கீற்றில் தேட...

அண்மைப் படைப்புகள்

                தொடக்க காலத்தில் இயற்கையின் அச்சந் தரும் செயல்களே மனிதனை கடவுள் நெறிக்கு இட்டுச் சென்றது என்பது மானிடவியலாளர் சிலரின் கருத்தாகும். மனிதன் தன் ஆற்றல் ஓர் வரம்புக்குட்பட்டது என்பதை உணர ஆரம்பித்த நிலையில், கடவுள் கோட்பாடு உருவாகியது என்பர். தன் அறிவுக்கும், ஆற்றலுக்கும் முறையே புலப்படாத உட்படாதவற்றின் மீதான அச்சம் காரணமாக மனிதன் முதலில் இயற்கையை வழிபடத் தொடங்கி பின்னர் கடவுள் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினான். அவை வழிபாட்டு மரபாய் மாறியது.

                அவ்வடிப்படையில் பண்டைய தொல்காப்பிய காலத் தமிழ்ச்சமூக தெய்வக் கோட்பாடுகள் ஐநில மக்கள் வாழ்வியலுக்கேற்ப உருவாகி இருக்கின்றன. அவை இன்றைய மத நிறுவனங்கள், பெரும் சடங்குகள் அடிப்படையிலான இறைவழிபாடுகளைப் போல அன்று இருந்திருக்கவில்லை.

தெய்வம்

“மாயோன் மேய காடுறை உலகமும்

 சேயோன் மேய மைவரை உலகமும்

 வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

 வருணன் மேய பெருமணல் உலகமும்

 முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

 சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” (தொல். நூ. 951)

என்பது தொல்காப்பியம்.

                ஐந்திணைகளாகப் பகுக்கப்பட்டிருந்த பண்டைத் தமிழகத்தில் குறிஞ்சிக்குச் ‘சேயோன்’ என்ற முருகனும், முல்லைக்கு ‘மாயோன்’ என்ற திருமாலும், மருதத்திற்கு ‘வேந்தன்’ என்று குறிப்பிடப்படுகின்ற இந்திரனும், நெய்தலுக்கு வருணன் (வாரணன் என்று அழைப்பர்) என்ற தெய்வமுமாக நானிலக் கடவுளைத் தொல்காப்பியர் வெளிப்படுத்துகின்றார்.

                பாலை நிலத்திற்குக் கொற்றவையும் (காளி என்றும் அழைப்பர்) தெய்வமாய் இருந்துள்ளது. வேறு கடவுளைப் பற்றியோ, மத நிறுவனத்தைப் பற்றியோ குறிப்புகள் இல்லை.

போர் மரபில் வழிபாடுகளும், நம்பிக்கைகளும்

பண்டைய காலப் போர்மரபில் வழிபாட்டுச் சடங்குகள் நிகழ்ந்துள்ளதைத் தொல்காப்பியம் உறுதி செய்கிறது.

“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்

 சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தல் என்று

 இருமூன்று வகையிற் கல்லொடு புணர|| (தொல். நூ. 1006)

என்று தொல்காப்பியம், போர்க்களத்தில் இறந்துபட்ட வீரரை நினைத்து நடுகல் நட்டு வழிபட்ட முறையை குறிப்பிடுகின்றது. சங்க இலக்கியங்களிலும் இத்தகு நடுகல் வழிபாட்டு முறையைக் காண முடிகின்றது. குறிப்பாக குறிஞ்சித் திணையில், மலையும் மலை சார்ந்த வாழ்வில் ஆநிரை கவர்தல், மீட்டலில் ஈடுபட்டு, வீரமரணம் அடைந்தவர்களுக்கே ‘நடுகல்’ நட்டு வழிவழியாக வழிபாடு நிகழ்ந்திருக்கின்றது.

                நடுகல் வழிபாட்டு முறை பல்வேறு இடங்களில் காணப்பட்டுள்ளது. “இறந்தவனது ஆன்மாவை சில சடங்குகள் மூலம் ஓர் குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைக்கலாம். அங்குள்ள ஒரு பொருளில் நுழைந்து கொள்ளச் செய்யலாம் என்ற நம்பிக்கை உலகமெங்கும் பண்டைய மக்களின் பண்பாட்டில் காணப்படுகிறது” என்பர். புறநானூற்றிலும் (பா. 265, 264, 232, 329) சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குக் கல்லெடுத்து வந்து வழிபட்ட செய்தியைக் காண முடிகிறது. சிலம்பில் வஞ்சிக் காண்டத்தில் விஞ்சி நிற்கும் வழிபாட்டுச் செய்திகளும் காதைகளின் பெயர்களும், நடுகல் வழிபாட்டு மரபை உணர்த்தும். மேலும்,

                “வெற்றி சிறப்பின் வெவ்வாய் வேலன்” (தொல். நூ. 1004) என்ற அடிகள் போருக்கு செல்லும் போது வெற்றி கருதி சிவந்த வாயினையுடைய வேலனை வழிபட்டதையும், “மாயோன் மேய மன்பெறு சிறப்பின்” (தொல். நூ. 1006: 9) மாயோனைத் தெய்வமாகக் கொண்ட மண்ணின் சிறப்பினை எண்ணியும் கரந்தை வீரர்கள் போருக்குச் சென்றதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, “உடல்வேந் தடுக்கிய உன்னநிலையும்” (தொல். நூ. 1006:8) போருக்குச் செல்லும் போது நல் நிமித்தம் பார்ப்பதையும் கரந்தை வீரர்கள் கொண்டிருந்தனர் என்பார் தொல்காப்பியர். “உன்னமென்பது ஒரு மரம். நல்லதாயின் தளிர்த்தும் தீயதாயின் உலறியும் அது நிமித்தங் காட்டு மெனலால், அதைக் கண்டு அதனொடு சார்த்தி நிமித்தம் பார்க்கும் குறிப்பு நுவலப்பட்டது” (தி.சு.பாலசுந்தரம் உரை. பக் 265) என்பர். மேலும், தாம் வழிபடுகின்ற தெய்வம் ஊரைக் காக்கும் என்ற நம்பிக்கை தொல்காப்பியர் கால மக்களின் நம்பிக்கையாக இருந்ததை, “வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப” (தொல். நூ. 1367) என்ற நூற்பாவின் அடிகள் உணர்த்துகின்றன.

பேய் பற்றிய நம்பிக்கை

                தொல்காப்பியர் காலத்தே மக்களிடத்தே பேய்கள் பற்றிய நம்பிக்கை இருந்திருக்கிறது. “பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்” (தொல். நூ. 1025) பேஎத்த மனைவி ஆஞ்சியானும்” (தொல். நூ. 1025) என்ற அடிகளின் வழியாக, போரில் இறந்துவிட்ட அல்லது விழுப்புண்பட்ட வீரர்களை பேய்கள் நின்று பாதுகாக்கும் என்ற நம்பிக்கையும், பழந்தமிழக மக்களின் நம்பிக்கையாக இருந்திருக்கிறது. “மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் ஃ துறந்த ஒழுக்கங் கிழவோற் இல்லை” (தொல்.நூ.1081) என்ற நூற்பாவில் ‘ஓரை’ என்ற சொல்லிற்கு பல பொருட்களை குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, நாழிகை, விளையாட்டு, முகூர்த்தம், ராசி என்று குறிப்பிடுகின்றனர். “நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்” (தொல்.1060) என்ற நூற்பாவில் ‘புள்’ என்ற சொல்லிற்கு முன்னர் பறவை யென்றும், பிற்காலத்தே சகுனம் என்றும் குறிப்பிடுவர். இதன் வழி, பொதுவாக பண்டைய மக்களிடம் ‘நிமித்தம்’ பார்க்கும் வழக்கம் இருந்துள்ளதை அறிய முடிகிறது. பண்டைய காலத்தில் ‘நிலையாமை’ கருத்துக்களும், ஊழ்வினை நம்பிக்கையும் இருந்துள்ளதையும் அறிய முடிகிறது.

கடவுள்

                “காமப்பகுதி கடவுளும் வரையார்” (தொல். நூ. 1029) என்ற நூற்பாவில் காமக் குறிப்பை வைத்து இலக்கியம் பாடுகின்ற பொழுது தேவரிடத்தும் மக்களிடத்தும் வரையார் என்று உரையாசிரியர் விளக்கம் தருகின்றனர். மேலும்,

“கொடிநிலை கந்தழி வள்ளி என்ற

வடுநீங்கு சிறப்பின் முதலான மூன்றுங் (தொல். நூ. 1034)

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” (தொல். நூ. 1034) என்று கொடிநிலை, கந்தழி,  வள்ளி-மூன்று துறையும் கடவுள் வாழ்த்தோடே பொருந்தி வரும் என்றும், “அமரர்கண் முடியும் அறுவகை யானும்” (தொல். நூ. 1027) என்று, தேவர் நிலைமையில் வைத்து வாழ்த்துதற்குரிய அறுவகை நிலையான சான்றோர், புலவர், வேந்தர், ஆன், மழை, உலகம் என அறுவகையில் வாழ்த்துதல் மரபெனவும் தொல்காப்பியர் சுட்டுகின்றார். இவை கடவுளை வாழ்த்தும் வகைப் பற்றிய குறிப்பாகும். இதன் வழி கடவுளை பாடும் மரபை பண்டையோர் கொண்டிருந்ததையும் அறிய முடிகிறது.

                திணைத் தெய்வங்கள் வழிவழி வணங்கப்பெற்று, காலவோட்டத்தில் தமிழர் வழிபாட்டு மரபில் மாற்றங்கள் நிகழ்ந்து புறச்சமயங்கள் வந்து கலந்து கலப்பு வழிபாட்டு மரபு தோன்றிவிட்டது. ‘தெய்வம்’ என்ற சொல் தொல்காப்பியத்தில் ஒன்பது இடங்களில் இடம்பெற்றுள்ளன. ‘இறை’, ‘இறைவன்’ என்ற சொற்கள் பண்டைய காலத்தில் தலைவனை குறிக்கும் சொல்லாகவும் காணப்படுகிறது.

                இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழிலக்கியங்களில் ‘சமயம்’ என்ற சொல்லே இல்லை. அதற்குப் பிற்பட்ட நூல்களில் தான் சமயம், மதம் என்ற சொற்கள் காணப்படுகின்றன. எனவே, சங்க காலத்தில் மக்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருப்பினும் அவர் சிவன், திருமால் போன்ற கடவுளர்களை வழிபட்டாலும் சைவ சமயம், வைணவ சமயம் போன்ற சமயப்பற்று வேறூன்றவில்லை என்பது தெரிகின்றது.

                ‘தெய்வம்’ என்பது கருப்பொருளிலேயே கூறப்பட்டுள்ளது. கருப்பொருளானது நிலத்தில் காலத்தால் கருக்கொள்ளும் பொருளாகும். இவை தோன்றி நின்று மறைவனவே யாகும். இதன் மூலம் ‘தெய்வம்’ என்று குறிப்பிடப்படுவது இறந்த முன்னோர்களே எனக் கருதவும் இடமுண்டு. தெய்வ வழிபாடே அன்றி நிலையான ‘கடவுள்’ என்ற கொள்கைப் பற்றி தொல்காப்பியத்தில் எங்கும் சுட்டப்பெறவில்லை என்பது ஆராயத்தக்கதாகும்.

                ஐந்திணைத் தெய்வம் பற்றி பலர் விளக்கம் தந்திடினும் தேவநேயப்பாவாணர் தெளிவுறச் சுட்டுகின்றார்.

                ‘குறிஞ்சி நிலத்து மக்கள் தம் தெய்வத்தை தீயின் கூறாகக் கொண்டதால் சேந்தன் (சிவந்தவன்) சேயோன் என்று பெயரிட்டு அழைத்தனர். முல்லைநிலத்து மக்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாததாக முதற்கண் மழையே இருந்ததால் முகிலையே தெய்வமாகக் கொண்டு ‘மால்’ என்று தம் தெய்வத்திற்கு பெயரிட்டு வழிபட்டனர். மருத நிலத்து மக்கள் இவ்வுலகில் தீவினையை விட்டு நல்வினை செய்து வாழும் கொள்கை கொண்டோராக, இம்மையில் வேந்தனாக அறவாழ்க்கை நடத்தினால், மறுமையில் தேவர் கோனாய்ப் பிறப்பான் என்ற கொள்கை கொண்டு தேவர்கோனைத் தேவர் ‘வேந்தன்’ என்றனர். மேலும், உழவுத் தொழிலுக்கு இன்றியமையாத மழையானது விண்ணிலிருந்து பொழிகிறது. இவ்விண்ணுலக வேந்தனே ‘இந்திரன்’ ஆயினான். நெய்தல் நிலத்து மக்கள் கடலை நம்பியே வாழ்க்கை நடத்தியதால் தம் தெய்வத்தைக் கடல் தெய்வமாகவே கொண்டு அதற்கு ‘வாரணன்’ அல்லது ‘வருணன்’ என்று பெயரிட்டு வணங்கினர். பாலை நிலத்து மக்களின் வாழ்வு வறட்சியும், போர்க்களங்களும், பிணங்களும், பிணந்திண்ணிப் பேய்களும் கொண்டதால் பேய்களுக்குத் தலைவியாகிய ‘காளி’யை தெய்வமாகக் கொண்டனர். இத்தகைய ஐந்நிலத்து மக்களும் தம் வாழ்வியலோடு ஒன்றி வந்த இயற்கையை பொருத்தி தெய்வத்தை தோற்றுவித்தனர். மேற்கூறிய கருத்தை தேவநேயர் தமிழர் மதம் நூலில் தெளிவுற குறிப்பிடுகின்றார்.

