தற்காலத் தமிழ்ச்சூழலில் புனைவு இலக்கியங்கள் பற்றிய பார்வை, புனைவு இலக்கியங்களை அடுத்தகட்ட நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது எனலாம். எனினும் புனைவு இலக்கியங்களுள் உள்ள ‘சிறுகதை, நாவல்’ என்ற வடிவங்கள் மீது கொண்டிருக்கும் மனநிலை வெவ்வேறானதாக உள்ளது. இதனை நாவல், சிறுகதை எழுத்தாளர் கள் மீது வாசகர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கொண்டிருக்கும் கருத்து நிலைகளிலிருந்து புரிந்துகொள்ளலாம். சிறுகதையைவிட நாவல் என்பது சற்று உயர்ந்த நிலையிலேயே எண்ணும் சூழல் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் அண்மைக் காலங்களில் வெளி வந்துள்ள சிறுகதைகள் குறித்த பேச்சு என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

சிறுகதையைப் படிக்கும்முன் அந்தச் சிறுகதையை எழுதிய படைப்பாளனைப் படிப்பது முக்கியம். ஏனென்றால், படைப்பு உருவாக்கத்தைப் பற்றிய முழுப் புரிதலையும் அறிந்துகொண்டபின் படைப்பு குறித்த தமது கருத்துக்களைக் கூறுவதே பொருத்தமாக அமையும். அந்த வகையில் சோ. தர்மன் என்னும் படைப்பாளி தன்னுடைய படைப்பு குறித்து:

-     என்னுடைய எழுத்துக்கள் எப்படி உருவாகின்றன?

-     வாசகன் என்னுடைய எழுத்தினை எப்படி புரிந்துகொள்ள வேண்டும்?

-     படைப்பாளன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?

-     என்னுடைய எழுத்து இந்தச் சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை/பாதிப்பை ஏற்படுத்துகிறது?

-     தன்னை எப்படி அடையாளப்படுத்திக் கொள்கிறார்?

     என்ற கேள்விகளுக்கு சோ.தர்மனின் பதில்களைத் தெரிந்து கொண்டு, அவரது படைப்புக்குள் பயணம் செய்யும்போது அதனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

-     ‘கலப்புல் களத்திலே என்றாலும் சாடை காட்டிலே’ என்பது சொலவடை. அதுபோல நான் எங்கேயிருந்தாலும் பேனா வைத் தொடும்போது என் மக்களும் அவர்கள் வாழும் கரிசல் மண்ணும் தான் கண் முன்னே நிற்கும் என்று ஈரம் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

-     ஆத்மாவின் எந்த அடி ஆழங்களிலிருந்து வெடித்துச் சிதறிக் கதறும் மனத்தின் எந்த விளிம்புகளிலிருந்து எதையும் கெக்கலித்து மறுதலிக்கும் எந்த பைத்ய நிலையிலிருந்து படைப்புகள் உருவாகின்றனவோ அந்த ஆழங்களிலிருந்து, விளிம்புகளிலிருந்து, அந்த பைத்ய நிலையிலிருந்துதான் படைப்புகள் அணுகப்பட வேண்டும் (2001:10).

-     ஒரு நல்ல எழுத்தாளன் வாசகனுக்குத் தன் இறக்கைகளைத் தந்து காடுகள், மலைகள், பாலைவனங்களில் அழைத்துச் செல்ல முடியும்.

-     ஒரு கதையைப் படிக்கும் வாசகன் அது பற்றிய பார்வையை யும் எதிர்கொள்கிறான். உள் வாங்கிக் கொள்கிறான். இந்த இரண்டும் சேர்ந்து ஒரு மூன்றாவது தளத்தை நோக்கிச் சிந்தனைகள், உணர்வுகளை உந்தித் தள்ளுவதே இலக்கியத் தின் பணி, தாக்கம், வீச்சு, பயன் எல்லாம். (2001:21-22)

