சென்ற நூற்றாண்டு கண்ட, ‘தியாகப் பெரு வாழ்வு வாழ்ந்த’ திண்ணிய தீரமிக்க தலைவர் டாக்டர் அம்பேத்கர். இவரது வாழ்வும் செயலும் எவ்வளவு போற்றுதலுக்குரியதோ அதே போல் இவரது சீரிய சிந்னையாற்றலும் எழுத்தாற்றலும் ஒப்பிடற்கரியவை. டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் பாடுபட்டவர் என்பது அவருடைய பெயர் உச்சரிக்கப்பட்ட மாத்திரத்திலேயே அனைவராலும் உணரத்தக்க ஒரு விசயமாக இருக்கிறது. ஆனால் அந்த அளவிற்குப் பெண்ணின விடுதலைக்கு வித்தாகும் அவரது சிந்தனை மற்றும் எழுத்துகள் குறித்தும், அத்திசையிலான அவரது செயல்பாடு மற்றும் தியாகங்கள் குறித்தும் பரவலாக அறியப்படவில்லை.

வேரினைத் தேடி...

சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசியவர்கள், அதற்காகப் பாடுபட்ட தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் சாதி ஒழிப்பை, இந்து மத எதிர்ப்போடு நேர் மறை விகிதத்தில் இணைத்து அடையாளங் காட்டிக் களமிறங்கிய தலைவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் நமது தலைவர் பெரியார், இன்னொருவர் டாக்டர் அம்பேத்கர். டாக்டர் அம்பேத்கர், தான் வாழ்ந்த காலத்தில் எளிதில் ஈடு சொல்ல முடியாத உயர் படிப்பாளியாகவும் சிந்தனையாளராகவும் திகழ்ந்தார். ‘சாதி’ எவ்வாறு தோன்றியிருக்க முடியும், ‘தீண்டாமை’ எவ்வாறு, ஏன் உருப்பெற்றிருக்க முடியும் என்ற கேள்விகளுக்குச் சமூக அறிவியல் சார்ந்து முறையான ஆய்வுக் கட்டுரைகளை அவர் தந்திருக்கிறார். இதில் சாதி எவ்வாறு இந்திய சமூகத்தில் தோற்றம் கொண்டது என்பதனை அவர் தனது ‘சாதியை ஒழிக்க வழி’ என்னும் நூலில் தெளிவு படுத்துகிறார். அவருடைய இந்த நூலைத் தலைவர் பெரியார் அவர்கள் முதன்முதலாக மொழி பெயர்த்துத் தமிழில் வெளியிட்டிருக்கிறார். (இதே போல் கம்யூனிஸ்டு அறிக்கையையும் முதன் முதலாகத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டவரும் பெரியார்தான்)

அவருடைய அந்த ஆய்வு, கீழ்க் காணும் கருத்துகளை நம் முன் வைக்கிறது.

1. சாதியின் தோற்றுவாய் அகமண முறையாகும். அதாவது ஒரே சாதியைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற முறை.

2. சாதி என்பது சமூகத்தை ஏணிப்படி வரிசையில் கட்டமைக்கிறது. அதாவது ஒரு சாதிக்குக் கீழ் இன்னொரு சாதி. இந்த அடுக்கின் உச்சியில் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். கீழடுக்கில் தாழ்த்தப்பட்ட, தீண்டாமை சுமத்தப்பட்ட சாதி மக்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

3. பெண்கள் ஒவ்வொரு சாதிக்குள்ளும், அந்தந்த சாதி ஆண்களின் தலைமைக்குக் கீழ் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு பெண்கள் அந்த ஆண்களின் தலைமைக்குக் கீழ் வைக்கப்பட்டே ஆக வேண்டியது சாதி அமைப்பைக் காப்பாற்றுவதற்கு இன்றியமையாத தேவையாக இருக்கிறது. அந்த ஆண்களின் ஆதிக்கத்திற்குள் பெண் வைக்கப்படாவிட்டால் அடுத்த தலைமுறை, அந்தந்த சாதிக்குள் பிறக்க வழியில்லாமல் போய்விடும். எனவே பெண்ணை அடிமையாக வைத்திருப்பது ‘சாதி அமைப்பின்’ கட்டாயத் தேவைகளில் ஒன்றாக இருக்கிறது.

