கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக்கல்லூரிகளிலும் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டுள்ளது. தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் தனியார் சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருவதைத் தொடர்ந்து தனியார் சட்டக்கல்லூரிகளை தமிழகத்தில் நிரந்தரமாகத் தடைசெய்யக்கோரியும், சேலம் தனியார் சட்டக் கல்லூரியை அரசுடமையாக்கக் கோரியும், கூடுதல் எண்ணிக்கையில் அரசு சட்டக் கல்லூரிகளை திறக்கக் கோரியும் சட்ட மாணவர்கள் போராடி வருகின்றனர்.

இன்று சட்டக்கல்வி வியாபாரமயமாவது ஒரு தனித்த நிகழ்வன்று. ஒட்டுமொத்தமாக நாட்டில் அடிப்படைக்கல்வி முதல் உயர்கல்வி அவரை அனைத்து மட்டத்திலும் கல்வி வியாபாரமயமாகி நிலைபெற்று வருவதன் பங்கும் பகுதியுமாகத்தான் இன்று சட்டக்கல்வி தனியார்மயமாகி வருவதும் நடைபெற்றுள்ளது. கல்வி வியாபாரமாக்கலை எதிர்த்து ஒட்டுமொத்த மாணவர் சமுதாயமே போராட்டக்களத்தில் இறங்கியிருக்க வேண்டிய வேளையில், சட்டமாணவர்கள் மட்டுமே தற்போது போராடிக் கொண்டிருக்கின்றனர். பல்வேறு திருப்பங்களக் கடந்து தற்போது சட்ட மாணவர்களின் போராட்டம் சட்டக்கல்வியில் தனியார்மயத்தை தடைசெய்யக் கோரும் கோரிக்கையை மையமாகக் கொண்டு நடைபெற்று வருகிறது.

கல்வியில் தனியார்மயம் என்பது இன்று நேற்றல்ல கடந்த 50 ஆண்டுகளாகவே இந்தியாவில் இருந்து வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகள் தனியார்களால் பலகாலம் நடத்தப்பட்டுக் கொண்டுதான் வருகின்றன. பல அரசுக் கல்லூரிகளக் காட்டிலும் அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகள் தரமான கல்வியை வழங்குவதில் மக்களின் நல்லெண்ணத்தையும் பெற்றுள்ளன.அரசு உதவிபெறும் இத்தனியார் கல்லூரிகளை மனதில் வைத்துக் கொண்டு பலர் தனியார் கல்லூரிகள் வந்தால் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்குமே, கல்விப் பரவலாக்கல் ஏற்படுமே என்று வாதிடலாம்.

ஆனால், அன்று சுதந்திரம் பெற்ற ஆரம்பகாலத்தில் இந்திய மக்களிடம் கல்வி அறிவைப் பரப்ப வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் தனது சொந்த சொத்துக்களை வழங்கி அரசின் உதவியுடன் துவங்கப்பட்ட அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகளுக்கும், இன்று லாபகரமான தொழில் என்ற அடிப்படையில் பெற்றோர்களை கொள்ளயடிக்கும் ஒரே நோக்கத்துடன் துவங்கப்படும் தனியார் கல்லூரிகளுக்கும் அடிப்படையில் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அரசு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணங்களை வசூலிக்க வேண்டும். ஆனால் இந்த சுயநிதி தனியார் கல்லூரிகளில் கல்விக் கட்டணங்களை கல்லூரி முதலாளிகளை நிர்ணயிக்கின்றனர்.

பெரும்பாலான சுயநிதிக் கல்லூரிகள் ஒரு சில கட்டிடங்களுடன் அனுமதி வாங்கிக் கொண்டு, மாணவர்களிடம் நன்கொடை வாங்கியே கல்லூரியின் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குகின்றன. பின்னர் அந்தக் கட்டமைப்பு வசதிகளைக் காட்டி அடுத்து வரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணமும் நன்கொடையும் வசூலிக்கின்றன. டி.வி, பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்வது முதல் புரோக்கர்களுக்கு கமிஷன் கொடுத்து கல்லூரிக்கு ஆள் சேர்ப்பது அவரை அனைத்து வியாபார மோசடித்தனங்களும் இன்றைய தனியார் சுயநிதிக் கல்லூரிகளால் கடைபிடிக்கப் படுகின்றன. இன்று கல்வி, கல்வியாளர்கள் கையில் இல்லை; முதல் போட்டு லாபம் தேடும் முதலாளிகள் கையில் இருக்கிறது என்பது வெளிப்படையான உண்மை. ஆக கல்வியில் தனியார்மயம் என்பதைவிட இங்கு உண்மையான பிரச்னை கல்வி வியாபாரமயமாகி வருவதேயாகும்.

