- தமிழக சுதேசி இயக்கச் சொற்பொழிவாளர்கள் குறித்த குறிப்புகள்

சுதேசியத்தைப் பொருத்தவரை, பொதுவாகவே இவ்விடம் சற்று மந்தமானது என்று நான் நினைக்கிறேன்... கோவிலின் முன்னும், புதுமண்டபம் மற்றும் பஜாரிலும் நாலைந்து மாதங்களுக்கு முன் ஓரிரு சொற்பொழிவுகள் நடந்தன. ஆனால் இவைகளைக் கேட்க வந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. கடந்த ஏப்ரல் மாதத்தில் கோவிலின் முன் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு வேளாளப் பெண் சொற்பொழிவாற்றியதாகச் சொல்லப் படுகிறது.

சென்னை ஆவணக் காப்பகத்திலிருந்து இப்பகுதியைக் கண்டெடுத்துக் கொடுத்தவர் பெர்னார்ட் பேட்.

புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் ஒருவரின் மதுரைப் பற்றிய, 9 நவம்பர் 1908 தேதியிட்ட, அறிக்கையின் நகல், நவம்பர் 1908-டிசம்பர் 1908, தொகுதி 4, தமிழ்நாடு ஆவணக் காப்பகம்.

இக்காலகட்டத்தில் அளிக்கப்பட்ட பல அறிக்கைகளில் சுதேசி இயக்கத்தின் பால் வெளிப்படும் ஏளனத்திற்கு இவ்வறிக்கை ஒரு எடுத்துக்காட்டாகும். சுதேசிகளை அவர்களின் வெற்றிகளுக்கும் - தோல்விகளுக்கும் பிரிட்டிஷ் காவல்துறையும் அரசாங்கமும் இகழ்ந்தன. இன்ஸ்பெக்டர் பின்வருமாறு எழுதுகிறார்.

மதுரையின் வக்கீல்களால் அதிகாரிகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் ‘மாவட்ட ஆட்சியாளரையும் நீதிபதியையும் மகிழ்வித்து மேலும் வழக்குகளைப் பெறுவது ஒன்றே அவர்களின் குறிக்கோளாக உள்ளது’. சுதேசிகளின் கோட்பாடுகளுக்குப் பொருளாதார ஆதரவு கொடுத்தது மிகச் சிலரே என்பதை இருந்த நாலைந்து சுதேசிக் கடைகள் எடுத்துக்காட்டின. அச்சுதேசிக் கடைகளும் சில நூறு ரூபாய்கள் முதலீட்டில் இயங்கும்போது அவை கேலிக்குரியனவே தவிர பிரிட்டிஷ் வணிகத்திற்கு போட்டியாக இருக்கவே முடியாது. மேலும் மதுரையில் சுதேசியத்தின் ‘மந்தத் தன்மைக்கு’ சொற்பொழிவாளர்களின் தகுதியை விட வேறு சான்று வேண்டுமா என்ன? ஒரு பெண் கடந்த ஏப்ரலில் சொற்பொழி வாற்றியுள்ளார்.

சுதேசி இயக்கத்தின் சொற்பொழிவாளர்கள் மிகச் சாதாரண நிலையில் இருந்தது கேலிக்கு இலக்காக இருந்தது. பெரும்பாலும் காங்கிரசுடனோ, அரசாங்கத்துடனோ எந்தத் தொடர்பும் இல்லாத, எந்த கௌரவப்பட்டங்களும் பெறாத இளம் வாலிபர்கள், மாணவர்கள், மாணவப் பருவத்தினர் போன்ற வர்களே இயக்கத்தினராக இருந்தனர். அதிகாரப்பூர்வமான இந்தியாவையும் இந்தியச் சமூகத்தையும் பொருத்தவரை இவர்கள் அரசியல் தெரியாத, யாரை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும், யாருடன் பேசவேண்டும் என்பதெல்லாம் புரியாத நேற்று முளைத்தக் காளான்கள். இவர்களுடைய கூட்டங்களில் மிக இள வயதினரே கலந்து கொண்டார்கள். பாரதியின் மெரினா கடற்கரைக் கூட்டங்களில் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆந்திர டெல்டா கிராமங்களில் கிருஷ்ணா மாவட்டச் சங்கத்தினர் ஏற்பாடு செய்த இளம் சுதேசி சொற்பொழிவாளர்களின் கூட்டங்களிலும் மதுரை போன்ற சிறு நகரங்களின் பஜார் கூட்டங்களிலும் “கூலிகள் மற்றும் சுமைத்தொழிலாளர்கள் விவசாயிகளுமே’’ கலந்து கொண்டனர்.

