கீற்றில் தேட...

அண்மைப் படைப்புகள்

தூத்துக்குடி மாவட்டம் (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்), திருச்செந்தூர் வட்டம் (அன்றைய ஸ்ரீவைகுண்டம் வட்டம்) ஆறுமுகநேரியில் கலிங்கர் தூசிமுத்து, அம்மையார் பூவம்மாள் தம்பதியினரின் மகனாக 22.12.1915-ல் பிறந்தார் கே.டி.கோசல்ராம் என்னும் போராளி. ஆறுமுகநேரியில் 5-ஆம் வகுப்பு வரை பயின்றவர், தனது குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்ததால் சென்னை வேப்பேரியில் செயின்ட் பவுல்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு வரை பயின்றார். அனுபவக் கல்வியால் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர். அவரது ஆங்கிலப் புலமையை அவரது நாடாளுமன்றப் பேச்சுகள் பறைசாற்றுகின்றன.

kt kosalram1930-ல் தனது 15 –ஆம் வயதில் முழுநேர அரசியலில் ஈடுபட்டார். இளவயதிலேயே வெள்ளையரை எதிர்த்து துண்டுப் பிரசுரங்களை வெளியிட்ட விடுதலைப் போராளி கே.டி.கோசல்ராம். சிறுவயதினராக இருந்ததால் ஒருவாரம் சப்ஜெயிலில் வைத்து, பின்னர் விடுவித்தது ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசாங்கம். 1942-ல் நடந்த போராட்டத்தில் கலெக்டர் ஹெச்மாடியால் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆங்கிலேய அரசு உப்புக்கு வரி அதிகமாக விதித்ததை எதிர்த்து, உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதால் ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார். குரும்பூர் சதி வழக்கில் முதல் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டு, 21 மாத சப்ஜெயில் தண்டனை பெற்றார்.

சாக்கு சட்டை அணியச் செய்து, கைவிலங்கு மாட்டி தனி அறையில் கே.டி. கோசல்ராமை ஆங்கியலேய அரசாங்கம் அடைத்து வைத்தது. இன்றைய பங்குனி மாத வெயிலில் ஜீன்ஸ் துணியிலான ஆடையை இறுக்கமாக அணிந்து, ஒருவரின் கைகளைக் கட்டிவிட்டால் அவரின் நிலை என்ன என்பதை யோசித்துப் பார்க்க முடியாத கடும் நிலை எனலாம். இவ்வழக்கில் சாட்சியமில்லை என்று போலீசாரால் வாபஸ் பெறப்பட்டது. உடனே பாதுகாப்பு கைதியாக தஞ்சை மற்றும் வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டார் கே.டி.கோசல்ராம். அவரது விடுதலையை விரும்பாத ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசாங்கம் சுமார் நான்கரை ஆண்டுகாலம் கே.டி.கோசல்ராமை சிறையில் அடைத்து வைத்திருந்தது. 1945-ல் கே.டி.கோசல்ராம் விடுதலையானார்.

சமூகப் பணி:

தீண்டாமையை எதிர்த்து ஆலயப் பிரவேச சட்டம் வரும் முன்பாக திருச்செந்தூர் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்று முருகனை வழிபட உரிமை பெற்றுத் தந்தார். ஆறுமுகநேரியில் உப்புத் தொழிலாளர் சங்கத்தின் அமைப்பாளராகப் பணியாற்றினார்.

வளர்ச்சி விரும்பிய போராளி:

வளர்ச்சி என்றால் என்ன? வளர்ச்சி என்றால் யாருடைய வளர்ச்சி? இந்திய மக்கள் வளர்ச்சியை விரும்புகிறார்கள் என்று கூறுபவர்கள் இந்திய மக்களின் வளர்ச்சியை விரும்புகிறார்களா என்று பல கேள்விகளை எழுப்பும் இக்காலகட்டம். ஆனால் அன்றே வளர்ச்சி என்பது மக்களுக்கான அரசாங்கத்தின் திட்டமாக இருக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்து, பல சமூக நலத் திட்டங்களைக் கொண்டு வந்தவர் கே.டி.கோசல்ராம். கிராமப் பகுதிகளில் சிறுதொழிற்சாலைகளைக் கொண்டு வர பெறும் முயற்சி மேற்கொண்டார்;. கிராமப்புற பொருளாதார மேம்பட்டால் மக்களின் வாங்கும் சக்தியும், பணப்புழக்கமும் அதிகரித்து, மக்கள் வேலை தேடி நகரங்களுக்குச் செல்லும் நிலை குறையும் என்பதை அறிந்து மக்கள் நலத் திட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த காலகட்டத்தில் நிறைவேற்றப் பாடுபட்டவர் நம்மவர்.

