இன்றைய காந்தி யார்?

‘காந்தியும் இந்தியும்’ விவாதிக்கப்பட வேண்டிய ஒரு சிறந்த தலைப்பு. இந்தத் தலைப்பில் ஜெயமோகன் இந்தியைத் தேசிய மொழி, இணைப்பு மொழி, தொடர்பு மொழி என்று அனைத்துச் சொற்றொடர்களையும் பயன்படுத்தி எழுதி இருக்கிறார். இதை அவர் ‘இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி’ என்கிற பொருளில்தான் பயன்படுத்தி இருப்பார் என்றே நினைக்கிறோம். இந்தியாவின் பொதுமொழி என்றும் சொல்லுவது உண்டு. இதுவும் ஆட்சி மொழி என்கிற பொருளில்தான் சொல்லப்பட்டது. காந்தி விடுதலைப் போராட்டக் களத்திற்கு வருவதற்கு முன்பே இந்தியாவின் ஆட்சி மொழி பற்றிய விவாதம் காங்கிரசிற்குள் இருந்தது. அதனால்தான்  மெயில் ஏடு,

thirunavukkarasu_350(18.04.1906 ) ‘திராவிடர்களுக்கு ஆங்கிலம் எந்த அளவு அந்நிய மொழியோ அதே அளவு இந்தியும் அந்நிய மொழியே’ என்று எழுதிற்று. இதற்குப் பிறகுதான் காந்தி விடுதலைப் போராட்டக் களத்திற்கு வருகிறார். 1937ஆம் ஆண்டு இராஜாஜி, சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்தபோது ‡ இந்தியைக் கட்டாயப் பாடமாக அறிவித்த போது ‡ ‘ இந்தி அந்நிய மொழியே’ என்பதை ஒப்புக் கொண்டார். (மெட்ராஸ் மெயில் 08.10.1937) இந்தி தமிழைப் போன்ற மொழி இல்லை என்றும் சட்டமன்றத்தில் இராஜாஜி தெரிவித்து உள்ளார்.

முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம்

(1937 - 1940) தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசுகிற பகுதிகளில் நடைபெற வில்லை. தமிழ் பேசுகிற பகுதிகளில் போராட்டம் நடைபெற்று ஆயிரம் பேருக்கு அதிகமாகச் சிறைக்குச் சென்றனர். இதற்குக் காரணம் என்ன? தமிழ் ‡ சமஸ்கிருதப் போராட்டம், தமிழ் ‡ இந்தி போராட்டம் என்று மாறி இருந்தது. இந்தி சமஸ்கிருதத்தின் சாயலாகக் கருதப்பட்டே முக்கியத்துவம் வழங்கப்பட்டது. விடுதலைப் போராட்டத்தில் 70%க்கு அதிகமாகப் பார்ப்பனர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அதுபோது வர்ண தர்மம் பேணுவதில் மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டனர். இது அவர்களின் மறைமுகத் தொலைநோக்குத் திட்டமாக இருந்தது. இந்துஸ்தானியைத்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்றும் காந்தி எண்ணியிருந்தார். வடநாட்டில் இருந்த அரசியல்வாதிகள் ஆங்கிலத்தின் இடத்துக்கு இந்திதான் வந்தாக வேண்டும் என்று குரல் கொடுத்தனர். ஆனால் தென்னிந்திய அரசியல்வாதிகளோ ஆங்கிலமே நீடிக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

நேருவுக்கு, 1930களின் பிற்பகுதியில் இப்பிரச்சினை மிகுந்த நெருடலை அளிப்பதாகவே இருந்தது. 1935க்குப் பின்னால் தாம் எழுதிய ஒரு கட்டுரையில் முக்கியமான பெரிய மாநில மொழிகளைப் புகழ்ந்து எழுதினார். மாநில மொழிகளின் உரிமையில் தலையிட்டு வரம்பு மீறாமல், அதே நேரத்தில் ஒரு சுமூகத் தீர்வைக் காண வேண்டும் என்று விரும்பினார். எனவே இந்திக்கும் உருது மொழிக்கும் இடையே நடுவு நிலைமையாக இந்துஸ்தானியைத் தெரிவு செய்ய வேண்டும் என்று நேரு கருத்தறிவித்தார். நேருவைப் போலவே காந்தியும், “ வடக்கையும், தெற்கையும் இணைக்கவும், இந்தி மொழி, உருது மொழிக்கு இடையே ஒரு இணைப்புப் பாலமாகவும் இந்துஸ்தானி அமையும் ” என்று கருதினார்.

