இலக்கியம் வாழ்க்கை யிலிருந்துதான் உருவாகிறது என்பதை எப்போதாவதுதான் சில படைப்புகள் நிரூபிக்கின்றன. வாழ்க்கையை பூர்ணமாக வாழ்ந்துவிடுவதற்கான அத்தியாவசியத் தேவைகள் ஆளுக்கு ஆள் இடத்திற்கு இடம் வேறுபடலாம். ஆனால் சுய வாழ்க்கைக்கான மானமும், ரோசமும் இல்லாத வாழ்க்கைக்கு தள்ளப்படும் நிலையை எடுத்துக் கூறும் இலக்கியங்கள் எழுகிற போதெல்லாம், கலையில்லை, அழகியல் இல்லையென்று புறக்கணிப்புகூட நடைபெற்று வருகிறது.

அழுகையை, துயரத்தைச் சொல்வதற்கு பாசாங்கு அவசியமில்லை. அதையும் மீறி துயரத்தைத்கூட வெகு எதார்த்தமாக வெளிப்படுத்துகிற ஒன்றிரண்டு தொகுப்புகள் தென்பட்டுவிடுவதுண்டு. அந்த வரிசையில், சமூகத்தின் புறக்கணிப்புக்கும், ஏசுதலுக்கும், உரிமை மறுக்கப்படுதலுக்கும் உள்ளாகிற மக்களின் குரலாக வெளிவந்துள்ள தொகுப்புதான் “அப்பனின் கைகளால் அடிப்பவன்”

அதியனின் ஒவ்வொரு எழுத்தும் ஒரு போர்க்குணத்தை, அவலத்தை, துயருற்ற காலத்தை எடுத்தியம்புகிறது. வாழும் காலத்தின் வரலாற்றுச் சான்றாக அடையாளமா கிறது. கல்வியும் அதைத் தொடர்ந்து வருகிற மாற்றங்களும் சாதியை ஒழிப் பதற்குப் பதில், அதை வேறு ஒரு வடிவத்தில் வெளிப்படுத்துவதை நுட்பமானவர்கள் அறியக்கூடும். இந்தத் தொகுப்பின் கவிதைகளை வாசிக்கிறவர்களும் இதை உணரச் கூடும்.

***

கல்லுடைத்து
வெடி விபத்தில் செத்தவன்
கரும்பு வெட்டப் போய்
பாம்பு கடித்துச் செத்தவன்
கடனுக்குப் பயந்து
தூக்கு மாட்டிச் செத்தவன்

எவன் எப்படிச் செத்தாலும்
செத்தவனுக்கு வாக்கப்பட்டவள்
இப்படித்தான் பழகிக் கொள்கிறாள்
தெருவுக்குத் தெரு
சேரிக்குச் சேரி
ஊருக்கு ஊர்
இட்லி விக்க
மாட்டுக் கொடல் விக்க

***

அப்பனின் கைகளால் அடிப்பவன், அதியன் : 9940161184
நறுமுகை, 29/35, தேசூர்பாட்டை, செஞ்சி - 604 202. கைபேசி : 9486150013