எண்பது வயது தாண்டிய ஒருவரை, வெளியில் போகும்போது கைபிடித்து அழைத்துச் செல்வதுதான் இயல்பு. ஆனால் 88 வயதைக் கடந்த ஒருவர், எல்லோரையும் கைபிடித்து அழைத்துச் செல்லும் அதிசயம் இப்ப்போது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது!

ki veeramani 386அந்த அதிசயத்தை நிகழ்த்திக் கொண்டிருப்பவர், திராவிடர் கழகத்தின் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். வரும் டிசம்பர் மாதம் அவர் தன் 90 ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கின்றார். ஆனால் அவர்தான் இப்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றிவந்து தங்கள் கொள்கைகளைப் பரப்புவதற்குப் பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருக்கிறார்.

ஏப்ரல் 3 ஆம் தேதி, நாகர்கோயிலில் தன் பயணத்தைக் தொடங்கிய அவர், வரும் 25 ஆம் தேதி சென்னையில் அதனை நிறைவு செய்கிறார். தொடக்கி வைத்தவர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி. முடித்து வைக்க இருப்பவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்!

ஒவ்வொரு நாளும் இரண்டிரண்டு ஊர்களில் பொதுக்கூட்டங்கள்! இடையில் மக்களோடும், தொண்டர்களோடும் சந்திப்பு. இடைவிடாத படிப்பு, எழுத்து, பேச்சு என்று தொடரும் இந்தப் பயணம் நம் நாட்டிற்கானது. நம் பிள்ளைகளின் எதிர்காலக் கல்விக்கானது!

ஆம், நீட் தேர்வு என்னும் பலிபீடத்தை எதிர்த்தே. தமிழர் தலைவர், ஆசிரியர் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

பன்னிரெண்டு ஆண்டுகள் நம் பிள்ளைகள் பள்ளிகளில் படித்துப் பெற்ற மதிப்பெண்களை மதிப்பற்றனவாக்கி, அவர்களின் மருத்துவக் கல்லூரிக் கனவுகளுக்கு குறுக்கே நீட் என்னும் ஒரு பலிபீடத்தைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது இந்திய ஒன்றிய அரசு! அந்த நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் எல்லோருக்கும் மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்துவிடும் என்பதும் கூட உறுதியில்லை. அவர்களின் தரப் பட்டியலைப் பொறுத்தே இடம் கிடைக்கும்.

நீட் என்னும் இந்தக் கொடுவாளை எதிர்த்துத் தமிழ் நாடே நிற்கிறது. குறிப்பாக இன்றைய தமிழ்நாடு அரசு அதனை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலிமையாக முன்வைத்துள்ளது. பதவியேற்ற மறு மாதமான ஜூன் மாதமே, நீதிபதி ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து, ஜூலை மாதத்தில் அந்தக் குழுவின் அறிக்கையைப் பெற்றது. உடனே செப்டம்பர் மாதம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதனை ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பி விட்டார். மீண்டும் ஒருமுறை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய பிறகும்,ஆளுநர் அசையாமல் இருக்கிறார். இந்த மக்கள் விரோதப் போக்கு மக்களிடையே ஒரு கோபத்தை உருவாக்கியுள்ளது.

கோப அலைகள் கொப்பளிக்க, ஆதரவு அலைகள் அணிதிரள, ஆசிரியரின் பயணம் நடைபோடுகின்றது. இந்த வயதிலும் அவரை இப்படி இயக்குகின்ற நெருப்பு எது? அய்யா பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட அணையா நெருப்பாம் சமூக நீதிதான் அது! அதனால்தான் 90 வயது என்னும் சிந்தனையைத் தூக்கி எறிந்துவிட்டு, அவர் ஓடிக்கொண்டே இருக்கிறார்!

அவரது ஓட்டம், நம் அனைவர்க்கும் ஊக்கம்!

- சுப.வீரபாண்டியன்