ambedkhar 350தந்தை பெரியாரின் தோழரான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், மத்திய பிரதேசம், மாஹோவ் எனும் சிற்றூரில், தன் பெற்றோருக்குப் 14 ஆம் பிள்ளையாக 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று பிறந்தார்.

பரோடா மன்னர் ஷாயாஜி ராவ் உதவியினால் அமெரிக்கக் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் மேற்படிப்புக்குச் சென்றார். அக்காலத்தில் அமெரிக்காவுக்குச் சென்ற முதல் இந்தியர் டாக்டர் அம்பேத்கர்.

இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, கல்விக்காகவும், சமுகநீதிக்காகவும் குரல் கொடுக்க 1926 ஏப்ரல் 1 ஆம் தேதி "பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா" என்ற அமைப்பையும், 1955 இல் "பாரதீய பெளத்த மகாசபா" என்ற அமைப்பையும் உருவாக்கினார்.

1921 இல் இவர் எழுதிய "பிரிட்டீஷ் இந்தியாவில் அரசு நிதி பரவலாக்கல்" , 1923 இல் எழுதிய "ரூபாவின் பிரச்சனை " ஆகிய இரு நூல்கள் பிரிட்டீஷ் அரசின் விவாதத்திற்கு உள்ளானது என்றாலும், இந்தியாவில் ரிசர்வ் வங்கி அமைய அடித்தளமிட்டன அவை.

அமராவதி கோயில் நுழைவுப் போராட்டத்தை இறுதி செய்ய இந்திரா பவன் திரையரங்கில் பாரிஸ்டர் திக்கடே, கே.பி. தேஷ்முக், வழக்கறிஞர் சவ்பால், டி.ஆர் கவுலி போன்றோர் கூடிய மாநாட்டுக்குக் தலைமை ஏற்ற அம்பேத்கார், தீர்மானத்தை நிறைவேற்றினர். இந்தத் தீர்மானம் பல கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்த வழிவகுத்து விட்டது.

1932 பிப்ரவரி 28 அன்று சென்னை வந்த டாக்டர் அம்பேத்கருக்குச் சென்னையில் எல்.சி.குருசாமியின் தலைமையிலான சென்னை அருந்ததியர் சங்கம், ஒடுக்கப்பட்டோர் பேரவை, கேரள தீண்டப்படாதோர் சங்கம், தீண்டப்படாதோர் இராணுவச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் வரவேற்பு அளித்தன. இப்பயணத்தில் தந்தை பெரியாரைச் சந்தித்து உரையாடிச் சென்றார் அண்ணல்.

"பாபா சாகேப் " என்ற பட்டத்தைப் புகழ் பெற்ற எழுத்தாளர் சி.பி. காயர் மோடே என்பவர் தன் நண்பர்களுடன் இணைந்து 1927 ஆம் ஆண்டு அம்பேத்கருக்குப் பட்டயமாக வழங்கினார். அப்பெயர் 1930க்குப் பிறகே நடைமுறைக்கு வந்தது.

சாதி ஒழிப்பு, சமத்துவம், பெண்ணுரிமை, சமூக நீதிக்காக எழுதியும், மேடைகளில் - சட்டமன்றங்களில் - இலண்டன்
மூன்று வட்டமேசை மாநாடுகளில் பேசியும், போராட்டங்கள் நடத்தியும்,. மக்களுக்காக வாழ்ந்த மாமனிதர் அண்ணல் அம்பேத்கரை அவரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் நாள் நினைவில் ஏந்தி, வாழ்த்துவோம் !

- கருஞ்சட்டைத் தமிழர்