ஆங்கிலத்தைவிட இந்துஸ்தானியே ஆட்சி மொழியாக அமைய வேண்டும். இந்தி மொழியின் சொல்லாட்சியை சமஸ்கிருதப் பண்டிதர்கள் பின்பற்றுகிறார்கள். அதேபோல முஸ்லிம்கள் தங்கள் எழுத்துகளில் உருதுமொழி சொல்லாட்சியைப் பயன்படுத்து கிறார்கள். இவ்விரண்டு மொழிகளின் இனிமையான கலவையே இந்துஸ்தானி. இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஒரு பொதுவான மொழியாக அது அமையும் என்று கருதப்பட்டது.

1945ஆம் ஆண்டில் இந்தி இலக்கியக் குழுவின் துணைத் தலைவராக இருந்த புருஷோதத்தம தாஸ் தாண்டன் இந்திமொழிப் பயன்பாட்டில் வழங்கி வந்த பிற மொழிக் கூறுகளை விலக்கித் தூய்மையான இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று விரும்பினார். அவரோடு காந்தி விவாதங்களை நடத்தினார். தேவநாகரி வடிவில் எழுதப்படும் இந்திதான் ஆட்சி மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்பதில் மூர்க்கமாக இருந்த புருஷோத்தம தாஸ் தாண்டனின் இந்திக் குழுவிலிருந்து காந்தி விலகிவிட்டார்.

“ நான் இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் சவாரி செய்ய நினைக்கிறேன். என்னை யார் புரிந்து கொள்ளப் போகிறார்கள்? தேசிய மொழி இந்தி ; தேசிய மொழி ‡ இந்தி + உருது = இந்துஸ்தானி. என்னுடைய இந்தக் கருத்தை யார் புரிந்து கொள்ளப் போகிறார்கள்  ” என்று காந்தி மனம் வருந்தினார்.

முதலில் காந்தி  இந்தியைத்தான் விரும்பினார். 1918ஆம் ஆண்டில் இந்தூரில் நடைபெற்ற 8ஆவது இந்தி சாகித்திய சம்மேளன மாநாட்டில், ‘ தென்னிந்தியாவில் இந்தியைப் பரப்புவதற்கு முறையாகத் திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் ’ என்று காந்திதான் அறிவித்தார். ஒவ்வொரு பண்பட்ட இந்தியனுக்கும் தனது மாகாண மொழியுடன் ஒரு செம் மொழியும் ( சமஸ்கிருதம்) இந்தியும் கட்டாயம் தெரிந்தி ருக்க வேண்டும் என்று 1909இல் அவர் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது மட்டும் இல்லை. அவர் எங் இந்தியாவில் பின்வருமாறு எழுதினார்.

“ திராவிடர்கள் ( Dravidians  என்ற சொல்லையே அவர் பயன்படுத்தி இருந்தார் ) சிறுபான் மையினர். இப்போது இருக்கும் நாட்டின் பொருளாதார நிலையில் பெரும்பான்மை யினரான பிற வட இந்திய மக்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற திராவிட மக்களோடு தொடர்புகொள் வதற்கு அவர்கள் மொழிகளைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. பெரும் பான்மையினர் பேசும் பொது மொழியைத்தான் திராவிடர்கள் ஏற்றுக் கொள்ள வேணடும். ”

இங்கே காந்தி தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்களைக் குறிப்பிடுதவற்காக ‘திராவிடர்கள்’ எனும் சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார். இக்கருத்தை யயல்லாம் தெரிவிப்பதற்கு முன்னதாக, வடநாட்டினர் தமிழைக் கற்கவேண்டும் என்றும் காந்தி சொன்னார். இது குறிப்பிடத்தக்கச் சிறப்புக்குரியதாக இருந்தாலும் இக்கூற்றை காந்தி மறந்தார். இந்தியைப் பரப்புவதில்தான் பின்னர் அவர் அதிதீவிரம் காட்டினார். சென்னையில் இந்தி பிரச்சார சபையையும்  காந்தி தொடங்கினார். இதைத் தொடர்ந்து சத்திய மூர்த்தி , இராஜாஜி, சரோஜினி நாயுடு ( 1927 இல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலேயே இந்தி 4ஆவது மாநாட்டிற்குத் தலைமை தாங்கியவர்) போன்றவர்கள் எல்லாம், தென்னாட் டினர் இந்தி படிப்பதையும், சமஸ்கிருதம் கற்றுக் கொள்ளுவதையும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வற்புறுத்தி வந்தனர். இந்தச் சமயங்களில் எல்லாம் மெட்ராஸ் மெயில் இந்தியை எதிர்த்தே எழுதியது. ஆங்கிலத்தின் இடத்தை இந்தியால் பிடிக்க முடியாது எனத் தீர்மானமாகக் கூறியது. இந்துவோ இந்திக்குச் சார்பாக எழுதியது.

