'கொறப்பய' ‍ 'கொறமூஞ்சி' ‍ 'கொற வேஷ‌ம்'  இப்படி எல்லாம் திட்டுவதும், அப்படித் திட்டுவதில் ஒரு மகிழ்ச்சியைப் பெறுவதும் இன்றைய சமூகத்தில் இயல்பான ஒன்று.

இப்படித் திட்டுவதால் அல்லது பேசுவதால் ஒரு சமூகம் இழிவுபடுத்தப்படுகிறது, அந்தச் சமூக மக்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்பதை நாம் உணரவும் இல்லை ; உணர்ந்தாலும், கவலைப்படுவதும் இல்லை, திருத்திக்கொள்ள முயல்வதும் இல்லை.

நம் முன்னோர்களின் வாழ்வும் பண்பாடும் நிலங்களைச் சார்ந்து இருந்தன என்பதைச் சங்க இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன.

ஐவகை நிலங்களுள் முதல் நிலம் குறிஞ்சி. மலையும் மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி. குறிஞ்சிநில மக்கள் குன்றுவர்கள். ஆண்கள் குன்றுவன் என்றும், பெண்கள் குன்றுவத்தி என்றும் அழைக்கப்பெற்றார்கள். காரணம் அவர்கள் மலைக்குன்றுகளில் வாழ்ந்தவர்கள், மலைகளின் மைந்தர்கள், மலைவாழ் மண்ணின் மைந்தர்கள்.

இன்று அந்தக் குன்றுவ மக்கள் “குறவர்” என்று அழைக்கப்படுகிறார்கள். சமூகத்தில் அவர்களின் இன்றைய வாழ்க்கை, அவலம்.

மலைகளில் கூட்டம் கூட்டமாகக், குழுக்களாகக் குழுமி வாழ்ந்த குறவர் இனக் குன்றுவமக்கள் இன்று சிதறிக் கிடக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, அவர்களின் இனப்பெயரான குறவர் என்ற பெயரே 27 பெயர்களாகச் சிதறிப் போய்விட்டது.

ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னர், அவர்களின் கோடைகால ஓய்விடமாக அமைந்த மலைப்பகு திகளில் இருந்து, அம்மலைவளங்கள் அவர்களால் கண்டறியப்பட்ட பின்னர், குறவர் இன மக்கள் அங்கிருந்து விரட்டப்பட்டனர் ‘வனப்பாதுகாப்புச் சட்டம்’ என்ற பெயரால். அதனால் சிதறிப் பிரிந்த மக்கள் பல்வேறு ஊர்களில் வாழநேர்ந்தது.

அவர்கள் அந்த ஊர்களின் பெயரால் அழைக்கப்பட்டனர். எடுத்துக் காட்டாக “சேலம் மேல்நாட்டுக் குறவர்” - “ஆத்தூர் கீழ்நாட்டுக் குறவர்”.

அதுமட்டுமல்லாமல் இம்மக்கள் செய்த தொழில் அடிப்படையிலும் இவர்கள் அழைக்கப் பட்டார்கள். எடுத்துக்காட்டாக “உப்புக் குறவர்” - “இஞ்சிக் குறவர்”.

திரு. ஆ.நா. சட்டநாதன் தலைமையிலான குழு அளித்த தமிழ்நாடு பிற்பட்டோர் நலக்குழு அறிக்கை - பாகம் ஒன்றில், அத்தியாயம் 9 இல், 21 வகையான குறுவர் இனப்பெயர்களைச் சட்டநாதன் கொடுத்திருக்கிறார். அத்துடன், “இத்தனை காலமும் கவனிக்கப்படாமலிருந்த இந்த மக்களை, முறைப்படி ஷெ­டியூல் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று அங்கீகரிப்பதன் மூலம் அரசாங்கம் இவர்கள் கடந்த காலத்தில் புறக்கணிக்கப்பட்டிருந்ததற்கு இப்போதாவது ஈடுசெய்வதாக அமையும். செடியூல் வகுப்பினர் பட்டியலில் குறவர் என்ற பெயர் இருக்கிறது. அப்படி இருந்தும் கூட சம்பந்தப்பட்ட எல்லா அலுவலர்களுமே அதைக் கவனிக்காமல் விட்டு விட்டார்கள். செடியூல் வகுப்புப் பட்டியலில் உள்ள “எண் 2 - குறவர்” என்னும் குறிப்பும், “பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட குறவர்” என்னும் இனமும் ஒன்றாகக் கருதப்படவில்லை. இத்தவறு வருந்தத்தக்க ஒன்றாகும். குறவர் சாதி செ­டியூல் வகுப்புப் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பது தெளிவு” என்று அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

குறவர், இனமக்கள் கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட மக்களாக இருக்கிறார்கள் என்று சொல்லும் இவ்வறிக்கை செ­ட்யூல் வகுப்புப்பட்டியலில் உள்ள குறவர் என்றும், பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட குறவர் என்றும் இருவகையினராகக் கூறி இவர்களை ஒன்றாகக் கருதாதது வருந்தத்தக்கது என்று கூறுகிறது.

இதுதான் இம்மக்களின் அடிப்படை பிரச்சினையே! பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட குறவர் என்பவர்கள் குற்றப்பரம்பரையினர் என்று ஆங்கில அரசால் முத்திரை குத்தப்பட்டவர்கள்.

