பொருளுக்கு அழிவில்லை; அதைப் போல் முதலாளித்துவ நெருக்கடிக்கும் தீர்வில்லை

சாண் ஏறினால் முழம் வழுக்கும் என்பதை ஒத்த விதத்தில் இன்று உலக முதலாளித்துவப் பொருளாதாரம் உள்ளது. 2008, 2009களில் உலகப் பொருளாதாரத்தையே உலுக்கி எடுத்த உலகப்பொது நெருக்கடியில் இருந்து முதலாளித்துவப் பொருளாதாரங்கள் மீண்டு வருவதாக ஒருமித்த குரலில் முதலாளித்துவ ஊடகங்கள் கூறிவந்தன. ஆனால் உண்மையில் இன்றுவரை உலகப் பொருளாதாரங்கள் எவையும் குறிப்பிடத்தக்க மீட்சி எதையும் பெறவில்லை.

வேலையிழப்பு 80 லட்சம் உருவான வேலைகள் 5 லட்சம்

அமெரிக்காவில் நெருக்கடி காலத்தில் ஏற்பட்ட வேலையிழப்புகளின் எண்ணிக்கை 80 லட்சம் என்ற அளவிற்கு இருந்தது. அதில் தற்போது அமெரிக்க ஊடகங்கள் கூறும் புள்ளி விபரங்களின் அடிப்படையில் பார்த்தால் கூட 5 லட்சம் வேலை வாய்ப்புகளே மீண்டும் உருவாகியுள்ளன. அவற்றில் 60000 வேலை வாய்ப்புகள் இந்திய நிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை. உருவாகும் வேலை வாய்ப்புகள் அனைத்தும் அமெரிக்கர்களுக்கே என்பன போன்ற பல நடவடிக்கைகளை ஒபாமா நிர்வாகம் எடுத்தும் கூட வேலையின்மைப் பிரச்னையிலிருந்து மீட்சி எதுவும் அமெரிக்க சமூகத்தில் ஏற்படவில்லை.

இதே சமயத்தில் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரங்களோ இன்னும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. மக்களது வாங்கும் சக்திக் குறைவினால் தோன்றிய உற்பத்தித் தேக்க நெருக்கடியைச் சமாளிப்பதற்காக செயற்கையாக வாங்கும் சக்தியை அதிகரிக்கும் விதத்தில் வங்கிகளின் கடன் தருவதற்கான வட்டி விகிதத்தைக் குறைத்துப்  பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளைப் பல ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் மேற்கொண்டன.

அதன் விளைவாகப் பணவீக்கம் அதிகரித்து அரசுகள் மிகக்கடுமையான பற்றாக்குறை நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதாவது முதலாளித்துவச் சந்தை நெருக்கடி, நெருக்கடி நிலையிலும் அதிகபட்ச லாபம் ஈட்ட விரும்பி சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிதி நிறுவனங்களின் மீள முடியாத நெருக்கடியாக மாறி அதனைச் சமாளிக்க நடவடிக்கை எடுத்த முதலாளித்துவ அரசுகளின் பொருளாதார ரீதியிலான செல்லுபடித் தன்மையையே கேள்விக்குரியதாக்கும் அதிதீவிர நெருக்கடியாகத் தற்போது மாறியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலேயே பற்றாக்குறையில் முதல் இடத்தில் இங்கிலாந்து நிற்கிறது. அதன் பற்றாக்குறை 12 சதவிகிதத்தைத் தாண்டியதாக உள்ளது. அதைப்போல் அயர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுக்கல், கிரீஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளின் பற்றாக்குறைகளும் இரட்டை இலக்கங்களில் உள்ளன.

பொதுவாக ஒரு நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளுற்பத்தியில் 5 சதவிகிதத்திற்கு மேல் பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை இருக்கக் கூடாது. இருந்தால் அந்நாடுகளின் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை என்பது அதன் பொருள். இது உலகவங்கி முன்வைக்கும் அறிவுறுத்தல். ஆனால் தற்போது நாம் மேலே கூறிய ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் 10 முதல் 12 சதவிகிதம் வரையிலான பற்றாக்குறைகள் நிலவுகின்றன.