                மேலும், பண்டைய தமிழரின் தெய்வ வழிபாட்டு முறைகளுக்குக் காரணமாக 1. அச்சம், 2. முற்காப்பு, 3. நன்றியறிவு, 4. பாராட்டு, 5. அன்பு, 6. கருதுகோள், 7. அறிவு வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இறை வழிபாடு தோற்றம் பெற்றதாகவும் குறிப்பிடுகின்றார்.

                ‘தீயும், இடியும் போன்ற பூத இயற்கைக்கும், பாம்புபோலும் நச்சுயிரிக்கும், இறந்தோராவிகட்கும், பேய்கட்கும் அஞ்சிய அச்சத்தால் தெய்வ வணக்கம் முதற்கண்ணாகத் தோன்றியது. கொள்ளை நோய், பஞ்சம், இயற்கை சீற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்குமாக முற்காப்பு அடிப்படையில் அச்சம் தோன்றியது. இவை தெய்வங்களின் சீற்றத்தால் நேர்பவையென எண்ணி அச்சம் கொண்டனர். மேலும், உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத கதிரவன், மதி, மரம், ஆ, இன்ன பிறவற்றையும் தெய்வமாக நன்றியறிவின் பொருட்டு வணங்கினான். மறவனையும், மழை வரவழைத்தும், பழுக்கக் காய்ச்சிய பொன்னைக் கையிலேந்தியும், தீயோரைச் சாவித்தும், சினத்தால் ஊரினை எரித்தும், உடன்கட்டை ஏறியும், கடுங்கற்பைக் காத்தப் பத்தினிப் பெண்டிற்கும்; கல்நட்டு விழாவெடுத்தது பாராட்டே ஆகும். இவ்வடிப்படையிலும் தெய்வம் தோற்றம் பெற்றது. அரசன் இறந்த பின்னர் அன்பு மிகுதியால் அவனை வழிபட்டதும், கண்ணால் காணும் இயற்கைக் கூறுகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் தெய்வங்கள் கருதுகோளின் அடிப்படையிலும் தோற்றம் பெற்றன. அதுமட்டுமன்று அறிவு வளர்ச்சி பெற்ற பின்னர் மறுமையும், கடவுள் உண்மையும் கண்டு நம்பிக்கையின் அடிப்படையிலும் ‘தெய்வம்’ தோன்றிற்று என்று தேவநேயப்பாவாணர் அவர்கள் பழந்தமிழரிடம் உருவாகிய ‘தெய்வம்’ பற்றிய சிந்தனையை பற்றி விளக்குவதைக் காண முடிகிறது. இத்தகைய வழிபாட்டு முறையே பழந்தமிழரின் வழிபாட்டு முறையாம். மேற்கூறப்பட்டவையே தொல்காப்பியம் குறிப்பிடும் வழிபாட்டு முறையாம்.

                இதன் வழியாக, தொல்காப்பிய காலப் பழந்தமிழகத்தில் நில அடிப்படையில் கடவுள் கோட்பாடுகள் தோன்றியிருப்பினும் நிலைத்த மதமோ, சமயமோ தொல்காப்பியத்தில் காணப்படவேயில்லை. இடைக்காலச் சூழலே மதங்கள் தோன்றுவதற்குரிய காலமாக இருந்துள்ளன எனலாம். இதன் வழி நிலத்திற்கு ஏற்ப உருவ வழிபாடு, இயற்கை வழிபாடு ஆகிய இரண்டும் பழந்தமிழகத்தில் இருந்துள்ளன என்பதும் போர் மரபில் வழிபாடுகளும் நம்பிக்கைகளும் தோன்றியிருக்கின்றன என்பதும் தொல்காப்பியத்தில் காணும் வழிபாட்டு மரபு கோட்பாடுகளாம்.

சான்றெண் விளக்கம்

1.            தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, திசு.பாலசுந்தரம் உரை.

2.            தமிழர் மதம், தேவநேயப்பாவாணர்.

3.            நடுகற்களும் நம்பிக்கைகளும், நா. வானமாமலை (ஆராய்ச்சி மலர்)

- பா.பிரபு, முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

Pin It

ஒடுக்குமுறையின் பிரதான செயல்முறைகளுள் முதன்மையானது மனிதன் சக மனிதன் ஒடுக்கி, ஒதுக்கி வைத்து வாழும் முறையே யாகும். இவ்வரலாற்று போக்கில் ஆணினம் பெண்ணினத்தை வெறுங் கருவிகளாகவும், விலைப் பொருட்களாகவும் பல்வேறு வகையில் ஒடுக்குமுறை செலுத்தி அவற்றினை சமூகக் கட்டமைப்பாய் பலவந்தப்படுத்தி ஆணாதிக்கம் பல்வேறு வகையான கருத்தினை விதைத்து நடைமுறைப்படுத்தி இருக்கிறது என்பது பண்டைய காலந் தொட்டு வரையும் மறக்க முடியாத நிகழ்வாய் மாறி நிற்கிறது. நாகரீக காலந் தொட்டு இன்று வரையும் பெண் சமுதாயத்திற்கான கொடுமைகள்  தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே வருவதையும் ஆணாதிக்கச் சமுதாயம் அன்று முதல் ஏன் இன்று வரையிலும் கூட வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்துள்ளதையும் வரலாற்றின் வழியிலும் ஏன் இன்றைய நடைமுறையிலும் நாம் காண முடிகிறது.

தாய்வழி சமூகத்திற்குப் பின்னர் பெண்கள் பல்வேறு வகையில் சமூக ஒடுக்குமுறைக்குள் ஒருபுறம் சிக்கிக் கிடக்க, அதையும் தாண்டி, ஒடுக்குமுறைக்குள் உள்ளாக்கப்பட்ட பெண்ணினத்தை இன உற்பத்தி செய்யும் வெறுங்கருவிகளைப் போல பயன்படுத்தி அழிக்கவும் செய்ததை பல்வேறு சான்றுகளின் வழியாக மெய்ப்பிக்க முடியும். பழங்காலத்தில் பெண்கள் சமூக விதிகளாய் பல்வேறு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததை அறிய முடிகிறது. குறிப்பாக, தந்தை வழி நிலவுடைமை சமூகமாய் நிலவியிருந்த காலத்தில், பெண்களுக்கென பல்வேறு விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தொல்காப்பியம் குறிப்பிடும் குடும்பப்  பெண்களும், தகுதி நிலையும்

            தொல்காப்பியத்தின் தலைவியின் தகுதிகளாக, “அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் / நிச்சமும் பெண்பாற் குரிய”  (தொல். களவு. 96) என்று அச்சம், நாணம், மடம் ஆகியவை பெண்ணிற்கே உரிய தனித்த தகுதிகளெனச் சுட்டுகின்றது. ஆணிற்கோ? பெருமையும் உரனும் ஆடூஉ மேன’’ (தொல். களவு. 95) என்று பெருமை, வீரம் பொருந்தியவனே தலைவனென சுட்டிச் செல்கிறது. இவை அடிப்படையில் நேர் எதிரானதாகத் தோன்றுகின்றது. மேலும், காதலில் ஈடுபடும் ஆண், பெண் இருபாலரின் தகுதியை குறிப்பிடும் போது, “ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப / மிக்கோ னாயினுங் கடிவரை இன்றே” (தொல். களவு. நூ. 90) என்று தலைவனை விடவும் தலைவிக்கு தகுதிகள் குறைந்தே இருக்க வேண்டும் என்ற கருத்தும் வெளிப்படுத்தப்படுகிறது.

            தலைவன், தலைவிக்கு ஊடல் ஏற்படும் போதும், அல்லது அவள் தம் கருத்தை வெளிப்படுத்தும் போதும் கூட ஊமையாக இருக்க வேண்டிய சூழலே நிலவியது என்பது திண்ணம். இதனை,  “உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும் / செயிர்தீர்க் காட்சிக் கற்புசிறந் தன்றெனத்”  (தொல். களவு. 111)  என்று உயிரை விடவும் நாணம் சிறந்தது; நாணத்தை விடவும் கற்பு சிறந்தது என பெண்ணிற்கு கட்டளையிடும்  பண்டைய சமூகத்திய ஆண்கள் பரத்தையர், காமக்கிழத்தியர் வைத்துக் கொண்டு திரிந்ததை எவ்வாறு சமூகம் ஏற்றுக் கொண்டது என்பதே பண்டைய காலச் சூழலை ஆய்ந்து நாம் முன்வைக்கும் கேள்வி. காதல் செய்த பின்னர் தலைவி தலைவனை ஏற்க மறுத்தால் தலைவன் ‘மடலேறுவேன்’ என பெண்ணை அச்சமூட்டுகிறான். ஆனால், “எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல் / பொற்புடை நெறிமை இன்மை யான”  (தொல். அகம். 38) என்று எச்சூழலாயினும் மடலேற எண்ணுதல் கற்புடைய நங்கையர்க்கு நெறியாகாது என்று சமூக விதிமுறையை புகுத்தியதையும், மேலும், “முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை”  (தொல். அகம். 37) என்று, கடல் கடந்து செல்லும் ஆண்கள் பெண்களை அழைத்து கொண்டு செல்லாத சூழலையும் அறிய முடிகிறது.

ஆண் திருமணத்திற்கப் பிறகு பரத்தை வீட்டிற்கு சென்று வருகிற போது கூட, மனைவி கோபம் கொண்டாலும், “சொல் லெதிர் சொல்லல் அருமைத் தாகலின் / அல்ல கூற்றுமொழி அவள்வயி னான” (தொல். களவு. 108) என்று தலைவன் சொல்லிற்கு எதிர்சொல் பேசும் உரிமையுடையவளாயினும் பேசுதல் முறையன்று என மேற்கூறிய நூற்பா சுட்டுகிறது. இவை யாவுமே பெண்ணினத்தின் அடிமைத்தனத்திற்கு எடுத்துக் காட்டாய் அமைகிறது. பொதுத்தன்மையில் பெண்களுக்கென பல்வேறு விதிகளை வகுத்து ‘கற்பு’ கோட்பாட்டை உருவாக்கிய அதே சூழலில், காமக் கிழத்தியரையும், பரத்தையையும் உருவாக்கி ‘வெறும் இன உற்பத்தி செய்யும் கருவிகளாகவும், ஆணின் தேவைக்கு, பயன்படும் கருவிகளாகவும், விலை  பொருட்களாகவுமே பெண்ணினம் பேரழிவுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.

காமக்கிழத்தியர்   

ஆணாதிக்கச் சூழல், ஓர் ஆண் பல பெண்டிரோடும் கூடி வாழுதல் தவறில்லை என்ற கருத்தினை கொண்டிருந்துள்ளது. இந்நிகழ்வு இன்று வரையும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. பண்டைய காலத்தில் திருமணம் செய்து  கொண்ட ஆண் இரண்டாவதாக வேறொரு பெண்ணை தம் இச்சைக்கு உபபடுத்தி அவளை தம் கட்டுப்பாட்டில் இருத்துகின்றான். அவளே காமக் கிழத்தி ஆவாள். அதாவது காமம் மட்டுமே  பொருளாக கொண்டு அவளோடு அதாவது காமம் மட்டுமே பொருளாக கொண்டு அவளோடு கூடி வாழ்வான் என்று திறனாய்வாளர்கள் குறிப்பிடுவர்.

            இளம்பூரணர் காமக்கிழத்தியர், பரத்தையர் ஆகிய இருவேறுபட்ட தன்மையை உடையவரென விளக்குகின்றார். “காமக் கிழத்தியர் பின்முறை ஆக்கிய கிழத்தியர். அவர் மூவகைப்படுவர்: ஒத்த கிழத்தியரும் இழிந்த கிழத்தியரும் வரையப்பட்டாரும் என. ஒத்த கிழத்தியர் முந்துற்ற மனையாளன்றிக் காமம் பொருளாகப் பின்னும் தன் குலத்துள்ளாள் ஒருத்தியை வரைதல். இழிந்தவராவர்-அந்தணர்க்கு அரச குலத்தினும் வணிக குலத்தினும் வேளாண் குலத்தினும் கொடுக்கப்பட்டாராகும். அரசர்க்கு ஏனையிரண்டு குலத்திற் கொடுக்கப்பட்டாரும், வரையப்பட்டார் – செல்வராயினார் கணிகைக் குலத்தினுள்ளார்க்கும் இற்கிழமை கொடுத்து வரைந்து கோடல். அவர் கன்னியில் ‘வரையப்பட்டாரும் அதன் பின்பு வரையப்பட்டாரும் என இருவகையர். அவ்விருவரும் உரிமை பூண்டமையாற் காமக்கிழத்தியர்பாற் பட்டனர். பரத்தையராவார், யாரெனின் அவர் ஆடலும் பாடலும் வல்லராகி அழகு மிளமையுங் காட்டி இன்பமும் பொருளும் வெஃகி ஒருவர் மாட்டுந் தங்காதார். இவருள்ளும் ஒருவரைப் பற்றி மறுதலைப் பெண்டிரைச் சார்த்தி கூறுவனவும் காமக்கிழத்தியர் கூற்றின் பாற்படும்”  (பக். 115, தொல். இளம் உரை)

இதன் வழியாக காமக்கிழத்தியர் மூவகையாக இருந்துள்ளனர்.