அவர்கள் சொற்பொழிவாற்றிய இடங்களும் அவர்களுடைய தாழ்ந்த அந்தஸ்த்தை குறித்தன. மேட்டிமை மிக்கவர்கள், செறிந்த ஆங்கிலத்தில் மதறாசில் பச்சையப்பா ஹால் மற்றும் விக்டோரியா பப்ளிக் ஹால், மதுரையில் விக்டோரியா எட்வர்ட் ஹால் போன்ற கூடங்களில் உரையாற்றினர். ஆனால் சுதேசிகளோ பஜாரில் படிப்பறிவில்லாத காய்கறி வியாபாரி களிடமும் கூலித் தொழிலாளர்களிடமும் உரையாற்றினார்கள். மதுரையைப் பொருத்தவரை இப்பொழுது மீனாட்சி பூங்காவாக இருக்கும் ஆண்டிக்கடைப் பொட்டல் எனும் இடத்தில் உரையாற்றினார்கள். ‘கோவில் முன்’ என்று குறிப்பிடப்படுவது, கீழ வீதியில் புது மண்டபத்திற்கும் (1906 வரை நகரச் சிறையாக இருந்த) சென்ட்ரல் மார்கெட்டுக்கும் இடையில் உள்ள இடம் ஆகும். மதுரை ஜில்லாத் தியாகிகள் மலர் (1948) அறிக்கையின் படி சுதேசியக் கப்பல் கம்பெனிக்காக நிதி வசூலிக்க 1906இல் வ.உ.சிதம்பரம் பிள்ளை இந்த இடத்திற்குத் தான் வந்தார்.  

கூடம் என்பது சமூகரீதியாகக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட இடம். ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் கூடி, தினசரி முக்கியச் செய்திகளை ஆங்கிலத்தில் அலசும் இடம். ஆனால் பஜார் என்பது பலதரப்பட்ட மக்கள் கூடும் இடமாக, அவர்களிடையே கருத்தாடல் மற்றும் வணிகத்துக்கான வெளியாக இருந்தது. காலனிய இந்தியாவில் பொது வெளிக்கு நிகரான இடமாக பஜார்கள் இருந்தன. அதாவது, பாரபட்சமில்லாத எல்லோருக் கும் பொதுவான வெளியாக (சிலர் இவ்வெளியிலிருந்தும் ஒதுக்கப்பட்டிருந்தாலும்) இவை இருந்தன. இவைகளே வட்டார மொழிகளின் முதல் வெளியாக இருந்தன. ஆரம்பத்தில் கிருத்துவ ப்ராடஸ்டெண்ட் போதனைகள் மூலமும் பின்னர் அரசியல் உரைகள் மூலமும் உரைமரபு உருவானது. இந்த ‘பொதுத் தன்மை’ இப்படிப்பட்ட வெளிகளின் தாழ்ந்த நிலையை குறித்தது. இங்கு உரையாற்றுபவர்களின் தாழ்ந்த அந்தஸ்தையும் குறித்தது.

ஆயினும் அதிகாரிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிக்கையில் குறிப்பிட்ட தாழ்ந்த அந்தஸ்துக்கான அடையாளங்களில் கவனத்தை மிகவும் ஈர்ப்பது அவ்வேளாளப் பெண்ணே. அவள் யார் என்று நமக்குத் தெரியாது. அவள் பெயரும் தெரியாது. எங்கிருந்து வந்தாள் என்று தெரியாது. என்ன சொன்னாள் என்றும் தெரியாது. ஆனால் நமக்கு என்ன தெரிகிறது என்றால் முதல் முறையாக ஒரு அரசாங்க அறிக்கை-ஒரு பெண்-அது எந்தப் பெண்ணாக இருந்தாலும் - ஒரு அரசியல் கூட்டத்தில் உரையாற்றியதைக் குறிப்பிடுகிறது. மதுரையில் சுதேசி இயக்கம் எவ்வளவு மந்தமாக இருந்தது என்பதைக் குறிப்பதற்காகவே இன்ஸ்பெக்டர் அப்பெண்ணைப் பற்றிய செய்தியை அறிக்கை யில் சேர்த்தார் என்பதற்கான சாட்சியாகவும் அவ்வறிக்கை விளங்குகிறது.

