மாவோ பெயரால் தங்களை மாவோயிஸ்டுகள் என்று அழைத்துக் கொள்ளும் கொலைக் கும்பல்களுக்கும் மாவோயிசத்துக்கும் சம்பந்தமே கிடையாது. மாவோ மார்க்சீய லெனினிய வழியில் ரஷிய வழியைப் பின்பற்றாமல் புரட்சிக்கு சீன வழியையே உருவாக்கி வெற்றிபெற்றார். ஒவ்வொரு நாட்டிலும் அதன் நிலைமைகளுக்கேற்பவே புரட்சி சாத்தியமாகும் என்றும், ஒரு நாட்டைப் பார்த்து இன்னொரு நாடு காப்பியடிக்க முடியாது என்றும் மாவோ கூறினார்.

ஆனால் இந்திய மவோயிஸ்டுகள் உண்மையான புரட்சியை ஒழித்துக்கட்டும் அராஜகங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய அரசைப் பற்றியும், அரசின் வர்க்கத்தன்மை பற்றியும் மாவோயிஸ்டுகள் எடுத்துள்ள நிலைபாடு மிகத் தவறானதாகும். இந்திய மாவோயிஸ்டுகள் இந்திய முதலாளிகளை ஏகாதிபத் தியத்தின் வெறும் கைப்பாவைகள்தான் என்று பார்க்கி றார்கள். ஆனால் இந்திய முதலாளிகள்தான் நேரடி யாக இந்திய மக்களைச் சுரண்டி ஓட்டாண்டி யாக்குகிறார்கள். இவ்வாறு தவறான மதிப்பீடு செய்து உலக வரலாற்றிலிருந்து பாடம் கற்காமல் சீன மாடல் புரட்சி என்று கதைக்கிறார்கள்.

இந்த மாவோயிஸ்டுகளை ஆதரித்து ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி பேசுவதை பிரதமர் மௌனமாய் ரசிக்கிறார். சோனியா வாய் திறப்பதில்லை. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியோ மாவோயிஸ்டுகள் பற்றி மம்தா பேசுவதெல்லாம் சரியானதுதான் என்று வாதிடுகிறார். மம்தா பேசும் மேடையில் மாவோயிஸ்ட் தலைவர்களும் அமர்ந்திருக்கிறார்கள். ராகுல்காந்தி பேசிய மேடையில் கூட மாவோயிஸ்ட் தலைவர்கள் இருந்ததாக பீகாரில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. அவர்களைப் பொறுத்தவரை மத்திய ஆட்சி நீடிக்க வேண்டும். அதற்கு மம்தா கட்சியின் 19 எம். பி. க்களின் ஆதரவு நீடிக்க வேண்டும். ஆட்சியில் இருந்து ஊழல்களில் பங்கு வாங்கி ஆயிரக்கணக்கான கோடிகள் கொள்ளையடிக்க வேண்டும். இதைத்தவிர காங்கிரசுக்கு வேறு கொள்கை கிடையாது.

வர்க்க விரோதிகளை ஒழித்துக்கட்டுவது என்ற பெயரில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களைக் கொலை செய்வது, கட்சி அலுவலகங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், கட்சித் தலைவர்கள், தோழர்கள், ஆதரவாளர்கள் வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்துவது என்று மாவோயிஸ்டுகள் மேற்குவங்கத்தில் வன்முறை வெறியாட்டங்களை நடத்துகிறார்கள். அவர்களது அட்டூழியங்களை எதிர்க்கும் ஆதிவாசி மக்களையும் நூற்றுக்கணக்கில் கொன்று குவிக்கிறார்கள். இந்தக் கொடியவர்களை மார்க்சிஸ்ட் தொண்டர்கள் எதிர்த்து நின்றால் அவர்களை வன்முறையாளர்கள் என்று திரிணாமுல் காங்கிரசும், காங்கிரஸ் கட்சியும் கூறுகிறார்கள்.

மேற்குவங்கத்தில் மாவோயிஸ்ட் - திரிணாமுல் குண்டர்களை எதிர்த்த 266 மார்க்சிஸ்ட் தோழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களது படு கொலை அரசியலை எதிர்த்து உறுதியுடன் போராடு வதென வங்கத் தோழர்கள் சபதமெடுத்துள்ளனர்.