  • ஒத்த கிழத்தியர் – என்பவர் மூத்த மனைவியின்றி காமமே திருமணம் செய்து கொள்வான்.
  • இழிந்த கிழத்தியர் – என்பவர் அந்தணர்கள் அரசகுலம், வணிக, வேளாள குலத்திலுள்ளோரை காமத்திற்காக கொடுக்கப்பட்டோர் என்பர். மேலும் அரசர், வணிக வேளாள குலத்தில்  கொடுக்கப்பட்டோரும், வணிகர்க்கு வேளாளர் குலத்தினில் கொடுக்கப்பட்டோரும் ஆவர் என்று வருணாசிரம அடிப்படையில் விளக்குகின்றார். நால்வருள் வேளாளர் குலத்தினை சார்ந்தவர்கள் பற்றி இங்கு குறிப்பிடப்படவில்லை.
  • வரையப்பட்டார் – என்போர் செல்வர்கள் கணிகக் குலத்தினுள் உள்ளார்க்கும் இற்கிழமை கொடுத்து திருமணம் செய்து கொள்வோர் ஆவர் என்பர். அவர்கள் இருவகையை உடையவர்கள், ஒருவர் கன்னியில் வரையப்பட்டாரும், அதன் பின்பு வரையப்பட்டாரும் என இருவகையர் என்றுரைக்கின்றனர். அவ்விருவரும் உரிமை உடையவராதலால் ‘காமக் கிழத்தியர்’ என அழைக்கப்பட்டனர் என்பர். இதனடிப்படையில் காமக் கிழத்தியர் என்பவர் பரத்தையர் அல்ல என்பதும், அவர்கள் திருமணம் செய்து கொண்ட ஆணின் வேறு இல்ல கிழத்தியாகவும், வெவ்வேறு குலத்திலுள்ளோரே ‘வைப்பாட்டி’ என்ற நிலையில் இருந்தோரும் ஆவர் எனக் கருத இடமுண்டு.

பரத்தையர்

            தொல்காப்பிய, சங்க கால சமூகம் பரத்தையை அங்கீகரித்ததை அறிய முடிகிறது. பரத்தையை இற்பரத்தை, காமப் பரத்தை, சேரி பரத்தை, மாயப் பரத்தை எனப் பலவாறாகக் குறிப்பிடுகிறது. பண்டைய சமூகத்தில் உயர்ந்தோர்களாகச் சொல்லப்படுகின்ற அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வரும் பரத்தமைத் தொடர்பைக் கொண்டிருந்தனர். இதனை,“பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே / நிலத்திரி பின்றஃ தென்மனார் புலவர்” (தொல். பொருள். 220) என்ற நூற்பாவின் வழி, பரத்தைமை தொடர்பு கொண்டிருந்ததையும், அவர்கள்  நிலம் விட்டு வேற்று நிலத்தினுள் பரத்தை தொடர்பு கொண்டிருப்பது முறையல்ல என்ற கருத்தினை உடையவராக இருந்ததையும் அறிகிறோம். இதன் வழியும்,

            “சங்க காலம் ஆணாதிக்கச் சமூக உருவாக்கக் காலம். அதற்கேற்பத் தந்தை வழி சமூகத் தளத்தில் பெண்கள் குடும்பத்திலும், சமூக அமைப்பிலும் இரண்டாம் நிலையிலேயே வாழ்ந்தனர். ஆயின் பழங்கால சமூகத்தின் தொல்லெச்சங்களாக உரிமைப் பெற்றிருந்த மகளிரையும் சங்க இலக்கியம் வழியே அறிய முடிகிறது. கற்புக் கோட்பாடு, கைம்மைக் கோட்பாடு, பரத்தமை அமைப்பு, இவற்றின் வழியே ஆணாதிக்கத்தின் வளர்ச்சி நிலையை காண முடிகிறது” (சமூக நோக்கில் சங்க மகளிர், பக். 9) என்றுரைப்பதன் வழி சமூகச் சூழலை அறிய முடிகிறது. பண்டைய சமூகத்தில் பெண்ணினத்திற்கென ‘கற்பு’ கோட்பாடு ஒருபுறமிருக்க, பரத்தையையும் சமூகம்  உருவாக்கிய சூழல் பெண்ணினத்திற்கான ஒடுக்குமுறையின் விரிவு  நிலையாகவும் பெருங்க கொடுஞ் சூழலாகவுமே மாறி நின்றதை அறிய முடிகிறது. “செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் / அறிவும் அருமையும் பெண்பாலான” (தொல். நூ. 1155)  என்று செறிவு, நிறைவு, செம்மை, செப்பு, அறிவு, அருமை பெண்ணிற்குரிய தகுதிகளாவும், அவை பெண்ணிற்கே உரிய இலக்கணமாக்கிய ஆண்கள் வெட்ககேடான, இழிவான செயலை செய்ததையும் அறிய முடிகிறது. இக்கால சூழலை நன்கறிந்தே, “பிறன்மனை நோக்காத பேராண்மை ஆண்களுக்கு வேண்டும்” என்றார் வள்ளுவர்.

            “தலைவன் பரத்தையிற் பிரிவு கொண்டதாகத் தலைவன் கூற்றில் யாண்டும் கூறப்படவில்லை. பரத்தையிற் பிரிவு கொள்ள நினையும் வேட்கை எச்சூழலிலும் தலைவனால் வெளியிடப்படவில்லை. பரிபாடல் ஒழிந்த பிற இலக்கியங்களில் இக்காமக் கிழத்தியர் விலைமகளிராகவோ பொருள் பெண்டீராகவோ காட்டப்படவில்லை; பரத்தை என்ற சொல்லும் பிற இலக்கியங்களில் பயன்படுத்தப்பட வில்லை; இக்காரணங்களைக் காட்டி சங்க அகத்திணை நூல்கள் பரத்தமை மிக்கிருந்த சமுதாய நிலையைப் புனைகின்றன எனக் கூறுவதினும் பரத்தையிற் பிரிவு என்ற இலக்கிய மரபைக் களமாக்கிச் சில உளவியல் அணுகுமுறைகளை அவை விளக்க முனைகின்றன என்பார் டாக்டர் ஆ.இராமகிருட்டிணன். பொது மகளிருடன் புரியும் பரத்தை, சமுதாயத்தில் தடை செய்யப்படவில்லை என்பார் கனகசபை. ஆடல் பாடல்களில் சிறந்து விளங்கிய இவர்கள் செல்வமிக்க பெருங்குடி மக்களின் காதல் கிழத்தியராக விளங்கினர் என அவர் மேலும் குறிப்பிடுவார் …….” ஆகவே, தொல்காப்பியத்தில் கூறப்படும் பரத்தை பற்றிய கூற்று இடைச் செறுகல் என கூறுவோரும் உண்டு. குறிப்பாக அந்தணர் என்போர் அறவோர்’ என்ற கருத்தின்படி தூய்மை ஒழுக்கமுடைய புலனழுக்கற்றவர்களே அந்தணளாளர்கள் என்ற கூற்றின்படி, அவர்கள் பரத்தைத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதும் ஆய்விற்குரியதாய் நம்முன் எழும் வினாவாகும். ஆயின் பரத்தைத் தொடர்பு கொண்டிருந்த அந்தணர்கள் அறவோர் அல்ல என்பதும் புலனாகிறது.

            இதைத் தவிர்த்து பண்டையச் சமூகத்தில் மனைவியை விட வேற்று பெண்ணான காமக் கிழத்தியரிடம் உறவு கொண்டிருந்ததை தொல்காப்பியத்தின் காமக் கிழத்தியர் கூற்றின் வழி அறிகிறோம். ‘தலைவன் பிறரிடம் சென்று சேர்தலை அறிந்து ஊடல் கொள்ளும் போதும் மனைவி இன்னபிறர் காமக்கிழத்தியரை இகழ்ந்துரைக்கும் போதும், தலைவனுக்கு புதல்வன் பிறந்தான் என மகிழும் போதும், களவுக்குப் பின்னர் மணம் செய்து கொண்ட மனைவி செய்யும் செயல்களால் தம் பொறுமை கடந்து துன்புறும் போதும், காதல் சோர்வினாலும், இல்லறக் கடமையை செய்ய வேண்டும் என்பதாலும், தலைவியை தாய் போல தழுவி அன்பாகப் பேசி வெறுப்பின்றி தலைவனோடு தலைவியை இணைக்கும் போதும், தலைவனின் புதல்வனைத் தழுவி அணிகலன் அணிவித்து அவனையே வாயிலாகக் கொண்டு வருமிடத்தும், மனைவியை ஒத்தவள் என்ற கருத்தோடு தன்னை ஒத்த ஏனைய மகளிரினும் தானும் உரிமையுடையவள் என நினைக்குமிடத்தும், தலைவனுடன் விளையாடும் விளையாட்டின் கண்ணும் காமக்கிழத்தி பேசுமிடங்களாக தொல்காப்பிய கற்பியலில் 149 ஆம் நூற்பாவானது எடுத்துரைக்கிறது. இதன் மூலம் காமக்கிழத்தியின் தகுதியையும், அவள் பரத்தையரிலிருந்து வேறுபட்டவள் என்பதும் புலனாகிறது. மேலும், 2-வது மனையாளாக இருக்கிற காமக்கிழத்தியே பிற்காலத்தில் ‘செவிலி’ என்ற கருத்தும் தோன்றுகிறது. காரணம், ஓர் குடும்பத்தின் உறுப்பினர்களுள் ‘செவிலி’ க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஓர் குடும்பத்தின் இரண்டாவது மனையாளாகவே ‘செவிலி’ களவு, கற்பு வாழ்க்கையில் ஈடுபடுகிறாள். குடும்பத்திலுள்ள ஓர் இளம்பெண் வேறு ஒரு ஆணுடன் காதல் வாழ்வில் ஈடுபட, அதனை அறிந்து கொள்ளுதல், வெறியாட்டு நிகழ்த்துதல் தொடங்கி, அப்பெண் ஆண்மகனுடன் உடன்போக்கு சென்று திருமணம் செய்து கொள்ள அவர்களைத் தேடிச் செல்லுதல், இல்லற வாழ்க்கையை உணர்த்துதல் வரையும் ‘செவிலி’யின் பங்கு மிகுந்த முக்கியத்துவம் உடையதாய் காணப்படுகின்றது.

            தொடக்கக் காலத்தில் ஓர் ஆடவனின் இரண்டாம் மனையாளாக இருந்த காமக்கிழத்தி பிற்காலத்தில் ‘செவிலி’ என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என கருத முடிகிறது. செவிலி யாரென தொல்காப்பியத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பது நோக்கத்தக்கதாகும்.

            குறிப்பாக, திருமணம் செய்து  கொண்டு இல்லற வாழ்வை வாழும் தலைவிக்கு  அடுத்த நிலையில் இரண்டாவது மனையாளைப் போல துணைவியாக காமக்கிழத்தி இருந்ததை அறிய முடிகிறது. தலைவன் பிறரிடம் சேர்தலை கண்டு உடல் கொள்ளுதல் என்பது தலைவி, காமக்கிழத்தி இருவரையும் விட்டு விட்டு பரத்தையோடும் தலைவன் தொடர்பு கொண்டிருந்துள்ளான். அதுகண் கோபமடைந்து ஊடல் கொண்டவளாகவும், தலைவி காமக்கிழத்தி இகழ்ந்து பேசினாலும், தானும் குடும்பத்தில் ஓர் அங்கமாய் உரிமையுடையவளாய் வாழ்ந்ததும், தலைவி பிள்ளையை தம் பிள்ளையாக எண்ணி வீதியில் சென்ற தலைவியின் பிள்ளையை கண்டு அணிகலன் அணிவித்து வீட்டிற்கு அழைத்து சென்ற செய்தியும் கிடைக்கிறது. இவை யாவும் காமக்கிழத்தியின் செயலென அறிய முடிகிறது.

            பரத்தை பற்றிய கருத்துக்கள் இடைச்செறுகல் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு இனத்தினரை தவறானதாகவும், தம் இனத்தினரை மட்டுமே உயர்ந்த இனம் என்ற கருதுகோளை முன் வைத்தே சிலர் கூறிய கருத்தினை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. யாராயினும் ‘நடுவுநிலைமை’ நிற்றல் என்பதுவும் தமிழர் நெறியென மறந்து உரைக்கின்றனர் சிலர்.