-     தன்னுடைய படைப்பு, வாசகன், படைப்பின் விளைவு என்ற கருத்துக்களைக் கூறும் தர்மன் தன்னை எப்படி அடையாளப் படுத்திக் கொள்கிறார் என்பதும் முக்கியம். “என்னுடைய எழுத்துக்களை ஒரு சிலர் தலித் எழுத்துக்களாகச் சித்திரிக் கிறார்கள். நான் பிறப்பால் மட்டுமே தலித். எழுத்தால் அல்ல. இதுவரை தமிழ் இலக்கியத்தில் பதிவாகியுள்ள தலித் இலக்கியங்கள் என்று பறைசாற்றப்படுகின்ற எந்த எழுத்துமே என்னை ஆகர்ஷிக்கவில்லை. காரணம், நான் ஒரு தலித் என்பதாலும் தலித் சமூகம் மற்றும் அதன் கலாச்சாரத்தை உணர்ந்தவனாக இருப்பதும்கூட இருக்கலாம். தலித் கதை யாடலை, தலித்தின் தனித்தன்மையை, தலித் சமூகச் சித்திரங் களை கலாபூர்வமாகச் சித்திரித்து சிருஷ்டிக்கும் ஒரு உன்னத கலைஞன் இனிமேல்தான் உருவாக வேண்டும். (2001:24-25)

     மேற்கண்ட சோ.தர்மனின் கூற்றிலிருந்து அவரது கதைகள் குறித்து விவரிப்பதாக இக்கட்டுரையின் பின்வரும் பகுதி அமைகிறது.

     சோ.தர்மனின் கதைகளை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பகுத்துக்கொள்ளலாம். அவை:

-     தொழில் சார்ந்த செயல்பாடுகளை முதன்மைப்படுத்தும் கதைகள்

-     சமூகம் சார்ந்த செயல்பாடுகளை முதன்மைப்படுத்தும் கதைகள்

     மேற்கண்ட இரண்டு பிரிவுகளும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடையவை. முதலில் கூறப்பட்டவை ஒரு தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் (அ) சொந்தமான தொழில் செய்பவர்கள் அதற்குள் ஏற்படுகின்ற மன உளைச்சல் களை வெளிப்படுத்தும் தன்மை கொண்ட கதைகள். இரண்டாவது உள்ளவை சமூகத்தில் வாழும் அனைத்து வகைப்பட்ட மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்வதாக உள்ளது.

***

கோவில்பட்டிப் பகுதி சார்ந்து இயங்கும் தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழிற்சாலையில் வேலைசெய்யும் மக்களின் வாழ்வியலில் உள்ள தழும்புகளைப் பதிவு செய்கிறது. தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை செய்யும் மக்களின் வாழ்வில், அதில் எப்பொழுது வேலை கிடைக்கும், எந்தெந்த காரணங்களுக்கு வேலையில்லாமல் போகும், மற்ற வேலைகளுடன் ஒப்பிடும் போது தீப்பெட்டித் தொழில் வேலை எப்படியிருக்கும் என்பதைப் பதிவு செய்கிறது ‘ஈரம்’ என்னும் கதை. மேலும் அவர்கள் தங்களுடைய வறுமை நிலையினால் அடையும் கிண்டல் கேலிகள் எது என்பதை இக்கதைப் பதிவு செய்கிறது. இவ்வேலை எப்படிப்பட்டது என்பதை ‘என்ன பய வேல, சாவாஞ் செத்த பய வேல, செத்துப் பொழைக்கிற மாதிரி, செத்தமின்னுமில்லாம பொழச்சமினுமில்லாம’ என்ற கூற்றிலிருந்தும் புரிந்து கொள்ளலாம். (2010 ; 103)

இதே போல் தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்கள் நிலைபற்றி ‘தவம்’ என்ற கதைப் பதிவு செய்துள்ளது. இதில் பெண்களுக்குள் நடைபெறும் உரையாடல்கள், சண்டைகள் குறித்துப் பேசப்பட்டுள்ளன. இக்கதையில் குறிப்பாகக் குழந்தை பெற்ற தாய் மற்றும் குழந்தை படும் துயரங்களையும் அவலங்களை யும் பதிவு செய்துள்ளார்.

