amit shah and modi 500நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசும் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கடந்த மூன்று வாரங்களாகத் தொடர்ந்து ஒத்திவைக்கிறது. உளவுபார்ப்பு, புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம், விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உயர்வு, கொரோனா பாதிப்பு எனப் பற்றி எரியும் விவகாரங்களால் நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுக் கொந்தளிக்கின்றனர். இந்த நேரத்தில் இவை எவற்றுக்கும், ஒரு பொறுப்பான அரசாக, எந்தப் பதிலும் கூற முன்வராமல் பிரதமரும் உள்துறை அமைச்சரும் அமைதி காப்பது அவர்கள் மக்களை மக்களாகத்தான் மதிக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது.

மிகவும் தைரியமானவர்கள், துணிச்சலாகப் பதிலடி கொடுப்பவர்கள் என்று தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்பவர்களின் தைரியமும் துணிச்சலும் எதிர்க்கட்சிகளுக்குப் பதில் சொல்லும்போது என்ன ஆயின என்பது தெரியவில்லை.

'வீர' சாவர்க்கர் வழி நடப்பவர்கள். இவர்கள் 'வீர' வரலாறு நாடறிந்த ஒன்று. அதைக் காண்கிறோம் நாடாளுமன்றத்தில் இன்று.

சட்டத்திற்கு எதிராக மட்டுமன்று அடிப்படை மனித உரிமைகளுக்கும் எதிரானது உளவுபார்ப்பு. ஒட்டுக்கேட்பு விவகாரத்திற்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் இன்று வலுவாகக் கேள்வி எழுப்புகிறார்கள். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நிற்கிறார்கள். விலைவாசி உயர்வு மக்களை அயர்வுக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஆனால் அவைகளுக்குப் பதில் சொல்லாமல் நாடாளுமன்ற அவைகளை ஒத்தி வைத்துக் கொண்டே போகிறது பாஜக.

கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் ஒத்தி வைப்பதற்கு எதற்காக மேலும் 20,000 கோடி ரூபாய் செலவழித்து சென்ட்ரல் விஸ்தா என்ற புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்ட வேண்டும்?

அரசின் தவறுகளை அவையின் உறுப்பினர்கள் எதற்காகச் சுட்ட வேண்டும்?

சட்டங்களை மட்டும் நிறைவேற்றிக் கொள்வதானால் அதைச் செய்துவிடலாமே நேரடியாக!

எதேச்சதிகாரத்தை நிறுவிடலாமே ஒரேயடியாக!

பெகாசஸ் உளவுபார்ப்பு விவகாரம் தொடர்பாக மூத்த செய்தியாளர்கள் என்.ராம், சஷி குமார், எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதே விவகாரம் தொடர்பாக ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வழக்கில் ஒன்றிய அரசு தரப்பும் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிகள் எழுப்பிய கேள்விகளுக்கு எந்தப் பதிலும் இல்லை. நீதிமன்றத்தில் என்ன சொல்லப் போகிறார்கள்?

இதே போன்ற ஒட்டுக்கேட்பு விவகாரம் அமெரிக்காவில் வாட்டர்கேட் ஊழலாக உருவெடுத்த போது அந்த விசாரணையில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட அதிபர் நிக்சன் பதவி விலகினார். அமெரிக்க வரலாற்றில் 'Impeach' செய்யப்பட்டு பதவி விலகிய ஒரே ஒரு அதிபர் நிக்சன் ஆவார். நம்முடைய நாட்டிலும் உச்சநீதிமன்றம் இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கிறது. வரலாற்றில் என்ன பதிவாகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

- மா.உதயகுமார்