இது எப்படி நடைபெறுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள, நாம் ஓர் ஆவணம் எப்படி உருவாக்கப்படுகிறது, அது எதை யெல்லாம் உள்ளடக்கியது, சரித்திரம் எப்படி எழுதப்படுகிறது -அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இப்பொழுது மிகத் தீவிரமாக ஆராய்ச்சிப்பணி மேற்கொண்டிருக்கும் மாணவர் களால் எப்படி எழுதப்படுகிறது போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும். 1960-70 காலகட்டத்தில் அரசாங்க அறிக்கைகளிலிருந்து ஆயிரக்கணக்கான பகுதிகள் தமிழக சுதந்திர இயக்கத்தின் வரலாறு (History of Freedom Movement) என்ற தலைப்பில் 106 தொகுதிகள் கொண்ட தட்டச்சுப் பிரதிகளாக தொகுக்கப்பட்டன. பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டு அரசியலைக் குறித்து புதிய ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்கள் மேற்குறித்த தொகுதிகளைக் கொண்டு தான் தம் பணியைத் தொடங்குகிறார்கள். அத்தொகுதியின் மிக உபயோகமான ஒரு ஆவணமாக இருப்பதன் காரணம், அது அரசாங்க ஆவணக்காப்பகத்தின் முக்கிய ஆவணங்களான, அரசாங்க ஆணைகளின் சிறு பகுதிகளைக் கொண்டிருப்பது. மேலும் ஏதாவது ஒரு தொகுதியைப் படித்தாலே அக்கால கட்டத்தின் நிகழ்வுகளை தலைமைச் செயலக அதிகாரிகள் எப்படிப் பார்த்தார்கள் என்று புரிந்துகொள்ளலாம். தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் என்னுடைய பத்து மாதங்களுக்கும் மேலான அனுபவத்தில் செய்தித்தாள்களில் வெளியானவை குறித்த அறிக்கை, பதினைந்து நாள் அறிக்கை, மற்றும் செயலாளர் இரகசியக்கோப்புகள் ஆகியவற்றோடு மிக அதிகமாக உபயோகப்படுத்தப்பட்ட ஆவணமாக இதுவும் இருந்தது. இவ்வாவணங்களைக் கொண்டே இன்று சரித்திரம் எழுதப்படுகிறது.

இக்காலகட்டத்தின் குறிப்பிட்ட அரசாங்க ஆணைகளைப் பார்க்கும்போது சில ஆவணங்களின் ஓரங்களில் மேலிருந்து கீழாக பென்சில் கோட்டுடன் ‘டைப்’ என்ற வார்த்தை எழுதப்பட்டிருக்கும். ஆவணவியலாளர் அவர் பெரும்பாலும் ஆணாகவே இருந்திருக்கக் கூடும் - அரசாங்க ஆணைகளைப் படித்து எவையெல்லாம் மேற்குறித்த தொகுதிகளுக்கு தேர்ந் தெடுக்கப்பட்டவை என தட்டச்சாளருக்கு தெரிவிப்பதற்காக இக்குறிகளை இட்டிருக்க வேண்டும். இப்பென்சில் குறிகள் அரைப் பக்க நீளத்திற்கு இடப்பட்டு, பின் நிறுத்தப்பட்டு, அடுத்தப் பக்கத்திலோ, ஓரிரு பக்கங்கள் தள்ளியோ தொடர் கின்றன. எல்லாமே ஆவணவியலாளர் எதை சரித்திர முக்கியத் துவம் வாய்ந்ததாகக் கருதுகிறார் என்பதைப் பொருத்தது.