தீப்பெட்டித் தொழிலில் வேலை செய்யும் (ஆண்கள்,பெண்கள்) இவர்களின் திருமண வாழ்வு என்பது அடகு கடையில் நகை வைப்பதை போன்றது. இதனை ‘அடமானம்’ என்ற கதையில் வெளிப்படுத்தியுள்ளார். இதில் திருமணத்திற்குப் பரிசம் போடும் போது பின்பற்றும் சடங்குமுறைமைகளைத் தத்ரூபமாகப் பதிவு செய்துள்ளார். தொழிற்சாலையில் வேலை செய்யும் ஆண்கள் தன் முதலாளியிடம் திருமணம் குறித்துத் தெரிவிக்கும் போது, அந்த பொண்ணும் இங்கதான வேலைக்கு வரும் என்ற கேள்வியின் வக்கிரம் புரியாமலில்லை. தீப்பெட்டித் தொழிலில் வாழ்வைத் தொடங்கிய பெண்ணின் வாழ்வு, தான் வாழப்போகும் ஊரில் உள்ள தொழிற்சாலையில் வாழ்வைத் தொலைக்கும் தன்மையுடையதாய் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

பட்டாசுத் தொழிலில் வேலை செய்யும் இளம்பெண்கள், தான் பருவமடைந்ததுகூட தெரியாத தன்மையைப் பதிவு செய்துள்ளார். இதனோடு, கிராம வாழ்வில் பருவமடைந்த பெண்களுக்குச் சாதகம் எழுதும் முறையை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதாவது தொழில் சார்ந்த கஷ்டங்களையும் நம்பிக்கை சார்ந்த விழுமியங்களையும் ‘உதிரப் பூ’ என்ற கதையில் புனைவு செய்துள்ளார்.

பட்டாசுத் தொழிற்சாலையில் வெடி தயாரிக்கும்போது, அரசாங்க உத்தரவுகள் எந்த அளவுக்கு பின்பற்றப்படுகின்றன என்பதைக் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு பின்பற்றாமலும், பெரிய பெரிய ஆர்டர் எடுக்கும்போது ஏற்படும் விளைவுகளைப் பதிவு செய்வதாக ‘நசுக்கம்’ கதை அமைகின்றது.

மேற்கண்ட இரண்டு தொழில்களைப் போல் வேட்டைத் தொழில் செய்பவர்கள் வாழ்வியலை ‘இரவின் மரணம்’ பதிவு செய்துள்ளது. அதில் குறவர்கள் இரவு வேட்டைக்குச் செல்லும்போது ஏற்படும் சந்திப்புகள் மற்றும் சிக்கல்களைக் குறிப்பிட்டுள்ளார். இதனை ‘எல்லாத்துக்கும் ஒரு நாள் சாவு, வேட்டைக்காரனுக்கு நித்தமும் சாவு’ என்ற வரிகளிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

உழவுத் தொழில் மேற்கொள்பவர்களுக்கு மிகுந்த உளைச்சலைத் தரக்கூடிய விஷயம் கடனும், தண்ணீரும்தான். இவ்விரு பொருண் மைகளை அடிநாதமாகக் கொண்டு ‘விருவு’ மற்றும் ‘கழிவுகள்’ ஆகிய கதைகளைப் புனைந்துள்ளார். இதில் விருவு கதையில் கடன் தொல்லையோடு, உழவுத் தொழில் சார்ந்த நடைமுறை வாழ்வியலையும் பதிவு செய்துள்ளார். கழிவுகள் கதைகள் சாயத் தொழிற்சாலைக் கழிவுகள் விவசாயம் மேற்கொள்ளும் நீரில் கலப்பதனால் உற்பத்தி சார்ந்தும் வயலில் வாழும் பறவையினங்கள் சார்ந்த பாதிப்பையும் குறிப்பிட்டுள்ளார். இதில் இயற்கை விவசாயம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். மேலும் பரம்பரையாக உழவுத் தொழில் மேற்கொள்பவரோடு, புதிதாக அத்தொழிலில் ஈடுபட்டு முன்னேறி வருபவர்கள் படும் துயரினைப் பதிவு செய்வதாக ‘முளைக்கும்’ கதை அமைந்துள்ளது. இதில் மிளகாய்த் தொழில் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு மேற்கண்ட சூழலைப் புனைவாக்கியுள்ளார்.