            பரத்தைப் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் சில இடங்களிலும், சங்க இலக்கியங்களில் பல இடங்களிலும் விரவிக் கிடக்கிறது. சங்க மருவிய இலக்கியங்களிலே பரத்தை உறவுகள் தவறெனவும், நீதி இலக்கியங்களிலேயே பிறன் நோக்கா பேராண்மையும், பரத்தை தொடர்பு தவறெனவும், காப்பிய இலக்கியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலையின் வழியாக ‘மாதவி’ பாத்திரத்தின் மூலமும், மாதவி காமக் கிழத்தி என்ற பரத்தை நிலையை தவிர்த்து போராடிய பெண்ணாகவும், கண்ணகியின் மகளென தம் மகளை கூறியதையும், கணிகையர் குலத்திலிருந்து தம் மகளை விடுவிக்க எண்ணியதையும், அதனால் வேறு மதத்திற்கே அவள் சென்றமையையும் காப்பியத்தின் வழி அறிகிறோம். இன்றும் வரையும் கூட தேவதாசி முறை வரையும், பரத்தை சமூக சூழலையும், அறிகிறோம். ஆகவே ‘பரத்தை’ நிலையை ஒதுக்கி வைத்து நாம் பண்டைய சமூகத்தினை மதிப்பிட முடியாது: கூடாது: பெண்களுக்கு ‘கற்பு’ இலக்கணம் கற்பிக்கப்பட்ட அதே சூழலில் தான் பெண்ணிற்கு ‘காமக்கிழத்தி’, ‘பரத்தை’ என்கின்ற பட்டமும் கொடுத்து சமூகம் பெண்ணினத்தை அழிவிற்கு உள்ளாக்கியிருக்கிறது என்பது மறுக்க முடியாது.

            மேற்கூறிய சூழலில் ஆணாதிக்கத்தின் புற வெளியில் பெரும்பான்மை ஆண்கள் இத்தகைய ஒடுக்குமுறையை செய்தார்களா அல்லது அதிகாரத்தில் இருந்தோர், செல்வர்கள் மட்டும் காமக்கிழத்தியரும் மற்றும் பரத்தை தொடர்பும் கொண்டிருந்தார்களா என்பதும் நம்முள் எழும் வினாவாகும்.

பார்வை நூல்கள்

1.         தொல்காப்பியம்-இளம்பூரணர், நச்சினார்க்கினியர் சை.சி. நூற்பதிப்பு உரைகள், 2009

2.         தமிழர் வரலாறும் பண்பாடும் - ஆ. இராமகிருட்டிணன், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, மு.ப. 2011 மற்றும் சங்க இலக்கிய நூல்கள்.

- முனைவர் பா.பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306, காஞ்சிபுரம் (மா)

Pin It

தமிழ் வேதம் எனப் போற்றப்படும் திருக்குறளின் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் 1730 ஆம் ஆண்டு இலத்தீன் மொழியில் பெயர்த்தவர். தமிழ் அகராதித் துறைக்கு மூலவர். தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் கொண்டு வந்தவர். தமிழின் மரபினையொட்டி `தேம்பாவணிஎன்ற சிறந்த காப்பியம் படைத்தவர். தமிழ் இலக்கண மரபுப்படி கவிதைகள் புனைந்தவர். தமிழ் மொழியில் பிரபந்தம், கலம்பகம், அம்மானை, கலிப்பா எனப் பதிகம் தொடங்கி, `பாவகைகள் பலவற்றில், செய்யுள் இயற்றியவர். தமிழில் உரைநடை படைத்தவர். தமிழ் இலக்கியங்களை மேலை நாட்டு மொழிகளில் மொழிபெயர்த்தவர். “தாமே தமிழானார்; தமிழே தாமானார்!” என்று தமிழ் இலக்கியவாணர்கள் போற்றும் வண்ணம், தமிழுக்காக வாழ்ந்தவர். அவர்தான் இத்தாலி நாட்டில் பிறந்து, தமிழகம் வந்து தமிழ்த் தொண்டாற்றிய `கான்ஸ்டண்டைன் ஜோசப் பெசுகி `வீரமாமுனிவர்!

Veeramamunivarஇத்தாலி நாட்டில் வெனிஸ் மாநிலத்தில் மாந்துவா என்னும் மாவட்டத்திலுள்ள காஸ்திகிளியோனே என்ற சிற்றூரில் 08.11.1680 ஆம் நாள் பிறந்தார். தந்தையார் கொண்டோல்போ பெசுகி. அவர் இளமையிலேயே தாய்மொழிக் கல்வி பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றார். 1698 ஆம் ஆண்டு, தமது 18-ஆவது வயதில் துறவுபூண்டு, இயேசு சபையில் தொண்டராகச் சேர்ந்தார். சமயப் போதகருக்குரிய பயிற்சி பெற்றார். 1706 ஆம் ஆண்டு சமய வேதாகமங்களை முiறாகப் பயின்று குருப்பட்டம் பெற்றார்.

இத்தாலி நாட்டில் தமது இளமைப் பருவத்திலேயே இத்தாலி, இலத்தீன், பிரெஞ்சு, கிரேக்கம் முதலிய மொழிகளில் தேர்ச்சி பெற்று விளங்கினார். தத்துவமும், இறையியலும் பயின்றார்.

 தமிழகத்திற்குக் கிறித்துவ மதத்தைப் பரப்பிட, 1711 ஆம் ஆண்டு வருகை புரிந்தார். தமிழகத்தில் கோவை, தூத்துக்குடி, மணப்பாடு , மதுரை காமநாயக்கன்பட்டி முதலிய ஊர்களில் தங்கி சமயப்பணி ஆற்றினார். தமிழ் பயின்றதுடன், தெலுங்கு, கன்னடம், வடமொழி முதலிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.

அக்காலத்தில் தென்னாட்டில் சந்தா சாகிபு என்னும் முஸ்லிம் மன்னர் ஆண்டு வந்தார். சந்தா சாகிபு வீரமாமுனிவரின் ஆழ்ந்த படிப்பையும், அறிவின் பரப்பையும், தூய வாழ்வையும், பெருமையையும் உணர்ந்து, அவருக்கு ‘இஸ்மாத்தி சந்நியாசிஎன்னும் பட்டமளித்துப் பாராட்டினார். ‘இஸ்மாத்தி சந்நியாசிஎன்றும் பாரசீகத் தொடருக்குத் ‘தூய துறவிஎன்பது பொருள்.

கான்ஸ்டண்டைன் ஜோசப்பு பெஸ்கி என்னும் தமது பெயரை ‘தைரியநாதர்என மாற்றிக் கொண்டார். அப்பெயரே, பின்னர் ‘வீரமாமுனிவர்என்னும் விழுமிய பெயராய் வழங்கலாயிற்று.

திருக்குறள், கம்ப இராமாயணம், சீவக சிந்தாமணி முதலிய தமிழிலக்கிய நூல்களைக் கற்றார். தமிழ் மொழியை நன்கு பயின்று கவிதை இயற்றும் ஆற்றலும் பெற்றார். பழனி சுப்பிரதீபக் கவிராயரிடம் சங்க இலக்கியங்களையும், காப்பியங்களையும், இலக்கண நூல்களையும், தமிழ்ப் பனுவல்களையும் தெளிவுரக் கற்றார்.

தஞ்சைக்கு அருகில் உள்ள ஏலாக்குறிச்சிக்கு வருகை தந்து, அங்கு தங்கி சமயப் பணிகளை மேற்கொண்டார். அங்கு ஒரு திருச்சபையை நிறுவினார். புதிய ஆலயம் அமைத்து, அதில் அன்னை மேரியின் திருவுருவை நிறுவனார். அந்த ஆலயம் ‘அடைக்கல மாதா ஆலயம்என்றழைக்கப்படுகிறது. ஏலாக்குறிச்சியில் சமயப்பணி ஆற்றிக்கொண்டு இருந்த போது, சித்த மருத்துவ பணியிலும் ஈடுபட்டார். அரியலூர் பெருநிலக்கிழார் அரங்கப்ப மழவராயரின் இராச பிளவை என்னும் நோயைக் குணமாக்கி, நூற்று எழுபத்தைந்து ஏக்கர் நிலத்தை 05.08.1735 அன்று நன்கொடையாக பெற்றார். அதற்குரிய கல்வெட்டு இன்றும் பேணி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

விருத்தாசலம் என்று தற்போது அழைக்கப்படும் திருமுதுகுன்றத்தை அடுத்த கோனான்குப்பம் என்னும் ஊரில் சமயப்பணி ஆற்றியதுடன், அங்கு தேவமாதாவுக்கு ஒரு ஆலயம் எழுப்பினார்.

`ஜைனமத நூலான `சீவக சிந்தாமணியைப் போன்ற, கிறித்துவ மதத்துக்காகவே சிறந்த காவியம் ஒன்றைப் படைக்க விருப்பம் கொண்டார். `தேம்பாவணிஎன்னும் காப்பியத்தை எழுதினார். இக்காப்பியம் தமிழில் தோன்றிய முதல் கிறித்துவக் காப்பியம் என்று போற்றப்படுகிறது. வேற்று நாட்டைச் சேர்ந்த ஒருவர், தமிழகம் வந்து, தமிழ் பயின்று, சிறந்த காப்பியம் ஒன்றைத் தமிழில் படைத்த பெருமைக்குரியவர் வீரமாமுனிவர்!

தேம்பாவணி மூன்றாயிரத்து அறுநூற்றுப் பதினைந்து விருத்தப்பாக்காளால் ஆனது. இந்நூல் மூன்று காண்டங்களையும், 36 படலங்களையும் கொண்டுள்ளது. மதுரை தமிழ்ச்சங்கத்தில் தமிழ் அறிஞர்களால் தேம்பாவணி வெகுச் சிறப்பாக அரங்கேற்றம் செய்யப்பட்டது. தமிழ் அறிஞர்கள் நூலின் சிறப்பினை போற்றியதோடு ‘தையரிநாதருக்கு ‘வீரமாமுனிவர்என்னும் சிறப்புப் பட்டம் வழங்கி பாராட்டினார்கள்.

`தேம்பாவணிக் காப்பியத்தில், காலப்போக்கில் இடைச்செருகல் அமைந்துவிடாமல் இருக்க எச்சரிக்கையாக, பாடல்கள், படலங்களின் எண்ணிக்கைகளைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டியுள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, பாடல்களில் சில மேல் நாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட சிறப்புப் பெற்றது. தமிழில் முதன் முதல், முழுமையாக அச்சில் வந்த சிறப்புடையது. கீர்த்தனை, சிந்து, வசன காவியம், விருத்தியுரை, உரைநடை, சுருக்கம் ஆகிய பல்வேறு வடிவங்களைக் கொண்ட பெருமையுடையது. `அன்பை விதைப் போருக்கு அன்பே கிட்டும்என்ற உயர்ந்த சிந்தனையை ஊட்டுவது. `தேம்பாவணிக் காப்பியம், தமிழ்நாட்டு மரபோடு ஒன்றிய, தீந்தமிழ்க் காப்பியம் எனக் கிறித்துவ மக்களால் போற்றப்படும் புனித நூலாகும்!

`தேம்பாவணிகாப்பியத்தை இயற்றியதற்காக வீரமாமுனிவருக்கு, `செந்தமிழ்த் தேசிகர்என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

சென்னைக் கலெக்டராய் இருந்த எல்லீசு பிரபு என்பவர் தேம்பாவணியினை அகில உலகிற்கும் அறிமுகம் செய்திடக் கருதி, அந்நூலில் உள்ள சில செய்யுட்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து வெளியிட்டார்.

தமிழ் இலக்கணத்தை விரிவாக ஆராய்ந்து `தொன்னூல் விளக்கம்என்ற இலக்கண நூல் இயற்றியுள்ளார். அந்நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து கூறுகளையும் அழகிய முறையில் விளக்கியுள்ளார்.

பல பெயர்களைக் கண்ட பொருட்களின் பெயர்ச் சொற்களைத் தொகுத்துப் `பெயரகராதிஎனவும், பொருள்களின் பெயர்களைத் தொகுத்து `பொருளகராதிஎனவும் சொற்கள் பலவாகக் கூடிநின்று ஒரு சொல்லாக வழங்குவதைத் தொகுத்துத் `தொகையராதிஎனவும், எதுகை மற்றும் ஓசை ஒன்றாக வரும் சொற்களை வரிசைப்படுத்தித் `தொடையகராதிஎனவும் அமைத்துத் தமிழுக்குச் செழுமை சேர்த்தவர்! `சதுரகராதிகண்ட பெருமையும் வீரமாமுனிவரையே சாரும். தமிழ் மொழியில் தோன்றிய நிகண்டுகளில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது இந்தச் ` சதுரகராதி.

திருக்காவலூர்த் திருத்தலத்தையும், ஏலாக்குறிச்சியில் உள்ள அடைக்கலமாதாவையும் போற்றும் வண்ணம் `திருக்காவலூர் கலம்பகம்பாடியுள்ளார்.

செந்தமிழ் மொழியில் பயிலும் சொற்களை வகுத்தும் தொகுத்தும் அகராதி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உழைத்தார். அவரது இடைவிடா உழைப்பின் பயனாக 1732 ஆம் ஆண்டு ‘சதுரகராதிஎன்னும் பெயரால் சிறந்த ஓர் அகராதி வெளிவந்தது. இதுவே தமிழில் வெளிவந்த முதல் அகராதி ஆகும்.