4. எனவேதான் பெண்ணின் மீது ‘கற்பு நெறி’ திணிக்கப்படுகிறது. பெண்ணைப்போல் அடிமை நிலை சுமத்தப்படாத ஆணுக்கு அகமண முறையின் கட்டுப்பாட்டுக்கு வெளியே, பரத்தமை முறையும், சுதந்திரக் காதலும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

5. மேலும், அந்தச் சுதந்திரமும், உரிமையும் இல்லாத பெண் தனது கணவனை இழக்க நேரிடும் போது, அவளால் இந்த சமூகக் கட்டுப்பாடுகள் சிதைக்கப்பட்டுச் சாதி அமைப்புக் கெட்டுப் போய்விடக் கூடாது என்ற நோக்கத்துடன்தான் மிகக் கொடுமையான விதவை நிலையும், உடன்கட்டை ஏறுதல் போன்ற சமூக நடவடிக்கைகளும் இந்து தர்மத்தில் இடம் பெற்றுள்ளன. பெண்ணை விவரமறியுமுன்னே திருமணம் செய்து கொடுத்து விடும் குழந்தைத் திருமண முறையும் இந்த நோக்கத்துடனேயே ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

என்று அவரின் நூலில் கருத்துகள் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. எவ்வாறு அறிஞர் ஏங்கெல்ஸ் அவருடைய, ‘குடும்பம் தனிச்சொத்து அரசு’ என்ற நூலில் ஆணாதிக்கச் சமூகத்தின் தோற்றுவாயை நமது சிந்தனைக்குத் தெளிவுபடுத்தினாரோ, அதே போல்தான் அம்பேத்கர் அவர்கள் இந்திய மண்ணில் சாதி அமைப்பின் தோற்றுவாயை நமக்குப் புலப்படுத்துகிறார். உலகில் தோன்றிய முதல் ஆதிக்கம் ஆணாதிக்கம். அதன் வாசல் ‘ஒரு தார மணமுறை’ என்கிறார் ஏங்கெல்ஸ். அதன் தொடர்ச்சியாக அதில் உருவான கற்பு நெறிக் கோட்பாட்டை, விதவை நிலையுடனும், உடன்கட்டை ஏறுதல் போன்ற சமூகக் கொடுமைகளுடனும் இறுக்கமாக இணைத்து, அதனைப் பெண் சமூகத்தின் மீது சுமத்தியதன் விளைவாகக் கட்டப்பட்டதுதான் சாதி என்ற சமூக அமைப்பு என்று தெளிவாக விளக்குகிறார் அம்பேத்கர். சாதி, பிறவியை அடிப்படையாகக் கொண்டது. பிறக்கின்ற பிள்ளை ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறக்க வேண்டும் என்று சொன்னால் பெண்ணின் கர்ப்பப்பையைக் கட்டுப்படுத்துவதால் மட்டுமே அது சாத்தியமாகும் என்பதுதான் அன்றைய ‘மனு’வின் தத்துவமாகும். இதற்கான வழிமுறை பெண்ணை விபரமறியாப் பருவத்தில் கணவன் கையில் ஒப்படைத்து, அவள் மீது சமூகப் ‘பதிவிரதா தர்மத்தை’யும் ‘கற்பு நெறியையும்’, விதவை நிலையையும் ஏற்றி விட்டால் இந்தச் சாதி அமைப்பை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குக் காப்பாற்றி விடலாம் என்பதுவே சாதி அமைப்புச் செய்திருக்கும் சதியாகும்.