அன்றாட வேலை செய்து உயிர் வாழ்ந்து வருபவர்களின் வாழ் வியலை அடிப்படையாகக் கொண்டு சில கதைகளைப் புனைந் துள்ளார். இதில் கால ஓட்டத்தில் எல்லாம் மாறக்கூடியன என்பதை மறந்து, முடிவெட்டும் தொழில் மேற்கொள்பவரிடம் மேல்நிலைச் சமுதாயமாகக் கருதிக்கொள்ளும் நபரின் செயல்பாட்டை ‘சிதைவுகள்’ கதையில் புனைந்துள்ளார். இதேபோல் தினந்தினம் பூ விற்று கிடைக்கும் வருமானத்தில் கணவனுக்கு ‘குடி’ப்பதற்கும், குழந்தைகள் வாழ்வதற்கும் போராடிக் கொண்டிருக்கும் பெண்ணின் சோகத்தை ‘மணம்’ என்னும் கதையில் குறிப்பிட்டுள்ளார். ‘தொக்கம்’ என்னும் கதையில் பனையேறிகளின் வாழ்வை பனைமரத்தில் கூடு கட்டியுள்ள செம்பிராந்தின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். ‘சோறு’ என்னும் கதையின் வாயிலாக ஆடு மேய்ப்பவர்களின் உரையாடலை மையமாகக் கொண்டு மேய்ச்சல் தொழிலின் தன்மைகளைப் பதிவு செய்துள்ளார்.

மேற்கண்ட தொழில்கள் சார்ந்த சோ.தர்மனின் புனைவின் வகைமைகளைப் புரிந்துகொள்ளலாம். ஒரு படைப்பாளன் தான் காணும் உலகில் தனக்கு ஏற்பட்ட தாக்கத்தின் மூலம் படைப்புகளை உருவாக்குகின்றான். பட்டாசு, தீப்பெட்டி, உழவு, முடித்திருத்தம், பூ விற்றல், வேட்டை ஆகிய தொழில் சார்ந்து தர்மனுக்கு ஏற்பட்ட பாதிப்புகளாகவோ அல்லது கீறல்களாகவோ மேற்கண்ட கதையைப் புரிந்து கொள்ளலாம்.

***

சோ.தர்மன் சமூகம் சார்ந்த அனைத்துப் பக்கங்களிலும் தனது பார்வையைச் செலுத்தியுள்ளார் என்றே தோன்றுகிறது. ஒரு தனி மனிதன், அவன் சார்ந்த குடும்பம், சமூகம், சமூகத்தில் நடைபெறும் நல்லது, கெட்டது, கெட்டது என்றால் அதை செய்த நபர் அவ்வாறு செய்ததற்குரிய காரணம் யார்? அவன் மட்டும் தானா? அல்லது இந்த சமூகமா? ஒரு சூழலில் தவறு செய்தவன் மீண்டும் திருந்தும்போது சமுதாயம் செய்யும் உபகாரம் என்ன? என்ற நோக்கிலும், பெண்கள் குறித்து சமுதாயத்தின் பார்வை என்ன? ஒரு பெண் தனக்கு ஏற்படும் சிக்கல்களை எப்படி எதிர்கொள்கிறார்? என்ற நோக்கிலும் சமூகம் சார்ந்த இவரது கதைகளைப் பொதுநிலைப்படுத்தலாம்.

சமூகத்தில் உறவுகளில் பிணக்கு ஏற்படுவது என்பது இயல்பு. அண்ணன் தங்கை உறவில் விரிசல் ஏற்பட்டு, ஒரு நல்ல நிகழ்வு நடைபெறும்போது இருவர் உள்ளத்திலும் ஏற்படும் மன ஊஞ்ச லாட்டத்தை அடிப்படையாகக் கொண்ட புனைவு ‘மனம் என்னும் ஊஞ்சலிலே’. வார்த்தை என்ற சொல்லை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அப்படி கணவன்-மனைவி என்ற குடும்ப வாழ்வில் ஒரு வார்த்தை ஏற்படுத்திய விரிசலும் மன உளைச் சலும், யார் பெரியவர் என்ற தன்முனைப்பையும் விவரிப்பதான கதை ‘வார்த்தைகள்’.

