆனால் முதல்வர் பழனிச்சாமியோ, தேர்தல் வருவதால், புதிய புதிய திட்டங்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறார்.

அண்மையில், விவசாயிகளுக்கானப் பயிர்க் கடன் ரத்து என்று அறிவித்துள்ளார். எப்போதும் அறிவிக்கப்படும் திட்டம் எவ்வளவு முதன்மையானதோ, அதே அளவிற்கு அறிவிக்கப்படும் நேரமும் முதன்மையானது.

தலைவர் கலைஞர் 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன், விவசாயிகளின் 6670 கோடி ரூபாய்க் கடனைத் தள்ளுபடி செய்தார். இவரோ, ஆட்சியை விட்டுப் போகும் வேளையில் கடன் தள்ளுபடி என்கிறார்.

ஆட்சிக்கு வந்ததும் அறிவிக்கும் திட்டங்களுக்கு அந்த அரசாங்கமே முழுப் பொறுப்பு. இவ்வளவு தள்ளுபடி செய்கிறோம் என்றால், அதற்கான வருமானம் என்ன என்று பார்க்க வேண்டியிருக்கும்.

ஆனால், போகும் நேரத்தில் அறிவித்தால், அடுத்து வரும் அரசே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். இன்றைய முதல்வருக்கு ஒன்று நன்றாகத் தெரியும் - அடுத்த முதல்வர் தான் இல்லை என்பது! அதனால்தான் வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்கிறார்.

எந்த வளர்ச்சியும் தமிழகத்தில் இப்போது இல்லை என்பதுடன், தமிழக அரசுக்கென்று ஒரு தன்மானமும் இல்லாமல் போய்விட்டது. எழுவர் விடுதலையில் என்ன நடந்தது என்று நாடே பார்த்தது.

கடந்த 29 ஆம் தேதி தமிழக முதல்வர் ஆளுநரைச் சந்தித்து, மனு அளிக்கிறார். ஆனால் ஆளுநரோ, 25 ஆம் தேதியே மத்திய அரசுக்கு எதிர்நிலையில் கடிதம் எழுதிவிட்ட செய்தியை முதல்வருக்குத் தெரிவிக்கவில்லை. இவ்வளவுதான் இன்றைய அரசுக்கு, மத்திய அரசு தரும் மதிப்பு!

வி.பி.சிங் அவர்கள் இந்தியப் பிரதமராக இருந்தபோது, கலைஞரின் வேண்டுகோளை ஏற்று, சென்னை, உள்நாட்டு விமான நிலையத்திற்குப் பெருந்தலைவர் காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு அறிஞர் அண்ணா பெயரையும் சூட்டினார். இன்றைய மத்திய அரசு இருபெரும் தலைவர்களின் பெயர்களையும் நீக்கிவிட்டது.ஏன் என்று கேட்பதற்கும் இங்கு நாதி இல்லை.

தில்லி அரசு எதனைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் அதற்குத் தலையாட்டும் ஓர் அரசுதான் இப்போது தமிழ்நாட்டில் உள்ளது. இது தமிழகத்திற்கே அவமானம்! நீட் தேர்வைத் தடுப்போம் என்று சொல்கிற, புதிய ஓய்வூதியத் திட்டத்தை நீக்குவோம் என்று சொல்கிற, மாநில சுயாட்சிக்குக் குரல் கொடுப்போம் என்று சொல்கிற தன்மானமுள்ள அரசே இன்றைய உடனடித் தேவை என்று சொல்லலாம்.

அப்படி ஓர் அரசைத் தருவோம் என்று திமுக தலைவர் தளபதி சொல்கிறார். மக்களும் நம்புகின்றனர். ஆனால் முதல்வர் பழனிச்சாமி சொல்வதை இந்தத் தேர்தல் நேரத்திலேயே மக்கள் நம்பவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டுதான், நேற்றைய நிகழ்வு! முதல்வர் பேசிக் கொண்டிருக்கும் போதே, மக்கள் கலைந்து செல்கின்றனர். சோர்ந்துபோன முதல்வர், பேச்சை நிறுத்திக் கொண்டு புறப்படுகிறார்.

மக்கள் முன்னால் இருக்கும் கேள்வி இதுதான்! நமக்கு எது வேண்டும்? தலையாட்டும் அரசா, இல்லை தன்மான அரசா? சரியான விடை தரத் தமிழகம் காத்திருக்கிறது!

- சுப.வீரபாண்டியன்