1930களில் நேருவின் கருத்தை அடியயாற் றியே காந்தியும் அவரது இந்துஸ்தானி மொழிக் கொள்கையை வலியுறுத்திப் பார்த்தார் எடுபடவில்லை. ஆனால் என்ன நடந்தது? இராமச்சந்திர குகா இந்துவில் கிரான்வில் ஆஸ்டினின் மேற்கோளை ஒரு கட்டுரையின் வாயிலாக 2004இல் வெளிப்படுத்தி இருந்தார். அதில் அவர் கீழ்காணும் கருத்துகளை எழுதியிருந்தார்.

“ இந்தியர் அனைவரும் மொழி, நடை, பண்பு, சமயம் போன்ற எல்லா வகைகளிலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்ற வெறித்தனத்தில் இந்தி வாலாக்கள் நாட்டைத் துண்டாடவும் தயாராக இருந்தார்கள் வெகு காரசாரமான விவாதங்கள் அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்றன. தென்னிந்தியர்களிடையே இந்துஸ்தானிக்கு இருந்த எதிர்ப்பு வெகு குறைவுதான். ஆனால் இந்தியை அறவே ஏற்க மறுத்தார்கள் அவையில் ஓர் உறுப்பினர்  இந்தியில் பேசினால் இந்தி அறியாதவர்கள் ஆங்கில மொழி பெயர்ப்புக் கேட்டார்கள். இந்தி மட்டுமே தேசிய மொழி என்று இந்திக்காரர்கள் வாதிட்டபோது, தென்னிந்தியர்கள் அதைக் கடுமையாக எதிர்த்தார்கள். சென்னையைச் சேர்ந்த டி.டி.கிருஷ் ணமாச்சாரியின் பேச்சு அதற்கு எடுத்துக்காட்டு. ”

டி.டி.கே. பேசினார் : “முன்னாளில் எங்களுக்கு ஆங்கிலம் பிடிக்கவில்லை. எனக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லாமல் மில்டனையும், ஷேக்ஸ்பியரையும் படிக்கும் படி என்னைக் கட்டாயப்படுத்தியதால் ஆங்கிலத்தை வெறுத் தேன். இப்போது என்னை இந்தி படிக்கும்படி கட்டாயப்படுத்தினால் என் வயது காரணமாக என்னால் முடியாமல் போகலாம். ஆனால் நிச்சயமாக நான் இந்த இந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.  நமக்கு வலுவான ஒரு மய்ய அரசு தேவைதான் என்றால், அதை இந்தி தெரியாத மக்களை அடிமைப்படுத்திய பின்னரே அமைக்க வேண்டி இருக்கும். தென்னிந்திய மக்களின் சார்பாக நான் உங்களை எச்சரிக்க விரும்புகிறேன். அங்கு  ஏற்கனவே பிரிவினைக் கோருபவர்கள் வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தி ஏகாதிபத்தியம் என்பதை எனது உத்திர பிரதேசத்து நண்பர்கள் எண்ணினால் அது நமக்கும் நல்லதல்ல, நாட்டுக்கும் நல்லதல்ல. இந்தி பேசும் இந்தியா வேண்டுமா? முழுமையான இந்தியா வேண்டுமா? தெரிவு செய்ய வேண்டியது நீங்கள்தான். ”

அரசியல் நிர்ணய சபையில் டி.டி.கே. பேசுகிறபோது திராவிடர் கழகத்தின் தனிநாட்டுக் கொள்கையைத்தான் எடுத்துக் கூறியிருக்கிறார். இந்திய ஆட்சி மொழிப் பிரச்சனையில் காந்தி, நேரு நினைத்ததையோ பிற வட இந்தியத் தலைவர்கள் நினைத்தç தயோ தமிழ் நாட்டில் செயல்படுத்த முடியவில்லை என்பதை ஜெயமோகன் எண்ணிப் பார்க்க வேண்டும். பெரியார் கொள்கைகள் ஜெயமோகனின் தளத்திற்கு, தரத்திற்கு எப்படிச் சரியாய் இருக்க முடியும்? ஆனால் பெரியாரின் இயக்கக் கருத்தை டி.டி.கே. எடுத்துரைத்து இந்தியைத் தடுக்க முயலுகிறார். ஆகவே ஜெயமோகனின் தளம், தரம் காணாமல் போய்விட்டன. காந்தியோடு பெரியாரை ஒப்பிட வேண்டும் என்று யாரும் விரும்பமாட்டார்கள். காந்தி சநாதனி; பெரியார் இடதுசாரி சாயல் உள்ள சமதர்மி. இருவரையும் எப்படி ஒப்பிட முடியும்?

