“ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் ” என்பது சிலப்பதிகார வரி.

பகுத்தறிவு ஞாயிறு தந்தை பெரியார் தன் 132 ஆம் பிறந்த ஆண்டைத் தொடும் இவ்வேளையில், அவரின் உருவச் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன - திருச்சியில். நாளேடுகளில் படித்தோம், தொலைக்காட்சியிலும் பார்த்தோம்.

வேடிக்கை என்னவென்றால் எந்தத் திருச்சியில் பெரியாரின் சிலையை சேதப்படுத்தினார்களோ, அதே திருச்சியில்தான் அவரின் சிலை முதன்முதலாக நிறுவப்பட்டது.

நெடிய காலம் தமிழகத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்திவிட்டு, ஆட்சிக் கட்டில் ஏறியது திராவிட முன்னேற்றக் கழகம். அறிஞர் அண்ணா முதலமைச்சரானார், 1967 ஆம் ஆண்டில். அதே ஆண்டு செப்டம்பர் திங்கள் 17 ஆம் நாள் தந்தை பெரியாரின் முதல் உருவச்சிலை திருச்சியில் நிறுவப்பட்டது.

அந்த ஆண்டு தந்தை பெரியாரின் 89 ஆம் பிறந்த ஆண்டு. செப்டம்பர் 17 ஆம்நாள் காலையில் திருச்சி பிளாசா டாக்கீஸ் எதிரில் பெரியார் பிறந்தநாள் விழா, பேரறிஞர் அண்ணா தலைமையில் நடந்தது. மாலையில் மகாசந்நிதானம் குன்றக்குடி அடிகளார் தலைமையில், தந்தை பெரியாரின் உருவச் சிலையை அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் காமராசர் திறந்துவைத்தார்.

இவ்விரு நிகழ்ச்சிகளிலும் அண்ணா, செட்டி நாட்டரசர் ராஜா சர். முத்தையா, எஸ்.ஜி. மணவாள ராமானுஜம், ஈ.வெ.கி.சம்பத், சட்டப்பேரவைத் தலைவர் சி.பா.ஆதித்தனார், விடுதலை ஆசிரியர் கி.வீரமணி, எஸ்.கே. நாயர், தண்டபாணிப்பிள்ளை, ஏ.கிருஷ்ணசாமி, சே.மு.அ.பாலசுப்பிரமணியம் ஆகிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பெரியாரின் சிலையைத் திறந்து வைத்து அப்போது பேசிய பெருந்தலைவர் காமராசர், “புரட்சி, புரட்சி என்றால் இரத்தம் சிந்தி கலகம் நடப்பதுதான் என்பதல்ல. அவை இல்லாமல் அமைதியாகச் சிந்திக்கும் வண்ணம் கருத்துப் புரட்சியைத் தமிழக மக்களிடையே உருவாக்கினார் பெரியார். அவருக்குச் சிலை அமைப்பது எல்லா வகையிலும் பொருத்தமானது ” என்று கூறினார்.

முதன் முதலாகப் பெரியார் சிலை அமைந்த அதே திருச்சியில், பெரியாருக்குச் சிலை அமைப்பது பொருத்தமானது என்று காமராசரால் சொல்லப்பட்டது. இன்று பெரியார் சிலைக்கு அவமதிப்பு - அதுவும் சமத்துவபுரத்தில். சிலை அவமதிப்பாளர்களின் நோக்கம் சமத்துவம் கூடாது என்பது இதன்மூலம் விளங்குகிறது.

பெரியாரின் அடிப்படைக் கொள்கை கடவுள் இல்லை என்பதுதான் எனச் சிலர் கூறுகின்றனர். அது சரியன்று. பெரியாரின் அடிப்படைக் கொள்கை, கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் சமத்துவம் இழந்து நிற்கும் தமிழர்களின் சமத்துவமே என்பதை அவரைப் படித்தவர்கள், தெரிந்தவர்கள் சொல்வார்கள்.

சிலை வடிவத்தையும், சிலைவணக்கத்தையும் தந்தை பெரியார் ஏற்றுக்கொண்டவர் அல்லர். ஆனாலும் அச்சிலைகளின் பீடங்களில் பொறிக்கப்பபெறும் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு ஒரு வகையில் சிலையும் பயன்படுகிறது என்பதனால் உருவச்சிலை அமைப்பதை அவர் மறுக்கவில்லை.

அவரின் கொள்கைகளுக்கு எதிராக, அவரின் கருத்துகளுக்கு எதிராக நிற்க முடியாத கையறு பேர்வழிகளால் வேறு என்ன செய்ய முடியும் - அவரின் சிலையைத்தான் சேதப்படுத்த முடியும்.

“வாசல்படி நிலை நெற்றியில் தட்டுகிறது என்றால் தலைவணங்குவார். அதைத்தவிர அநியாயத்திற்குத் தலைவணங்கும் தலை அல்ல அது. அவருக்கு இலட்சியம்தான் குறி. வளைவார், சிரிப்பார், சீறுவார் - குறிக்கோளை நோக்கி ” என்ற பொதுவுடைமைத் தலைவர் ப.ஜீவானந்தம் அவர்களின் இந்தக் கணிப்பீடு போதும் பெரியாருக்கு.

எதிரிகளால் உடைக்க முடிந்தது அவரின் சிலைகளை மட்டும்தான். கொள்கைகளை அல்ல!

“பெரியார் போற்றுதும் பெரியார் போற்றுதும் ” - இது கருஞ்சட்டைத் தமிழரின் வரி!

Pin It