பற்றாக்குறையை ஈடுகட்ட கடன் பத்திரங்கள்

இந்தப் பற்றாக்குறைகளை ஈடுகட்டுவதற்காக அரசுகள் கடன் பத்திரங்களை வெளியிடுவதும் வழக்கம். ஒரு நாட்டு அரசின் அதன் பொருளாதாரத்தின் நம்பகத்தன்மையை வைத்து அந்தக் கடன் பத்திரங்களை முதலீட்டாளர்கள் வாங்குவர். அரசின் மேல், அது பராமரிக்கும் பொருளாதாரத்தின் மேல் நம்பிக்கை இழந்தவர்களாக முதலீட்டாளர்கள் ஆகும் போது அந்த நாட்டின் அரசு வெளியிடும் கடன் பத்திரங்களை அவர்கள் வாங்க மாட்டார்கள். அப்போது அவற்றின் வட்டி விகிதத்தை அதிகரித்து அவற்றின் விற்பனையைப் பெருக்க அரசுகள் முயலும்.

இந்தக் கடன் பத்திரங்கள் மூலம் அரசு ஈட்டும் தொகையைத் திருப்பிச் செலுத்துமளவிற்கு அரசின் வருவாய் அதிகரித்தால் மட்டுமே எந்தவொரு அரசும் அதைச் சூழ்ந்துள்ள கடன் சுமையிலிருந்து தப்ப முடியும்.

வருவாய் அதிகரிப்பிற்கு மிகவும் அத்தியாவசியமானது தொழில்கள் தொடங்கப்படுவதும் அவற்றின் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப் படுவதுமாகும். தொழில்கள் தொடங்கப்படுவதற்குச் சாதகமான அடிப்படையான சூழ்நிலை தொழில்கள் மூலம் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கி உபயோகிக்க மக்களிடம் வாங்கும் சக்தி இருப்பதுதான். அதை எந்த அரசாலும் உருவாக்க முடிவதில்லை.

ஒருபுறம் இவ்வாறு கடன் பத்திரங்களை வெளியிடும் அரசாங்கங்கள் மறுபுறம் இவற்றிற்கான வட்டியுடன் சேர்த்துக் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தேவையான வருவாயைக் கொண்டிருக்க வேண்டும். எந்த அரசிற்கும் அத்தகைய வருவாய்ப் பெருக்கம் தொழில் வளர்ச்சியின் மூலம் கிட்டும் வரிகள் மூலமான வருவாய் மூலம் வரும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே அவை நிர்வாகச் செலவினங்களைக் குறைப்பதன் மூலம் வருவாயைப் பராமரிக்க முயல்கின்றன.

செலவினங்களைக் குறைப்பதாகக் கூறி உழைப்பாளிகளின் வயிற்றிலடிக்கும் போக்கு

நிர்வாகச் செலவினங்களைக் குறைப்பது என்பது ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை அமைச்சர்கள், உயர்மட்ட நிர்வாகிகள்,  இராணுவம், காவல்துறை போன்ற நாட்டின் உற்பத்திக் குறியீட்டின் உயர்வுக்கு எந்த வகையிலும் உதவாத செலவுகளைக் குறைப்பதல்ல. மாறாக அரசுத் துறைகளில் பணிபுரியும் தொழிலாளரின் ஊதியத்தையும் சலுகைகளையும் குறைப்பதும், ஓய்வூதியத் திட்டங்களில் கைவைப்பதுமே ஆகும்.

இவை இன்னும் மக்களின் வாங்கும் சக்தியைக் குறைத்து தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் என்பதை நன்கறிந்திருந்தும் , முதலாளிகளின் நலன்களையே தங்களது நலன்களாகக் கருதும் முதலாளித்துவ அரசாங்கங்கள் தொழிலாளர் வருவாய் மீது கைவைப்பதன் மூலமே அரசின் செலவினங்களைக் கட்டுப்படுத்த முயல்கின்றன.