ஆறுமுகநேரியில் இரயில்வே நிலையம் அமையக் காரணமாக இருந்தவர் கே.டி.கோசல்ராம். அவரது செயல்பாடுகளால் கிராமத்து மக்கள் பெரிதும் பயனடைந்தனர். தினசெய்தி என்னும் நாளிதழையும் நடத்தி வந்தார்.

அரசியல் வாழ்க்கை:

அரசியல் வாழ்க்கையையும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும், மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு உழைத்த நமது அன்பிற்குரிய சகமனிதர் கே.டி.கோசல்ராம். மணிமுத்தாறு அணை கண்ட மாவீரர் கே.டி.கே. என்று சாத்தான்குளம் பேருந்த நிறுத்தத்தில் உள்ள பெயர்ப்பலகையை அங்குள்ள கடைகள் மறைத்து விட்டாலும், அவரது உழைப்பு அடித்தட்டு மக்களின் இரத்தத்தில் கலந்து விட்டதால், இப்புரட்சியாளனை யாராலும் மறக்க முடிவதில்லை.

ஆறுமுகநேரி கிராமப் பஞ்சாயத்துத் தலைவராக தம் அரசியல் வாழ்க்கையைத் துவங்கினார் கோசல்ராம். தற்போது ஆறுமுகநேரி நகரப் பஞ்சாயத்தாக உள்ளது. பின்னர் திருச்செந்தூர் வட்டார காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆக மக்கள் பணியாற்றினார். 15 ஆண்டுகள் நெல்லை மாவட்ட இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும், 3 வருடங்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும் இருந்து, கட்சியை மக்கள் நலப் பணியுடன் ஒன்றிணைத்து வழிநடத்தியவர் கே.டி.கோசல்ராம். சீனப்போராளி மாசேதுங் மொழியில் நம்மவரின் செயல்பாடுகளை சொல்ல வேண்டுமானால், பொதுவான திட்டங்களை குறிப்பான செயல்பாடுகளுடன் ஒன்றுபடுத்தி மக்கள் பணியாற்றிய, தலைமை தாங்கும் தகுதி படைத்த மக்கள் தொண்டன் கே.டி.கோசல்ராம்.

அணை கட்ட போராடி வென்ற வரலாறு:

கே.டி.கோசல்ராம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில்தான், "மணிமுத்தாறு அணைகட்ட கே.டி.கோசல்ராம் நிதி வசூலித்துத் தந்தால் திட்டம் நிறைவேற்றப்படும்" என்று கூறினார் அன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.பக்தவச்சலம் அவர்கள். அவரது கூற்றை சவாலாக ஏற்றுக்கொண்டு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதை உயிர் மூச்சாகக் கொண்டு செயல்பட்ட நம்மவர், ஒரே வாரத்தில் ஒன்றேகால் கோடி ரூபாயைத் திரட்டி பொதுப்பணித் துறை அமைச்சர் அவர்களிடம் கொடுத்து, அணை கட்டும் பொதுப் பணிக்கு அஸ்திவாரமிட்டார். 1958-ல் நடந்த இச்சம்பவம் இன்றைய இளைஞர்களுக்கு மறந்து போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஊருக்கு உழைத்தவன் உருப்பட மாட்டான் என்ற நிலை மாறி, ஊருக்குழைத்திடல் யோகம் என்பதை இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்த மணிமுத்தாறு அணை கண்ட நம் சக மனிதரின் வரலாறு தெரிய வேண்டியது இக்காலத்திய அவசியம்.

