உலகம் கண்டிராத வகையில் ஓர் இன அழிப்பு, கடந்த மே மாதம் இலங்கையில் அரங்கேறியுள்ளது. இரண்டு, மூன்று நாள்களில், ஏறத்தாழ ஓர் இலக்கம் தமிழீழ மக்கள் அங்கே வகைவகையாகக் கொல்லப்பட்டனர். உலக நாடுகளோ கள்ள மெளனம் காத்தன.

போர்க் கொடுமைகளிலிருந்தும், சிங்களப் பேரினவாத அரசின் இன அழிப்பிலிருந்தும் தப்பிய மூன்று இலட்சம் மக்கள் முள்வேலிகளுக்குள் அடைக்கப்பட்டனர். அந்த முகாம்களைப் பார்வையிட்ட, அமெரிக்காவைச் சேர்ந்த யூதப் பெண்மணியான ஷாண்டேன், “அந்த முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமை காணச் சகியாததாக உள்ளது” என்று கூறினார். அவருடைய பேச்சு ஒலி-ஒளி நாடாவாகவும் வெளிவந்துள்ளது.

eelam_tamilsதனித்தமிழ் ஈழம் என்னும் கோரிக்கையும், அதற்கு முன்நிபந்தனைகளான வடக்கு-கிழக்கு இணைப்பு, இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தம் ஆகியன பற்றிய பேச்சுகளெல்லாம், இப்போது எங்கோ தள்ளப்பட்டு விட்டன. தமிழீழ மக்களின் வாழ்வுரிமை என்பதே இன்று அங்கு கேள்விக்குறி ஆக்கப்பட்டு விட்டது.

இச்சூழலில்தான், கடந்த அக்டோபர் மத்தியில், தி. மு. க. , காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதின்மர் இலங்கை சென்று முகாம்களைப் பார்வையிட்டு வந்தனர். முள்வேலிகளுக்குள் வாழும் தமிழீழ மக்களின் ‘முள் வலி’களைத் தொல். திருமாவளவன், தொலைக்காட்சி, பத்திரிகைப் பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

உதகையில், அக். 25 அன்று நடைபெற்ற, பெண்களுக்கான அரசியல் பயிலரங்கு விழாவில் பங்கேற்றுப் பேசிய கனிமொழி, “இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் இன்னமும் பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே உள்ளனர். இதை முதலில் சீர்செய்ய வேண்டும். அவர்கள் அந்த முகாம்களில் வாழவே முடியாத சூழல் உள்ளது. அவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகத்தான் வாழ்ந்து கொண்டுள்ளனர். அம்மக்களுக்கு ஏராளமான உதவிகள் தேவைப்படுகின்றன. அவற்றை இப்போதே செய்வதை விட, அவர்களை அங்கிருந்து வெளியேற்றி, வெளியில் குடியேற்றம் செய்த பின்னர், தேவையான உதவிகளை வழங்கலாம்.

இதுவரை 58 ஆயிரம் பேர் முகாம்களிலிருந்து வெளியேற்றப்பட்டுக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளோரையும் எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில், டிசம்பர் மாதத்திற்குள், குடியேற்றம் செய்துவிட வேண்டும்” என்று கூறியுள்ளார். இதனை நோக்கியே, தமிழீழ மக்கள் மீது அன்பு கொண்ட அனைவரது முயற்சியும் அமைய வேண்டும் என்பது நம் விருப்பம்.

நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் இலங்கை சென்றிருந்த வேளையில், தமிழ் மக்களைக் கொன்று குவித்த கொடூரன் ராஜபக்சேயைச் சந்தித்தது குறித்து எதிர்க்கட்சிகளும், பத்திரிகைகளும் இங்கு நிறையவே பேசியும், எழுதியும் வருகின்றனர்.

ரத்தக்கறை படிந்த, இட்லரினும் கொடூரமான அந்த ராஜபக்சேயிடம் மனம்விட்டு, மகிழ்ந்து, யார்தான் பேச முடியும். அந்த 5 நாட்களிலும் தன் இதய வலி என்ன என்பதைத் திருமாவளவன் திருப்பித் திருப்பிக் கூறியுள்ளார். எனினும், அவனிடம் பேசித்தான் அந்த மக்களைக் காப்பாற்ற முடியும் என்னும் நிலை ஏற்பட்டுவிட்டதே. . . என்ன செய்ய?

ஒன்றை நாம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் நேரலாம். நேர வேண்டும். ஆனால் இன்று, அந்த மக்களைக் காப்பாற்ற விடுதலைப் புலிகள் இயக்கம் அங்கு இல்லை என்பதுதானே எதார்த்தமான உண்மை? மே 16 ஆம்தேதி மாலை மூன்று மணியோடு, “இனி எங்கள் துப்பாக்கிகள் முழங்காது” என்று அவர்கள் அறிவித்து விட்டனர். 35 ஆண்டுகாலம், மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிய அந்த மாபெரும் இயக்கம், வேறு வழியின்றி, தன் போரை அன்று நிறுத்திக் கொண்டது.

இந்நிலையில், அம்மக்களைக் காப்பாற்ற வேறு வழி என்ன உள்ளது? தமிழக, இந்திய அரசுகளின் மூலமாகவும், சிங்கள அரசின் வழியாகவும்தானே அந்த மக்களுக்கு உதவ முடியும்.

இலண்டன் வாழ் தமிழ் மக்கள் 800 மெட்ரிக் டன் எடையுள்ள உணவு, உடை, பொம்மைகள் போன்றவற்றை ஈழ முகாம்களில் உள்ள மக்களுக்கு வணங்காமண் என்னும் கப்பலின் மூலம் அனுப்பி வைத்தனர். அவை இறுதிவரை போய்ச் சேரவே இல்லை. சிங்கள அரசு அதனை அனுமதிக்கவில்லை. ஆனால், தமிழக அரசின் முயற்சியால், இந்திய அரசின் 4 கப்பல்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட பொருள்கள் பெரும்பான்மையாகச் சென்று சேர்ந்தன என்பதை நாம் அறிவோம்.

எனவே, அரசின் மூலமாகச் செய்யப்படும் உதவிகளே, ஓரளவேனும் அவர்களுக்குப் பயன்படுகின்றன என்பது புரிகிறது. உண்மை நிலவரம் இதுதான் என்று தெரிந்தபிறகும், நம் வீண் பிடிவாதங்களால் என்ன நன்மை?அரசுக்கும் கலைஞருக்கும் எதிரான கருத்துப் பரப்புரைகள் அனைத்தும், எதிர்க்கட்சிகள் மற்றும் இயக்கங்களின் உள்ளூர் அரசிலுக்கு உதவுமே அல்லாமல், இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு நாளும் உதவாது.

இன்றைய சூழல் கலைஞர் மீதான பழம்பகையைத் தீர்த்துக் கொள்வதற்கு உரியதன்று; ஈழத்தமிழ் மக்களுக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டிய தருணம் இது. இன்னும் வெளிவராமல், முள்வேலிக்குள் சிக்கிக் கிடக்கும் மீதமுள்ள தமிழர்களையும் மீட்டெடுப்பதற்கு, அனைத்துத் தமிழர்களும் ஒருங்கிணைய வேண்டிய நிமிடம் இது.

- சுப.வீரபாண்டியன்