தொழில் சார்ந்த கதைகளில் பெண்கள் வாழ்வியலைப் பதிவு செய்தது போலவே சமூகம் சார்ந்தும் பதிவு செய்துள்ளார். பெண்கள் சாபம் விட்டால் பலிக்கும் என்பதை வற்புறுத்தும் தன்மை உடைய கதை சாபம்! ஒரு தொன்மத்தைப் பெண்ணுருவில் கட்டமைத்து, அதன்மூலம் ஐ.நா.சபையைக் கேள்விக்குட்படுத்தி கேலி செய்யும் தன்மையில் கதை அமைந்துள்ளது. “ஊழ்” என்பதனை வலிமை படுத்தும் தன்மையில் அமைந்த கதை “ஊழ்”. ஒரு பெண்ணைத் துன்பப்படுத்தி அவளால் பெறப்பட்ட சாபம் பலிக்கும் என்பதை மையமாகக் கொண்ட கதை. தினக்கூலி வேலைக்குச் செல்லும் பெண் படும் துயரங்களை ‘வாழையடி’ பதிவு செய்துள்ளது. கிராமத்தில் பக்கத்து பக்கத்து வீடுகளில் பொருட்கள் திருடுபோனால் இரு குடும்பத்துப் பெண்களும் போட்டுக் கொள்ளும் சண்டையை ‘சத்தியங்கள்’ என்னும் கதையில் பதிவு செய்துள்ளார். ‘அழுக்கு’ என்னும் கதையில் ஆதரவற்ற நிலையில் வாழும் பெண்ணைப் பற்றிப் பதிவு செய்துள்ளார். இக்கதை ஆதரவற்ற பெண்ணின் வாழ்வியலை நாசமாக்குபவர்கள் சமகாலத்திலேயே தண்டிக்கப் படுவர் என்பதை வலியுறுத்துகிறது. கணவனால் கைவிடப்பட்ட பெண்ணின் கூற்றாக, இந்தச் சமுதாயத்தில் கோவலனாக ஆண்கள் வாழும் வரை கண்ணகி சிலையாக இருக்க முடியாது என்பதை உணர்த்தும்விதமாக ‘சிலையற்ற கண்ணகி’ அமைந்துள்ளது. விதவைப் பெண்ணின் கேள்வியாக அமையும் கணவன் இறந்தால் கட்டுப்பாடுகள் எல்லாம் பெண்களுக்கு மட்டும்தானா? மனைவி இறந்தால் கட்டுப்பாடுகள் எல்லாம் கிடையாதா? என்பதை மையப்படுத்துவதாக ‘சிதறல்கள்’ கதை அமைந்துள்ளது. இந்தச் சமூகத்தில் கணவனை இழந்து அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை மோசமானதும் கடினமானதாக உள்ளது. ஒரு மரத்திற்கு இருக்கும் மனிதப்பண்பு இங்கு மனிதனுக்கு இல்லை என்பதை ‘வதை’ கதை உணர்த்துகிறது.

சமூக மதிப்பீட்டில் குழந்தைப்பேறு முக்கியத்துவம் பெறுகிறது. குழந்தைப் பேற்றை கொண்டு நடைபெறும் தொழிலை தான் சார்ந்த பகுதியில் உள்ள கோயிலை அடிப்படையாகக் கொண்டு ‘கோணல்கள்’ கதையில் எழுதியுள்ளார். ‘குருத்து’ என்னும் கதையில் ஒரு குழந்தையின் இறப்பை மையமாக வைத்து அவர்களின் நம்பிக்கை மற்றும் சாதிய இறுக்கத்தைப் பதிவு செய்துள்ளார்.