எவ்வாறு உலகப் பெண்ணியச் சிந்தளையாளர்கள் தங்கள் சிந்தனைக்கான தோற்றுவாயை ‘குடும்பம் தனிச் சொத்து அரசு’ நூலில் இனம் காண்கிறார்களோ அதுபோல் இந்தியவிலுள்ள பெண்ணியச் சிந்தனையாளர்கள் தங்களது வேத நூலாக டாக்டர் அம்பேத்கரின் ‘சாதியை ஒழிக்க’ வழி என்னும் நூலைத்தான் தூக்கிப் பிடித்திருக்க வேண்டும். ஒரு சீரிய சிந்தனையாளராக அவர் பெண்ணடிமையின் வேர்களை நமக்கு அடையாளங்காட்டுகிறார்.

இந்து மசோதா 1948

டாக்டர் அம்பேத்கர் வெறும் சிந்தனையாளர் எழுத்தாளர் பேச்சாளர் மட்டுமல்ல, எழுத்து, தொழில், பதவி என அனைத்தையும் தனது இலக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என்ற குறிக்கோளுக்கே காணிக்கையாக்கிய செயல் வீரர். பிரிட்டிசாரிடமிருந்து விடுதலையடைந்த இந்தியாவின் சட்டத்தை இயற்றியவர். பாராளுமன்றத்தில் சட்ட அமைச்சராக இருந்து ஒடுக்கப்பட்ட மக்களின் போர்க் குரலாய் முழங்கியவர். அவர் சட்டம் இயற்றியதும் சட்ட அமைச்சராக இருந்ததும் அனைவரும் அறிந்திருப்பர். ஆனால் அவர் ஏன் தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார் என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அதைவிட முக்கியமானதாகும்.

ஆரிய ஆதிக்கம் நமது சமூகத்தில் நிலை கொண்ட பின்பு, மனு தர்மமே அரசர்கள் ஆள்கின்ற சட்டமாக இருந்து வந்திருக்கிறது. எந்த அளவு இது நடைமுறையிலிருந்திருக்கும் என்பதை அறுதியிட்டு இன்று ஒருவர் உரைப்பது கடினம். ஆங்கிலேயர்கள் இம்மண்ணைக் கைப்பற்றிய பிறகு அவர்கள் சட்டமியற்றினார்கள். இந்து சட்டம் மற்றும் இஸ்லாம் சட்டம் எனப்பட்ட சட்டங்கள். இவை மனித வாழ்வில் அகப் பொருட்கள் எனக் கருதப்படும் திருமணம், வாரிசுரிமை, சொத்துரிமை, மத வழிபாட்டுரிமை, மத நிறுவனங்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் சட்டங்களாகும். இதில் இந்து சட்டம் இந்துக்களுக்கானது. இந்தச் சட்டத்தை ஆங்கிலேயர்கள் தர்மசாஸ்திரங்கள் என்று சொல்லப்படுகின்ற சமஸ்கிருத ஸ்மிருதிகளிலிருந்தே எடுத்திருந்தார்கள். அதாவது எந்த சாஸ்திரங்கள் பெண்ணை அடிமையாக்கி வைத்திருந்தனவோ அதே சாஸ்திரங்களிலிருந்து. விடுதலை பெற்ற பிறகு, பாராளுமன்றத்தில் 1948 இல் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் இதில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான இந்து மசோதாவை முன்மொழிந்தார்.

இந்தத் திருத்தங்களை அவர் முன்மொழிந்த போது நடந்த விவாதங்களையும் அதனை யார் யார் எப்படி எதிர்கொண்டார்கள் எனப்தைப் பற்றியும் தனி நூலே எழுதலாம். எனவே நான் அந்த விவரணைகளுக்குள் முழுமையாகச் செல்லாமல் அந்தத் திருத்தத்தின் சாராம்சங்களை மட்டும் எடுத்து வைக்கிறேன்.