சட்ட மாணவர்கள், இன்று பிரதானமாக முன்வைக்கும் தனியார் சட்டக் கல்லூரிகளை நிரந்தரமாக தடைசெய்ய சட்டம் இயற்ற வேண்டும்; சேலம் தனியார் சட்டக்கல்லூரியை அரசுடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்குப் பதிலாக, தனியார் சட்டக் கல்லூரிகளில் அரசுக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணம்தான் வசூலிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துப் போராடினால் கல்வி வியாபாரத்தை எதிர்த்த போராட்டமாக அது இருக்கும். மேலும் உடனடிப் பலன் கிடைக்கக் கூடியதாகவும் அது இருக்கும்.

தனியார் சட்டக்கல்லூரிகளத் தடைசெய்வதும், இருக்கும் தனியார் கல்லூரியை அரசுடைமையாக்குவதும், மிகவும் உன்னதமான மிகச்சரியான கோரிக்கைகள்தான். ஆனால் கல்வி, மருத்துவம் முதல் சில்லரை வணிகம், முடிதிருத்தும் நிலையங்கள் அவரை தனியார் முதலீடுகள் வெள்ளமெனப் பாய்ந்து வந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் பரந்துபட்ட மாணவர்கள் மத்தியில் மேற்கண்ட கோரிக்கைகளை நாம் வென்றுவிட முடியும் என்ற நம்பிக்கை துளியும் ஏற்படாது. பெரும்பாலான மாணவர்களிடம் இந்த வநம்பிக்கை இருக்கும்போது போராட்டத்தை முழுவீச்சில் கொண்டு செல்ல இயலாது.

மாறாக, தனியார் சட்டக் கல்லூரிகளில் அரசு சட்டக்கல்லூரியில் வசூலிக்கப்படும் கட்டணமே வசூலிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தால் பரந்துபட்ட மாணவர்கள், ‘இது நியாயமானது, பரந்த அளவில் மக்கள் ஆதரவைப் பெறவல்லது’ என்ற நம்பிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபடுவர். மேலும் இத்தனியார் சட்டக்கல்லூரிகள் இலாப நோக்கத்திற்காகவே நடத்தப்படுவதால் அரசுக் கல்லூரிகளின் கட்டணத்தையே வசூலிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் கல்லூரியை அவர்களாகவே மூடிவிட்டுப் போக வேண்டியதே இருக்கும். அந்த வகையில் தனியாரின் லாபத்தை தடை செய்வதன் மூலம் தனியார் சட்டக் கல்லூரியைத் தடை செய்ததாகவும் அது மையும்.

சட்ட மாணவர்கள் எதிர்காலத்தில் சந்திக்கவிருக்கும் மற்றொரு முக்கிய பிரச்னை சட்டமாணவர்களின் உரிய கவனத்தைப் பெறத் தவறியுள்ளது. டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பி.எல் (ஹானர்ஸ்) சட்டப் படிப்பு மற்றும் தஞ்சை சாஸ்த்ரா சட்டக்கல்லூரி போன்ற தனியார் சட்டக்கல்லூரிகள் வந்து கொண்டுள்ள நிலையில் இதுபோன்ற நிறுவனங்களில் உயர்ந்த கட்டணங்கள் செலுத்திப் படிக்கும் வசதி படைத்த மாணவர்களுக்கு தரமான சட்டக் கல்வியும், அரசு சட்டக் கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு தரம் குறைந்த சட்டக் கல்வியும் வழங்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

வழக்கறிஞர் தொழில் மூலம் பொருள் ஈட்ட வேண்டும் என்பதற்காகத்தான் மாணவர்கள் சட்டம் பயில்கின்றனர். ஆனால் இன்றைய உலகமய சூழலில், உயர் வருவாய் தரக்கூடிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்களின் வழக்குகளை வாதாடுவதற்கான வாய்ப்பும், ந்நிறுவனங்களில் வேலைவாய்ப்பும், பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளின் வழக்கறிஞர்களின் சட்ட அலுவலக வேலைகளை இணையதளம் மூலம் இங்கிருந்தே செய்து கொடுத்து சம்பாதிக்கும் வாய்ப்பும் அரசு சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கிடைக்காது. ஏனெனில், இது போன்ற வேலைவாய்ப்பினைப் பெறுவதற்கு தரமான சட்டக்கல்வியும் ஆங்கில அறிவும் அவசியமானதாக இருக்கிறது.