சாதாரண மனிதன் அரசு மருத்துவமனைக்குச் செல்லும்போது அங்கு ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் நடந்துகொள்ளும் விதத்தை கோடிட்டுக் காட்டும் ‘சிகிச்சை’ கதையில் திருடனாப் பாத்து திருந்த நினைச்சாலும் சமுதாயம் அவனைத் திருந்த விடாது. சிகிச்சை பெற வேண்டியது சமுதாயமே தவிர தனிப்பட்ட மனிதனல்ல என்பதை மையப்படுத்துகிறது. சட்டத்தின்மூலம் சரிசெய்ய முடியாது என்பதை ‘சட்ட வேலைகள்’ என்னும் கதையில் ஜெயிலில் மனிதர் களை அடைத்து வைக்கும்போது அடைபடுவது சட்டமே தவிர மனிதர்களுடைய உணர்வுகள் இல்லை என்பதை வலியுறுத்தும் கதை. ஒரு மனிதன் கோபத்தினால் செய்யும் தவறினால் ஏற்படும் தீங்கினை உணர்ந்து பழைய நிலையை அடையும்போது ஏற்படும் மனஉணர்வை ‘விட்டு விலகி’ பதிவு செய்கிறது. மனிதன் என்பவன் எந்த ஒன்றையும் எதிர்ப்பார்ப்போடு செய்யும் மனநிலை உடைய வன், ஆனால், மரங்கள் எந்த எதிர்பார்ப்புமின்றி மனிதனுக்கு உதவுகிறது என்பதை உணர்த்துவதாக ‘அவஸ்தை’ உள்ளது. ஒருவன் தன் வாழ்வில் செய்யும் எல்லா நல்ல காரியங்களும் அவனுக்குத் தீங்காக அமையும் என்பதை வலுப்படுத்தும் விதமாக ‘மிதவை’ அமைந் துள்ளது. சமுதாயத்தில் ஆண் என்பவன் தான் நினைத்ததை அடைய எந்த ஒன்றையும் செய்வான் என்பதை ‘அழுத்தம்’ கதையின் மூலம் பதிவு செய்துள்ளார். சாராயம் விற்று வாழ்பவன் திருந்தி வாழ நினைக்கும்போது சமுதாயமும் அதிகாரமும் அவனைத் திருந்த விடாமல் தடுப்பதை ‘தழும்பு’ கதை சுட்டுகிறது. எந்த ஒரு தவறுக் கும் விசாரணை என்பதை தவறு செய்தவன் நிலையிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதை ‘நாசி’ கதை உணர்த்துகிறது. அதிகாரத்திற்கு பயந்து அதிகாரி தனது செயலைத் தவறாக செய்த அதிகார துஷ்பிரயோகத்தை ‘நீர்ப்பழி’ சுட்டுகிறது. மன்னனாக இருந்தாலும் தன் அதிகாரத்தால் தான் செய்த தவறை மறைக்க முடியாது என்பதை ‘பார்த்துக் கொண்டிருக்கும் பிரபஞ்சம்’ என்னும் கதைப் பதிவு செய்கிறது.

சமுதாயத்தில் கலவரங்கள் ஏதேனும் ஒரு வடிவத்தில் தோன்றும். இவரது கதைகளில் கலவரம் குறித்து சில பதிவுகள் இடம்பெற் றுள்ளன. தமிழக மற்றும் இந்திய அரசியலில் சிலைகள் முக்கிய இடத்தினைப் பெறுகின்றன. சிலை உருவத்தினை அடிப்படையாகக் கொண்டு தோன்றும் கலவரத்தினை ‘குரளி வித்தைக்காரன்’ கதை கூறுகிறது. ‘இறுக்கம்’ என்னும் கதை சாதி சண்டைகளால் ஏற்படும் கலவரங்களை மையமிட்டது. கலவரங்கள் நிகழும் சூழலில் நிலவும் இறுக்கமான மன உணர்வுகளை இக்கதைப் பதிவு செய்கிறது. கொடிகளின் நிறத்தால் உண்டாகும் கலவரத்தை மையமிட்டது ‘கொடிகளின் நிறம்’ கதை.

ஒவ்வொருவர் வாழ்விலும் சில சுவடுகள் படிந்திருக்கும். சோ.தர்மனது மனதில் படிந்துள்ள சுவடுகளுள் சிலவற்றைப் புனைவாக்கியுள்ளார். ‘இருந்தது’ என்னும் புனைவில் இறந்துபோன பாட்டியின் நிழற்படத்தைக் கொண்டு, தான் வாழ்ந்த இளமைக்கால வாழ்வை நினைவுகூறும் கதை. ஒரு ஊரில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்த சண்முகசுந்தரத்தின் வாழ்வை அவரது பணியோடும் அவ்வூர் மக்களோடும் ஒப்பிடும் ‘சார் போஸ்ட்’. ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு முகம் உண்டு. அதில் படைத்தளபதியாக பணியாற்றிய ஒருவரின் வரலாற்றையும் அவரது டைரியையும் இணைக்கும் பாலமாக ‘அன்பின் சிப்பி’ அமைந்துள்ளது.

அன்றாட நடைமுறை வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளைக் கொண்டும் தனது புனைவினைச் சாத்தியப்படுத்தியுள்ளார். வேலை யில்லாமல் ஊரில் சுற்றித் திரியும் கும்பல் உண்டாக்கும் வம்புச் சண்டைக்கு, எதையும் அறியாத அதற்குச் சம்பந்தமில்லாத அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை ‘அப்பாவிகள்’ கதை சுட்டுகிறது. ‘ஒச்சம்’ என்னும் கதை கண் பார்வையற்றோர் படும் துயரங்களை மட்டும் கூறாமல் பார்வையுடையோர் கண் தானம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. ‘சோக வனம்’ கதை மற்ற கதைகளோடு ஒப்பிடும்போது மிக அடர்த்தியான உவமைகளைக் கொண்ட கதை. காடுகளை அழிப்பதினால் ஏற்படும் பாதிப்பை மையமாகக் கொண்டது.