இப்போது பொதுமக்கள் திரண்டெழுந்து மாவோயிஸ்ட்டுகளை விரட்டியடிக்கின்றனர். மாவோ யிஸ்டுகள் லால்கரை விட்டு ஓடத் துவங்கியுள்ளனர். இதனால் மம்தா பானர்ஜி அலறுகிறார். மார்க் சிஸ்டுகள் தங்கள் தற்காப்பு மையங்களைக் கலைக்க வேண்டும் என்று குரல்கொடுக்கிறார். ஆயுதமேந்திய மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளைப் பயன்படுத்தி வரும் தேர்தலில் மார்க்சிஸ்ட் தலைவர்களையும் ஊழியர்களையும் கொலை செய்துவிட்டுத் தேர்தலில் பெற்றிபெறலாமென்று மனப்பால் குடிக்கிறார். மாவோயிஸ்ட்டுகளுடன் இணைந்து மம்தா லால் கரில் பேரணி நடத்தினார். மாவோயிஸ்டுகள் செய்வது அட்டூழியங்களே அல்ல, அவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்போது சோனியாவின் புதல்வர் ராகுல் காந்தியும் களமிறங்கியுள்ளார். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் - இவர்களது கனவுகள் வங்க மக்களிடம் பலிக்காது.

கடலை விற்றவன்

கடலை விற்றவன் என்றால் சாதாரணக் கடலையை விற்றவன் என்று நினைத்துவிட வேண்டாம். இது வங்காள விரிகுடாக் கடலை விற்ற விசயமாகும். நிலமோசடி விற்பனையில் கில்லாடியான தேவதாஸ் என்ற மோசடி ஆசாமிதான் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார். சென்னையை அடுத்த மீஞ்சூர் பகுதியில் தனக்குச் சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலத்தை கடல்நீர் ஏறி ஆக்கிரமித்துள்ளது என்றும், கடல்நீர் வடிந்தவுடன் நிலத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றும் தேவதாஸ் கூறியுள்ளான். இவனது மோசடிப் பேச்சில் மயங்கிய மத்திய அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகள் நிலத்தை வாங்க முடிவு செய்துவிட்டனர். உடனே தேவதாசிடம் 108 ஏக்கர் நிலத்தை 26 கோடி ரூபாய் கொடுத்துப் பத்திரப்பதிவும் நடத்திவிட்டனர். நிலத்தை அளப்பதற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகள் வந்தனர். ஆனால் கிரையப்பத்திரத்தில் இருந்த சர்வே எண்படி நிலத்தை அளக்கச் சென்றபோது அது வங்காள விரி குடாக் கடல் என்பது தெரிந்தது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தையே ஏமாற்றி மோசடி செய்யும் எம்டன்கள் வந்துவிட்டனர்.

அன்டன் செகாவ் 150வது ஆண்டு

ரஷ்ய இலக்கியத்தில் சிறுகதை மன்னராய் திகழ்ந்த அன்டன் செகாவின் 150வது பிறந்த ஆண்டை உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. 1860ம் ஆண்டு ஜுனில் மாஸ்கோ அருகில் தாகன்ராச் கிராமத்தில் பிறந்தார். பிறந்து 44 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த செகாவ் ஒரு டாக்டர். இளவயது முதல் காசநோயால் பீடிக்கப் பட்டதால் அவரது ஆயுள் குறைந்துவிட்டது. எனினும் அவர் எழுதிக்குவித்தார். செகாவின் சிறுகதைகள் பதிமூன்று தொகுதிகளாக வெளி வந்துள்ளன. இவற்றில் 568 சிறுகதைகள் உள்ளன. அவரது நாடகங்கள், கடிதங்கள், நாட்குறிப்புகள் தனித்தொகுதிகளாக வெளியாகி யுள்ளன. தமிழில் பந்தயம், நாய்க்காரச் சீமாட்டி, ஆறாவது வார்டு, வான்கா போன்ற சில கதைகள் மட்டுமே வெளிவந்துள்ளன. இவானோவ், கடல்நாரை, காட்டுப்பேய் போன்ற நாடகங்கள் புகழ்பெற்றவை.

அப்பா வாங்கிய கடனுக்காக சிறுவன் செகாவை வட்டிக்காரனிடம் கொத்தடிமையாய் அடகு வைத்தனர். விபரம் தெரிந்தபின் வெளியேறிப் படித்து டாக்டரானார். செகாவின் அண்ணன் ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர். தம்பி எழுதத் துவங்கியதும் அண்ணன் முதல் வாசகராக, விமர்சகராக மாறி செகாவின் பணிசெம்மைபெற உதவினார் - செகாவின் படைப்புகள் தனிரகமானவை, அமரத்துவம் பெற்றவை. அதனால் உலகம் போற்றுகிறது. நாமும் போற்றுவோம்.

