"ஸ்லம்டாக் மில்லியனர்" படத்திற்கு கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கார் விருதுகள் கிடைத்ததைஒட்டி அப்படத்தை தயாரித்த, இசையமைத்த நடித்த அனைவரும் பாராட்டப்படுகின்றனர். இந்த பாராட்டுக்களில் பெரும்பாலானவை இப்படம் இத்தகைய உயர்ந்த விருதினைப்பெற்ற முதல் இந்தியப் படம் என்ற தேசியவாத உணர்வில் செய்யப்படுகின்றன. தமிழக மக்கள் மத்தியில் இருந்து இப்படத்திற்கு வந்துள்ள பாராட்டுகள் இதில் இசையமைத்து அதற்கான விருதைப் பெற்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் செய்யப்படுபவையாகும்.

ஒரு புறம் இத்தகைய பாராட்டுக்கள் வந்து கொண்டுள்ள வேளையில் இப்படம் இந்தியாவை ஒரு சேரியாகச் சித்தரிக்கிறது; சேரியில் படித்து வளர்ந்த ஒருவன் ஒரு டி.வி. சேனல் நடத்தும் கேள்வி -பதில் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்று கோடீஸ்வரனாவதன் மூலம் அடையாள பூர்வமாக சேரிகள் நிறைந்த இந்தியா உலகமயத்தின் மூலம் திடீரென உயர்ந்த பணக்கார நாடாக ஆனாலும் பணக்கார நாடுகளாக பல காலம் இருந்த நாடுகளில் காணப்படும் ஓரளவு சீரான வளர்ச்சி இல்லாத அபத்தமாக இருப்பது கிண்டல் செய்யப்படுகிறது என்ற விமர்சனம் ஒரு தரப்பினரால் வைக்கப்படுகிறது.

சேரிகள் அவற்றில் வாழும் மக்களின் சுகாதாரக் கேடான சமூக வாழ்க்கை, குற்றங்களும் ஒழுக்கக்கேடுகளும் மண்டிக்கிடக்கும் தரக்குறைவான வாழ்க்கை ஆகியவற்றை மேலைநாட்டு இரசிகர்களுக்கு பட்டியல் போட்டு இத்தனை கோளாறுகளை வைத்துக் கொண்டு புதுப் பணக்காரத் தனமாக உலகமயத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதார மேம்பாட்டை இந்தியா காட்டி ஆட்டம் போடுகிறது என்று இத்திரைப்படத்தில் காட்ட முனைகிறார்கள் என்பது அவர்களின் விமர்சனமாகும்.

இது தவிர சில இந்திய படத்தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இந்தப்படத்தில் ஆழமான பாத்திரப்படைப்பு என்பது இல்லை, நம்பமுடியாத சில நிகழ்வுகள் முன்வைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சேரிச் சிறுவர்கள் நல்ல ஆங்கிலம் பேசுவதும், இரவு முழுவதும் காவல்நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்ட ஒருவன் மறுநாள் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவது போன்றவை நம்பும்படி இல்லை என்பது அவர்களின் விமர்சனமாகும். பொதுவாக திரைப்படங்கள் உள்பட அனைத்து கலை வடிவங்களும் அவை கூறவரும் கதையை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வகைகளில் தரம்பிரிக்கப்படுகின்றன.

சில கதாபாத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை படம் பிடிக்கும் படங்கள் உளவியல் யதார்த்தம் என்ற வரையறைக்குள் வருகின்றன. அதுதவிர சமூக அவலங்களை பொதுவாக சித்தரிக்கும் திரைப்படங்கள் சமூக விமர்சனம் என்ற வரையறைக்குள் வருகின்றன. இது தவிர சமூகத்தின் கோளாறுகளை நகைச்சுவை ததும்ப கிண்டலும் கேலியும் செய்து எடுக்கப்படும் திரைப்படங்கள் அங்கதம் (Satire) என்று கூறப்படுகின்றன. இவற்றில் இந்தத் திரைப்படம் சமூக விமர்சனம் என்ற வரையறைக்குள் வருவதாகும். இவற்றில் ஆழமான பாத்திரப்படைப்பு, உளவியல் யதார்த்தம் என்ற அடிப்படையில் எடுக்கப்படும் படங்களிலேயே அதிகம் கொண்டுவரப்பட முடியும்.

