வாழ்க்கையின் எதார்த்தங்களைப் புரட்டிப் போட்டு அதன் மீது தனது அதிகாரத்தைத் திணிக்க முற்படும் மனிதனின் சுயமானது எப்பொழுதும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டுச் செயல்படுவதில்லை. வெறுமையான சூழல்கள் முழுதிலும், தான் கட்டமைத்துக் கொண்ட நிலைகளில் தவறாமல் இயங்குவதும் தவிர்க்க இயலாததாக ஆகிவிடுகின்றது. அனுபவம், மனச் சிக்கல், ஆழ் மனம் பற்றிய விமர்சனம் எனப் பல தளங்களில் மனிதனின் ‘தான்’ பற்றிய மதிப்பீடு அடைபட்டுக் கொள்கிறது. இயங்குதலும் எதிர்த் தன்மையும் மனதை மையமிட்ட ஒன்றாக இருக்கின்றது. மனம் என்ற தனிப்பொருளின் ஆதிக்கத்தில் இவை இரண்டும் தொழில் புரிகின்றன. இந்த ஆதிக்கம் காமம் என்கிற ஒற்றைப் புள்ளியில் பல நேரங்களில் முகாமிட்டு உள்ளது. முருகனின் கதைகளில் இது பிரதான இடத்தைப் பெற்றிருப்பது அவரைப் பற்றியும் அவரது எழுத்து பற்றியுமான பல விஷயங்களை முன்னிலைப்படுத்துகிறது.

கதைகளும் அது சார்ந்த கட்டமைப்புகளும் எப்பொழுதும் வாழ்வின் ஆதாரங்களில் இருந்து தோன்றுபவை. எதார்த்தத்தில் விடுபட்ட, தனது மனதில் அழுந்திக் கிடந்த இருட்டறைகளைக் கதாசிரியர் பலர், கதையைச் சாவியாய்க் கொண்டு திறக்க முயல்கின்றனர். இவரும் இம்முயற்சியைக் கைக்கொண்டு அதில் சிறிதளவு வெற்றியும் பெற்றுள்ளார். தனது அன்றாட நிகழ்வுகளில் கலந்து இருக்கின்ற ஆழ்மனப் பூட்டுக்களை ஒருவாறு திறக்க முயன்றுள்ளார் ஆசிரியர்.

கட்டுப்பாடுகளாலும் மீறலுக்கான தண்டனைகளாலும் கூர்மழுங்கிப்போன இச்சமுதாயத்தில் மனதில் அடக்கி வைக்கப்படுகின்ற நிறைவேறாத ஆசைகளை, குறிப்பாக இச்சையை மையமிட்டுப் புனைகதைகள் பல புனைந்துள்ளார். இதை வாசகர் விரும்புவர் என்ற கணிப்பும் அவரிடம் இருந்துள்ளது. அல்லது குறிப்பிட்ட வாசகர் வட்டத்தை மையமிட்ட எழுத்தாகவும் இதைக் கொள்ளலாம்.

அடக்கி வைக்கப்படும் இச்சை, சூழ்நிலை காரணிகளால் பொங்குவதை வெளிப்படுத்தும் வெம்மை, இழப்புகளால் புத்தி தட்டிக் கனவுகளின் வழித் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் ஆற்றோடு போனவன், மனிதனின் மிகை எதிர்பார்ப்பு மற்றும் விசுவாசத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் விசுவாசி, எழுத்தாளனின் இருப்பு பற்றிய விவாதமாகவும் வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இருக்கின்ற உறவு பற்றியுமான சிம்மாசனம், இளவரசி மற்றும் மரணம், நிகழ்வெதிர்வு கற்பனையை வெளிப்படுத்தும் குரங்குகளின் வருகை, உடல்சார் தேவையைக் கட்டுப்பாடு காரணமாகப் பார்வையில் அனுபவிக்கும் ஊஞ்சல், முழுமையான கனவு நிலையில் நிகழும் மனப்போராட்டமாக இரண்டாவது மரணம், பெண் இச்சையானது தீர்க்கப்படாத தகிப்பாக வெளிப்படும் மாயக்கிளிகள் என்று இவரது கதைகள் அனைத்தும் மனம், அதன் விருப்பு - வெறுப்பு சார்ந்த புனைவுகளாக இருக்கின்றன.