கிரேக்க நாட்டில் கிளர்ந்தெழுந்த போராட்டம்

கிரேக்க நாட்டில் தற்போது கிளர்ந்தெழுந்த தொழிலாளரின் போராட்டத்திற்கான ஒரு முக்கிய காரணமே இதுதான். அதாவது அந்நாட்டின் பொருளாதார வலுவினைத் தாண்டிய விதத்தில் ஒலிம்பிக் போன்ற போட்டிகளை அது நடத்தியது. அதில் மிகப்பெரும் செலவினையும் செய்தது. அதுமட்டுமின்றி முதலீட்டுக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குகிறோம் என்ற பெயரில் அதிகளவு அந்நியக் கடன்களை அது பெற்றது. அவற்றை அரசியல் வாதி, ஒப்பந்தக்காரர், அரசு நிர்வாகிகளின் மேல்தட்டுப் பகுதியினர் ஆகியோர் சூறையாடிவிட்ட நிலையில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த வகையற்று அரசு இருக்கும் நிலை அம்பலப்பட்டுப் போனது.

எனவே எவ்வளவு கூடுதல் வட்டி விகிதம் வழங்குவதாக கிரேக்க அரசு அறிவித்தாலும் அரசின் கடன் பத்திரங்களை வாங்க முதலீட்டாளர்கள் தயாராக இல்லை. இந்நிலையில் அரசின் நிர்வாகச் செலவுகளைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் கிரேக்க அரசு , அரசு ஊழியர் மற்றும் அரசுத்துறை சார்ந்த தொழிலாளர் ஊதியத்திலும் அவர்களின் ஓய்வூதியப் பலன்களிலும் கைவைத்தது. அதனைத் தொடர்ந்தே இத்தகைய பெரும் கிளர்ச்சிகள் வெடித்துக் கிளம்பின.

அடிப்படையை அப்படியே வைத்துக் கொண்டு தீர்வைத் தேடும் போக்கு

பொதுவாக முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு அடிப்படையான தலைவலியாக இருப்பது மக்களின் வாங்கும் சக்திக் குறைவினால் ஏற்படும் சந்தை நெருக்கடியே. சந்தை நெருக்கடி தோன்றுவதற்கு அடிப்படையான காரணம் முதலாளித்துவ உற்பத்திமுறை உழைப்பாளரைச் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்டதாக இருப்பதே. ஆனால் எந்தச் சூழ்நிலை யிலும் அதிகபட்ச லாபத்திற்காக முதலாளித்துவம் நடத்தும் சுரண்டலை அது கைவிடாது. எனவே அடிப்படை யான காரணத்தை அகற்ற எதுவும் செய்யாமல் அதை அப்படியே வைத்துக் கொண்டு வேறு வழிகள் மூலம் முதலா ளித்துவப் பொருளாதாரங்கள் நெருக்கடியிலிருந்தான தீர்வைத் தேடுகின்றன.

ஈரோவின் உதயம்

அந்தத் திசைவழியில் ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்த ஒரு திட்டமே ஈரோ என்று கூறப்படும் ஐரோப்பிய நாடுகள் அனைத்திற்குமான ஒரு பொது நாணயத்தைக் கொண்டுவந்ததாகும். அது ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான போட்டியினைக் குறைத்து அந்நாடுகளின் பொருளாதாரங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அதைவிடச் சக்தி வாய்ந்த பொருளாதாரமாக விளங்கக் கூடிய அமெரிக்கப் பொருளாதாரத்தை வலுவுடன் எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்குடனேயே செய்யப்பட்டது.

இதனை மிகப்பரந்த அளவில் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஐரோப்பாவின் பல நாடுகளை அதாவது இதற்கு முன்பு சோவியத் நாட்டிலடங்கிய ஒரு குடியரசாக இருந்த லட்வியாவையும் மக்கள் ஜனநாயகங்களாக சோசலிச முகாம்களில் இருந்த  ஹங்கேரி போன்ற நாடுகளையும் முதலாளித்துவ நாடுகளிலேயே மிகவும் சிறியதாகவும் பலவீனமானதாகவும் இருந்த கிரீஸ் போன்ற நாடுகளையும் ஈரோ என்ற பொது நாணயம் புழக்கத்திலிருக்கும் ஐரோப்பிய யூனியன் அமைப்பிற்குள் கொண்டுவந்தன.

ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் முதலாளித்துவப் பொருளாதாரங்கள் வளம் கொழிக்கும் நிலையை ஒருபோதும் எட்டிவிடாது. ஏனெனில் முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடான சமூக ரீதியான உற்பத்தியும் உற்பத்தியின் பலன்கள் தனிநபர் ரீதியாக அபகரிக்கப் படுவதும் சமூகத்தில் மிகப்பெரும் பொருளாதார ஏற்றத் தாழ்வினை உருவாக்கி மிகப் பெரும்பாலான மக்களை வாங்கும் சக்தியற்ற வறிய நிலையிலேயே வைத்திருக்குமாகையால் சீரான, நிரந்தர வளர்ச்சி என்பது எத்தனை தகிடுதத்தங்கள் போட்டாலும் முதலாளித்துவ அமைப்பில் ஏற்படவே ஏற்படாது.

தங்களது அதிகபட்ச லாபம் ஈட்டுதலைப் பராமரிக்க அவை ஒரு நடவடிக்கை எடுத்தால், அது ஏதாவதொரு வகையில் வேறொரு எதிர்மறை விளைவை ஏற்படுத்துவதிலேயே முடியும். அவ்வாறு பொதுவாகத் தோன்றும் எந்தவொரு நெருக்கடியும் முதலாளித்துவச் சங்கிலியின் பலவீனமான பகுதியிலேயே தோன்றும். அந்த அடிப்படையில் அது கிரீஸ் என்ற ஐரோப்பிய வளையத்தின் மிகப் பலவீனமான ஒரு கண்ணியில் இப்போது வெடித்துக் கிளம்பியுள்ளது.

செயல்பாட்டிலிருக்கும் சிறிய மீனைப் பெரிய மீன் விழுங்கும் நியதி

உண்மையில் ஐரோப்பிய யூனியன் என்ற அமைப்பு ஒன்றினை ஏற்படுத்தி அதற்குள் உள்ள நாடுகள் அனைத்திலும் சமச்சீரான வளர்ச்சி ஏற்படுவதற்குத் திட்டங்கள் தீட்டி அதன்மூலம் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்து அதைக் காட்டிலும் வலுவானதாக இருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தை எதிர் கொள்வது என்ற உயர்ந்த நோக்கிற்காக ஜெர்மனி போன்ற நாடுகள் ஐரோப்பிய யூனியனை உருவாக்கவில்லை.

அமெரிக்கப் பொருளாதாரத்தை எதிர்கொள்வதற்காக என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டாலும் சிறிய மீனைப் பெரிய மீன் விழுங்கும் நியதிதான் ஐரோப்பிய யூனியனில் உள்ள அனைத்து நாடுகளுக்கு இடையிலும் நிலவுகிறது. அந்த முதலாளித்துவ விதியில் நாடுகளின் நாணயம் ஒன்றாக இருந்தாலும் , தனித்தனியானவைகளாக இருந்தாலும் மாற்றம் ஒன்றும் ஏற்பட்டு விடுவதில்லை. குறிப்பாக தற்போது தோன்றியுள்ள இந்தக் கடன் நெருக்கடியில் அத்தனை சிக்காததாக இருக்கும் பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளுக்கிடையில் கூட எந்தவொரு விசயத்திலும் ஒருமித்த கருத்து என்பது ஒருபோதும் இல்லை.

அதாவது இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின்பு சீர் குலைந்த தனது பொருளாதாரத்தைப் புனரமைப்பது என்ற பெயரில் அப்போது தோன்றிய முதலாளித்துவ மேற்கு ஜெர்மனி சில யுக்திகளைக் கையாண்டது. அதாவது அந்நாட்டுத் தொழிற்சங்கங்களுடன் பேசி ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஊதிய உயர்வு கேட்பதில்லை என்பதை அது உறுதி செய்து கொண்டது. அதன்மூலம் உற்பத்திச் செலவினை மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைத்து ஒப்பீட்டளவில் மலிவான விலையில் பொருள்களை அது உற்பத்தி செய்தது. அப்பொருள்கள் மூலம் பிற ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளின் சந்தைகளில் படையயடுத்தது. அதன்மூலம் இன்றுவரை மற்ற ஐரோப்பிய நாடுகள் சந்தித்துக் கொண்டிருக்கும் அளவிற்கான நெருக்கடி தனது நாட்டில் ஏற்படாமல் அது தன்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.