சமூக விமர்சனம் என்ற வரையறைக்குள் வரக்கூடிய திரைப்படங்கள் விமர்சிக்க தகுந்த பல்வேறு சமூக அவலங்களை பொதுவாகவும் மேலோட்டமாகவும் முன்வைத்து அவற்றை பார்ப்பவர் மனதில் பதியச்செய்யும் வேலையையே செய்வதால் அதில் இடம்பெறும் ஒவ்வொரு பாத்திரத்தின் பரிமாணங்களை ஆழமாகவும் விரிவாகவும் பதிவு செய்வது சாத்தியமானதல்ல.

மேலும் இது ஒரு ஆங்கிலப்படம். எனவே உலக அளவில் உள்ள ரசிகர்களால் இது பார்க்கப்பட வேண்டுமானால் அதில் வரும் கதாபாத்திரங்கள் ஆங்கிலம் பேசுவதாக எடுப்பது அனுமதிக்கத் தகுந்த ஒரு சமரசமே. மேலும் சுற்றுலாத் தளங்களில் வழி காட்டிகளாக வேலை செய்பவர்கள் அனுபவ பூர்வமாக ஆங்கிலம் பேசக் கற்றுக் கொண்டு பேசவே செய்கின்றனர். அதுதவிர இரவு முழுவதும் அவன் காவல்நிலையத்தில் சித்திரவதைப் படுத்தப்பட்டதாகக் காட்டப்படவில்லை. அவனது வயது, வாழ்ந்த சூழ்நிலை அவனுக்கு அளித்திருக்கும் மனோதிடம் போன்றவற்றை கணக்கில் எடுத்துப் பார்த்தால் அவன் அச் சித்திரவதைகளை எதிர்கொண்ட பின்னரும் மறுநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவது நம்பவே முடியாததல்ல என்ற எண்ணமே ஏற்படுகிறது.

எனவே இப்படம் குறித்து அந்த அடிப்படையில் வரும் விமர்சனங்கள் ஒருவகையான தொழில் ரீதியான போட்டி, பொறாமை உணர்விலிருந்து வருபவையாகவே தோன்றுகிறது. எனவே இந்த வகை விமர்சனங்ள் அத்தனை அபாயகரமானவை அல்ல. இந்தப் படம் அமெரிக்கா போன்ற நாடுகளில் பல திரையரங்குகளில் ஓடி ஏராளமான வசூலினைப் பெற்றுள்ளது. அதை வைத்து இந்தியா இப்படி ஒரு விநோதமானதாகவும், நூதனமானதாகவும் உள்ள ஒரு நாடு என்ற மேலைநாட்டு ரசிகர்களுக்கு ஏற்புடைய ஒரு சித்திரத்தை முன்வைத்து எடுக்கப்படும் படங்களின் ரகத்தைச் சேர்ந்தது என்று கூற சிலர் முன்வருகின்றார்கள்.

ஒரு ஆங்கிலப்படம் அதுவும் அகில உலக அளவில் திரையிடப்பட்டு அனைத்துலக மக்கள் மத்தியிலும் எடுபடவேண்டும் என்ற அடிப்படையில் தயாரிக்கப்படும் போது அம்மக்கள் அனைவரின் பொதுவான இரசனைக்கு ஓரளவு உகந்த விதத்தில் அதனை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளரும், இயக்குனரும் நினைப்பது இயல்பே. படம் ஒரு திரைப்படம் என்ற ரீதியில் அது கூறவரும் விசயங்களை யதார்த்தமாக நயம், சுவை குன்றாமல் கூடுமானவரை விறுவிறுப்புடன் கூறி கூறவரும் விசயத்தை வியாபார நோக்கில் கொச்சைப்படுத்தாமல் சொல்கிறதா என்று பார்ப்பதே அவசியமானதாகும். அந்த அடிப்படையில் பார்த்தால் உண்மையிலேயே இந்த திரைப்படம் பல தகுதிகளைக் கொண்ட திரைப்படமே.

