பொங்கல் முதல் நாளைப் புத்தாண்டாகத் தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.கழக அரசு அறிவித்திருப்பது, ஏதோ ஒரு சிறிய மாற்றமன்று. சுயமரியாதை திராவிட இயக்கக் கோட்பாடுகளின் தொடர்ச்சியும், வளர்ச்சியும் அதில் பொதிந்து கிடக்கிறது என்பதை ஆய்வாளர்கள் அறிவர்.

1926 இல் சுயமரியாதை இயக்கம் தொடங்கப் பெற்ற வேளையில், மொழி சார்ந்த அரசியலை அது முன் வைக்கவில்லை. கடவுள் மறுப்புக் கொள்கைகூட அன்று வெளிப்படவில்லை. முதன் முதலில் வெளியான ‘குடியரசு’ இதழின் முகப்பில், கோயில் கோபுரம், சிலுவை, பிறை ஆகியன காணப்படுகின்றன. எம்மதமும் சம்மதம் என்னும் நிலை யைத்தான் அது காட்டுகிறது. ஆக, மத மறுப்பு, கடவுள் மறுப்பு, மொழி உரிமை போன்ற கோட்பாடுகள் எவையும் அன்று முகாமையாக இல்லை.

‘சமத்துவம்’ என்னும் ஒற்றைக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கவே, அன்று சுயமரியாதை இயக்கத்தைத் தந்தை பெரியார் தோற்றுவித்தார். சமத்துவத்திற்கான வழிமுறைகளில் ஒன்றாகவும், முதன்மையானதாகவும் ‘இடஒதுக்கீடு’ கோரிக்கை முன்வைக்கப் பட்டது. அதனால்தான், இடஒதுக்கீடு ஆணையை (கம்யூனல் ஜி.ஓ) வெளியிட்ட அமைச்சர் முத்தையா முதலியாரைப் பெரியார் வெகுவாகப் பாராட்டினார். பல்வேறு திருமணங்களைத் தலைமை யேற்று நடத்திய பெரியார், தன் வீட்டுத் திருமணத்தை (திருவாளர்கள் ஈ.வி.கே.சம்பத் சுலோச்சனா திருமணம்) முத்தையா முதலியார் தலைமையில் நடத்தினார்.

காலப்போக்கில், சமத்துவத்திற்குக் குறுக்கே நிற்கும் மிகப்பெரிய தடைகளாக சாதி, மதம், கடவுள், சமற்கிருத ஆதிக்கம், ஆணாதிக்கம் ஆகியனவற்றைப் பெரியார் உணர்ந்தார். கடவுளோடு மதமும், மதத்தோடு சாதியும் பின்னிப் பிணைந்து கிடப்பதை அறிந்த அவர், அடிவேரான கடவுள் நம்பிக்கையை எதிர்க்கத் தொடங்கினார். சாதியம் என்பது இந்துத்துவத்தின் உருவாக்கம் என்பதால், மற்ற எம் மதத்தைக் காட்டிலும் இந்து மதக் கோட்பாடுகளை, வழிமுறைகளை அவர் கடுமையாகச் சாடினார். இந்து மதத்தைத் தாங்கிப் பிடித்த தூண்களில் ஒன்றாக இருந்த சமற்கிருதத்தையும் எதிர்த்துப் போராட வேண்டிய தேவை அவருக்கும், சுயமரியாதை இயக்கத்திற்கும் ஏற்பட்டது.

வழக்கறிஞர் கு.ச.ஆனந்தன், “ சமற்கிருத வல்லாண்மை என்பது, ஒரு மொழி ஆதிக்கத்தை மட்டும் கொண்டதன்று. தமிழர் தம் வாழ்வில், குடும்பத்தில், சமூக வாழ்வில், வழிபாட்டில், பழமை வழக்கங்களில், கலை இலக்கியத் துறைகளில் புற்றைப் போன்று பரவி, தமிழர் தம் பாண்பாட்டை அறிய இயலாதபடி, நிலையான மாற்றத்தை உருவாக்கி விட்டதொரு சமுதாய வல்லாண்மை; ஏற்றத் தாழ்வை நிலை நிறுத்திவிட்ட சமயக் கட்டமைப்பு” என்று தன் நூலில் (‘இந்தியாவில் தேசிய இனங்களும், தமிழ்த் தேசியமும்’ ) எழுதியிருப்பதை நாம் நினைவு கூரலாம்.

அந்தச் சமற்கிருத வல்லாண்மையில் ஒன்றுதான், நாயக்க மன்னர்களின் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சித்திரைப் புத்தாண்டு என்னும் புது வழக்கம். பழந்தமிழ் மரபில் அப்படி ஒன்று இருந்த மைக்கான எந்தச் சான்றும் இல்லை. மேலும், அந்தப் புத்தாண்டுத் தோற்றத்தின் பின்புலமாகக் கூறப்படும் புராணக் கதையோ,ஆபாசமும், அருவெறுப்பும் நிறைந்ததாக உள்ளது. அந்த 60 ஆண்டுகளின் பெயர் களில் ஒன்று கூடத் தமிழாக இல்லை.இவ்வாறு நம் மொழிக்கும், பண்பாட்டிற்கும் அந்நியமான ஓர் இழிவு, 400 ஆண்டுகளுக்கும் மேலாக நம் மீது சுமத்தப்பட்டிருந்தது. சுயமரியாதை உடைய எவராலும் தாங்கிக் கொள்ள இயலாத, தாங்கிக் கொள்ளக் கூடாத அந்த அவமானத்தைத் தமிழக அரசு இன்று நீக்கியுள்ளது.

இயல்பாகவே, தி.மு.க.வின் தோற்றம், மொழி சார்ந்த அரசியலோடு இணக்கமான தொடர்புடையது. அறிஞர் அண்ணா அரசியலில் காலடி எடுத்து வைத்த நேரம் இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலமாக இருந்தது. அண்ணா அவர்களின் முதல் சொற்பொழிவே (பதிவாகியுள்ள முதல்உரை) இந்தி எதிர்ப்பாகவும், தமிழின் பெருமையைச் சுட்டுவதாகவும் உள்ளது. துறையூரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத் தாலுகா மாநாட்டில் அவர் ஆற்றியுள்ள உரையை, 1937 ஆகஸ்ட் 25 ஆம் நாள் ‘விடுதலையில்’ நாம் பார்க்க முடிகிறது. திராவிட நாடு ஏட்டை 1942 மார்ச் 7 அன்று அண்ணா தொடங்கியபோது, அதன் முகப்பில், “ தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ” என்னும் புரட்சிக் கவிஞரின் வரிகளையே அவர் பயன்படுத்தி இருந்தார்.தலைவர் கலைஞர் அவர்களும், தன் 14 ஆம் அகவையில், இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரராகவே திருவாரூரில் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார் என்பதை நாம் அறிவோம்.

எனவே தொடங்கிய இடத்தின் தொடர்ச்சியாகவே இன்றும் தன் பணியைக் கலைஞர் தொடர்கின்றார் என்பதற்கான எடுத்துக்காட்டே, பொங்கலைப் புத்தாண்டாக அவர் அறிவித்துள்ள செய்தியாகும்.

தமிழ் மொழியை, இனத்தை, தமிழர் மரபைப் போற்றுகின்ற ஒவ்வொருவரும், பொங்கலே புத்தாண்டு என்னும் அறிவிப்பை வாழ்த்தி வரவேற்கின்றனர். கலைஞரின் தமிழ்ப் பணியும், தன்மானப் பணியும் தொடர வேண்டுமென வணங்கி மகிழ்கின்றனர்.

- சுப.வீரபாண்டியன்