அது தனது பொருளாதார வலுவை இன்னும் அதிகரித்துக் கொள்வதற்காகவும் ஐரோப்பிய நாட்டுப் பொருளாதாரங்களிலேயே மிகவும் வலுவான பொருளாதார நாடாக அது விளங்குவதால் அமெரிக்காவிற்கு எதிரான அதன் பொருளாதாரப் போட்டியில் போட்டித்திறன் மிக்கதாக விளங்குவதற்காகவும் அதன் முன்முயற்சியில் உருவானதே ஐரோப்பிய யூனியனும் ஈரோ என்ற பொது நாணயமும்.

பிற பல ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தப் பொது நாணயம் கொண்டுவருவதில்  ஜெர்மனியைப் போல் ஆர்வம் ஏதுமில்லை. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு இங்கிலாந்து ஆகும். இன்றுவரை இங்கிலாந்து நாடு ஈரோவை மட்டும் தனது நாட்டின் புழக்கத்தில் உள்ள ஓரே பரிவர்த்தனை மதிப்பாக வைத்திருக்க ஒத்துக் கொள்ளவில்லை. அது ஈரோவுடன் கூடவே தனது நாட்டின் நாணயமான பவுண்ட் ஸ்டெர்லிங்கையும் வைத்துக் கொண்டுள்ளது. எனவே இன்று கிரேக்க நாட்டில் தோன்றியுள்ள நெருக்கடியைத் தீர்ப்பதில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியைப் போல் அத்தகைய கூடுதல் அக்கறை இங்கிலாந்து நாட்டிற்கு இல்லை.

ஜெர்மனியினால் தலைமை தாங்கப்படும் ஐரோப்பிய யூனியனுக்கு ஒரு மிகச் சிறிய பொருளாதாரமான கிரேக்க நாட்டில் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடி ஒரு மிகப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. அதாவது பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்காக முடிந்த கதையாக அது ஆகியுள்ளது.

பொதுவாக இத்தகைய நெருக்கடிகள் தோன்றும் சூழ்நிலையில் அந்நாடுகள் அவற்றில் இருந்து மீள்வதற்காக அந்நியக் கடன்கள் பெறுவதையே ஒரு மிகப் பெரிய திட்டமாக வைத்திருப்பது வழக்கம். அத்தகைய கடன்கள் கடந்த உற்பத்தித் தேக்க நெருக்கடியின் போது உலகின் பல நாடுகளுக்கு சர்வதேச நிதி நிறுவனத்தால் வழங்கப்பட்டன.

ஐ.எம்.எப்.பின் நிபந்தனைகளை அமலாக்கவியலாத நிலை

பொதுவாக அவ்வாறு கடன்கள் வழங்கும் போது சர்வதேச நிதி நிறுவனம் கடன் பெறும் நாடுகளுக்கு சில நிபந்தனைகளை வைப்பது வழக்கம். அந்த நிபந்தனைகளில் ஒன்று நாட்டின் கட்டுமானத்தை மறு சீரமைப்பது என்பதாகும். மிகவும் அலங்காரமானதாக வெளியில் தோன்றும் இந்தச் சொல்லாடலின் பின் ஒழிந்துள்ளது கடன் வாங்கும் அரசு பொது நலப்பணிகள் மற்றும் துறைகளுக்கு வழங்கும் மானியங்கள் போன்றவற்றை அழித்தொழித்து மக்கள் நலனுக்காக சேவைத்துறையில் நடத்தப்படும் தொழில்கள் அனைத்தையும் லாப நோக்கில் நடத்த வேண்டும் என்பதாகும்.