மேலே குறிப்பிட்ட வேளாளப் பெண்ணைப் பற்றிய ஆவணத்தை பொருத்தவரை, கண்காணிப்பாளரின் முழு அறிக்கையைக் காணவில்லை; ஆவணவியலாளர் பார்த்தது செயலக அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட கண்காணிப்பாளர் அறிக்கையின் முன்நகலே. அலுவலக ரீதியாக அனுப்பப்பட்ட அறிக்கை அல்ல. புலனாய்வுத்துறை அறிக்கை கட்டுகளில் இவ்வறிக்கை காணப்பட்டது. 1970க்கு முன் இதுபோன்ற கட்டுரை சுமார் நாற்பது வருட ஆவணங்களாக இருந்தது என அறிய முடியும். அவற்றுள் ஒன்பதுள் ஒரு பங்குதான் மிச்சம். ஆகவே ஏப்ரல் 1908இல் கோவிலின் முன் நடந்ததைப் பற்றிய நமது புரிதல் கீழ்கண்டவற்றைச் சார்ந்திருக்கிறது: யாரோ ஒரு கண்காணிப்பாளரின் தேர்வு, செயலகத்திற்கு முன்நகலைத் தயார் செய்த ஒருவரின் தேர்வு, ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்பது புலனாய்வுத்துறை தொகுதிகளில் இதைச் சேர்க்க வேறொருவர் எடுத்த முடிவு, மேலும் தொகுதிகளை உருவாக்கிய ஆவண வியலாளர் முக்கியமானது எது, தேவையற்றது, சங்கடமானது அல்லது சுவாரசியமற்றது எவை என்பது குறித்து செய்த தேர்வு ஆகியவை அடங்கும். ஒரு சிறு நகரத்தின்ஆண்டிக்கடைப் பொட்டலில், ஒரு ஊர் பேர் தெரியாத பெண் உரையாற்றியது முக்கியமற்றது. அவளைப் பற்றிய குறிப்புகள் தேவையில்லை. அவளை நினைவுகூற வேண்டிய அவசியமும் இல்லை.

79ஆம் தொகுதி பக்கம் 167-168இல் இடம்பெறத்தக்கது என்று தொகுதியை உருவாக்கிய ஆவணவியலாளர் நினைத்தது இதைத்தான்:

சுதேசியத்தைப் பொருத்தவரை பொதுவாகவே இவ்விடம் சற்று மந்தமானது என்று நான் நினைக்கிறேன். வக்கீல்களில் நாராயண ஐயர் மற்றும் இன்னும் இரண்டொருவர் தவிர மற்றவர்கள் எல்லோருமே மிதவாதிகள். அவர்கள் அரசாங்க அதிகாரிகளின் தொண்டர்கள் என்று கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியாளரையும் நீதிபதியையும் மகிழ்வித்து மேலும் வழக்குகளைப் பெறுவது ஒன்றே அவர்களின் குறிக்கோளாக உள்ளது. மொத்தம் நாலைந்து சுதேசி கடைகளே உள்ளன. அவையும் சில நூறு ரூபாய்கள் முதலிலேயே இயங்குகின்றன. கோவில் முன்பும் புது மண்டபத்திலும் பஜாரிலும் நாலைந்து மாதங்களுக்கு முன் எப்போதாவது சில உரைகள் நிகழ்ந்தன. ஆனால் அவற்றுக்கும் கூட்டம் மிகுதியாக இல்லை.

ஓரிரு மாதங்களுக்கு முன்னர் சில பெங்காலியர்கள் சந்யாசி வேடத்தில் சோம்பியிருக்கும் இம்மக்களுக்கு எழுச்சியூட்ட வந்தார்கள் என்று கே.வி. இராமாச்சாரி சொன்னார்.