ஒரு மொழி அகராதி சதுரகராதி, இரு மொழி அகராதி-தமிழ்-இலத்தீன்-அகராதி. மூன்று மொழி அகராதி போர்த்துக்கீஸ்-இலத்தீன்-தமிழ்-அகராதி உருவாக்கியதால், `தமிழ் அகராதியின் தந்தைஎனப் போற்றப்பட்டார்.

வீரமாமுனிவர் பிரெஞ்சு-தமிழ் அகராதியை தயாரித்து 1744 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

அவற்றுள் தமிழ்-இலத்தீன் அகராதியில் ஒன்பதாயிரம் தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் விளக்கமளித்துள்ளார். போர்த்துக்கீசியம்-தமிழ்-இலத்தீன் அகராதியில் நான்காயிரத்து நானூறு போர்த்துக்கீசியச் சொற்களுக்கு தமிழிலும், இலத்தீனிலும் உரை எழுதியுள்ளார். இவ்விரண்டு அகராதிகளின் துணையால் பிற நாட்டினர் தமிழைக் கற்பதற்கும், தமிழர் பிற மொழிகளைப் பயில்வதற்கு வழி வகுத்தார்.

வீரமாமுனிவர் மேனாட்டு மொழிகள் பலவற்றை கற்றுத் தேர்ந்த பண்டிதர். அவர் அம்மொழிகளில் உள்ள வசன நூல்கள் பலவற்றைப் படித்து மகிழ்ந்தவர்; அம்மொழிகளைப் போல தமிழ் மொழியிலும் வசன நூல்கள் பெருகுதல் வேண்டும் என்னும் விருப்பம் கொண்டார் அவ்விருப்பத்தால் வசன நூல்கள் பல எழுதித் தமிழ் மொழியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டார்.

வீரமாமுனிவர் எழுதி அளித்த வசன நூல்களுள் ‘பரமார்த்த குரு கதைஎன்னும் நூல் தலைச்சிறந்தது ஆகும். அந்நூல் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி, தெலுங்கு கன்னடம் உட்பட 54 மொழிகளில் மொழிப் பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.

`பரமார்த்த குரு கதையைத் தமிழில் எழுதி உரைநடை வளர்ச்சிக்கு வித்திட்டார். அந்நூல் `எள்ளல் சுவைமிகுந்த இலக்கிய உரைநடை என்பதால், இவர், `உரைநடைச் செம்மல்எனவும் அழைக்கப்பட்டார்.

தமிழில் வரலாற்று நூல்கள் வருவதற்கு, அடித்தளமிட்டவர் வீரமாமுனிவர்! அவர் எழுதிய `வாமன் சரித்திரம்அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!

தொன்னூல் விளக்கம், `செந்தமிழ் இலக்கணம் , `கொடுந்தமிழ் இலக்கணம், `இலக்கணத் திறவுகோல்ஆகிய இலக்கண நூல்களையும், `திருக்காவலூர் கலம்பகம், `கித்தேரியம்மாள் அம்மானை, `அடைக்கல மாலை, `அடைக்கலநாயகி மேல் வெண் கலிப்பாமுதலிய சிற்றிலக்கியச் செய்யுள்களையும், `வேதவிளக்கம், `வேதியர் ஒழுக்கம், `பேதகம் மறுத்தல்போன்ற உரைநடை நூல்களையும் படைத்துள்ளார்! வீரமாமுனிவரின் வேதியர் ஒழுக்கம் என்னும் நூல் தெலுங்கிலும், கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “பெஸ்கியாரின் உரைநடை நூல்களுள் வியத்தகு நூல் வேதியர் ஒழுக்கமேஎன்று ஜி.யூ.போப் பாராட்டியுள்ளார். பலரும் படித்து பயன் பெறத்தக்க வசன நூல்கள் பலவற்றை ஆக்கித் தந்து தமிழ் மொழிக்குப் பாடுப்பட்ட வீரமாமுனிவரை ‘வசன நடை வல்லாளர்என்றும் ‘தமிழ் மறுமலர்ச்சி உரைநடையின் தந்தைஎன்றும் தமிழுலகம் போற்றிப் பாராட்டியது.

வைத்திய நச காண்டம்என்னும் நூலில் வீரமாமுனிவர் முப்பது மருந்துகளின் செயல்முறைகளைக் கூறியுள்ளார். இந்நூலை போளூர் நாராயணசாமி பதிப்பித்துள்ளார். வீரமாமுனிவரின் ‘இரணவாகடம்என்னும் மருத்துவ நூலை வேங்கடாசலமும், ‘அநுபோக வைத்திய சிகாமணிஎன்னும் நூலை வாசுதேவனும் பதிப்பித்துள்ளனர்.

திருக்காவலூரில் ஒரு கல்லூரியை ஆரம்பித்து அதில் தாமே தமிழாசிரியராக இருந்து இலக்கணம் கற்பித்தார்.

தமது வாழ்நாளில் முப்பத்தைந்து நூல்கள் படைத்தளித்துள்ளார். அகராதி ஆக்கம், இலக்கணப் படைப்பு, எழுத்து வரிவடிவச் சீர்திருத்தம், உரைநடை மறுமலர்ச்சி, கடித இலக்கிய வளர்ச்சி, காப்பியப்புனைவு, சித்த மருத்துவ நூலாக்கம், சிறுகதைத் தோற்றம், சிற்றிலக்கிய எழுச்சி, தமிழ் இலத்தீன் உறவுப்பாலம், மொழியியல் முனைப்பு, வள்ளுவத்தை வையக நூலாக்கும் முயற்சி, சமய நல்லிணக்கச் சால்பு என்று பல்வேறு துறைகளில் வீரமாமுனிவர் நற்பணியாற்றியுள்ளார்.

தமிழகத்தில் வாழ்ந்த புலவர்களுள் பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர் வீரமாமுனிவரே! இலக்கண அறிவு, இலக்கியப் புலமை, மொழியியல் உணர்வு, பக்தி இலக்கிய ஆற்றல், ஆய்வியற் சிந்தனை, பண்பாட்டில் தோய்வு எனப்பல்வகையிலும் சிறந்தவர்! அவர்தம் திறமையைப் பயன்படுத்தித் தமிழுக்கு ஆற்றியுள்ள பணிகள் தமிழக வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும். தமிழுக்காகவே வாழ்ந்து தொண்டு செய்து புகழ் எய்திய வீரமாமுனிவர் 04.02.1747ஆம் நாள் அம்பலக்காட்டு குருமடத்தில் இயற்கை எய்தினார். 

வீரமா முனிவர் தைரிய நாதர் விரிதமிழ்க் கலைமணம் கமழும்

ஆரமா முனிவர் அகத்தியர் போல அருளினார் அரிய நன்னூல்கள்.

சாரமாந் தேம்பா வணியினைத் தொடினும் தமிழ்மணங் கமழுமென் கரமே!

ஈரமா நெஞ்சில் இடம் பெற்ற நட்டால் இன்பமாய் மலருமென் வாழ்வே!”

 -              என்று கவியோகி சுத்தானந்த பாரதியார் வியந்து போற்றியுள்ளார்.

வீரமாமுனிவர் மாசற்ற யேசுநாதர் காட்டிய நெறியைத் தமிழகம் எங்கும் பரப்பி வெற்றி கண்டவர். பல்வேறு துறைகளில் நூல்கள் ‘இயற்றித் தமிழ் மொழிக்குச் செயற்கரிய பணி செய்து சிறப்புற்றவர்என்று பெரும்புலவர் ஈ.பண்டாரம் நம்பியார் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

- பி.தயாளன்

Pin It

இசைக்கருவிகளை நம் தமிழ் முன்னோர், நரம்புக் கருவிகள் (யாழ், தம்புரா, வீணை போன்றவை), துளைக் கருவிகள் (புல்லாங்குழல், நாதஸ்வரம்), தோற்கருவிகள் (தவில், மிருதங்கம்), கன கருவிகள் (ஜால்ரா, ஜலதரங்கம்) என்று நான்கு வகையாகப் பிரித்திருந்தனர். ‘இனிது’ என்று வள்ளுவப் பெருமான் சொல்லும் இசையையுடைய யாழ் (குறள்: 66), தந்தி அல்லது தத வாதியங்கள் (CHORDOPHONES) என்று அழைக்கப்படும் நரம்புக் கருவிகளுள் ஒன்றாகும். தம்புரா, வீணை, வயலின், கோட்டு வாத்தியம், மாண்டலின் போன்றவை அனைத்தும் நரம்பு கருவிகளே. வீணை, அரங்கிசையில் மையமாக வைத்து வாசிக்கப்படும் கருவியாக இருப்பதால், வீணையின் முந்திய வடிவமான யாழும் அதே சிறப்பைப் பெற்றிருக்க வேண்டும். நரம்புகளால் யாக்கப்பட்டதால், அல்லது கட்டப்பட்டதால், யாழ் அப்பெயர் பெற்றது என்று அறிஞர் கூறுவர்.

யழ மடடம சறபமவேடன் விலங்குகளைக் கொல்ல, அம்பைச் செலுத்திய வேளையில் நாணிலிருந்து இனிய இசையொலி எழுவதைக் கேட்டு மகிழ்ந்தான். இதனைத் தொடர்ந்தே, வில் யாழ் உருவாயிற்று என்று கலைமாமணி முனைவர் செல்லத்துரை அடிகளார், தனது “தென்னக இசையியல்” ஆய்வேட்டில் குறிப்பிடுகின்றார்.

யாழின் இசையொலி பெருக்கி ‘தணக்கு’ என்ற மரத்தாற் செய்யப்பட்டது. படகு வடிவமான இது ஒரு போர்வைத் தோலால் மூடப்பட்டிருக்கும். போர்வைத் தோலின் நடுவிலுள்ள மெல்லிய குச்சியின் வழியாக நரம்புகள் கிளம்பி, கோடு என்று அழைக்கப்பட்ட தண்டியோடு பிணைக்கப்பட்டிருக்கும். யாழில் உள்ள முறுக்காணிகள் மாடகம் என்று அழைக்கப்பட்டன. நரம்புகள் முறுக்காணிகளில் சுற்றப்பட்டிருக்கும்.

“பத்தருங் கோடும் ஆணியு நரம்புமென்று

இத்திறத்துக் குற்றநீங்கிய யாழ்கையில் தொழுது வாங்கி”

(சிலம்பு, கானல் வரி, 3-4)

என்று சிலம்பு பாடுகின்றது.

பண்டைத் தமிழர் யாழை 21 நரம்புகளுடைய பேரியாழ், பத்தொன்பது நரம்புகளையுடைய மகர யாழ், 16 நரம்புகளையுடைய சகோட யாழ், 7 நரம்புகளையுடைய செங்கோட்டு யாழ் என்று வகைப்படுத்தியிருந்தனர் என்ற செய்தியை,

“ஒன்று மிருபது மொன்பதும் பத்துடனே

நின்ற பதினான்கும் பின்னேழும் - குன்றாத

நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொல்முறையே

மேல் வகை நூலோர் விதி”

என்ற பாடல் வரிகளிலிருந்து அறியலாம் என்று சிலப்பதிகாரத்தின் அண்மைக்கால உரையாசிரியரான ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் அறிவிக்கினறார். இக்காப்பியத்தின் அரங்கேற்று காதை,

“யாழுங் குழலுஞ் சீரும் மிடறும்” (26)

(சீர்: அகக் கூத்திற்கும் புறக் கூத்திற்குமுரிய இருவகை தாளக் கூறுபாடுகள்)

(மிடறு: சாரீர வீணை என்று அழைக்கப்படும் மிடற்றுப்பாடல்)

“வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்தாங்கு” (63)

(பட்டடை : நரம்புப் பட்டடை)

என்ற அடிகளில் யாழைக் குறிப்பிடுகின்றது.

மேலும், இளங்கோ அடிகள், மதுரைக் காண்டத்தின் புறஞ்சேரியிறுத்த காதையில், “செந்நிறம் புரிந்த செங்கோட் டியாழில்” (106) என்று குறிப்பிட்டு, தொடர்ந்து, செங்கோட்டி யாழில், மெட்டு என்ற சொல்லால் அறியப்படும் தந்தரிகரம் என்ற உறுப்பும், திவவு என்று வார்க்கட்டும் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும் என்று கூறுகின்றார். யாழின் பண்ணுக்குரிய, முதல் நான்கு தவிர்த்த பிற மூன்று நரம்புகளும், தாளமும் சுருதியும் கூட்டுவனவாகலின் இவை ஒற்றும் பற்றும் என்றும் அழைக்கப்பட்டன.

