மொழிபெயர்க்க முடியாத கிறுக்கல்களோடும்
சிறு உடைசல்களோடுமாய்
எல்லா வகுப்பறைகளுக்குள்ளும்
உட்கார்ந்திருக்கிறது
ஒரு கடைசி இருக்கை.
எண்ணெய் வரண்டும் செம்மை கலைந்துமான
பரட்டைத் தலையோடும்......
சொட்டுநீலம்  சீராய் பரவிடாத
சுருக்கம் கலைந்திடாத சீருடையோடும்...

நிறமுதிர்ந்தும் பளபளப்பு கரைந்ததுமான ஷூக்களோடும்....
பாதிசோகமும் மீதிமுரட்டுப் பிடிவாதமுங் கலந்த
முகமணிந்தபடியுமாய்....
எப்போதுமேயதில் புதைந்திருக்கிறான்
அக்கதிரையின் சொந்தக்காரன்.
இதுவரை அணையாதெரிந்த
இனவன்முறையின் ஏதாவதொரு கிளைத்தீயிலோ
இல்லையேல் வேறெத் தழலிலுமோ
பொசுங்கிப்போன தம் வாழ்வெண்ணியே
பேதலித்துக் கிடக்கிறாளோ
அவனது விதவைத்தாய்.

கூரையில் மிதக்கும்
நிறைவேறாக் கனவுகள் யாவையுமே
ஒரேயொரு அதட்டலுக்குள்
புதைத்தவாறே பதகளிப்போடு
கிளரத் தொடங்குவான்
ஸிப்பறுந்த தனது புத்தகப்பையை
குடியிருப்பிலிருந்தும்
மிகத்தூரமாய் முளைத்திருக்குமொரு
எல்லைப்புறக்குடிசைபோலவே
எல்லா செயற்பாடுகளிலும்
தன் சகபாடிகளை விட்டும்
ஒதுங்கியே நிற்கிறான் அல்லது
ஒதுக்கப் பட்டிருக்கிறானவன்.

இவ்வாறே
ஒவ்வோர் பாடவேளையிலும்
பின்னூட்டலுக்கும் விசேட பரிவுக்குமான
தன்னிலைப்பாட்டினை
மருளும் விழிகளினூடே
ஒழுகவிட்டபடி
அன்பையும் கருணையையும்
அவாவி நிற்குமோர்
பிஞ்சு இதயத்தை
எப்போதுமே சுமந்தபடி
எல்லா வகுப்பறைக்குள்ளும்
உட்கார்ந்திருக்கிறது
ஒரு கடைசி இருக்கை
கிழிந்த சிப்புடனோ அல்லது
பொத்தான் அறுந்த சட்டையுடனோ.

- கிண்ணியா எஸ்.பாயிஸா அலி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It