வேளாளப் பெண் பற்றிய குறிப்புக்கு முன்பே விடுதலை இயக்க வரலாற்றுத் தொகுதிகளின் ஆவணவியலாளர் நிறுத்திவிட்டார். சில வாக்கியங்கள் நீக்கப்பட்டதற்கான குறியீடுகூட (...) இல்லை. நியாயமாகப் பார்த்தால், கே.வி.இராமாச்சாரியைப் பற்றிய செய்திக்கு முன் இரு வாக்கியங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒன்று 1906இல் மிகச்சிறிய கூட்டமே வந்த ஜீ. சுப்ரமணிய ஐயரின் உரையைப் பற்றியது. இன்னொன்று இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் சுதேசி உரையாற்றிய (பெயர் தெரியாத) மூன்று பார்ப்பனர்களின் வரவைப் பற்றியது. ஜீ. சுப்ரமணிய ஐயரும் மூன்று பார்ப்பனர் களும் சரித்திரத்திலிருந்து ஏன் நீக்கப்பட்டார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஒருவேளை தொகுதி ஆவணங்கள் தொகுக்கப்பட்ட காலகட்டமான 1960-70க்களில் நிலவிய அரசியல் வரலாற்றுப் போக்குகளில் இருந்த ‘அரசியல்’ இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் கண்காணிப்பாளருக்குத் தகவல் தந்த கே.வி. இராமாச்சாரி சந்தேகப்படத் தக்க சந்யாசிகள் பெங்காலில் இருந்து வந்ததைப் பற்றிச் சொல்லி யிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பிரிட்டிஷாரையும் இந்திய அறிவுஜீவிகளையும் பொருத்தவரை, பெயர் தெரியா விட்டாலும் எல்லா பெங்காலிகளுமே - பிபின் சரித்திர பால் மற்றும் சுரேந்திரநாத் பானர்ஜியைப் போல - உண்மையான சரித்திரச் செயல் திறம் வாய்ந்தவர்கள்.

மாறாக, ஏப்ரல் 1908இல் கோவில் முன்பு சுதேசி உரை யாற்றிய நாற்பது வயது மதிக்கத்தக்க வேளாளப் பெண்ணின் கதியும் ஜீ. சுப்ரமணிய ஐயர் மற்றும் மூன்று பார்ப்பனர்களின் கதியும் ஒப்பிடத்தக்கன - ஒரே ஒரு வித்தியாசத்தைத் தவிர. சுதேசி இயக்கம் பெரும்பாலும் ஒரு பார்ப்பன இயக்கமாகவே இருந்தது என்பது நமக்குத் தெரியும். மேலும் ஜீ. சுப்பிரமணிய ஐயராலும் அவர் பற்றியும் எழுதப்பட்ட சரித்திரச் சான்றுகள், ஒரு தனிமனிதனைப் பற்றியச் சான்றுகளிலேயே மிக அதிகமான எண்ணிக்கை வாய்ந்தவை. மாறாக, அவ்வேளாளப் பெண் ஒருமுறைதான் சரித்திரத்தில் இடம்பிடித்தாள். அதுவும் சுதேசி இயக்கம் மதுரையில் எவ்வளவு மந்தமாக இருந்தது என்பதன் அடையாளமாக. சரித்திரத்தில் அவள் எழுதப்பட்டது அவளுடைய முக்கியத்துவமின்மையால் ஆகும். ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மூலமாக சரித்திர உருவாக்கத்தை யாரோ ஒருவர் வடிவமைத்தபோது மறுபடியும் அவள் சரித்திரத்திலிருந்து நீக்கப்பட்டாள். ஒரு பெண் என்பதால் முக்கியத்துவம் அற்றவளாக அவள் இருந்தாள்.

(பெர்னார்ட் பேட் தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் நவம்பர் 2008க்கும் மே 2009க்கும் இடையில், சுமார் 700 மணிநேரம் தமிழ் அரசியல் சொற்பொழிவு குறித்த ஆய்வை மேற்கொண்டவர். கொலம்பியா பல்கலைக்கழக பதிப்பகம் பதிப்பிக்கவிருக்கும் மேடைத்தமிழும் திராவிட அழகியலும்என்ற நூலின் ஆசிரியர். யேல் பல்கலைக்கழகத்தின் மானிடவியல்துறைப் பேராசிரியர்.

இதனை மொழியாக்கம் செய்தவர்: க.லதா, ஆங்கிலத்துறை, ஸ்டெல்லா மேரி கல்லூரி, சென்னை.)