நூல் விமர்சனம்: நிறங்களின் பேராசைக்காரன்

ஆசிரியர் : அதங்கோடு அனிஷ்குமார்

தமிழ் இலக்கண நூல் தந்த தொல்காப்பியரின் ஆசானும், "தொல்காப்பியம்" அரங்கேறக் காரணமாயிருந்த "அதங்கோட்டாசன்" பிறந்த குமரிமாவட்டம் அதங்கோடு கிராமத்தில் பிறந்தவர் கவிஞர் அனிஷ்குமார். தமிழ் வளர்த்த பின்புலம் பிறந்த மண்ணுக்கு உள்ளதால் தற்போது, திருச்சியில் ஒரு சுயநிதிக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருப்பினும் அவர் தமிழ்க் கவிதை எழுதுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

நிறங்களின் பேராசைக்காரர்கள் - கவிஞரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பிது. முதல் தொகுப்பு "ஆசைக்கு வறுமை இல்லை". அடுத்தது இவர் தொகுத்த பெண்ணியக் கட்டுரை "இருப்பின் வலி" தற்போது இத்தொகுப்பு.

"ஐசக் அருமைராஜன்" அவர்களின் அணிந்துரையோடு 51 கவிதைகள் உள்ள இத் தொகுப்பின் முதல் கவிதையே

எல்லாம் கடந்து போவதாய்

எப்போதும் கதையளக்கிறோம்

வட்டங்களுக்குள்ளேதான்

வாழ்க்கை நடத்துகிறோம்... என நிர்பந்தங்களுக்குள்ளேயே வாழும் மனிதனின் குரலாயொலிக்கிறது. தொடர்ந்து வரும்... "முகங்களின் முகங்கள்" கவிதையில்

உங்களைப் போலவே முகங்கள்

எனக்கும் முளைக்கின்றன

முகங்கள் இறைந்து கிடக்கும்

உங்கள் உலகில்

என் ஒற்றை முகம் தேடித் தவிக்கிறேன்... என்று உங்களுக்கும், எனக்கும், நமக்குமான குரலில் ஒலிப்பது மனிதத்தின் குரல். நிராகரிப்பின் வலியையும் மீறி "நிரம்பி வழிதலி"ல்

காயப்படுத்தியதொரு வார்த்தை

கண்ணீராய் வெளிப்படுகையில்

என்னையும் அறியாமல்

நீளும் என் விரல்களை

என்ன செய்யலாம்?... என்று கேட்கையில் நம் விரல்களையும் நாம் கொஞ்சம் பதட்டத்தோடு பார்த்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

"உயிர்ப்பின் வலி"யை இத்தொகுப்பில் ஆகச்சிறந்த கவிதையாக கூறலாம். பெண்மையின் குரலாக ஒலிக்கும் இதில் காலங்காலமாக "ஆண்மை" என்று எதை நாம் கட்டமைத்திருக் கிறோமோ அதைக் கேள்விகுள்ளாக்குகிறது.

ஊழிக்கால ஆதிக்கத்தின்

ஊன்கொண்ட உன் உடலில்

திசைகள் தேடித்துழாவும் நினைப்பில்

உன் தசைகளை உயிரூட்டியபடியே

உனக்காய் உயிர்க்கவேணும் நான்

எனக்குள் எரியும்

கால நெருப்பின் மிச்சம்

உடலை உடைத்து

உள்ளுக்குள் ஊடுருவி

உயிர்த்தளத்திலிருந்து குவிந்து

கனன்று எரிகையில்

உயிர்க்குமோ உன் ஆண்மை?

இந்தக் கேள்வியில் நம் சமுதாய புனிதங்கள் சற்று இறந்துதான் உயிர்த்தெழுகிறது.

"முகமூடிகளின் உலகம்"... அகம் தாண்டி புறமும் பேசுகிறது.

எந்த முகமூடி அணிந்தாலும்

எட்டிப் பார்க்கும்

என் முகத்தை

எப்படி மறைப்பது-?... என திண்டாடுகிறார் கவிஞர். நம் முகம் காட்டும் இக்கவிதை தொகுப்புக்கு அழகு. பெண்மையின் முகம் காட்டும் இன்னொரு கவிதை "ஒவ்வொரு முறையும்". கவிஞர் மெல்லிய மனசுக்காரர். உயிரின் வலி உணர்ந்தவரால் மட்டும்தான் உயிரின் வலி உணர்த்தும் வார்த்தைகளை கண்டெடுக்க முடியும். அப்படி...

என்னை அச்சுறுத்தும் வலி

உன்னை அடையுமுன்

உதடு கடித்து உள்ளுக்குள் அடக்கி

மலர்கிறேன் ஒவ்வொரு பொழுதும்

வலி பிரதேசங்களில் சுலபமாய்

நீ நுழைந்துவிடாதபடி

ஒவ்வொருமுறையும்

புன்னகை பரிசளித்துப் போவேன்... வலியை வார்த்தைகளில் உணர்த்தியிருக்கிறார்.

