bhopalநீதிமன்றங்கள்
குற்றவாளிகளுக்கு மட்டுமல்ல
நீதிக்கும் சேர்த்து
சிலநேரங்களில்
மரணதண்டனையை
வழங்கி விடுகின்றன.

25 ஆயிரம் பேரின் சாவுக்குப் பால்
ஊற்றப்பட்ட போபால் நகரம் . . . .
இன்னமும் நரகமாய் காட்சித்தருகிறது.

காற்றில் வீசும் பிணங்களின்
வாசம் உணராமல்
கொலைக்குற்றவாளிகளுக்கு
ஜாமீன் வழங்கி
கறுப்புத்துணி நீதிதேவதையின்
கண்களில் மட்டுமின்றி
நீதியின் மீதும்
சவத்தின் மீது போர்த்தப்பட்டது போல
போர்த்தப்பட்டுள்ளது.

தொப்புள்கொடி அறுக்கப்படும் முன்
கருவறைக்குள்ளே
கல்லறை கட்ட
எருக்கலம்பால்
வைத்துக் கொல்வது
தமிழகத்தில் சிலருக்குப் பழக்கம்.

அமெரிக்கக்காரன்
எருக்கலம்பாலுக்குப் பதில்
போபாலில் - வாயு மூலம்
25 ஆயிரம் பேருக்குப் பாலூற்றினான்.

 
போபாலின் புதிய மகவுகள்
விஷவாயு பெற்றெடுத்த குழந்தைகள். . .

அப்பாவைப் பாரு
அண்ணனைப் பாரு
மாமாவப்பாரு என
பிறந்தக் குழந்தைகளை
அன்பொழுக அம்மாக்கள்
அழைக்கமுடியாத நிலையில்
பிறந்த போதே
பார்வையற்றவர்களாகப் படைத்தவன்
பிரம்மன் அல்ல
ஆண்டர்சன்.

பூச்சிக்கொல்லி மருந்துகளை
பயிர்களுக்குப் பதில்
உயிர்களுக்குக் கொடுத்த
அமெரிக்காவின்
ஆண்டர்சனை
விமானத்தில் ஏற்றி விட்டது
இந்தியாவை ஆண்ட ஆட்சியாளர்களாம்.

ஆண்டர்சனை மட்டுமல்ல
அனைத்துப் பொருட்களின்
விலையையும் ஏற்றிவிட்டவர்கள்
அவர்கள் தான்.
ஏற்றி விடுவது
அவர்களுக்கு ஒன்றும்
புதிய விஷயமல்ல.

மோடி மஸ்தான் வித்தை காட்டும் போது
ஒரு முறை ஜோரா கைதட்டுங்க என்பது போல
விலைவாசி உயரும் போதெல்லாம்
வறுமையை விரட்டுவோம் என்ற
வார்த்தை ஜாலம் காட்டுவது
நமது ஆட்சியாளர்களுக்கு வாடிக்கை.

போபாலில்
மக்களைக் கொன்றழித்த
ஆண்டர்சனைப் பிடிக்க
நம்மை ஆள்பவர்களால் முடியவில்லை.
டென்னிஸ் கோட்டில்
பந்தடித்து அவன் மகிழ்வதை
நமது ஒளிஊடங்களும்
மகிழ்ச்சியாகக் காட்டுகின்றன.
எவன் வீட்டில்
இழவு விழுந்தாலும்
இவர்களுக்குச் செய்தி தான்.

பைபிள்
அனைவரிடம் அன்பு கொள்ளச்சொல்கிறது.
அதை படித்தானாத் தெரியவில்லை
அமெரிக்காக்காரன்
ரைபிளை எடுக்கிறான்.
தன் நாட்டு ஆயுதக்குப்பைகளைக்கொட்ட
ஒவ்வொரு தேசத்தின் மீதும்
படையெடுக்கிறான்
வியாபாரம் என்ற பெயரில்.

பேரழிவு ஆயுதங்கள் உள்ளதாகக்கூறி
பிரயாணப்பட்ட ஈராக்கில்
பென்சில் சீவக்கூட
பிளேடு இல்லை எனத்தெரிந்தும்
அந்நாட்டு ஜனாதிபதி
சதாம் உசேனை
சாகடித்தது அமெரிக்கா.

பாலஸ்தீனத்தின் பாவப்பட்ட
குழந்தைகளைப் பட்டினியில்
துடிக்க வைத்துக் கொன்று குவிக்க
இஸ்ரேலை அனுப்புகிறது.
காசா முழுவதும்
நாசமாகியும்
மூர்க்கம் குறையவில்லை
அமெரிக்காவுக்கு.

போபாலில்
1984-ஆம் ஆண்டு டிசம்பர்-2ல்
போபாலில் 120 அடி உயரத்திற்கு
எழும்பிய வெண்புகையைப் போல
மேலே மேலே மேலே
எழும்புகிறது கேள்விகள்.

பதில் சொல்ல வேண்டிய
இடத்தில் அல்ல
தண்டிக்கப்பட வேண்டிய
இடத்தில் நிற்கிறது
மத்திய அரசு.

- ப.கவிதா குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It