மகளுக்குச் சொத்துரிமை

அன்றைய இந்து சட்டத்தின் படி சொத்துரிமை, குடும்பத்தில் உயிரோடிருக்கிற மூத்த தலைவருக்கு மட்டுமே உண்டு. சொத்து என்பது குடும்பத்துக்கானது. அதில் இளையவர்கள் (ஆண்களாக இருந்தாலும்) பாகப் பிரிவினை கோர முடியாது. பெண்களுக்கு எந்தச் சொத்துரிமையும் எப்போதும் வராது. இதற்கு மாறாக அம்பேத்கர், ஒருவர் இறந்தவுடன் அவரது சொத்தில் அவரது மனைவிக்கும் அவரது பிள்ளைகளுக்கும் சொத்துரிமை வருகின்ற வாரிசுரிமை முறையை முன்மொழிந்திருந்தார். இதனை அவர் இந்து தர்மத்திற்கு அப்பாற்பட்டுச் செய்யவில்லை. அதற்கு மாறாக இந்து தர்மத்திலேயே இன்னொரு பிரிவாக இருந்த ‘தயாபகா விதி’ தர்மத்திற்கு முரண்பட்டதில்லை என்று அவர் வாதாடினார். அதில் முன்மொழியப்பட்டிருந்த திருத்தங்களில் முதலாவது, மகளுக்குச் சொத்துரிமை உண்டு என்று சொன்னது. அதிலும் அவர் மகனுக்குள்ள உரிமையில் பாதி கொடுங்கள் என்றுதான் திருத்தம் கொண்டு வந்திருந்தார். மனைவி மற்றும் விதவை மருமகளுக்குரிய பங்குகள் ஏற்கனவே இந்துப் பெண்கள் சொத்துரிமைச் சட்டம் 1937ன் படி அங்கீகரிக்கப்பட்டிருந்தன. மகளுக்கும் மகனைப் போலவே சொத்துரிமை வேண்டும் என்று 1948 இல் முன் வைக்கப்பட்டதுதான் இந்தத் திருத்தம். அம்பேத்கர் இதனை எடுத்தியம்புகையில் பெண்களுக்குச் ‘சீதனம்’ ‘வரதட்சணை’ என்ற பெயரில் கொடுக்கப்படும் வேறுபட்ட நடைமுறைகள் மாற்றப்பட்டு அவளுக்குரிய சொத்து என்பது நடைமுறைக்கு வரவேண்டும் என்று கூறினார்.

ஜீவனாம்ச உரிமை

அடுத்ததாக அவர் கேட்டது, கணவனிடமிருந்து பிரிந்து வாழும் பெண்களுக்கான ஜீவனாம்ச உரிமை. அதாவது கணவன் கொடிய நோய்வாய்ப்படும் பட்சத்தில் அல்லது அவன் கொடூரமாக நடத்தும் பட்சத்தில் அல்லது மனைவியை இரண்டாண்டுகளுக்கு மேலாகக் கைவிட்டிருக்கும் பட்சத்தில், வேறொரு மதத்திற்கு மாறிவிட்டிருக்கும் பட்சத்தில் அல்லது வேறு நியாயமான காரணங்களுக்காகப் பிரிந்து வாழும் மனைவிக்குக் கணவன் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று அந்த மசோதா கோரியது.

பதிவுத் திருமணம் மற்றும் கலப்புத் திருமணத்திற்கான அங்கீகாரம்.

அடுத்து அந்த மசோதாவின் முக்கிய அம்சம் திருமண முறையில் பதிவுத் திருமணத்திற்கான அங்கீகாரத்தைக் கோரியது. புரோகிதத் திருமண முறையில் நடைபெறும் திருமணங்களுக்குள்ள அதே அங்கீகாரம் பதிவுத் திருமணத்திற்கும் வேண்டும் என மசோதா கோரியது. பதிவுத் திருமணம் செய்து கொள்ளச் சாதி, கோத்திரம் மற்றும் இதர உறவு முறை தடையாக இருக்கக் கூடாது என்றும் அது தெரிவித்தது.

பலதார மணமுறைத் தடை மற்றும் விவாகரத்து உரிமை

பலதார மணமுறைக்குத் தடை கோரிய அந்த மசோதா குறிப்பிட்ட சில நிலைகளில் மனைவியின் சம்மதத்தையும் பெற்றிருக்க வேண்டும் என்பதை முன்வைத்தது.