அடியார்க்கு நல்லார் அவர்களை மேற்கோள் காட்டி, வேங்கடசாமி நாட்டார் அவர்கள், செங்கோட்டி யாழின் ஏழிசையில் முதலிற் தோன்றியது தாரம் என்றும் தாரத்தில் உழையும், உழையிற் குரலும், குரலுள் இளியும், இளியுள் துத்தமும் துத்தத்துள் விளரியும், விளரியுட் கைக்கிளையும் என்ற பண்கள் பிறக்கும் என்ற கோட்பாட்டை,

“தாரத் துழைதோன்றப் பாலையாழ் தண்குரல்

ஒரு முழைத் தோன்றக் குறிஞ்சியாழ் - நேரே

இளி குரலிற் றோன்ற மருத யாழ் துத்தம்

இளியிற் பிறக்கநெய்த லியாழ்”

என்ற பா மூலம் அறியலாம் என்று சொல்லுவது, பண்டைத் தமிழரின் இசையறிவின் ஆழத்தையும், அகலத்தையும் படம்பிடித்துக் காட்டுகிறது. செங்கோட்டி யாழின் ஏழ்நரம்பும் ஒத்திசைப்பதற்கேற்ப, பாலையாழ், முல்லையாழ், குறிஞ்சியாழ், மருத யாழ், நெய்தல் யாழ் என்ற பெயரமைந்த பண்கள் உருவாவதாக அவர் சுட்டும் செய்தியிலிருந்து, நிலத்தின் தன்மையோடு இணைந்த திணைப்பகுப்பு இருந்ததுபோல், பண்வழி பகுப்பும் இருந்திருக்க வேண்டும் என்று அறியமுடிகிறது.

நெய்தல் யாழுக்கு விளரி என்பதும் பெயர். ஏனைய நான்கும் பெரும்பண்கள் என்று அறியப்பட்டன. குறிஞ்சி யாழுக்கு யாம யாழ் என்ற பெயரும், முல்லை யாழுக்குச் செவ்வழி யாழ் என்ற பெயரும் உண்டு. எழும் இசைக்கேற்ப, நரம்புகளை, நட்பு நரம்பென்றும், பகை நரம்பென்றும், இணை நரம்பென்றும் யாழாசிரியர் வகைப்படுத்தியிருந்தனர். இஃதன்றி, ஏழிசையும், பன்னிரு கோள்களோடு பொருத்திப் பார்க்கப்பட்டது. இதனை, அடியார்க்கு நல்லார் உரையை மேற்கோள்காட்டி, வேங்கடசாமி நாட்டார் அவர்கள், “இடபம், கடகம், சிங்கம், துலாம், தனுசு, கும்பம், மீனம் என்னும் ஏழினும் ஏழிசை நிற்பது ஒரு முறை என்றும், துலாம், தனுசு, கும்பம், மீனம், இடபம், கடகம், சிங்கம் என்னும் ஏழினும் நிற்பது மற்றோர் முறை என்றும் விளக்குகிறார். இசையையும், வானவியலையும், பண்டைத் தமிழர் இணைத்துப் பார்த்திருப்பது கற்போருக்கு வியப்பளிக்கிறது.

வஞ்சி மூதூர்க்கண், மாலைக் காலத்தே, யாழ் மீட்டும் இள மகளிர் ஆடவருக்கு இசைவிருந்து படைத்த செய்தியை, இக்காண்டத்தின் நடுகற்காதை எவ்வளவு ஆழமாக இயம்புகின்றது! வளைந்த தண்டினையும், இசை பொருந்துதலையுடைய நரம்பினையும், பத்திரினையுமுடைய சீறியாழை மகளிர் அணைத்தெடுத்து, செம்பாலைப் பண்ணுடன், குறிஞ்சிப் பண்ணையும், தேனோடு பாலாய்க் கலந்து, இசைவிருந்து படைத்தனர் என்ற நிகழ்வை, இளங்கோ அடிகளார்,

“வணர்கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழீஇப்

புணர்புரி நரம்பிற் பொருள்படு பத்தர்க்

குரல்குர லாக வருமுறைப் பாலையில்

துத்தங் குரலாத் தொன்முறை இயற்கையின்

அந்தீங் குறிஞ்சி அகவன் மகளிரின்

மைந்தர்க் கோங்கிய வருவிருந் தயர்ந்து” (31-35)

என்ற சொற்கள்மூலம், எவ்வளவு அழகாகப் படம்பிடித்துக் காட்டுகின்றார்!

தமிழ் மண்ணின் ஐந்திணைப் பகுப்பை ஆய்ந்த பேரா. தனிநாயக அடிகளார் தனது “நில அமைப்பும், தமிழ்க் கவிதையும்” நூலில், “திணைக் கவிதைகளும், அவற்றின் உட்பிரிவுகளும், தொல்காப்பியர் தமது பொருளதிகாரத்தை இயற்றுவதற்கு முன்னரே, நீண்டகாலமாக இருந்து வந்தன” என்று கூறுகின்றார். இதனை அடியொற்றி, பாலையாழ், முல்லை யாழ், குறிஞ்சி யாழ், மருத யாழ், நெய்தல் யாழ் என்ற பெயரைமைந்த பண்கள் வழி பகுப்பும், தமிழ் மண்ணில் இருந்திருக்க வேண்டும் என்ற முடிபும் நேரானதே@ சீரானதே. தமிழுக்கும் தமிழருக்கும் பெருங்கேடு வந்துற்றது, தமிழ் நிலத்தின் பெரும் பகுதியைக் கடல் கொண்டபோதுதான். இன்று நமக்குக் கிடைத்துள்ள சங்க இலக்கியங்களுக்கு முன்னரே, பல பேரிலக்கியங்கள் சமைக்கப்பட்டு அவை கடல் வெள்ளத்தில் அழிந்து பட்டன. இத்தகைய கடல் வெள்ளம் கி.மு. 2000 ஆண்டிற்கு முன்னரே ஏற்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர் கருதுகின்றனர். இசை குறித்த, மிக மிக நுணுக்கமான, ஆழமான செய்திகளை உள்ளடக்கிய சிலப்பதிகாரம் போன்ற வேறுபல பேரிலக்கியங்கள் சுமார் 4000 ஆண்டுகட்கு முன்னரே இருந்திருக்கக்கூடும் என்ற கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளும் நிலையில், இலக்கிய வடிவம் பெற்ற நமது பண்டைய இசை மரபுகள், அதற்கு ஓரிரு ஆயிரம் ஆண்டுகள் முன்னரே வழக்கில் இருந்திருக்க வேண்டும் என்பதும், கால ஓட்டத்தில் அவை கவிதைப் படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதும், மிகைப்படுத்தப்படாத, ஏற்புடைக் கருத்தாய் உருவாகின்றது. அதாவது நமது இசை மரபுகள், சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே வழக்கில் இருந்திருக்க வேண்டும்.

சிலப்பதிகாரத்தில் மேற்கூறிய செய்திகள் இடம்பெற்றிருப்பது, பண்டைத் தமிழரின் மொழி, அக்காலத்தில் யாக்கப்பட்ட பேரிலக்கியங்களின் நுண்ணிய இலக்கணத் தன்மை உள்ளிட்ட பல சிறப்புகளினால், பொன் விளக்கென இலங்குதல் போல, அவர் தம் இசையறிவும் மிக உயர்ந்த நிலையில் இருந்துள்ளது என்பதற்குச் சான்றாகும். யாழென்ற இசைக்கருவியின் பல உறுப்புக்கள், அக்கருவி கட்டப்பட்டுள்ள முறை, ஏழிசையையும் எழுப்பவல்ல முறையில், நரம்புகள் பொருத்தப்பட்டுள்ள அமைதி, திணைகளைப் போன்றே பண்களையும் நிலத்தோடு பொருத்திப் பார்க்கும் மரபு, அதற்கும் மேலாக, வான்வெளிக் கோள்களுடன் ஏழிசையை இணைத்துப் பார்க்கும் அறிவு ஆகியவையெல்லாம், இந்த மேன்மை ஒரு சில ஆண்டுகளில் உருவாகியிருக்க முடியாது என்பதையும், இசை மரபுகள் இலக்கியங்களில் பதிவு செய்யப்படுவதற்கு பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே, இவையும், இலக்கிய மரபுகளையொத்து, தமிழர் வாழ்வில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதையும் ஊகிக்க முடிகிறது. சில ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரேயே நமது இசை மரபுகள் வேர் விட்டிருக்க வேண்டும் என்று சொல்வதும் மிகை சார்ந்த முடிபாக இராது.

அண்மைக் காலத்தில், தமிழ் இசையை ஆய்வு செய்து, பல நூல்கள் படைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று, திரு. ரங்க ராமானுஜ ஐயங்கார் அவர்கள் எழுதியுள்ள “தென்னிந்திய (கர்நாடக) இசை வரலாறு” (History of South Indian (Carnatic) Music) என்பதாகும். ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம் 1972-ஆம் ஆண்டு, பம்பாயிலுள்ள “விபாஞ்சி கலை மையம்” என்ற அமைப்பினரால் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலின் கண், “யாழ்” என்ற தலைப்பில் (பக். 28), சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் பதிவு செய்துள்ள இசை குறித்த தகவல்களையெல்லாம் விளக்கிய ஆசிரியர், கீழ்க்கண்ட கருத்துக்களை முன் வைக்கிறார்.

 i.             யாழ் என்பது திராவிட நாகரிகத்தில் உருவான இசைக்கருவி.

ii.             இசையின் மொத்த வடிவத்தையும் தமிழ்ப்படுத்தும் செயல்பாடுகள் இளங்கோ அடிகளின் காலத்திற்கு முன்னரேயேத் துவங்கிவிட்டது.

திராவிட நாகரிகத்தின் தொன்மையை அண்மைக்கால ஆய்வுகள் உறுதி செய்கின்றன. திராவிட நாகரிகத்தின்போதே தமிழ் மண்ணில் மிகச் சிறந்த இலக்கியங்கள் இருந்ததை ஒத்து, மிகவுயர்ந்த இசையும் இருந்துள்ளது. இக்கட்டுரையின் முற்பகுதியில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல, இலக்கிய மரபுகளையொத்து, பண்டைத் தமிழரின் இசை மரபுகளும், இலக்கியங்கள்வழி ஆவணப்படுத்தப்படுவதற்கு ஓரிரு ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே, வழக்கில் இருந்து சிறிது சிறிதாக செழுமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் தெளியலாம்.

இசை வடிவத்தைத் தமிழ்ப்படுத்தும் மரபு அல்லது பணி இளங்கோ அடிகளுக்கு நெடுங்காலம் முன்னரே துவங்கிவிட்டது என்பதோடு தான் நாம் பிணக்குறுகிறோம். திரு. ரங்க ராமனுஜர் குறிப்பிடும் ‘தமிழ்ப்படுத்துல்’ (Tamilisation) என்ற சொல் ஆய்வுக்குரியது. இங்கு ஏற்கனவே சொல்லப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், திராவிட நாகரிகத்தில் உருவான இசை, துவக்கத்திலிருந்தே ஒரு முழுமைத் தன்மையுடன் இருக்கும்போது, அதைத் தமிழ்ப்படுத்தும் நிலை எப்படி எழுந்திருக்கக்கூடும்? திராவிடத் தமிழ் இசையின் கூறுகள், பிற நாகரிகங்களின் இசையில் ஊடுருவியிருக்கலாம். “தமிழ்ப் படுத்துதல்” என்ற கோட்பாட்டுச் சொல் மூலம், தமிழ் இசை பிற மரபுகளிடமிருந்து கடன் வாங்கியதைப் போன்ற தோற்றம் விதைக்கப்படுகிறது. இது தமிழ் இசையின் முழுமைத் தன்மைiயும், தொன்மைiயும் சிறுமைப்படுத்தும் முயற்சியாக நாம் இதனைப் பார்க்க வேண்டும். தனது அரிய நூலையே இளங்கோ அடிகளுக்கு அர்ப்பணித்திருக்கும் திரு. ராமானுஜரின் எண்ணக் களஞ்சியத்தில், இது போன்றதொரு கருத்து இருப்பது வியப்பை அளிக்கின்றது.

எனது வாதத்திற்கு, திரு. ராமானுஜர், யாழ் குறித்து வெளிப்படுத்தியுள்ள இன்னோர் தவறான கருத்து வலு சேர்க்கின்றது. பண்டு, தமிழ் நாடு கிரேக்கத்தோடு கடல் வழி வாணிகம் மேற்கொண்டிருந்த போது, கிரேக்க மது, அந்நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டதைப் போல, மகர யாழும் அந்நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற அவரது கூற்று நூலின் பக். 42-இல் காணப்படுகின்றது. மகர யாழுக்கு “வருணன் ஊர்தி” என்ற பெயரும் இருந்திருக்கவேண்டும் என்பதைக் குறிப்பிடும் ஆசிரியர், ஒரு சிங்கத்தின் அமைப்போடு படைக்கப்பட்ட இம்மகர யாழை, ஓரோவியம் மூலம் அறிமுகப்படுத்துகிறார். இவ்வோவியத்தில் நாம் காணும் நரம்புகளின் எண்ணிக்கை 15 ஆகும். ஆனால் உரையாசிரியர், வேங்கடசாமி நாட்டார், யாழ், நால்வகைப்படுத்தப்பட்டிருப்பதை விளக்கிக் கூறி, இக்கட்டுரையின் துவக்கத்தில் சொல்லப்பட்டுள்ள “ஒன்று மிருபது...” பாடலைச் சுட்டிக்காட்டி, பழந்தமிழ் நூலோர் மகர யாழுக்கு நரம்பு பத்தொன்பதாகும் என்று விதி செய்தியிருந்ததையும் தெளிவுபட உரைக்கின்றார். தமது பரந்து விரிந்த இசையறிவை, நூல் மூலம் தமிழருக்குப் படைத்த திரு. ராமானுஜர், இச்சிறிய முரண்பாட்டை எங்ஙனம் கவனியாது விட்டிருப்பார் என்பது புதிராக இருக்கின்றது.