gandhi_330ஜெயமோகன் தனது சிந்தனையைச் சற்று கூர்தீட்டிக் கொள்ள வேண்டும். பெரியாரும் அவரது திராவிட இயக்கமும் ‘இலக்கியவாதி களோடு பேசுவது என்றோ, கொஞ்சம் படித்தவர்களோடு பேசுவது’ என்றோ  சட்டிமேளம் கொட்டும் நகைவேழம்பர்கள் அல்ல. திராவிட இயக்கம் 1937 ‡ 40, 1948,1952,1965 என நான்கு பெரிய இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி இருக்கிறது. களத்தில் மிகப் பலரை இழந்து இருக்கிறது. இயக்கத் தோழர்கள் தீக்குளித்து மாண்டிருக்கிறார்கள். இந்நான்கு போராட்டங் களுக்குப் பின்னும் 1986இல் ஒரு போராட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. இந்தத் தொடர் போராட்டங்களினால் என்ன மாற்றம் நிகழ்ந்தது என்பதை ஜெயமோகனுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

அரசியல் நிர்ணய சபை, ஒரு ஓட்டு அதிகம் பெற்று அந்த முடிவின்படி இந்தி, இந்தியாவின் ஆட்சி மொழி என்று தீர்மானித்துவிட்டது. அதாவது, ‘ இந்தி மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கும். ஆனால் அரசியல் சட்டம் நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து 15 ஆண்டுகள் வரை ஆங்கிலமே தொடர்ந்து ஆட்சி மொழியாக இருந்து வரும் ’ ‡ என்ற நிலை நடைமுறைக்கு வந்தது. அதற்கு ஏற்ப 1965வரை வழக்காடு மன்றங்கள், அரசுப் பணித்துறைகள், நிர்வாகங்கள் ஆங்கில நிர்வாகத்தின் வழியே நடைபெற்று வந்தன. 1965இல் வலுக்கட்டாயமாக இந்தித் திணிப்பு நடந்தது. இடையே, ‘ இந்தி பேசாத மக்கள் விரும்புகிற காலம் வரை ஆங்கிலமே நீடிக்கும் ’ எனப் பிரதமர் நேருவின் வாக்குறுதியும் வழங்கப் பட்டது. ஆனாலும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது. அன்று முதல் இன்று வரை தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அரசின் கொள்கை யாகச் செயல்பட்டு வருகிறது. மய்ய அரசு ஆங்கிலத்தைத் துணை ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டு இருக்கிறது. இதற்குக் காரணம் திராவிட இயக்கம்தான் !

1. ஒரு கட்டத்தில் இந்தி ஆட்சி மொழியாவதை காந்தி விரும்பவில்லை.

2. காந்தியும், நேருவும் இந்துஸ்தானியை ஆட்சி மொழியாக்கவே விரும்பினர். அதன் மூலம் இந்து ‡ முஸ்லிம் ஒற்றுமையைப் பலப்படுத்தலாம் என எண்ணினர்.

3. தேசிய மொழியா, ஆட்சி மொழியா, இணைப்பு மொழியா என்பதில் அரசியல் நிர்ணய சபையில் கடுமையான விவாதம் நடந்தது.

4. இறுதியில் சமஸ்கிருத மயமான இந்திக்கு ஆட்சி மொழித் தகுதியை வழங்கினார்கள்.

5. திராவிட இயக்கத்தின் தனி நாடு கோரிக்கையை டி.டி.கே. தமது பேச்சினூடே இந்திக்காரர்களுக்கு எச்சரிக்கையாக எடுத்துக்காட்டினார்.

6. தமிழ் நாட்டில் தொடர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக 1967இல் தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது. சில முக்கிய மாற்றங்கள் தமிழ்நாட்டில் நிகழ்ந்தன. மய்ய அரசு ஆங்கிலத்தை இந்தியாவின் துணை ஆட்சி மொழியாக அறிவித்தது.

7. தி.மு.கழகத்தின் நிறுவனத்  தலைவர் அறிஞர் அண்ணா, இந்தியாவின் தேசிய மொழிகள் பதினான்கும் ஆட்சி மொழியாக வேண்டும் என மாநிலங்கள் அவையில் பேசினார். தேசிய மொழிகள் 19 என ஆனபோது அவற்றை ஆட்சி மொழியாக்க மய்ய அரசு கொள்கையளவில் ஏற்றுக் கொண்டது. அதன்பிறகு மேலும் 3 தேசிய மொழிகள் இணைக்கப்பட்டு இப்போது இந்தியாவின் தேசிய மொழிகள் 22 என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

8. திராவிட இயக்கம் தனது ஜனநாயகப்  போராட்டத்தின் வழியாக மய்ய அரசின் மொழிக் கொள்கையில் மாறுதலை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான முதற்கட்ட வெற்றியை அது பெற்று இருக்கிறது.

...................................................................................................................................................................................................