மேற்கூறியவையயல்லாம் 1948 இல் இந்த நாடு விடுதலையடைந்தவுடன் அம்பேத்கர் இந்த நாட்டின் பெண்ணினத்துக்குப் பெற்றுத் தரத் துடித்த உரிமைகளாகும். ஆனால் அன்றைய நிலையில் நேரு தலைமையிலான அரசு இந்த மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்கவில்லை. சானாதனவாதிகள் இந்த நாடே அழிந்து போய்விடும் என்று நிலையாய் நின்று அந்த மசோதா வரவிடாமல் பார்த்துக் கொண்டார்கள். அம்பேத்கர் மனம் நோக அவமதித்தார்கள். இந்த விவாதத்திற்கிடையில் இராமனையும் சீதையையும் குறிப்பிட்டு அம்பேத்கர் உவமானத்துக்குப் பேச, அதைப் பிடித்துக் கொண்டு ‘அம்பேத்கர் தங்கள் மனங்களைப் புண்படுத்திவிட்டதாக ஆர்ப்பரித்திருக்கிறார்கள்’. இந்த வேதனையில்தான் அம்பேத்கர் தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். அவரது அந்தத் தியாகம், பெண்களின் உரிமைகளைப் பெற்றுத் தர முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் எழுந்ததாகும்.

தலைவர் பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் முன்பு பலரும் தீண்டாமைக்கு எதிராகவும் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் பேசி வந்திருக்கிறார்கள், காந்தியார் பாரதியார் உட்பட. ஆனால் இந்த இரண்டுக்குமான இணைப்பையும், அதற்கு மூலகாரணமாக இந்து மதமும் அதனுடைய பார்ப்பனிய புரோகிதத் தலைமையும் இருக்கிறது என்பதையும் அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் புரிந்து கொண்ட தலைவர்கள் இவர்கள் இருவர் மட்டும்தான். எனவேதான் இந்துச் சட்டத்தைத் திருத்தாமல் பெண்களுக்கு விடுதலை வாங்க முடியாது என அம்பேத்கர் அறிந்திருந்தார். அந்த மசோதா அன்று ஒரே சட்டமாக நிறைவேறியிருக்குமேயானால் நாம் அய்ம்பதாண்டுகால வளர்ச்சியை முன்னதாகவே பெற்றிருந்திருப்போம் என்பதில் அய்யமில்லை.

இந்த மசோதா முன்மொழிந்த உரிமைகளை அடுத்த பத்தாண்டுகளில் பெண்கள் சமுதாயம் பெற்றுவிட்டது. தனித்தனியாய்ப் பல்வேறு சட்டங்களாக அவை பின்னாளில் நிறைவேற்றப்பட்டன. ஆனால் இந்த உரிமைகளுக்காகச் சுதந்திர இந்தியாவின் பாராளுமன்றத்தில் முதல் குரல் எழுப்பிப் போராடி தனது பதவியையே அவற்றிற்கு விலையாகத் தந்தவர் டாக்டர் அம்பேத்கர் . அவர் அப்போது கூறினாராம், ‘இரண்டு பெண்கள் போராடியிருந்தால் கூட இந்த மசோதா நிறைவேறியிருக்கும்’ என்று. ஆனால் ‘இந்த நாட்டின் முக்கியப் பெண்மணிகள் யாருக்கும் இந்த நாட்டின் பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறையில்லையே’ என்றாராம். உண்மையில் ஓட்டுரிமையைக் கூட அம்பேத்கர் சட்டம் இயற்றியதால் தான் நாம் போராடாமலே பெற்று விட்டோம்.

இன்று இந்த உரிமைகளையயல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் பெண்கள் அம்பேத்கரை அறிந்து கொள்ளவும் அவரைப் பின்பற்றவும் அக்கறை காட்ட வேண்டும்.

- ஓவியா