திசம்பர் 24 பெரியாரின் நினைவு நாள். பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல், ஊர்வலம் போதல், கூட்டம் நடத்துதல் என்ற அளவோடு மட்டும் இந்நாள் முடிந்து போவதில் பொருளில்லை. சாதியயாழிப்பு, மதப் பிடிப்பைத் தூக்கி எறிதல், மானுட விடுதலையை அவாவும் நாத்திக நெறி, பெண்ணுரிமை பேணல், இறுதி இலக்கான பொதுவுடைமை நோக்கிய பாய்ச்சல் நடை இவையே பெரியார் நெறி பேணுவோர் முன்கை எடுக்க வேண்டிய முதன்மைப் பணிகள். தமிழ் மொழிக் காப்பு, தமிழ்த் தேசிய விடுதலை போன்றவை இவற்றோடு இணைந்த வையாம்.

‘தமிழில் என்ன இருக்கிறது வெங்காயம்’ என்று மட்டந்தட்டியே பெரியார் தமிழர் வரலாற்றைச் சிதைத்தார். தான் கன்னடன் என்கிற நினைப்பில் எப்போதும் இருந்துகொண்டே, தமிழ் நாட்டில் அரசியல் நடத்தியவர் அவர்  என்பன போன்ற கூரிய அம்புகள் அவர்மேல் பாய்கின்றன. ‘ பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார். திருக்குறள், சிலப்பதிகாரம், இராமாயனம் போன்ற இலக்கியங்களைத் தூற்றினார் ’ என்கிற பழைய குற்றச்சாட்டும் இன்று புதுப்பிக்கப்படுகிறது.

periyar_330திராவிடம் பேசித் தமிழர் ஓர்மையைக் குன்றச் செய்தார் என்று தமிழ்த் தேசியர்களும், பிற்படுத்தப்பட்டோர்க்கு மட்டும் நலன்சேர்த்த சாதியத் தலைவர் என்று தாழ்த்தப்பட்ட தோழர்கள் சிலரும், தந்தை பெரியார் பணிகள் பற்றி மதிப்பீடு செய்கின்றனர்.

நடுநிலையோடு சொல்லும் கருத்துகளை ஏற்றுப் பெரியாரியத்தை முன் நகர்த்திச் செல்ல வேண்டியது சமூக விடுதலையை அவாவும் நம் அனைவரின் பணியுமாகும்.

‘ நாட்டில் இலக்கியங்கள் இருந்தால் அது நாகரீகத்திற்கு, அறிவு வளர்ச்சிக்கு, புரட்சிக்கு, முற்போக்கு மாறுதலுக்கு உதவிட வேண்டும். ஆனால் நம் நாட்டு இலக்கியங்களோ புலவர்களும், மதவாதிகளும், ஆரியரும் பிழைக்கத்தான் இருக்கின்றன ’ என்பதே தமிழ் இலக்கியங்கள் பற்றிப் பெரியார் கொண்ட கருத்தாகும்.

திருக்குறள் மாநாடுகள் நடத்தியவர் பெரியார்.  “ திருவள்ளுவர் நல்ல அறிவாளி. ஆராய்ச்சிக்காரர். அந்தக் காலத்தில் மக்களிடம் பரவி இருந்த மூட எண்ணங்களோடு போராடிய அறிஞர் ”என்று சொன்ன பெரியார் ‘திருக்குறளில் வேண்டியதை எடுத்துக்கொண்டு வேண்டாததை விட்டுவிட வேண்டும் ’  என்றும் குறிப்பிட்டார்.

இந்து மதக் கருத்தியலோடு கைகோத்துக் கொண்ட எந்த இலக்கியத்தையும் அவர் முரண் இன்றி எதிர்த்தார் என்றாலும் தமிழ் மொழிக்கு, தமிழ் இனத்துக்கு ஒரு தீங்கு நேர்ந்தகாலை, தமிழர்களைத் தட்டி எழுப்பிக் களங்கண்டவர் அவர்தான். 1938 இன் மொழிப்போரில் தமிழறிஞர் தமிழ்மக்களின் இணைப்புப் புள்ளியாய் எழுச்சியூட்டியவர் பெரியார் என்பதை நடுநிலையாளர் ஒப்புவர்.