ஆனால் முறையாக ஆங்கில மொழியை கற்றுத் தர எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளாத அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் படித்துவிட்டு வரும் மாணவர்களை அரசு சட்டக் கல்லூரியில் அதிக எண்ணிக்கையில் படிக்கின்றனர். அரசு சட்டக் கல்லூரியில் அவர்களுக்கு அளிக்கப்படும் சட்டக் கல்வியும் ஏனோதானோவென்ற கல்விதான். எனவே, அவர்களால் தங்களது வருமானத்திற்காக பணியாற்றுவதற்கு மாவட்ட நீதிமன்றத்தை தாண்டிச் செல்லமுடியாத நிலையே ஏற்படும். இந்நிலையில் அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவர்களும் வருமானம் ஈட்டக்கூடிய வகையில் தொழிலை நடத்த வேண்டுமானால், அரசு சட்டக் கல்லூரி மாணவர்களும் தங்களது போட்டியிடும் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் அரசு சட்டக்கல்லூரிகளின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்; போதுமான எண்ணிக்கையில் தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த உரிய முயற்சி எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரி அவர்கள் போராட வேண்டும்.

இன்று மத்திய அரசு உட்பட எல்லா மாநில அரசுகளும் வீதிக்கு வந்துபோராடும் மக்கள் எவராக இருந்தாலும் தடியடியும் துப்பாக்கிச் சூடும் நடத்தி, போராடும் எண்ணத்தை மக்கள் மனதில் இருந்து முளையிலேயே கிள்ளிவிட முடிவு செய்துள்ளனர். குர்காவுன்(ஹரியானா), நந்திக்ராம் (மேற்கு வங்கம்), முடிகொண்டா (ஆந்திரா) முதல் தமிழகத்தின் ரெட்டனை அவரை நடைபெற்றவை இதையே நிரூபிக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் கோவையிலும் திருநெல்வேலியிலும் போராடும் சட்ட மாணவர்கள் மீது போலீசாரின் காட்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனவே, தஞ்சை சட்டக்கல்லூரிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துவிட்டது; எனவே அக்கல்லூரிக்கு எதிரான போராட்டத்தில் தமிழக அரசு தங்களுக்கு எதிராக இராது என்று சட்ட மாணவர்கள் எண்ணிவிடக் கூடாது. ஏனெனில் தனியார் சட்டக்கல்லூரிகள் உருவாவதை தமிழக அரசு விரும்பவில்லை என்று நாம் கூறமுடியாது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் சட்டக்கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அருகிலுள்ள கர்நாடக மாநிலத்திற்கு சென்று படிக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கும் சட்டக் கல்விக்கான சந்தை வாய்ப்பை கர்நாடக கல்வி முதலாளிகள் பயன்படுத்துவதைவிட தமிழ்நாட்டின் கல்வி முதலாளிகள் பயன்படுத்துவதையே தமிழக அரசு விரும்பும். எனவே தனியார் சட்டக் கல்லூரிகள் வருவதில் தமிழக அரசு ஆர்வத்துடன்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நிலவும் சூழ்நிலைகளயும் பிரதானப்படுத்த வேண்டிய கோரிக்கையின் காரிய சாத்தியங்களயும், பரந்துபட்ட மாணவர்களை போராட்டக்களத்திற்கு கொண்டு வர நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் கணக்கில் கொண்டு மையக் கோரிக்கையை தீர்மானித்து சட்டமாணவர்கள் தங்களது போராட்டத்தை தொய்வின்றி முன்னெடுத்துச் செல்லவேண்டும். தமிழகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல சக்திவாய்ந்த போராட்டமாக மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து சட்டக்கல்லூரி மாணவர்களயும் ஒருங்கிணைத்து அது நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் தங்கள் கோரிக்கைகளை மாணவர்கள் வென்றெடுக்க முடியும்.

வாசகர் கருத்துக்கள்
lingam.k
2009-01-26 01:12:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நிலவும் சூழ்நிலைகளயும் பிரதானப்படுத்த வேண்டிய கோரிக்கையின் காரிய சாத்தியங்களயும், பரந்துபட்ட மாணவர்களை போராட்டக்களத்திற்கு கொண்டு வர நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் கணக்கில் கொண்டு மையக் கோரிக்கையை தீர்மானித்து சட்டமாணவர்கள் தங்களது போராட்டத்தை தொய்வின்றி முன்னெடுத்துச் செல்லவேண்டும். தமிழகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல சக்திவாய்ந்த போராட்டமாக மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து சட்டக்கல்லூரி மாணவர்களயும் ஒருங்கிணைத்து அது நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் தங்கள் கோரிக்கைகளை மாணவர்கள் வென்றெடுக்க முடியும்.it is very true.