எந்திரனின் தந்திரம்

சன்பிக்சர்ஸ் 150 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ள எந்திரன் படத்தை ரஜினிகாந்த் ஐஸ்வர்யாராயை வைத்து எடுத்துள்ளது. போட்ட பணத்தை இருமடங்காக, மும்மடங்காக ஏமாளி ரசிகர் களிடம் வசூலிப்பதற்கு பலவிதமான வித்தைகளைத் தொலைக்காட்சியிலும், தியேட்டர் ட்ரெய்லர்களிலும் காட்டி வருகிறார்கள். படம் திரையிடும் போது ஏமாந்த ரசிகர்களிடம் போலீஸ் பாதுகாப்புடன் ஒரு டிக்கெட் 500, 1000 ரூபாய்களுக்கு விற்கப்படப் போகிறது. இதற்கான விளம்பரங்களுக்காக லட்சக் கணக்கில் செலவிடப் படுகிறது. ரஜினியின் கட் அவுட்டுகளுக்குப் பாலா பிசேகம் உள்ளிட்டவை நடந்து வருகின்றன.

ரஜினி சில ஆண்டுகளாக அரசியலுக்கு வரப் போவதாய் கதைவிட்டார். அதை நம்பி அவரது ரசிகர்கள் எம்எல்ஏ, எம். பி. , அமைச்சர் கனவுகளோடு தங்கள் கைக்காசை இழந்து மேடை போட்டு வைத் தனர். பின்பு அரசியல் வேண்டாம் என்று பல்டியடித்தார். ரஜினி ஏற மறுத்த மேடையில் விஜயகாந்த் ஏறிக் கொண்டார். ரஜினி அரசியலுக்கு வராததால் அவரது ரசிகர்கள் பலர் ஏமாந்து ஒதுங்கிவிட்டனர்.

இப்போது நடந்த ரஜினியின் இளைய மகள் திருமணத்துக்கு வந்த ரசிகர்களை உள்ளேயே நுழையவிடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்களை திருப்திப்படுத்த மாவட்டம் தோறும் விருந்து ஏற்பாடு செய்து அதில் மணமக்களை அறிமுகம் செய்யப் போவதாக அறிவித்து திருப்திப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எந்திரனை ஒட்டுவதற்கும், குறைந்தது 300 கோடியாவது வசூலித்துக் கொடுப்பதற்கும் தமிழகத்தில் ஏமாந்த சோணகிரிகளைத் தயாரிக்கும் முயற்சியில் விருந்து என்ற தந்திரத்தை அறிவித்துள்ளார்.

வெங்கடாஜலபதிக்கே கோவிந்தா!

உலகிலேயே பணக்காரக் கடவுளான திருப்பதி வெங்கடாஜலபதி தனது செல்வங்களைப் பறிகொடுத்து விட்டுப் பரிதாபமாக நிற்கிறார். திருப்பதியின் சொத்து மதிப்பு ரூ. 50 ஆயிரம் கோடிக்கு மேல். நகைகளின் மதிப்பு மட்டும் 35 ஆயிரம் கோடி ரூபாய். இவற்றை ஆந்திர அரசு நிர்வாகம் கொள்ளையடித்துக் கொண் டிருப்பது தெரியவந்துள்ளது.

கொள்ளையில் முக்கியமானது விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் திருப்பதி கோவிலுக்குத் தானமாக வழங்கிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள 300 வகையான நகைகள் மாயமாகிவிட்டன என்பதுதான். தினசரி ஒரு லட்சம் முதல் 5 லட்சம் பேர் வரை வந்து செல்லும் பக்தர்களால் உண்டியல்கள் மலைபோல் நிரம்புகின்றன. மொட்டையடிக்கப்பட்ட தலைமயிர் மட்டுமே ஆண்டுக்கு 60லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சேவைக் கட்டண வசூலில் பெரும் ஊழல்கள் நடைபெறுவதாய் கூறப்படுகிறது.

திருப்பதி கோவில் கி. பி. 9ம் நூற்றாண்டு முதல் பிரபலமாக இருந்தது. 15ம் நூற்றாண்டில் புகழ்மிக்க தாகிவிட்டது. இப்போது ஆண்டுக்கு ரூ. 1,500 கோடி பட்ஜெட்டில் கோவிலுக்கு உள்ளேயும் வெளியிலும் 14 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். நகை களில்லாமல் தங்கம் மட்டுமே 15 டன்களைத் தாண்டும் என்கிறார்கள். நகைகள், நிதி, சொத்துக்கள் இதுவரை மதிப்பீடு செய்யப்படாமல் வெங்கடாஜலபதி கோவிந்தாவாகிக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுவும் மக்கள் சொத்துதானே!

Pin It