அதாவது இந்திய தொழில் நகரங்களில் அமைந்துள்ள சேரிகளில் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுள்ள லட்சோபலட்சம் மக்களின் வாழ்க்கையை பல அம்சங்களில் கலைநயத்துடன் இது நம் கண்முன் நிறுத்துகிறது. சேரிக் குழந்தைகள் குழந்தைப்பருவம் முதற்கொண்டே மேட்டுக்குடி மக்களாலும் அவர்களின் ஏவலர்களாகவும் விளங்கக்கூடிய காவல்துறையின் கவனிப்புகளுக்கும் ஆளாகும் நிலைமை, அதனால் காவல்துறையினரை எதிரிகளாக பார்க்கும் போக்கு, அதனால் போலீஸ் நாய் என்று அவர்களை அழைப்பது அங்குள்ள பள்ளிகள், அவற்றில் மாணவர்கள் ஆசிரியர்களால் நடத்தப்படும்விதம், அவ்வப்போது வெடித்துக்கிளம்பும் வகுப்புவாதத்திற்கு அச்சேரி மக்களே முதலில் இரையாகும் அவலநிலை, கலவரத்தில் இறந்துவிட்ட தன் தாயைக்கூடப் பார்க்காது தங்களது உயிரைக் காப்பாற்ற திக்குத்திசை தெரியாது ஓட நேரும் கொடுமை, பெற்றோர் மற்றும் சமூகத்தின் ஆதரவும் நேசமும் மிக அவசியமான பாலபருவத்திலேயே தாங்களாகவே சுயேட்சையாக மேலே கூறிய ஆதரவு அனுதாபம் எதுவுமின்றி வாழ நிர்பந்திக்கப்படும் சபிக்கப்பட்ட குழந்தைப் பருவம், அவர்களை பிச்சைஎடுக்கவும், சமுக விரோத செயல்களில் ஈடுபடுத்தி அதன் மூலம் வசதிபெறவும் முனைந்து நிற்பவரின் சமூக அந்தஸ்து மிக்க வசதியான வாழ்க்கை, மஃபியா கும்பல்கள், போட்டி நிகழ்ச்சிகளிலும் தலைவிரித்தாடும் வர்க்க துவேசம், காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் நடைபெறும் காட்டுமிராண்டித்தனங்கள் ஆகிய இத்தனை விசயங்களும் நமது சமூகத்தில் நிலவும் கோளாறுகளை தத்ரூபமாக பிரதிபலிக்கின்றன.

அவற்றினூடே கூட தங்களுடன் மூன்றாவதாக ஓடிவந்த ஒரு பெண்குழந்தையைப் பற்றி தொடர்ச்சியாக கவலை கொண்டு அவளைத் தேடித்திரிந்து காப்பாற்ற முனையும் மிக உயர்ந்த மனிதாபிமானம், எத்தனை கேவலமான சூழ்நிலையில் வாழ்ந்தாலும் அவளுக்குத் தான் இழைத்த அநீதியை நினைத்து கதாநாயகனின் மூத்த சகோதரன் மனம் வருந்துவது, பணத்தாசை இன்றி கதாநாயகிக்குத்தான் தென்பட வேண்டுமென்பதற்காகவே கதாநாயகன் போட்டியில் பங்கேற்பது, அத்தகைய பணத்தாசை இல்லாத தன்மை எவ்வித குழப்பமுமின்றி அவனைச் சரியான பதில்களைச் சொல்வதற்கு இட்டுச்செல்வது எனப் பல உயர்ந்த மனிதக் குணங்கள் மிக இயல்பாக, யதார்த்தமாக முன் வைக்கப்படுகின்றன.

கதை சொல்லப்படும் விதத்தில் நகைச்சுவை ததும்பினாலும் உள்ளூர நிலவும் சமூக அவலம் ஒரு ஆழமான தாக்கத்தை பார்ப்பவர் மனதில் ஏற்படுத்துகிறது. விருதுபெறும் படங்களில் காணமுடியாத ஒரு விறுவிறுப்பினை இப்படத்தில் காணமுடிகிறது. யாரும் நடிக்கிறார்கள் என்று சொல்லமுடியாத அளவிற்கு குழந்தைகள் முதற்கொண்டு படத்தில்வரும் தேர்ந்த நடிகர்கள் வரை அனைவரும் மிக யதார்த்தமாக அவர்கள் நடிக்கும் பாத்திரத்துடன் அப்படியே ஒன்றிப்போய் இருக்கிறார்கள்.

