இருளின் அடர்வும் அத்தரின் மணமும் நாவலின் கதைக்களத்தை நகர்த்திச் செல்கிறது. கடலின் அலை, மலையின் வளம், ஆங்கிலேயரின் வருகை மற்றும் ஆக்கிரமிப்பு, இலண்டன் நகரின் வாழ்முறை, மதராசபட்டிண உருவாக்கம் பற்றிய செய்திகள் நாவலுக்குப் பின்புலமாகவும் பக்கபலமாகவும் உள்ளன. மேற்குறிப்பிட்டவை நாவலின் நகர்வுக்கான களங்கள்.

நாவலின் போக்கானது நான்கு கதைகளைப் பின்னிப் பிணைத்து இயக்குகிறது. குறிப்பாக நான்கு கதைகளிலும் இடம்பெறுகின்ற பெண் பாத் திரங்கள் புதினத்துக்கு முக்கியப்பங்கு வகிக்கின்றன. பெண் பாத்திரங்கள் ஆண் பாத்திரங்களுடன் கொண்ட உறவு தனித்துச் சுட்டும் தன்மை யுடையது. கதைக்குள் இப்பெண் பாத்திரங்கள் முக்கியச் செயல்பாட்டினை நிகழ்த்தியுள்ளன. வணிக வியாபாரியுடன் குடும்பம் நடத்தும் பெண்கள், துறவியுடன் வாழ நினைக்கும் பெண், தம்பி மனைவிக்கும் அண்ணனுக்கும் இடையே உள்ள உறவு, திருமணமாகாதவர் விபசாரத் தொழில் நடத்திவந்த பெண்ணுடன் தொடர்பு என இந்நாவலில் வந்துள்ள பெண் பாத்திரங்கள் அனைத்தும் தன்னளவில் தனித்த அடையாளத்தைக் கொண்டுள்ளன.

நாவலானது ஐம்பத்திரண்டு அத்தியாயங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. நான்கு வகையான கதைப்போக்குகளில் ஒவ்வொரு கதையின் வளர்ச்சி நிலையானது பல கிளைக்கதைகளை ஒட்டிக் கொண்டு தனக்கான பாதையில் கடந்து செல்கின்றன. அத்தகைய கிளைக்கதைகளில் வரும் பாத்திரங்கள் நாவலின் முக்கிய அங்கங்களாகச் செயல்படுகின்றன. ஒவ்வொரு கதையும் பின்னோக்கு உத்தியைக்கொண்டு வளர்கிறது. மேலும் இக்கதைகள் தனது கதாபாத்திரங்களுக்கான அழுத்தத்தை/அடர்த்தியை இருள் (யாமம்), அத்தரின் ஊடே வெளிப்படுத்துகின்றன.

நாவலாசிரியரின் புனைவுத்தன்மை மலையின் வளம், கடலின் ஆழம் மற்றும் அகலம், மதராசபட்டிணத்தின் சூழலமைவு, இலண்டன் நகர்வாழ் மக்களுக்கிடையேயான இருமைத்தன்மை, நாவலோடு செல்கின்ற பயணங்கள் ஆகியவற்றைக் கண்முன் நிறுத்துகிறது. வாழ்வின் நிலையாமைத் தன்மையை அழுத்தத்துடன் கூறுவதாகவும் உள்ளது. ஒரு சில இடங்களில் ஒரே முறைமையைப் பின்பற்றிக் கதை நகர்த்தலை நிகழ்த்தும்போது வாசகனுக்குச் சற்றுத் தொய்வினை ஏற்படுத்துகிறது. நாவலாசிரியரின் புனைவு மற்றும் புனைவுமொழி வாசகனோடு நாவலைப் பயணிக்கச் செய்கிறது.