தூண்டில் போட்டான்
நீர் வளையங்களாய் சிக்கின

அசதி வெறுப்பில்
தூண்டிலையே தூக்கி எறிந்தான்

வலை வீசினான்
கூழாங்கற்களாகவே மாட்டின

ஏமாற்றத்தில்
வலையைக் கிழித்துப் போட்டான்

நீருக்குள் இறங்கி
கைகளால் துழாவினான்.
இளந் தண்டென
மென்மை தட்டுப்பட்டது...

கவனமாய் லாவி இழுத்தான்
முதலை முத்தமிட்டது

அலறித் துடித்து
தாவிக் கரையேறினான்

மீன்கூடையைச் சுமந்தபடி
குழந்தையொன்று
அவனை நோக்கி
வந்து கொண்டிருந்தது

அதற்கு
அவன் முகம் இருந்தது

- வசந்த தீபன்