படத்தில் வரும் இசை, இசையமைப்பாளரின் தனித்துவத்தை பறைசாற்றுவதற்கு பதிலாக படத்தின் தேவையோடு நூறு சதவீதம் ஒன்றிப்போகிறது. அவ்வாறு இருப்பதால்தான் இதைவிட நல்ல இசையமைப்பு பல இந்தியப் படப் பாடல்களில் ஏ.ஆர்.ரகுமானால் செய்யப்பட்டிருந்தாலும், அவற்றோடு ஒப்பிடும்போது அத்தனை சிறப்பான தனித்தன்மையுடன் இல்லாத இப்படத்தின் இசைக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்துள்ளது எப்படி சரியானது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

கச்சேரிகளில் வேண்டுமானால் ஒருவரின் முழுமையான தனித்துவத்தைக் காட்டும் அம்சங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு திரைப்படத்தை பொறுத்தவரை அப்படத்தின் தேவைகளுக்கு உகந்த விதத்தில் இசையமைப்பும், பிசிறில்லாமல் ஒன்றி ஒருங்கிணைந்து இருப்பதே சிறப்பானதாகும். அந்த அடிப்படையில் இப்படத்தின் இசையமைப்பு படத்துடன் அப்படியே ஒன்றி படத்திற்கு உயிரூட்டுவதாக உள்ளது. வேறெதற்கும் இல்லாவிடினும் விறுவிறுப்பு, இயற்கையான நடிப்பு போன்றவற்றிற்காகவேனும் பாராட்டப்பட வேண்டிய இப்படம், ஏன் இவ்வாறு இட்டுக்கட்டி விமர்சிக்கப்படுகிறது என்று பார்க்கும் போது நமக்கு ஒரு விசயம் புலப்படுகிறது.

அதாவது பொதுவாக விடுதலை பெற்ற இந்தியாவில் ஒருவகை மேட்டுக்குடி மக்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் விடுதலைப் போராட்ட பாரம்பரியம் கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள். ஏனெனில் அன்னிய அடிமைத்தளையில் இருந்த போதும்கூட இந்தியா குறித்த பழம்பெருமை அவர்கள் மனதில் அப்பிக்கொண்டே இருந்திருக்கும். ஏனெனில் அவர்கள் நான் இருக்கிறேன் அதனால் நான் நினைக்கிறேன் என்ற ரகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கமாட்டார்கள்; மாறாக நான் நினைக்கிறேன் அதனால் நான் இருக்கிறேன் என்ற ரகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்களிடமிருந்துதான் தேசிய வெறிவாத அடிப்படையிலான விமர்சனங்கள் வருகின்றன.

இப்பகுதியினர் மிகவும் அபாயகரமானவர்கள். இவர்களைப் பொறுத்தவரை கலை இலக்கியம் ஏதாக இருந்தாலும் அவற்றின் மூலம் நமது நாட்டின் மேன்மைகள் என்று எதையாவது பட்டியல் இட்டு காட்டிக்கொண்டே இருக்கவேண்டும். இந்தியா இவ்வாறு எல்லா வகைகளிலும் குறிப்பாக ஆன்மீகத்தில் சிறந்தது என்று காட்டினால் அது அவர்கள் மனதிற்கு உகந்ததாக இருக்கும்.

இவர்களைத் தவிர இன்னொருபகுதி விமர்சகர்கள் இருக்கிறார்கள் அவர்கள் திரைப்படத்திற்குச் சென்றால் ஒரு இரண்டரை மணி நேரம் சந்தோசமாக இருந்துவிட்டு வரவேண்டும். எதார்த்தவாதம் என்று சொல்வதெல்லாம் அவர்களுக்குப் பிடிக்காது. படம் மனதிற்கு இதமாகவும், ஆறுதலாகவும் இருக்க வேண்டும். அது உண்மையோ, பொய்யோ அதைச் செய்தால்தான் அந்தக் கலையும் இலக்கியமும் அவர்களின் பாராட்டைப்பெறும். ஜெயகாந்தனின் 'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் வந்தபோதே அது தமிழ்நாட்டை அகில இந்திய அளவில் கேவலமாக சித்தரிக்கிறது என்ற விமர்சனம் இப்படிப்பட்டவர்களால் முன்வைக்கப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரை இந்தப்போக்கு தொடர்ந்து கொண்டுள்ளது.

