உனக்குள் இருக்கிறதா

என்மனம் பொழியும்

பிரிய மழையை

ஏந்திக் கொள்கிற

அற்புத பூமியொன்று...?

 

 

முகம் திருப்பிக் கொள்கிற,

முரண்பாடுகளால் முறைத்துத் திரிகிற,

மன்னிக்கும் மனசின்றி

உறவைத் துண்டிக்கிற,

பொறாமைத் தீயின்

பெரும் ஜ்வாலைக்குள்

மாய்ந்துவிடுகிற,

வசை வார்த்தைகளிலான

நாவின் பேராயுதத்தால்

வதைத்துக் கொல்கிற,

மனிதர்களையெல்லாம்

பரிகாசம் செய்கிறது

துளித்துளியாய் கூடிக்கொட்டி

அருவிகளையும், நதிகளையும்

பூமிக்கெனவே

சமைத்தமழை...

 

 

தான்

இத்தனை நாளாக

மண் தொடாததற்கு

சமாதானம் சொல்லும் வண்ணம்,

என் பாதங்கள் பதிந்த

ஈரச்சுவடுகளைக்

கலைத்து, கலைத்து

விளையாடிக்கொண்டே

என்னோடு வரும் இம்மழைத்தோழியை,

வீட்டிற்குள் அழைத்துச் செல்லலாம் என்றால்,

முற்றம்கூட இல்லை

அடுக்ககக் குடியிருப்பிலிருக்கும்

எனது வீட்டில்...

 

 

வகுப்பில் முதலாவதாக

வருவதற்கான சூட்சுமங்களை

விளக்கிக் கொண்டிருக்கிறேன்

மடியில் அமர்ந்திருக்கும் எல்கேஜிக்கு...

முள்வேளியில் குதித்துக்

கொண்டிருக்கும்

இந்த மழைக்கு வலிக்காதா என்கிறாள்

பால்யம் தொலைத்த

எனது மொழியின் சிரசு

சிக்கலாய் வெடித்துச் சிதற....