சமூகம் பற்றி பிரக்ஞையற்ற கவிஞன் யார்? அய்ந்து வரிகளில் அழகாய் சொல்லியுள்ளார் "இனி...?"ல்

இனி அலைந்து திரியத்தான் வேண்டும்

மழை பொய்த்தபின்

வானம் பார்த்த பூமியில்

நீர்தேடியலையும்

ஒரு நத்தையாய்... (நத்தை நீர்தான் தேடி அலையுமா என்று அறிவியலாளர்கள் விளக்க வேண்டும்). அடுத்ததாக இத்தொகுப்பின் தலைப்புக் கவிதையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இதுவும் பரிதவித்து வலியின் உச்சத்தில் போராடும் பெண்மையின் குரல்

வலிகளின் உச்சத்தில்

ஒலியடங்கி

எல்லாம் நடுங்கி ஒடுங்குகையில்

உயிர்குருதியாய் வெளியேறுகையில்

மார்பகங்களுக்கு அப்பால்

மனது படபடக்கும்

நிறங்களின் பேராசைகளுக்காக

சிறகுகள் பிய்ப்பவர்களுக்கு

வண்ணத்துப் பூச்சியின்

உயிர்த்துடிப்பு எங்கே

உறைக்கப் போகிறது?.... கச்சிதமான வார்த்தைத் தேர்வு. கவிதையில் வலியும் வலிமையும் மிகுதி. மேலும் "அதிர்ந்து... வியர்த்து", வெளியேற்றம் ஆகிய இரு கவிதைகளும் அமானுஷ்யத்தை கொணர்கின்றன. தொகுப்பில் அகக்கவிதைகள் பெரும் பாலும் பெண்குரலாகவே ஒலிக்கின்றன.

"எனக்குள் இயங்கும் யுகம்"ல்

உன் கண்காணிப்பைக்

களைந்தெறிய திமிறுகையில்

எனக்குள் இறங்குகிறாய்

ஒரு யுகத்தில் கனத்தோடு

எப்படி உணர்த்திப் போவது

பாலைகளை தகிப்பது

தண்ணீருக்காக என்று.... இது குறிப்பிடத் தகுந்த சிறப்பான படிமம்.

கவிஞன் எப்போதும் கேள்விகளின் காவலன். கேள்விகள் அவனைத் தேடல் கொள்ள வைக்கின்றன. அத்தேடல்களே அவன் படைப்பின் புள்ளியாகிறது. அந்த வகையில் இத் தொகுப்பின்

பட்டாம்பூச்சியின் உலகில்

மனித சஞ்சாரம் குறித்த

ஒரு பட்டாம்பூச்சியின் கனவு

என்னவாகயிருக்கும்?... இந்தக் கேள்விதான் இத்தொகுப்பின் பலம். இப்படி சொல்லிக் கொண்டே போகும்போது... நேர்மையாக சில விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டியுள்ளது.

கவிஞனுக்குச் சொற்கள் கட்டுப்பட்டவையாக இருக்க வேண்டும். ஒரு வாசகனால் சில சொற்களை நீக்க முடியாத தோல்வியே படைப்பாளியின் வெற்றி. உதாரணமாக

புன்னகை சுமக்கும்

இதழ் வரிகளின் ஆழத்தில்

புதைந்து கிடக்கிறது ஒவ்வொரு இதயத்திலும்

வலிகளின் முகவரி... என்ற கவிதையில் நாலாவது வரியை நீக்கினால் கவிதை இன்னும் கனம் பெறும். மேலும் "இரவு", "குருதி" எனும் படிமங்கள் தொகுப்பில் சுமார் 25 கவிதைகளில் வந்துள்ளது வாசக மனத்தைச் சலிப்புற செய்கிறது. "எதிர்கொள்ளல்" கவிதையில்

சலனமற்று கடந்து

தூரத்து மரக்கிளையொன்றில்

பழமொன்றை கொத்தித் தின்று கொண்டிருக்கிறது

பறவையொன்று... என்ற அற்புதமான கணத்தை கவியாக்கிய கவிஞர், கவிதைக் காட்சிகளுக்காக வேறுபல படிமங்களைப் பயன்படுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். தொகுப்பில் ஒருசில அச்சுப்பிழைகள் அரிசிக்கல்லாக கிடக்கிறது. அது தவிர "மயூரா" பதிப்பகத்தின் அச்சமைப்பும் அட்டைப்படமும் சிறப்பு.

மற்றபடி, அனிஷ்குமாரே சொல்வது போல் "என்கால்களைச் சுற்றும் பாம்பென உங்கள் விமர்சனங்கள் நீளுகையில் என் எல்லா வலிமையும் சேர்த்து குருதி குழைத்து என் வெளிகளில் உலவும் இருள்முகங்கள் கிழித்தெறிந்து ஊழித்தாண்டவமாடும் சூரியவிரல்கள் கொள்வேன்".... கொள்ளவேண்டும்! அதுதான் நம் ஆசையும்கூட. 

*நிறங்களின் பேராசைக்காரன் (கவிதைகள்) / அதங்கோடு அனிஷ்குமார் / விலை ரூ. 30

வெளியீடு : மயூரா பதிப்பகம், 37,தொட்டராயன் கோவில் வீதி, காட்டூர், கோவை - 9.