இதுபோன்ற சமயங்களில் நெருக்கடிக்கு ஆட்பட்ட நாடுகளுக்கு சர்வதேச நிதி நிறுவனம் முன்வைக்கும் மற்றொரு பரிந்துரை அந்நாட்டின் நாணயத்தின் மதிப்பைக் குறைத்து அதன் மூலம் ஏற்றுமதியைப் பெருக்கி நெருக்கடியில் இருந்து அந்நாடு மீள்வதற்கு வழி காண வேண்டும் என்பதுமாகும்.

ஆனால் கிரேக்க நாட்டில் தோன்றியுள்ள இந்த நெருக்கடியிலிருந்து அது மீள்வதற்கு அது முன்வைக்கும் இந்தப் பரிந்துரையை கிரேக்க நாடு தனியே செய்ய முடியாது. ஏனெனில் கிரேக்க நாட்டிற்கென்று தனி நாணயம் இப்போது இல்லை. ஈரோவின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் அந்நாடு வந்துவிட்டது. இந்நிலையில் அதிகாரபூர்வமாக ஈரோவின் மதிப்பை அதனால் எள்ளளவு கூடக் குறைக்க முடியாது. கிரீஸ் என்ற ஒரு சிறு நாட்டிற்காக அதனைச் செய்ய ஜெர்மனி போன்ற ஐரோப்பாவின் வளர்ச்சியடைந்த நாடுகள் ஒருபோதும் முன்வரமாட்டா.

ஏற்கனவே சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் கிரீஸ் கொண்டுவந்த அரசு ஊழியர்களுக்கான சலுகைக் குறைப்பு  கிரீஸில் மிகப் பெரும் எதிர்ப்பினை அரசு ஊழியர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. அதனைச் சமாளிக்கும் வழிவகை தெரியாமல் அந்நாடு தத்தளித்துக் கொண்டுள்ளது. எனவே வேறுவழியின்றி ஐரோப்பிய நாடுகளை ஒரு வகையில் தாஜா செய்து 45 மில்லியன் ஈரோ கிரீஸிற்கு வழங்கி அதனை மீட்கும் திட்டத்தை ஜெர்மனி , பிரான்ஸ் போன்ற நாடுகள் முன்வைத்து அமல்படுத்தியுள்ளன.

இதன் மூலம் அவை சாதிக்க நினைப்பது கிரீஸ் நாட்டின் பொருளாதாரத்தை முற்றாக மீட்டெடுப்பதல்ல. மாறாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்து அதன்மூலம் கிரேக்க நாட்டின் கடன் பத்திரங்கள் விலை இன்னும் இறங்காமல் செய்து அதன் மூலம் நெருக்கடி இன்னும் அதிகரித்து கிரேக்க அரசு வெளிப்படையாகத் திவால் நிலையினை அடைவதைத் தடுப்பதேயாகும்.

பொதுவாகவே முதலாளித்துவ நெருக்கடிக்கு நிரந்தரமான, நிலையான தீர்வு என்பதே இல்லை. அதுவும் இன்றைய முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வு என்பது இல்லவே இல்லை. அவ்வப்போது தீர்வு என்று முன்வைக்கப் படுபவையும் மிகமிகத் தற்காலிகமானவைகளாகவே இருக்கும்.

நிலவும் முதலாளித்துவ நெருக்கடிக்கான மிக அடிப்படையான காரணம் நாம் ஏற்கனவே கூறியது போல சுரண்டலின் மூலமாக சூறையாடப்படும் பரந்த அளவிலான மக்களின் வாங்கும் சக்தியாகும். அதிகபட்ச லாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்பை உருக்குலையாமல் வைத்துக் கொண்டு அதுபோன்ற நெருக்கடி எதையும் போக்கவே முடியாது. எனவே அது வாங்கும் சக்தியை உருவாக்குவதற்காகப் பல தகிடுதத்த வேலைகளை பலகாலமாகவே செய்து வந்தது.