உண்மையாகவே ஒரு நாட்டின் நலனில் -நாட்டின் நலன் என்றால் அந்த நாட்டு மக்களின் பெரும்பான்மையோரின் நலனில்- அக்கறை உள்ளோர் கண்களுக்கு நாட்டின் அவலங்களும் குறைகளுமே அதிகம் தெரியும். குறைகள் மென்மேலும் வெளிப்பட வெளிப்படத்தான் இன்னும் இந்த சமுதாயத்தை சரியானதாக்க என்னென்ன செய்ய வேண்டியிருக்கிறது என்ற எண்ணம் படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படும். அதை விடுத்து மிக நல்ல வாழ்க்கை நடத்தும் மேட்டுக்குடி மக்களின் வாழ்க்கையை படம்பிடித்து இதோபார் இந்தியா இங்கே ஒளிர்கிறது, அங்கே மிளிர்கிறது என்ற பகட்டுச் சித்திரத்தை முன் வைத்தால் அவ்வாறு செய்யும் கலையும் இலக்கியமும் வெறும் சோப்பு விளம்பரக் கச்சேரி போல் ஆகிவிடும்.

மனிதனை மனிதன் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளதும், பணம்தான் அனைத்தும் என்ற நியதியை வாழ்க்கையின் அடிநாதமாகக் கொண்டிருப்பதுமான சமூக அமைப்புகள் அனைத்திலும் விமர்சிப்பதற்கு ஏராளமான விசயங்கள் இருக்கவே செய்யும். அந்த சமூகங்களில் உயர்வானதாகக் காட்டவல்ல வாழ்க்கை முறை பெரிதும் இருக்காது. செல்வத்தில் கொழிக்கும் நாடு என்று கூறப்படும் அமெரிக்காவிலும் கூட அது மேலே கூறிய ரகத்தைச் சேர்ந்த நாடாக இருப்பதால் அங்கும் பல அவலங்கள் மக்களின் வாழ்க்கையில் இருப்பதை அந்நாட்டு திரைப்படங்கள் படம் பிடிக்கவே செய்கின்றன.

அந்நாட்டின் சட்ட அமைப்பு எத்தனை அர்த்தமற்றதாக இருக்கிறது, ஏதாவது ஒரு வகையில் பிரபலமாவது அதாவது கொலை போன்ற கொடுங்குற்றங்கள் செய்தாவது பிரபலமாவது எவ்வாறு அமெரிக்கத்தனமாக அந்நாட்டு மககளிடையே ஆகியுள்ளது; அத்தகைய குற்றவாளிப் பிரபலங்கள் எவ்வாறு சட்டத்தில் உள்ள சந்துபொந்துகளையும் வழக்கறிஞர்களின் வாதத் திறமைகளையும் பயன்படுத்தி தண்டனை பெறாமல் தப்பிக்கின்றனர் என்பதும் பிரபலத்திற்காக ஏங்கும் அவர்கள் அதனை எதைச் செய்தாவது பராமரிக்க விரும்பும் மனப்பான்மையும் எவ்வாறு அந்நாட்டில் நிலவுகிறது என்பதையும் சில வருடங்களுக்கு முன்பு ஆஸ்கார் விருது பெற்ற 'சிக்காக்கோ' என்ற அந்நாட்டின் திரைப்படம் சித்தரித்தது.

அந்நாட்டில் நிலவும் மிகமோசமான கறுப்பர்-வெள்ளையர் இன வேறுபாடும், தங்களது பொருளாதார மற்றும் வேலையின்மைப் பிரச்னைகளால் இனவாதத்திற்கு இரையாகி கறுப்பர் இன மக்கள் வெள்ளை இனத்தவரை வெறுப்பாக பார்க்கும் போக்கும், கறுப்பர்கள் அனைவருமே கிரிமினல்கள் என்று வெள்ளையர் பார்க்கும் போக்கும் இந்த சூழ்நிலை உருவாக்கும் உளவியல் ரீதியிலான பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஆகியவையும் அடுத்து ஆஸ்கார் விருதுபெற்ற கிராஸ் என்ற திரைப்படத்தில் முன்வைக்கப்பட்டன.