பெண் மனம், இச்சை ஆகியன இவரது கதைகளின் மையமாகச் சித்திரிக்கப் பெற்றுள்ளன. மாயக்கிளிகள், ஊஞ்சல், காண்டாமிருகம் முதலான இவரது கதைகள் பெண், பெண்ணுடல், அதன் அந்தரங்கம் என அனைத்தும் சுதந்திரமாகத் தன் இஷ்டப்படி இருக்கும் தன்மையைப் பேசுகிறது. எந்த ஒரு இடத்திலும் ஆண் குறியின் அதிகாரம், அதன் மேலாதிக்கம் முதலானவை பேசப்படவில்லை. உடலிச்சைசார் புனைவுகள் எழுதும் பலர் ஆண் மையச் சூழல்களையும் அதன் பிரதிபலிப்பாக அமையும் பெண் மனம்சார் போராட்டங்களையும் தவறவிடுகின்றனர். ஆண் குறி உருவாக்கும் பெண்ணுடல் கொள்கைகள் இவரது கதைகளில் பிரதிபலிக்கின்றன. காண்டாமிருகம் கதையில் காண்டாமிருகம் என்னும் புனைவு பெண்ணுடலை மையப்படுத்தியதாக, அது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடம் உணர்த்துகின்றது. ‘காண்டாமிருகம் அண்ணியின் உள்ளாடைகளுக்குள் ஒளித்துவைக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்கிற வாசகம் காண்டாமிருகம் இருக்கும் இடம், அண்ணிக்கும் கதைச் சொல்லிக்குமான உறவு முதலானவற்றை வெளிப்படுத்துகிறது. இது பெண்ணுடல், அதை மறைமுகமாக அனுபவிக்கும் ஆண் மனம் எனும் நிலையில் பெண்ணை உடல்சார் கூறாக மட்டும் கதாசிரியர் பார்த்திருக்கிறார் என்று எண்ணுவதற்கு இடம் தருகின்றது.

வாசகன் குறித்த வெகு கறாரான கதையாகச் சிம்மாசனம், இளவரசி மற்றும் மரணம் என்கிற கதை புனையப்பட்டுள்ளது. ‘வாசிப்பும் ஒரு பழக்கமாகிவிட்டது; புகைப்பதைப் போல. எழுத்துக்களிலும் ஒன்றுமில்லை. எழுத்தாளர்களெல்லாம் சில்லறை வித்தை காண்பிக்கும் தந்திரக்காரர்களாக மாறிவிட்டார்கள்’ என்று தனது ஆதங்கத்தைப் பதிவாக்குகிறார். ‘நீ முட்டாள் வாசகன்’ என்று வாசகன் பற்றிய தனது விமர்சனத்தை முன்வைக்கிறார். எழுத்து, வாசகனை நோக்கி மட்டும் எழுதப்படுவது அல்ல. அது ஆத்மார்த்த மலர்ச்சியில் உருவாகும் ஆல மரம். பல விழுதுகளைப் பரப்பித் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்வது அதன் இயல்பு. வாசகனை எதிர்நோக்கிய கலைப் படைப்பு எப்பொழுதும் முழுமையை நோக்கியதாக இருந்ததில்லை. அதிர்ஷ்டமற்ற பயணியும் வாசகன் குறித்தான பதிவாக இருக்கின்றது. வாசகன் இவ்வாறுதான் இருக்க வேண்டும்; அவன் இப்படிப்பட்ட தகுதி பெற்றிருக்க வேண்டும்; அப்பொழுதுதான் அவன் வாசகன் என்று பிதற்றுகிற மனநிலையை இது காட்சிப்படுத்துகிறது.

இவரது கதைகள் பல, நிஜ வாழ்க்கையில் கண்ட/பெற்ற அனுபவங்களின் பதிவுகளாக இருப்பதை உணர முடிகின்றது. குரங்குகளின் வருகை, அதிர்ஷ்டமற்ற பயணி, விருந்தோம்பல், மான், வேலைக்கான விண்ணப்பம் முதலானவற்றை இதில் பட்டியலிடலாம். தனது உள்ளார்த்தமான விஷயங்களை மறைத்துத் தன்னுள் அனுபவிக்கிற ஏகாந்தத்தை விரும்பாது அதனை வெளிப்படுத்தி இயல்பான தன்மையைப் பெறுவது இவரது கதைகளில் தொனிக்கிறது. வக்கிரங்களைத் தன் ஆழ் மனத்துள் மறைத்து வைத்துத் தன்னை மென்மையானவனாக வெளிப்படுத்தும் நடிப்பில் தொடங்கி இறுதிவரை மறைவை விரும்புபவனாக இருப்பதால் வாழ்வின் அடர்த்தியான மையப்பகுதி கிழிசல்களாக மாற்றம் பெறுகின்றது. இதனை இவரது கதைகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இயல்பான நடையும் விருவிருப்பும் இவரது கதைகளின் அச்சாணியாக இருக்கின்றது. ‘எழுத்து வேஷமல்ல, அது வாழ்க்கை’ என்கிற இவரது கொள்கை கதையின் மையத்தை ஆழப்படுத்துகிறது. வாழ்க்கையின் எதார்த்தங்களை எளிமையாக உணர வைப்பதாகக் கதைகள் பின்னப்பட்டுள்ளன.

சிறுகதைத் தொகுதிகள்

சாயும் காலம், தாமரைச் செல்வி பதிப்பகம், 2000.

கறுப்பு நாய்க்குட்டி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், டிசம்பர் 2002.

சாம்பல்நிற தேவதை, உயிர்மை பதிப்பகம், சென்னை , டிசம்பர் 2005.

காண்டாமிருகம் (தொகுப்பு), ஆதி, திருவண்ணாமலை, டிசம்பர் 2010.

(கட்டுரையாளர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர். “சங்க இலக்கிய பாட வேறுபாடு” குறித்து ஆய்வு செய்து வருகிறார்.)