வாங்கும் சக்திக் குறைவினால் உற்பத்தித் தேக்கம் ஏற்பட்டு அதனால் கதவடைப்புகளும் லேஆப்களும் அமல்படுத்தப்பட்டு வேலையிழந்த தொழிலாளர் வாங்கும் சக்தியின்றி தெருவில் நிற்கும் அவலத்தின் கொடுமையைக் குறைக்க முதலாளித்துவ நாடுகள் அறிமுகம் செய்ததே கிரடிட் கார்டுகள் திட்டமாகும். அதாவது எதிர்காலத்தில் அவர்களிடம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படும் வாங்கும் சக்தியை இன்று தனது பொருள் விற்பனையைப் பாதுகாப்பதற்காக இப்போதே பயன்படுத்தவதற்கான திட்டமே அது. அதாவது அந்த கிரடிட் கார்டுகள் மூலம் பெறும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டே அத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

பொய்யான நம்பிக்கைகளைப் பராமரிப்பதே இன்றைய நியதி

இதை நாம் ஏன் கூறுகிறோம் என்றால் இன்றைய முதலாளித்துவம் பொய்யான நம்பிக்கைகளை உருவாக்கிப் பராமரிப்பதை அடிப்படையாகக் கொண்டே இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கையை எந்த அடிப்படையும் இல்லாது பராமரித்துப் பேணிக் காப்பதற்காக முதலாளித்துவம் முன்வைத்துக் கொண்டிருக்கும் முழக்கம் முதலீட்டாளர் நம்பிக்கையை பராமரிப்பது மிகவும் அவசியம் என்பதாகும். உண்மையோ பொய்யோ அந்த நம்பிக்கை பராமரிக்கப்படுவது அந்திம காலத்தில் உள்ள முதலாளித்துவப் பொருளாதாரத்தின் ஆயுளை சில காலம் நீட்டிப்பதற்கு மிகவும் அவசியம்.

அதைத்தான் கிரேக்க நாட்டின் பொருளாதாரத்தின் மீட்சிக்கு என்ற பெயரில் 45 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளதன் மூலம் ஐரோப்பிய யூனியன் செய்துள்ளது. இது ஊக வணிகத்தின் கோரப்பிடியில் இருக்கும் ஐரோப்பிய முதலாளித்துவப் பொருளாதாரத்தை மிகமிகத் தற்காலிகமாகக் காப்பதற்கு சிறிது பயன்படலாம்.

இன்று முதலாளித்துவ ஊடகங்கள், கிரீஸ் என்ற ஒரு மிகச்சிறிய நாட்டில் தோன்றியுள்ள நெருக்கடியே இது; மற்றபடி இது முதலாளித்துவத்திற் கெதிரான அபாயச் சங்கல்ல, என்றெல்லாம் கூறி இதன் கோரத்தை எத்தனை தூரம் குறைத்துக் காட்ட முடியுமோ அத்தனை தூரம் குறைத்துக் காட்டலாம் ஆனால் உண்மை அதுவல்ல. இந்த நெருக்கடி கிரேக்க நாட்டில் மட்டுமல்ல. இங்கிலாந்தின் பொருளாதாரமும் இவ்வி­யத்தில் பெரும் பாதிப்பில் உள்ளது.

ஆனால் கிரேக்க நாட்டின் பொருளாதாரத்தை விட இங்கிலாந்தின் பொருளாதாரக் கட்டமைப்பு பெரியதாக இருப்பதால் அந்நாட்டின் பற்றாக்குறை கிரேக்க நாட்டினதைக் காட்டிலும் அதிகமாக இருந்த போதும் ஊடகங்களின் துணையோடு அவை வெளிவராமல் பார்த்துக் கொள்ளப் படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் செயற்கையாக முதலீட்டாளர் நம்பிக்கை தக்கவைக்கப் படுகிறது. கிரேக்க நாட்டில் தோன்றியுள்ளதைப் போன்ற கடுமையான நெருக்கடியின் பல கூறுகள் இங்கிலாந்து நாட்டில் இருந்த போதும் அவை இன்றுவரை வெளிப்படையாக வெடித்துக் கிளம்பாமல் திட்டவட்டமாகப் பார்த்துக் கொள்ளப்படுகின்றன.

