கிழக்குவானில் எழுந்தசுடர் விளக்காய், தாழ்ந்து

        கிடந்த மக்கள் தமைஎழுப்ப வந்த வன்நீ!

விழியிருந்தும் குருடர்களாய் வாழ்ந்தும், பேச

        வாயிருந்தும் ஊமைகளாய் இருந்தும், வாழ

வழியின்றி ஆண்டாண்டாய் ஒடுக்கப்பட்டு,

        வறுமையிலும் கொடுமையிலும் தவித்த மக்கள்

எழுந்துதலை தூக்கவந்தாய், எனினும் அந்த

        இருள்முழுதும் விலகியதோ ? இன்னும் இல்லை!

 

பிறப்பினிலே தாழ்வுயர்வு இலைஎன் றாலும்

        பன்றிகட்கும் நாய்களுக்கும் கீழாய், சொந்தத்

திருநாட்டில் இந்தமக்கள் மதிக்கப் பட்டார்:

        தீண்டாமை எனும்கொடிய நெருப்பில் தீய்ந்தார்!

அரிசனங்கள் ஆண்டவனின் குழந்தை என்றும்

        அழகாக ஏமாற்றப் பட்டார் நாட்டில்!

திரையிட்டு மூடிவைத்த ஓவி யம்போல்

        துயர்சுமந்து கிடந்தார்கள் அந்த மக்கள்!

 

அறியாமை எனும்இருட்டில் கிடந்தும், சாதி

        ஆதிக்கத் தின்பிடியில் உழன்றும், கூட்டில்

சிறைப்பட்ட பறைவைகளாய்த் தாழ்த்தப் பட்டோர்

        சேரிஎனும் ஊர்ப்புறத்தில் ஒதுக்கப் பட்டும்

தரித்திரராய் வாழ்ந்துமடிந் தொழிந்தும், தங்கள்

        தலைவிதியோ இதுவென்று நினைத்தார் அன்றி

உரிமையோடு எவர்க்கும்சரி நிகராய் வாழும்

        உண்மையினை அந்தமக்கள் அறிந்தா ரில்லை!

 

ஊரிலுள்ள பொதுக்குளத்தில் நீர் எடுக்க

        உயர்சாதி மக்களாலே மறுக்கப் பட்டார்!

சேரிமக்கள் தொட்டுவிட்டால் தீட்டு என்றே

        தெருவினிலே நடப்பதற்கும் தடுக்கப் பட்டார்!

வேரைப்போல் மண்ணுக்குள் இருந்து கொண்டு

        மற்றவர்கள் உயர்ந்தோங்க உழைத்த மக்கள்

சீர்கெட்டுக் கிடந்தார்கள், சிந்தை நொந்து

        தவித்தார்கள்; அவர்களையார் நினைத்துப் பார்த்தார்?

பள்ளத்தில் கிடந்தமக்கள் எழுந்து வந்து

        படியேற நினைக்கையிலும் உதவி டாமல்

தள்ளிவிடப் பட்டார்கள்; கல்வி என்னும்

        தருநிழலில் ஒதுங்குதற்கும் மறுக்கப் பட்டார்!

எல்லார்க்கும் பொதுவென்னும் கோவி லுக்குள்

        இம்மக்கள் செல்வதற்கும் உரிமை இல்லை!

கல்லாக இருக்கின்ற கார ணத்தால்

        கடவுள்களும் கண்திறந்து பார்த்த தில்லை?

 

சாதிமதத் தின்பேரால், கடவுள் பேரால்

        தன்இனத்து மக்களெல்லாம் பல்லாற் றானும்

நீதிபெற முடியாமல் பட்ட துன்பம்

        நிச்சயமாய் இனிதொடரக் கூடா தென்றே

நாதியற்றும், நலிவுற்றும் கிடந்தோர் வாழ்வில்

        நிலையான முன்னேற்றம் பெற உழைத்தாய்!

ஆதிநாளின் கொடுமைஇன்று இலைஎன் றாலும்

        அடிமைநிலை முழுதும்இன்னும் மாற வில்லை!

 

அன்னியரின் ஆளுகைக்குள் அடிமைப் பட்டு

        அடைந்ததுயர் போய், நாட்டு விடுத லைக்குப்

பின்னும்தம் மக்களிடம் ஏற்றத் தாழ்வைப்

        பயிராக்கி வளர்த்தோர்கள், தங்கள் வாழ்வைப்

பொன்வயலாய் ஆக்கினார்கள்; எளிய மக்கள்

        பன்மடங்காய் அடிமையானார்! சொந்த வீட்டில்

அண்ணன்தம்பி கட்குள்ளே வேற்று மைகள்

        ஆனதுதான் வெட்கம்! இதை யார் நினைத்தார்?

 

செந்தா மரைச்சேற்றில் மலர்ந்த தைப்போல்

        தோன்றாது தோன்றியமா மணியாய் நீதான்

வந்துபிறந் தாயோஇச் சமுதா யத்தில்!

        விடிவெள்ளி யாய்உன்னைக் காண்ப தற்கு

நொந்துதவம் செய்தாரோ, அந்த மக்கள்!

        நெடுவாழ்வில் துயர்போக்கும் மருந்தே நீதான்!

இந்தபிறப் பில்மட்டும் இன்றி என்றும்

        இறவாத புகழுலகில் வாழ்வாய் நீயே!