சிலம்டாக் மில்லியனரில் முன்வைக்கப்பட்டது போன்ற சேரி மக்களின் வாழ்க்கையை ஒத்த மிக பின்தங்கிய சுகாதாரக் கேடான வாழ்விடங்களைக் கொண்ட பகுதிகள் அமெரிக்க சமூகத்தின் புறவாழ்க்கையில் இல்லாதிருக்கலாம். ஆனால் அதன் அக வாழ்க்கையில் மிக மோசமான அவலங்கள் இருக்கின்றன என்பதையே சிக்காக்கோவும், கிராஸ் திரைப்படங்களும் உணர்த்துகின்றன. ஆனால் இவை அமெரிக்க சமூகத்தை மோசமான வெளிச்சத்தில் படம்போட்டுக் காட்டுகிறது என்று அங்குள்ள விமர்சகர்கள் பக்குவமில்லாமல் விமர்சிப்பதில்லை.

ஒரு திரைப்படத்தை அது விருதுபெற்றது என்பதற்காக விமர்சிக்கவே கூடாது என்பதல்ல. ஆனால் விமர்சனங்கள் இதுபோன்ற படத்தின் மையக்கருத்தோடு ஒரு சம்பந்தமும் இல்லாத தேசிய வெறிவாத அடிப்படையிலான விமர்சனங்களாக இருக்கக்கூடாது. அது அவர்களின் விமர்சனத் திறனற்ற போதாமைகளை மட்டுமல்ல யாரிடமும் இருக்கக்கூடாத வெறிவாதப் போக்குகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தன்னை ஒருவன் விமர்சித்தால் நீ என்னை இப்படித்தான் விமர்சித்திருக்க வேண்டும் என்று கூறுபவன் எந்த விமர்சனத்திலிருந்தும் படிப்பினை எடுத்துக் கொள்ளமாட்டான். அதைப்போல் நீ இந்தியாவைப் பற்றி இப்படித்தான் எடுக்க வேண்டும் என்ற மனநிலையை திருப்திப்படுத்தும் விதத்தில் உயர்ந்த திரைப்படம் எதுவும் எடுக்கப்படவே முடியாது.

இதுபோன்ற மனநிலை கொண்டவர்களால் பல திரைப்படங்களை இவ்வாறு விமர்சிக்கவும் அவை திரையிடப்படும் திரையரங்குகளில் கல் எறியவும் முடியுமே தவிர, உருப்படியான கலைப்படைப்புகள் எதையும் உருவாக்க முடியாது. நம் உடலில் தொழுநோய் தேமல்கள் இருந்தால் அதற்கான மருத்துவம் செய்ய முனைய வேண்டுமே தவிர, அது அத்தகைய தன்மைவாய்ந்த தேமல் அல்ல என்று பொய்யாகக் கூற முனையக் கூடாது. அதையும் தாண்டி ஒரு படி மேலே சென்று அது தொழுநோய் தேமலைப் போல் இருக்கிறது என்று சுட்டிக்காட்டுபவர்களை நீ எப்படி சுட்டிக்காட்டலாம் என்று கூறுவது அந்த நோயை தீர்க்க உதவாது. இப்படிபட்ட ஒரு நிலையிலேயே தேசிய வெறிவாத மனநிலையோடு 'சிலம்டாக் மில்லியனர்' திரைப்படத்தை விமர்சிப்பவர்களில் ஒரு பகுதியினர் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தத்தில் சிலம்டாக் மில்லியனர் திரைப்படம் ஆஸ்கார் விருது பெறுவதற்கான அனைத்துத் தகுதிகளையும் பெற்ற படம் மட்டுமல்ல; விருது பெறும் தரம் பெற்ற படங்களை விறுவிறுப்பாகவும் எடுக்க முடியும் என நிரூபித்த படமுமாகும்.

வாசகர் கருத்துக்கள்
kkannan
2009-06-11 07:56:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

sir
your argument is very correct . ma.ka.e.ka. is wrongly argued . our political parties said name cpm, cpi , cpi(ml), naxalparies, other mls are all parties fully support to capital class and capital interst . caste problem it is only problem of this above parties, what is different between DMK,ADMK,PMK,VCK,MDMK,CON,BJP and CPM,CPI,CPM ML, Naxl, MLS and MA.KA.E.KA . i know dear friend any way congratulation for your steps .thaks

karthik
2009-08-07 05:01:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

very super article. super film