மலைகளில் இருந்து விரட்டப்பட்ட மக்கள் பல்வேறு இடங்களில், பல்வேறு தொழில்களைச் செய்து நிரந்தர குடியிருப்பு இல்லாமல் அலைந்து திரிந்ததால், அவர்கள் (திருட்டு போன்ற) குற்றத் தொழில் செய்பவர்கள் என்று சொல்லி, பகலில் எங்கிருந்தாலும், இரவில் காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டதால் இவர்கள் குற்றப்பரம் பரையினர் என்று முத்திரை குத்தப்பட்டார்கள். ஆனால் பின்னர் இம்மக்கள் குற்றப்பரம்பரைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டார்கள். அப்படி நீக்கப்பட்டபோது இவர்கள் சீர்மரபினர் பட்டியிலில் சேர்க்கப்பட்டுவிட்டார்கள். சிலர் தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலும் சேர்க்கப்பட்டனர்.

எடுத்துக்காட்டாக “கொரவர்” என்ற பெயர் சீர்மரபினர் பட்டியிலிலும், “குறவன்/ சித்தனார்” என்ற பெயர்கள் தாழ்த்தப்பட்டவர் பட்டியலிலும், “மலைக்குறவன்” என்ற பெயர் பழங்குடியினர் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளன.

சட்டநாதன் குழு அறிக்கையில் காணும் 21 பிரிவு மக்களையும், ஒரே இனமாக, ஒரே பழங்குடி இனப் பட்டியலில் சேர்ப்பதற்குப் பதிலாக, சீர்மரபினர், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் பிரித்து சேர்க்கப்பட்டுள்ளதால், இம்மக்களுக்கான அடிப்படை உரிமைகளை அரசிடமிருந்து முறையாகப் பெறமுடியவில்லை என்கிறார் இம்மக்களுக்கான “விடுதலை வேங்கைகள்” என்ற அமைப்பின் நிறுவனத்தலைவர் புரட்சிதாசன்.

சீர்மரபினர், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் குறவர் இனமக்கள், அவர்களுக்குரிய பழங்குடியினச் சலுகைகளைப் பெற முடியாமல் போகின்றனர் என்பது புரட்சிதாசனின் கருத்து. அதுமட்டுமன்று, சாதிச் சான்றுகள் பெறுவதிலும் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன.

இதனால் இம்மக்களின் கல்வி, அரசுப்பணி, பிற அரசு நலத்திட்ட உரிமைகள் அனைத்துமே பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மொத்தத்தில் இச்சமூகம் முன்னேற்றத்திற்கு இச்சாதிப்பிரிவுகள் பெரும் தடையாக இருக்கின்றன.

ஆகவே, சட்டநாதன் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும், ஆத்தூர் கீழ்நாடு கொறவர், ஆத்தூர் மேல்நாடு கொறவர், சிங்க கொறவர், கங்கையபாடி கொறவர், தொப்ப கொறவர், டாபி கொறவர், இஞ்சிக் கொறவர், கலிங்கி தேபி கொறவர், கல கொறவர், கொண்ட கொறவர், பொன்னை கொறவர், சேலம் மேல்நாடு கொறவர், சேலம் உப்புக் கொறவர், சக்கரை தமதை கொறவர், சாரங்கபள்ளி கொறவர், தல்லி கொறவர், தொகமலைக் கொறவர், வடுகர்பட்டி கொறவர், வேட்டை கொறவர், வரகனேரி கொறவர் ஆகிய 21 பெயர்களையும் ஒரே இனப்பெயராகக் “குறவர்” என்றே அழைக்கப்பட வேண்டும், பழங்குடி இனப்பட்டியலில் சேர்க்கப்படவேண்டும் என்ற அந்த மக்களின் நியாயமான வேண்டுகோளை மத்திய - மாநில அரசுகள் புறக்கணிக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அத்துடன் சட்டநாதன் குழு பரிந்துரையின்படி இம்மக்கள் “கொறவர்” என்று அழைக்கப்படாமல் “குறவர்” என்றே அரசு பதிவு செய்ய வேண்டி யதும் அவசியம். 1921 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது “குறவர்” என்றே எழுத்த மைப்பில் இருந்துள்ளதாக சட்டநாதன் குழு அறிக்கை கூறுகிறது. பிறகு ஆங்கிலேயரின் உச்சரிப்பு வசதிக்காகக் கொறவர் என்றும், குறவர் என்றும் இம்மக்கள் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.

சமூகநீதி என்பது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களைவிட, பழங்குடி மக்களான மலைவாழ் மக்களுக்கே முன்னுரிமை பெறக்கூடியது. இந்த மக்களிடமிருந்து ஆட்சித்தலைவர், காவல்துறைத் தலைவர், உயர் பொறியியல், மருத்துவ மற்றும் பிற அதிகாரிகள் எவரும் இதுவரை வரவில்லை என்பதே இந்த மக்களின் சமூக இருப்பைக் காட்டுகிறது. இடஒதுக்கீட்டிலும் முதன்மை பெறக்கூடியவர்கள் பழங்குடி மலைவாழ் மக்கள்.

இவைகளைக் கருத்தில் கொண்டு, பிரிந்து கிடக்கும் குறவர் இனப்பெயர்களை ஒரே பெயராக அறிவித்து, இந்த மக்களின் சமூக அவலங்களைக் களையவும், இவர்களுக்கான சமூக நீதி கிடைக்கவும் அரசு ஆவன செய்ய வேண்டும்; ஏனைய சமூகங்களும் இவர்களுக்குத் துணை நிற்க வேண்டும்.

இதுதான் புரட்சியாளர்அம்பேத்கர், தந்தை பெரியார் காட்டும் சமூகநீதி.