இன்று உனக்கு நாளை எனக்குஉள்ளபடியே இத்தகைய நெருக்கடி இன்றில்லாவிட்டால் நாளை வெடித்துக் கிளம்பும் என்ற நிலையில் தான் போர்ச்சுக்கல், அயர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகள் உள்ளன. இன்று உனக்கு நாளை எனக்கு என்ற நிலையிலேயே இந்நாடுகள் உள்ளன. அந்த அடிப்படையில் கிரீஸ் நாட்டில் தோன்றியுள்ள நெருக்கடி முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி என்ற மூடிமறைந்துள்ள பனி மலையின் ஒரு சிறு முகடே தவிர அதன் முழுப் பரிமாணமுமல்ல.

பொருளுக்கு அழிவில்லை; நெருக்கடிக்குத் தீர்வில்லை

அதாவது உற்பத்தித் தேக்க நெருக்கடி வந்தபோது மக்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் வீடுகளை இழந்து நிராதரவாகக் கடனாளிகளாகத் தெருவில் நின்றனர். அவர்களிடமிருந்து வீடு போன்ற உடமைகளை பிடிங்கிக் கொண்ட வங்கிகள் அவற்றை வாங்குவதற்கு ஆள் கிடைக்காமல் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்தன. அவ்வாறு குறைந்த விலைக்கே விற்பனையானதாலும் பல கைப்பற்றப்பட்ட உடமைகளை விற்க முடியாமல் போனதாலும் வருவாய் இழந்து திவாலாகும் நிலைக்கு வந்துவிட்ட வங்கிகளைக் காப்பாற்ற அரசுகள் மக்களது வரிப் பணத்திலிருந்து மீட்பு நிறுவனங்களுக்கு வழங்கின. இவ்வாறு வழங்கியதால் அவற்றிற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு கூடுதல் வட்டி வழங்கும் கடன் பத்திரங்களை வழங்கித் தற்போது முதலாளித்துவ அரசுகள் கடனாளிகளாகித் தவிக்கின்றன.

அதாவது தனியார் வங்கிகள் சந்தித்த நெருக்கடிகள் தற்போது அரசாங்கங்களின் நெருக்கடிகளாக மாறியுள்ளன. அதாவது பொருளுக்கு அழிவென்பது இல்லை என்று விஞ்ஞானம் கூறும். அதாவது ஒரு காகிதத்தை எரித்தால் அது புகை மற்றும் சாம்பல் என்ற வேறு இரு பொருட்களாக வடிவமும், தன்மையும் மாறுமே தவிர அது இல்லாமல் போவதில்லை. ஏறக்குறைய முதலாளித்துவ நெருக்கடியும் அவ்வாறு தளமும், தடமும் மாறுகிறதே தவிர அது இல்லாமல் போகவில்லை. சில உபாதைகளிலிருந்தான விடுதலை உபாதைப் படுபவனின் இறப்பில் தான் இருக்கிறது என்பதைப் போல முதலாளித்தவத்தின் அழிவில் மட்டுமே இதுபோன்ற நெருக்கடிகளிலிருந்தான நிரந்தர விடுதலை சமூகத்திற்குக் கிட்டும்.

ஆனால் இந்த நெருக்கடிக்கு மூல காரணமாக இருக்கும் முதலாளிகளும் அவர்களுக்கு அதிகபட்ச லாபத்தை உறுதி செய்வதற்காக இருக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறையும் நெருக்கடியின் சுமைகளை தாமாகவே சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் உழைப்பாளிகள் மீது சுமத்துகின்றன. அரசினை அதன் நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக நடவடிக்கை எடுக்க வைப்பதன் மூலம் அதன் நிதி நெருக்கடியை அரசுகளின் பக்கம் தள்ளிவிடுகின்றன. அரசுகளோ அவற்றின் சுமை முழுவதையும் உழைப்பாளிகள் மீது ஏற்றி வைத்துத் தப்பித்துக் கொண்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில் முதுகெலும்பு ஒடிந்து நிமிர முடியாத நிலையில் உழைக்கும் வர்க்கம் இந்தச் சுமைகள் அனைத்தையும் தாங்கி அல்லல்பட்டுக் கொண்டுள்ளது.