சமகால அரசியல் அறிவோடு விமர்சனத் தளத்திலும் படைப்புத் தளத்திலும் ஒடுக்கப்பட்டவர்களின் சமூகப் பிரச்சினைகளையும் பண்பாட்டு அழகியலையும் அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்பவர்களாகச் சிலரையே அடையாளப்படுத்தமுடியும். இப்படியான அடையாளத்தோடு தலித் மக்களின் பிரச்சினைகளை மிக நுட்பமாகத் தன் எழுத்துகளில் பதிவு செய்துவருபவர்களில் ஒருவர்தான் அழகிய பெரியவன்.

சி. அரவிந்தன் என்னும் இயற்பெயரைக் கொண்ட அழகிய பெரியவன் புனைவு, கவிதை, கட்டுரை, விமர்சனம் எனப் பல தளங்களிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். தனது வாழ்வியல் அனுபவங்களைக் கடந்து களத்தில் நின்று எழுதுபவர். ஆதிக்க கருவிகளான மதம், சாதி, ஆணாதிக்கம், பொருளாதாரம் ஆகியவைகளால் வேரறுக்கப்பட்டோரின் வாழ்வியல் அவலங்களை அனைத்துக் கூறுகளுடனும் தனது எழுத்துகளில் பதிவு செய்துவருகிறார்.

அழகிய பெரியவன் ‘தீட்டு’, ‘அழகிய பெரியவன் கதைகள்’, ‘நெரிக்கட்டு’, ‘கிளியம்மாவின் இளஞ்சிவப்புக்காலை’ ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தீட்டு தொகுப்பில் இடம்பெற்றுள்ள தீட்டு, குறி என்னும் இரண்டு கதைகளும் கணையாழி நடத்திய குறுநாவல் போட்டிக்காக எழுதப்பட்டவை. ஆதலால் அவை அளவில் சற்றுப் பெரியதாக உள்ளன. அவ்வப்போது இதழ்களில் வெளிவந்த சிறுகதைகள் பின்பு தொகுப்பு வடிவம் பெற்றன. விளிம்புநிலையின் சோகத்தை அதற்கேயுரிய இயல்பான நடையில் சொல்லக்கூடியவை அழகிய பெரியவனின் கதைகள்.

தலித்துகளின் சமூகப் பிரச்சினை, வலிகள், போராட்டங்கள், உட்சாதி முரண்கள், தலித்பெண்களின் நிலை, மனித மன உணர்வுகள் முதலானவை இவருடைய சிறுகதைக்கான கதைக் களங்கள். இழிவு எனக் காலங்காலமாக ஒதுக்கி வைக்கப்பட்ட சொற்கள் இயல்பாகப் பயன்படுத்துவதன் மூலம் தலித் படைப்பாளி, மொழியில் கலகங்களைத் தோற்றுவிக்கிறான் (அ. சஷன், தலித்தியம் இயக்கமும் இலக்கியமும், 2004:91,92). சேரிமொழியை இயல்பாகப் பயன் படுத்தக் கூடிய இப்படியான மொழிநடை இவரது படைப்புகள் நெடுகிலும் பரவியிருக்கின்றது. சான்றுக்குப் ‘புள்ளத்தெறமைய பேலவுட்டுப் பாத்தா அது கோரப்பில்ல புடிக்சினு முக்கினு இருந்துச்சாம். துன்னுட்டு துன்னுட்டு ஸ்கூலுக்குப் போயிட்டு வந்து படுத்துக்க. எல்லாம் வந்துடும். போடாவுன் ஷாதியிலயெஞ் செருப்பு (தண்ணிக் கட்டு நாள், அழகிய பெரியவன் கதைகள், 2007:26), அடித் தேவுடியாளே. தொழிலுக்கு வந்துட்ட பிறகு புதுசென்னா பழசென்னா...? யேய் இங்க வாமே (தீட்டு, 2000:22) போன்றவற்றைச் சொல்லலாம்.

சமூகத்தின் சாதிய ஒடுக்குமுறையால் காலங்காலமாக வலிகளைச் சுமந்துகொண்டுவரும் விளிம்புநிலை மக்களின் உணர்வுகளையும் வாழ்வியல் அவலங்களையும் வெளிப்படையாக - அசலாக உரத்துச் சொல்லுகின்ற குரலை இவரது அனைத்துச் சிறுகதைத் தொகுப்பு களிலும் காணமுடியும். ‘தீட்டு’, ‘பூவரசம் பீப்பி’, ‘பிச்சை’, ‘மண்மொழி, வீச்சம்’, ‘திசையெட்டும் சுவர்கள் கொண்ட கிராமம்’, ‘இறகு பிய்த்தல்’, ‘தண்ணிக் கட்டு நாள்’, ‘வாதை’ முதலான பல கதைகளைக் சொல்லிக்கொண்டே போகலாம்.