‘ திராவிடர் ’ என்றும் ‘ தமிழர் ’ என்றும் அவர் உச்சரித்த சொற்கள் எல்லாம், ஒடுக்குண்ட மக்களின் விடுதலையை முன்நிறுத்திய கோட்பாட்டின் அடிப்படையில்தான். இந்தக் கருத்தியல்களின் எந்தக் கரவும் உள்வைத்துக் கொள்ளாத திறந்த புத்தகமே தந்தை பெரியார்.

பண்டித அயோத்திதாசர் தொடங்கி, இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. இராஜா, மீனாம்பாள் சிவராஜ், மேயர் சிவராஜ், முனுசாமிப் பிள்ளை போன்ற தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்கள் திராவிட இயக்கத்தோடு இணைந்து நின்றனர். பின்னாளில் ஏற்பட்ட இடைவெளி பெரியார் இயக்கத்தில் நேர்ந்த சரிவாகும்.

பார்ப்பனிய நச்சின் கொடுந் தீண்டலில் இருந்தும் சாதியச் சகதியில் இருந்தும், பாமரத் தமிழனைக் காப்பதற்குத்தான் பெரியார் முதலிடம் தந்தார்.

சாதியத்தின் அடித்தளம் தனிச் சொத்துடைமையில் உயிர் வாழ்வதைப் பெரியார் உணர்ந்திருக்கிறார். நிலவுடைமைக் கண்ணிகளைத் தகர்க்காதவரை சாதியத்தின் சல்லி வேர்களைச் சாய்க்க முடியாது என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

ஆனால் இந்நாட்டின் பொதுவுடைமையர் கருதியது போல் அது வெறும் மேல்கட்டுமானமாக மட்டும் இல்லை. அடிக்கட்டுமானமாயும் இறுகிப் போயுள்ளது என்பதை உணர்ந்து, சாதி அரணை உடைக்கும் போரில் தன் ஆற்றல் முழுவதையும் செலவிட்டார்.

சாதியத்திற்குக் காப்புக் கோட்டையாய் விளங்கிய பார்ப்பனியத்தையும், பார்ப்பனிய இந்து மதத்தையும் சமரசமின்றிச் சாடினார். பாசிசப் பண்பு கொண்ட பார்ப்பனியத்திற்குப் படுகுழி வெட்டாமல் இங்கே சமூக விடுதலையோ,அரசியல் பொருளியல் விடுதலையோ சாத்தியமில்லை என்று ஓங்கி அறைந்தார். தேவைக் கேற்பத் தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் தீங்கான அதன் பச்சோந்தித் தனத்தைத் தோலுரித்தார்.

பெரியாரியத்தின் பெருஞ்சிறப்புகளுள் ஒன்று, அன்னாரின் பெண் விடுதலைக் கோட்பாடுகளாகும். வெறும் வாய்ச் சொல் அளவில் மட்டும் நில்லாது, செயல் தளத்திலும் அவற்றை அவர் நிறுவிக் காட்டினார்.

மாந்தர் அனைவர்க்கும் சமஉரிமை, பொதுஉரிமை, சுயமரியாதை ஆகியன வாய்த்தால் மட்டுமே இங்கு புத்தம் புதியதோர் பொதுவுடைமைப் பொன்னுலகைச் சமைக்க முடியும் என்பது பெரியாரின் கருத்து. இவ்வகையில் அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் இம்மண்ணில் தோன்றிய ஈடிணையற்ற மாபெரும் தலைவர்கள் ஆவர்.

வெகுமக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது, நெடுங்காலமாய்ப் பின்பற்றப்படுவது என்பதற்காக மட்டுமே எந்த ஒன்றையும் ஏற்கக் கூடாது என்பது அறிவு சார் தத்துவ மரபாகும். இதில் பெரியார் வென்ற இடம், அவர் தனது கருத்துக்களை எவ்வகையான பூச்சுகளுக்கும் ஆட்படுத்தாமல் கட்டுடைத்ததுதான். அதனால்தான் இராமன் படத்தை எரித்த இராமசாமியைத் தமது இனமானத் தந்தையாகத் தமிழர்கள் ஏற்றார்கள். பெரியார் சுடரை ஏந்தி நாமும் தொடர்வோம் !

------------------------------------------------------------------------------------