“சொல்லியல்” (Etymology) அடிப்படையில், மகர யாழ் கிரேக்கத்திலிருந்து தமிழகம் வந்திருக்க வேண்டும் என்ற கருத்துக்கு வலு சேர்க்கும் ஆதாரச் செய்தி எதுவும் மேற்படி புத்தகத்தில் காணப்படவில்லை. பண்டைக் காலத்தில், கிரேக்கத்தில் குரங்குகள் கிடையா. அவை தமிழகத்திலிருந்து தான் தருவிக்கப்பட்டன. குரங்குகளே இல்லாத அற்றைநாள் கிரேக்க மொழியில், குரங்குகளைக் குறிக்கும் சொல் எதுவும் இல்லை. ஆகவே, கிரேக்கர்கள் தமிழ்ச் சொல்லாம் “கவி” என்பதனையே குரங்குகளைக் குறிக்கப் பயன்படுத்தினர் என்பது அறிஞர் முடிபு. “The Bible and Asia” – R.S.  சுகிர்த ராஜா, 2012, பக். 26). இதைப்போல, சொல்லியல் அடிப்படையில், எந்த ஆதாரமுமின்றி, மகர யாழ் கிரேக்கத்திலிருந்து தருவிக்கப்பட்டிருக்கலாம் என்று இந்நூல் கூறுவது ஏற்புடையதாய் இல்லை.

“பிரீ பிரஸ் ஜர்னல்” (Free Press Journal), “தி இண்டியன் எக்ஸ்பிரஸ்” ஆகிய நாளேடுகளில் பணியாற்றி, இவ்வமயம் கேரளாவில் வசித்துவரும் திரு. டி.ஜே.எஸ். ஜார்ஜ் (T.J.S. George), இசைக்குயில் எம்.எஸ் சுப்புலட்சுமி குறித்து, “M.S. – A Life in Music” என்ற தலைப்பில், ஆங்கிலத்தில் ஓர் அருமையான நூலைச் செய்துள்ளார். இவர், திரு. ரங்கராமானுஜ ஐயங்கார் அவர்களது, “மகர யாழ், கிரேகத்திலிருந்து தருவிக்கப்பட்டிருக்கலாம்” என்ற தவறான கருத்தை அடியொற்றி எழுத முனைந்த வேளை, “யாழ் கிரேக்கத்திலிருந்து தருவிக்கப்பட்டிருக்கலாம் - ஆதாரம் திரு. ராமானுஜரது நூல்” என்று பக். 288-ல் பிழைபடப் பதிவு செய்துள்ளார். இவரது கருத்தின்படி, அனைத்து யாழ் வகைகளுமே கிரேக்கத்திலிருந்துதான் தருவிக்கப்பட்டிருக்க வேண்டுமென்ற பொருள் தோன்றுகிறது. எவ்வளவு எளிதாக தமிழரின் ஓர் அடையாளம் உரிமை இழக்கிறது.

சொல்லியல் பற்றி நாம் சிந்திக்கும்போது, “யாழ்” என்ற தமிழ்ச் சொல்லுக்கு, ஒலி அமைதியின் வழி, அண்மையில் இருக்கக் கூடியதாக “லையர்” (Lyre) என்ற லத்தீன் சொல் இருப்பது தெரிய வருகின்றது. ய, ல ஆகிய ஒலிகள் இவ்விரு சொற்களிலும் ஒருமை இருப்பதைக் காட்டுகின்றன. பண்டு, மெசபடோமியா என்று அழைக்கப்பட்ட இன்றைய ஈசாக் நாட்டின் உர் என்ற இடத்தில் அகழ்வாராய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட லையர் என்ற இசைக்கருவி சுமார் கி.மு. 2300 ஆண்டுகட்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கலாமென்று தொல்லியல் அறிஞர் கருதுகின்றனர். கிரேக்க மொழியில் உருவான் இச்சொல், லத்தீன் மொழியிலும் அவ்வாறே பயன்படுத்தப்பட்டிருக்கலாம். கிரீட் என்ற நாட்டில், மினோவா இன மக்களின் புராதன குடியிருப்புப் பகுதியில் காணப்படும் சில ஓவியங்களில் லையர் காணப்படுகின்றது. இன்று ஆங்கில மொழியில் நாம் பயன்படுத்தும் “லிரிக்கல்” (Lyrical) “லிரிசிஸ்ட்” (Lyricist) போன்ற சொற்களெல்லாம் லையர் என்ற சொல்லிலிருந்தே கிளை விட்டிருக்க வேண்டும் என்பதும் புலனாகிறது. பண்டைய கிரேக்கர்களின் பாடல் நிகழ்வுகள், லையர் இசையின் துணையோடு அமைக்கப்பட்டன.

பண்டைய கிரேக்கர்கள், ஆமை ஓட்டை வைத்துத்தான் லையர் என்ற இசைக்கருவியை உருவாக்கினர்.

கிரேக்கப் புராணங்கள், லையர் குறித்து ஒரு கதை சொல்லுகின்றன. ஹெர்மஸ் என்பவன், அப்பல்லோ என்ற கடவுளின் பசுக்களைத் திருடிவிட்டான் என்றும், ஆதனால் பெருங்சினமுற்ற அப்பல்லோவை, ஹெர்மஸ், ஆமை ஓட்டினால் வடிவமைக்கப்பட்ட லையர் மூலம் இசையெழுப்பி அமைதிப்படுத்தினான் என்றும் இக்கதை செப்புகின்றது.

கிரேக்கர்களின் இந்த “லையர்” இசைக்கருவியில், 3,4,7,8,10 ஆகிய எண்ணிக்கையில் நரம்புகள் பலவாறாகக் கட்டப்பட்டன. இந்த எண்ணிக்கை வேறுபாட்டிற்கேற்ப, லையரைக் குறிக்க, வேறு வேறு சொற்கள் பயன்பாட்டில் இல்லை. விவிலிய நூல், கி.மு. 1010லிருந்து, 970 வரை இஸ்ரேல் நாட்டின் மன்னன் தாவீது என்பானைப் பற்றிச் சொல்லும் பகுதியில் (1 SAM. 16:23), லையர் என்ற இசைக் கருவியைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. விவிலிய நிகழ்வுகள் சிலவற்றின் வரலாற்றுத் தன்மையை ஆய்ந்த தொல்லியல் அறிஞர், இவற்றின் உண்மைத் தன்மையை ஏற்றுக்கொண்டுள்ளனர். தாவீது, துயரத்தில் உழன்று கொண்டிருந்த தன் நண்பன் சால் என்பானுக்கு, அமைதியையும் மகிழச்சியையும் தரும் பொருட்டு, லையர் என்ற இசைக்கருவியை மீட்டினான் என்று இப்பகுதி பகலுகிறது.

இன்றைய ஈராக் நாட்டின் உர் பகுதியில் அகழாராய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இசைக்கருவி, சுமார் 2300-ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்ற தொல்லிய அறிஞரின் கூற்றுக்கொப்ப, தமிழ் மண்ணில் உருவான யாழும், நெடிய இசை மரபுகளின் அடிப்படையில், சிலப்பதிகாரக் காலத்திற்கு இரண்டு அல்லது மூனக்று ஆயிரம் ஆண்டுகள் முன்னரே தமிழரின் பயன்பாட்டில் இருந்து வந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்வதிலும், ஆகவே இது (யாழ்), திரு. ராமானுஜர் கூறியிருப்பதுபோல கிரேக்கத்திலிருந்து கடல் வாணிகம் அல்லது பரிமாற்றம் மூலம் தருவிக்கப்பட்ட இசைக்கருவியாய் இருந்திக்க முடியாது என்று முடிவு செய்வதிலும் என்ன தவறு இருக்கமுடியும்? கிரேக்கத்தில் லையர் என்ற இசைக்கருவி இல்லாதிருந்த சூழ்நிலையில், தமிழகத்திலிருந்து தருவிக்கப்பட்ட யாழ் என்றும் இசைக்கருவியையே, அதே பெயரில் கிரேக்கரும் பயன்படுத்தத் துவங்கியிருக்கக்கூடும் என்றும், இந்த ‘யாழ்;’ என்னும் சொல்லே, கால ஓட்டத்தில் அவர் மொழியில் திரிந்து லையர் என்று பயன்பாட்டுக்கு மாறியிருக்கக்கூடும் என்று முடிவு செய்வதிலும் என்ன தவறு இருக்க முடியும்?

மாறாக, ‘யாழ்’, ‘லையர்’ என்ற இரு கருவிகளுமே, உலகின் இரு பழம் நாகரிகங்களில், ஒன்றுக்கொன்று தொடர்பின்றி, சார்பு நிலை எதுவுமின்றி தனித்தனியே உருவாகியருக்கலாம் என்ற கருத்தும் ஏற்புடையதாகவே இருக்கும்.

(கட்டுரையாளர் இசைத்துறையைச் சார்ந்தவர் அல்லர். ஒரு சிந்தனையாளர் என்ற முறையிலும், சிலப்பதிகாரத் தகவுகளின் அடிப்படையிலும் இக்கட்டுரையைச் செய்துள்ளார்.)

துணை நூற் பட்டியல்

1.            சிலப்பதிகாரம், இளங்கோ அடிகள், ந.மூ. வேங்கடசாமி நாட்டார் அவர்களது உரையுடன், ராமையா பதிப்பகம், சென்னை. 2015.

2.            History of South Indian (Carnatic) Music, R. Rangaramanuja Ayyangar, Vipanchi Cultural Trust, Bombay – 20, 1972.

3.            “தென்னக இசையியல்”, கலைமாமணி முனைவர் செல்லத்துறை அடிகளார், வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல், 1984.

4.            “M.S. – A Life in Music”, T.J.S. Geroge, Harper & Collins, New Delhi, 2004.

5. http:/ en.m. Wikipedia, org.

6. “The Bible and Asia”, - R.S. Sugirtharaja, Harvard University Press, 2013.

7. The Old Testament.

- எம்.எப்.ஐ.ஜோசப் குமார்

Pin It

“எப்பாத் துறைக்கும் இவனோர் பழம் புலவன்

ஆப்பாத் துரையறிஞன் ஆழ்ந்தகன்ற முப்பால்பா

நூலறிவு நூறு புலவர்கள் சேரினியன்

காலறிவு காணார் கனிந்து”

                                                                                                                -பாவேந்தர் பாரதிதாசன்.

             Ka appathurai   “ஆய்வறிஞர் அப்பாத்துரையார் எடுக்க எடுக்கக் குறையாத ஓர் அறிவுச் சுரங்கம்; பன்மொழிப் புலவர்; தென்மொழி தேர்ந்தவர்; யாரும் செய்ய முடியாத சாதனையாகப் பலதுறைகள் பற்றிய நூற்றுக் கணக்கான நுல்களைத் தமிழுக்குத் தந்தவர்; அகராதி தொகுத்தவர்; அக்கலையில் ஆழம் கால் கொண்டவர்; சிறந்த சிந்தனையாளர்; பகைவர் அச்சுறும்படி சொல்லம்புகளை வீசும் சொற்பொழிவாளர்; மொழி பெயர்ப்பாளர்; கனிந்து முதிர்ந்து பழுத்த பேரறிவாளர்” –என்று, பதிப்புச் செம்மல் இவ்வாறெல்லாம், முனைவர் ச.மெய்யப்பன் போற்றிப் புகழ்ந்திட்ட பூந்தமிழ் அறிஞர்!

                கா. அப்பாத்துரையார், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய் மொழி என்னும் சிற்றுரில், சாசிநாதப்பிள்ளை-முத்து இலக்குமி அம்மாள் வாழ்வினையருக்கு 24-06-1907 அன்று பிறந்தார்.  பெற்றோர் சூட்டிய பெயர் “நல்லசிவம்” என்பதாகும்.  தொடக்கக் கல்வியை ஆரல்வாய் மொழியிலும், பள்ளிக் கல்வியை நாகர்கோவிலிலும், கல்லூரிக் கல்வியை திருவனந்தபுரத்திலும் பயின்றார்.  ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

                இந்தி மொழியில் ‘விசாரத் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தார்.  திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் தனிவழியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டதாரியானார்.  சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து எல்.டி.பட்டம் பெற்றார்.

                திருநெல்வேலி, ‘மதுரைதிரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி ‘யில் 1937 முதல் 1939 முடிய இந்தி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.  காரைக்குடி, ‘அமராவதிப் புதூர்’-குருகுலப் பள்ளியில் அப்பாத்துரையாத் தலைமையாசிரியராகப் பணியாற்றிய போது மாணவராயிருந்த கவிஞர் கண்ணதாசன் இவரிடம் பயின்றார்.

                சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.  நடுவண் அரசின் செய்தித் தொடர்புத் துறையில் 1947 முதல் 1949 முடிய பணியாற்றினார்.  அப்பொழுது, ‘இந்தியாவின் மொழிச்சிக்கல்’ என்ற ஆங்கில நூலை எழுதியதால் வேலை இழந்தார்.

                சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் அகராதித் தயாரிப்பில் 1959 முதல் 1965 முடிய அதன் ஆசிரியராகப் பணி செய்தார்.  மேலும், தமிழக வரலாற்றுக்குழு உறுப்பினராக 1975 முதல் 1979 வரை இருந்துள்ளார்.

                ‘திராவிடன்’, ‘ஜஸ்டின்’, ‘இந்தியா’, ‘பாரததேவி’, ‘சினிமா உலகம்’, ‘லிபரேட்டர்’, ‘விடுதலை’, ‘லோகோ பகாரி’, ‘தாருஸ் இஸ்லாம்’, ‘குமரன்’, ‘தென்றல்’ முதலிய இதழ்களில் இவரது பணி தொடர்ந்தது.

                அப்பாத்துரையார் இந்தி மொழி ஆசிரியராகப் பணி புரிந்தவர்.  ஆனால் தமிழகத்தில் இந்திமொழி கட்டாயபாடமாகத் திணிக்கப்பட்ட பொழுது 1938-39 ஆம் ஆண்டுகளில் நாடெங்கும் நடந்த போரில் பங்கு கொண்டார்.

                அப்பாத்துரையார் இந்திமொழி ஆசிரியராகப் பணி புரிந்தவர்.  ஆனால் தமிழகத்தில் இந்திமொழி கட்டாய பாடமாகத் திணிக்கப்பட்டபொழுது 1938-39 ஆம் ஆண்டுகளில் நாடெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் பங்கு கொண்டார்.

                தந்தை பெரியார் தலைமையில் 1948 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அப்பாத்துரையாரும் அவரது மனைவி அலமேலு அம்மையாரும் பெரும்பங்கு கொண்டனர்.

                ‘குமரிக்கண்டம்’ அல்லது ‘கடல்கொண்ட தென்னாடு’, ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’, ‘சரித்திரம் பேசுகிறது’, ‘சென்னை நகர வரலாறு’, ‘ஜ.நா.வரலாறு’, ‘கொங்குத் தமிழக வரலாறு’ முதலிய வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.

                திராவிட நாகரிகம், திராவிடப் பண்பு, திராவிடப் பாரம்பரியம், திராவிட மொழி என்பவற்றுக்கெல்லாம் மிகப் பொருத்தமான விளக்கங்களைத் தம் வரலாற்று நூற்களில் அளித்துள்ளார்.

                அப்பாத்துரையாரின், ‘தென்னாட்டுப் போர்க்களங்கள், என்ற வரவாற்று நூல், போர்க்களங்களில், பட்டியலன்று, போர்க்களங்களின் போர்களின் பின்புலங்கள், போர்ச் செயல்கள், போரின் விளைவுகள், போர்களின் வழியாக புலப்படும் அரசியல் நெறிகள் ஆகியவற்றையெல்லாம் ஆராயும் நூலாக அமைந்து ள்ளது என வரலாற்று அறிஞர்கள் போற்றுகின்றனர்.

                ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ என்ற நூல் குறித்து அறிஞர் அண்ணா, “இந்நூல் என்னை மிகவும் கவர்ந்த நூலாகும். அந்த நூலின் ஒரே ஓர் ஏட்டை எழுத, அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளைத் தேடிப் பார்த்திருக்க வேண்டும்.  எத்தனை ஆயிரம் கவிதைகள், இலக்கியங்கள் திரட்டிப் பார்த்திருக்க வேண்டும் என்பதை எண்ணி வியந்தேன்” என்று விதந்துரைத்துள்றளார்!

                அப்பாத்துரையார் தமது வரலாற்றுப் படைப்புகள் மூலம் கீழ்க்கண்ட கோட்பாடுகளை நிறுவியுள்ளார்.

1)            தமிழரினம் உலகின்  நாகரிகத் தொட்டில்களுள் மூத்த முதன்மையுடையது.

2)            தமிழர் பண்பாட்டுக் கூறுகள் உலகின் பல பண்பாட்டுக் கூறுகளோடு கலந்து கரைந்துள்ளன.

3)            தமிழ்த் தேசிய வரலாறு, இந்தியத் தேசிய வரலாறு, உலகத் தேசிய வரலாறு ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று நீங்காப் பிணைப்புடையவை.

“அப்பாத்துரையார் தமிழின் மூலத்தையே ஆராய முனைற்தவர்; தமிழ் இனத்தின் வரலாற்றைத் துருவித் துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்துக்கும் மற்ற இனத்துக்கும் இடையே பகைமூட்ட அல்ல; தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” –என அறிஞர் அண்ணா போற்றிப் புகழ்ந்துரைத்துள்ளமை முற்றிலும் உண்மையே!

                ‘கிருஷ்ண தேவராயர்’, ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்’, ‘டேவிட் லிவிங்ஸ்டன்’, ‘அரியநாத முதலியார்’, ‘கலையுலக மன்னன் இரவிவர்மா`, `வின்ஸ்டன் சர்ச்சில்`, `அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்`, `அறிவுலக மேலை பெர்னாட்ஷா`, `கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர்அலி`, `ஆங்கிலப் புலவர் வரலாறு`, சங்க காலப் புலவர்கள் வரலாறு`, `அறிவியலாளர் பெஞ்சமின் ஃபிராங்கிளின்` -உட்பட பலரின் வாழ்க்கை வரலாறுகளை அரிய பல நூல்களாகப் படைத்துள்ளார். 

                சங்க காலப் புலவர்களில் பிசிராந்தையார், கோவூர் கிழார், ஒளவையார், பெருந்தலைச் சாத்தனார் முதலிய நால்வர் பற்றி எழுதியுள்ளார்.

                `கலையுலக மன்னன் இரவிவர்மா` என்னும் நூலில், ``இரவிவர்மா ஓவியத்தைத் தாய்மொழியாகக் கொண்டு அதில் கவிதை வரைந்த கலைஞன்`` என்று அவர் கூறியிருப்பதில் அனைத்துமே அடங்கிவிடுகிறது!

                `நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்` என்னும் வரலாற்று நூலில், நேதாஜியை இந்தியாவின் நெப்போலியனாகக் காண்கிறார்.  மேலும், ``இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளரை எதிர்க்கத் துணிந்தவர்கள் இருவரே.  இவர்களுள் காலத்தால் முந்தியவர் `கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி! மற்றவர், கிழக்காசியாவிலிருந்து கொண்டு இந்தியாவின் வீரக்கொடியை வானளாவப் பறக்கவிட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ்`` என்று மொழிந்து முத்திரை பதித்துள்ளார்.

                `அறிவுலக மேதை பெர்னார்டு ஷா` வைப்பற்றிய நூலில், ``அவர் வாழ்க்கையில் எதிர்த்து நீந்தி வியத்தகு வெற்றிகண்ட பெரியார் என்றும் ஷாவின் வாழ்க்கை வருங்கால உலகின் இளைஞருக்குப் படிப்பினையாகத் தக்கது`` என்றும் குறிப்பிட்டடுள்ளார்.

                அலெக்ஸாண்டர், சந்திரகுப்தர், சாணக்கியர் ஆகிய மூவரையும் பற்றி ஏ.எஸ்.பி. ஐயர் எழுதிய நூலை மொழிபெயர்த்து தந்து உள்ளார்.

                அறிஞர் அப்பாத்துரையார், இளைஞர்கள் பயிலும் பாடநூல்களுக்காகவே, சாதனையாளர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை எழுதிக் குவித்துள்ளார்.

             கிரேக்க இலத்தீன் மொழிகள், அரபு எபிரேய மொரிகள், சமஸ்கிருதம், முதலிய எல்லா உலக மொழிகளிலும் மொழிக்கு மட்டுமே இலக்கணம் உண்டு.  இலக்கியத்துக்கு இலக்கணம் இல்லை, தமிழ் மொழியில் மட்டுமே தொடக்கக் காலத்திலிருந்து மொழிக்கும், இலக்கியத்துக்கும் ஒருங்கே இலக்கணம் உண்டு. 

             உலக வழக்கும் செய்யுள் வழக்கும் இலக்கணத்துக்கு இலக்யிமாகக் குறிக்கப் பெற்றது தமிழ் மொழியில் மட்டுமே.

             தமிழ் மொழியில் தொடக்கத்திலிருந்தே, எழுத்துக்களின் தொடர்ந்த ஒலிப்பு வேறாகவும் சொல்லின் ஒலிப்பு வேறாகவும் இருந்ததில்லை.

-எனப் `பன்மொழிப் புலவர்` அப்பாத்துரையார் தமது ஆய்வின் மூலம் தமிழின் சிறப்புத் தகுதியை உலகிற்கு பறைசாற்றியுள்ளார்.

                `` தமிழிலக்கிய வானில் திருக்குறள் ஒரு கதிரவன், மணிமேகலை ஒரு பால்நிலா வெறிக்கும் தன்மதியம், சிலப்பதிகாரம் பண்மணி ஒளிவீசும் ஒரு வானவில், சங்க இலக்கியப் பாடல்கள் யாவும் சேனில் நிலவும் ஒளிக்கோனங்களாகிய விண்சுடர் மணிகள்``

                என தமிழிலக்கியத்தின் பெருமையையும், சிறப்பையும் தமது, `தமிழ் தந்த இன்பம்` என்ற நூலில் எடுத்தியம்பியுள்ளார்.

                ``தமிழ் தமிழரின் இலக்கிய மொழியாகவும், அரசியல் மொழியாகவும், அறிவுத்துறை மொழியாகவும் தொன்று தொட்டு இயங்கி வந்துள்ளது.  இடையிருட்கால அடிமைச் சூழல்களிடையே தமிழர் தம் தட்டுக்கெட்டனர்`` என்ற கூறி தமிழ் மொழி வளர்ச்சி பெற தமிழர்கள் பாடுபட வேண்டும் என வலியுறுத்துகிறார்.

                அப்பாத்துரையார், திருக்குறளுக்கு விரிவும் விளக்கமுமாக பல்லாயிரம் பக்கங்கள் ஓயாமல் எழுதிக் குவித்தவர்.  `அவரது திருக்குறள் மணி விளக் உரை` என்ற தலைப்பில் ஆறு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.  மேலும், கவியரசு கண்ணதாசன் நடத்திய `தென்றல்` வதரஇதழிலும், `அன்னை அருங்குறள்` என்ற தலைப்பில் புதிய குறள்பா படைத்தார்!

                திருக்குறள் உரைக்கெனவே `முப்பால் ஒளி` என்ற இதழை ஆறு ஆண்டுகள் தொடர்ந்து வெளியிட்டார்.

                அவரது திருக்குறள் விளக்க உரையில், உலகின் பலமொழிகளில் உள்ள அறிவார்ந்த அற நூல்களோடு ஒப்பிட்டு திருக்குறளைக் காணும் காட்சி மிகப் புதியது.

                `உலக இலக்கியங்கள்` என்ற நூலில் பிரெஞ்சு, சீனம், ருசியா, உருது, பாரசீகம், கன்னடம், தெலுங்கு, செருமணி, வடமொழி, கிரேக்கம் எனப் பத்து மொழிகளின் இலக்கியங்களை ஆராய்ந்து அரிய பல செய்திகளைத் தந்துள்ளார்.

                ``பிறநாட்டு நல்லறிர் சாத்திரங்கள்

                தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்``

என்று முழங்கிய மகாகவி பாரதியாரின் அறைகூவலை மனதில் ஏற்று, காரல் மார்க்சின் ‘னுயளள ஊயயீவையட’ நூலை முதன் முதலில் `முதலீடு` என்னும் பெயரில் மொழியாக்கம் செய்தார்.

                தற்கால இலக்கிய, நூல்கள்பற்றிய ஆய்வில், `மக்கள் எழுத்தாளர்` விந்தனின் எழுத்துக்களை திறனாய்வு செய்து, ``விந்தனின் மனச்சான்றே கலை படைப்பாய் அவரது கதைகளில் அமைந்துள்ளது`` என்று தெரிவித்துள்ளார்.

                வரலாறகள், வாழ்க்கை வரலாறுகள், மொழிபெயர்ப்புகள், இலக்கியத் திறனாய்வுகள், சிறுகதைகள், நாடகங்கள், பொது அறிவு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், குழந்தை இலக்கிய நூல்கள் என எத்துறைக்கும் ஏற்றதான நூற்று இருபது அரிய நூல்களைப் படைத்த ஆழ்ந்தகன்ற அறிஞர்!

                இப் `பன்மொழிப் புலவர்` அப்பாத்துரையார் படிப்பதையும், சிந்திப்பதையும் எழுதுவதையும் நிறுத்திய நாள் 26.05.1989 அன்றுதான் அவனியைவிட்டு அவர் மறைந்தார்.

- பி.தயாளன்

Pin It