இன்றையச் சூழலில் சாமியார்கள் எப்படி அரசியல்வாதிகளாகச் செயல்படுகின்றனர் என்பதை ‘நடப்பு’ கதையின்வழி அறிய முடிகின்றது. வேலை கிடைக்கும் வரை கஷ்டப்படுவதும் வேலை கிடைத்தவுடன் ஏமாற்றுவதும் என்ற கொள்கையில் செயல்படு பவரை ‘விசாரம்’ கதை பதிவு செய்கிறது. ஒரு நாள் வேலை கிடைப் பதற்கு வழியில்லாமல் கிடைத்த ஒரு நாள் வேலையில் ஏற்பட்ட உணர்வுகளை ‘கழுகுகள்’ பதிவு செய்கிறது. வனகுமாரன் கதையில் எல்லாவற்றையும் வெல்லக்கூடிய ஒன்றாக காமத்தினைக் குறிப்பிட் டுள்ளார். இந்த உலகத்தில் யாரும் யாரையும் நம்புவதற்கில்லை. இதனைப் பாலியல் வன்மத்துக்குள் ஒரு நம்பிக்கைத் துரோகத்தையும் இணைத்து ‘வலைகள்’ என்னும் கதையில் புனைந்துள்ளார். உணர்வு சார்ந்த உண்மையான மனிதன் என்பவன் எப்படி இருப்பான் என்பதை ‘மனுஷம்’ கதை உணர்த்துகிறது. மனிதன், மதம் இவற் றோடு சமூகம் கொண்டுள்ள உறவினை ‘ம(னி)தம்(?)’ கதைப் பேசுகிறது.

வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுடன் மனிதன் கொண்ட வாழ்வு எத்தகையது என்பதை (அ)ஹிம்சை கதைக் கூறுகிறது. மக்களின் அடையாளம் சார்ந்த கலைகள், சினிமா தாக்கத்தினால் அடைந்த மாற்றங்களை ‘நிழல்பாவைகள்’ பதிவு செய்கிறது. இந்த உலகத்தில் உண்டாக்கப்பட்டவை அனைத்தும் கடவுளால் உண்டாக் கப்பட்டவை என்பதை எனக்கான சாமி மூலம் வலுப்படுத்துகிறார். பழமையை முதன்மைப்படுத்தும் நோக்கில் நவீன மருத்துவ முறைமைகளைவிட பழைய மற்றும் நம்பிக்கை சார்ந்த மருத்து வத்தை முக்கியத்துவம் நோக்கில் ‘மருந்து’ கதை அமைகின்றது. வெட்ட வெளியில் விளிம்புநிலை வாழ்வை மேற்கொள்ளும் மனிதர்களைப் பற்றியது ‘மைதானம்’. இதில் ‘குடி’ அவர்களுக்கு எத்தகைய பாதிப்பினை உண்டாக்குகிறது என்பதை இக்கதைப் பதிவு செய்கிறது.

‘தற்காத்து’ என்ற கதை தற்காப்பு கலை பயிற்றுவிப்பது தொடர் பாகவும், அதை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை முன்னிறுத்துகிறது. ‘வம்சம்’ புதிய ஆகாயங்கள் உருவாவது தொடர்பான கதை. ‘சிருஷ்டி’ என்பது கிறித்தவ மத போதனைகளும், கூடை முடைபவனின் வாழ்வையும் ஒப்பிட்டு, விசாரணை செய்யும் நோக்கில் அமைந்த கதை.

சிறுகதைத் தொகுப்புகள்

சோ.தர்மன் கதைகள், மருதா, 2001

ஈரம், சிந்து பதிப்பக அறக்கட்டளை, சென்னை, 1994

சோகவனம், சாருலதா பதிப்பகம், சென்னை, 1999

சோ.தர்மன் கதைகள், சிபிச்செல்வன் (தொகுப்பு), சந்தியா பதிப்பகம், சென்னை, 2010

(கட்டுரையாளர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர்.“சைவ சமயம் - தமிழ் அச்சுப் பண்பாடு ஆகியவற்றின் உறவு” குறித்து ஆய்வு செய்து வருகிறார்.)