வலிகள், ஒடுக்குமுறை சார்ந்த வாழ்வனுபவங்கள் ஆகிய வற்றைப் பதிவு செய்தல் என்ற ஒற்றைத் தன்மையிலிருந்து மாறி மேல்சாதிக்கு எதிரான போராட்டக்குரலையும் கதையாடலுக்குட் படுத்துகிறார். மேல்குடியினருக்கு எதிராகத் தலித் இளைஞர்கள் போராடக்கூடிய கதையாகத் ‘திசையெட்டும் சுவர்கள் கொண்ட கிராமம்’ உள்ளது.

தலித்துகளின் வாழ்வியல் அவலங்களினூடே உட்சாதி முரண் களையும் தனது கதைகளில் பதிவு செய்துள்ளார். ‘கண்கொத்தி இரவு’ இதற்குச் சான்றாக அமைகிறது. மருதா பெற்றோரை எதிர்த்து வீட்டைவிட்டு ஓடிப்போய் துஷ்யந்திரனைத் திருமணம் செய்து கொண்டு திரும்பிய நிலையில் கூட அவளது பெற்றோர்கள் அவளை ஏற்க மறுத்துவிடுகின்றனர். அதற்குக் காரணமாக அவனது சாதி அடையாளப்படுத்தப்படுகிறது. மருதாவின் தாய் ‘உந்துணிங்க. எடுத்துனு கௌம்பு. இனிமே இந்த வாசப்டியெ உங்காலு மெதிக்கக் கூடாது. நீ இதத் தாண்டின அன்னிக்கே தல முளுகிட்டோம். எப்ப ஒரு மாலோடோட ஓடிப் போனியோ அப்பவே நீயும் எங்களுக்கு மாலோடுதான். நாங்க ஒரு பறச்சியெப் பெக்கலÓ (அழகியபெரியவன் கதைகள், 2007: 14) என்று கூறுவதோடு கதை முடிகிறது.

இவரது கதைகள் ஆதிக்கச் சாதியினரின் ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட தலித்துகளிடையே பொருளாதார அடிப்படையிலான உள்ஒடுக்குமுறைகள் இருப்பதையும், பாலினம் சார்ந்து பெண்ணிய ஒடுக்குமுறைகள் இருப்பதையும், தலித்பெண்களின் பாலியல் கொடுமைகளையும் கதைக்களனாகக் கொண்டிருப்பது தலித் தியத்தை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டுசெல்வதாக உள்ளது. வெளிவந்தபோது வாசகர்களைப் பெரிதும் கவர்ந்த தீட்டு இவை அனைத்தையும் பதிவுசெய்துள்ளது. சூரியகுளம் சேரிப்பகுதியில் வாழும் காமாட்சி ஆணியச் சமூகத்தால் எவ்வாறு ஒடுக்கப்பட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறாள் என்பதையும், பொருளா தாரத்தில் உயர்ந்த தாமுவின் ஆதிக்க மனோபாவத்தையும் துல்லிய மாகப் பதிவுசெய்கிறார். களத்திற்குச் சென்று ஆய்வு செய்து அவ்வனுபவங்களை எழுத்துகளாக மாற்றும் அழகிய பெரியவன் தீட்டுக் கதையையும் அப்படியே எழுதியுள்ளார் (அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அழகிய பெரியவன் இது குறித்து மிக விரிவாக உரையாடினார்) என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிக்கலான போராட்டத்தை எதிர்கொள்ளும் மனித மன உணர்களையும் (நீர்ப்பரப்பு, கண்காணிக்கும் மரணம்) வன்முறை மனிதத்துள் ஏற்படுத்தும் அதிர்வுகளையும் (மரணத்துள் வாழ்வோம்) நேர்த்தியாகப் பதிவுசெய்துள்ளார்.

தலித் மக்களின் விடுதலை சார்ந்த போராட்டக் குரலும் அதிகார மையத்தைத் தகர்த்தெரியக்கூடிய கலகக்குரலும் அழகிய பெரியவன் என்கிற கதைச்சொல்லியிடம் உரத்து ஒலிக்கின்றன.

மேல்சாதியினரால் ஒடுக்கப்பட்டதின் வலி, இழிவு ஆகிய வற்றைப் பதிவு செய்தல் என்ற ஒற்றைத் தன்மையை விடுத்து அவர்களின் மறுபக்கமான மகிழ்ச்சி, கொண்டாட்டம், வெற்றி முதலிய தலித் அழகியலையும் பதிவு செய்யும் களமாகவும் சிறுகதைகளை அமைத்துக்கொண்டார்

அழகிய பெரியவன் சிறுகதைத் தொகுப்புகள்

1.    தீட்டு

2.    நெரிக்கட்டு

3.    கிளியம்மாவின் இளஞ்சிவப்புக்காலை

4.    அழகிய பெரியவன் கதைகள்

(தீட்டுத் தொகுப்பினுள் இடம்பெற்றுள்ள ‘தீட்டு’, ‘குறி’ ஆகிய இரண்டு கதைகளும் கணையாழி நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றவை.)

(கட்டுரையாளர் ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ் இலக்கியத் துறையில் புறநானூற்று யாப்பு பற்றிய ஆய்வை செய்து முனைவர் பட்டம் பெற்றவர்)