திருநெல்வேலியிலிருந்து 50.8 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டது மணிமுத்தாறு அணை. 1958-ஆம் ஆண்டில் சிங்கம்பட்டி அருகில் கட்டப்பட்டது. மழைக்காலத்தில் வங்கக்கடலில் கலக்கும் நீரை சேமிக்கக் கட்டப்பட்டது. 118 அடிவரை நீர் தேக்கலாம். இவ்வணைக்கட்டு 3 கி.மீட்டர் நீளம் உடையது. இதனால் 65000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதாவது 26315 ஹெக்டேர் நிலங்கள் விவசாயத்தைக் காப்பாற்றி வருகிறது. வடக்கே நாங்குநேரி மற்றும் திசையன்விளை, தெற்கே வீரவநல்லூர் மற்றும் கரிசல்பட்டி ஆகியவை இவ்வணைக்கட்டால் பாசன வசதி பெறுகிறது. இவ்வணைக்கட்டானது புவியீர்ப்பு விசையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டது. இதன் உயரம் அஸ்திவாரத்துடன் சேர்ந்து 150 அடி (46 மீட்டர்) உடையது. நீளம் 9268 அடியாகும். அதாவது 2825 மீட்டர். இவ்வணை கிடைமட்ட அழுத்தத்தை தாங்கும் வகையில் கட்டப்பட்ட Gravity Dam ஆகும். இவ்வணைக்கட்டில் 7 Spillway உள்ளது.

இயற்கை அமைப்பு:

தாமிரபரணி நதியின் குறுக்காக 3 கிலோமீட்டரில் மணிமுத்தாறு அணை கட்டப்பட்டுள்ளது. இயற்கையாகவே மணிமுத்தாறு தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறாக இருப்பதாலும், அணைக்கட்டு அதன் குறுக்கே கட்டப்பட்டுள்ளதாலும் மணிமுத்தாறு அணை எனப் பெயர் வழங்கப்பட்டது. மணிமுத்தாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதன் இன்னொரு கிளை கோதை ஆறாக கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளில் பாய்ந்து அரபிக் கடலில் கலக்கிறது.

நெல்லை மாவட்டம் களக்காடு மலைப்பகுதியில் செங்காந்தேரி அருகே பச்சையாற்றின் பிறப்பிடத்திலிருந்து தனியாகப் பிரிந்து மணிமுத்தாறு அருவியாக மணிமுத்தாறு அணைக்கட்டில் வந்து விழுகிறது. அணைக்கட்டு போல் தீயவர்களுக்கு அசைந்து கொடுக்காமல் மக்களின் நலனுக்காக உழைத்த மாமனிதர் கே.டிகோசல்ராமின் பெயரை உச்சரித்தவாறே இம்மணிமுத்தாறு இன்றளவும் ஓடிக் கொண்டிருக்கிறது. மனிதரை நல்வழிப்படுத்த அறநூல்களும் நல் ஒழுக்கமும் தேவை. ஓடும் ஆற்றை நம்வழிப்படுத்தி மக்கள் பயன்பெற கே.டிகோசல்ராமின் உழைப்பு வழிசெய்தது.

அரசியல் வெற்றிகள் (மக்களின் வெற்றிகள்):

திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் நலப்பணியாற்றியவர். அன்றைய திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் (சேரன்மகாதேவி, நாங்குநேரி, ராதாபுரம், சாத்தான்குளம், திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரி தாலுகாக்கள் அடங்கியது) 1977, 1980 மற்றும் 1984-ல் வென்று மக்களின் நலனுக்கான அவையாக மக்களவையை தலைநிமிர வைத்தவர் கே.டி.கோசல்ராம்.

1985 –ஆம் ஆண்டு நம்மவரின் இவ்வுலக வாழ்வு முடிவுற்றாலும், அவரது மக்கள் நலப்பணிகள் இன்றளவும் தென்னாட்டு மக்களால் போற்றப்பட்டு வருகிறது.

- சுதேசி தோழன்

Pin It


தமிழகத்தில் சமீப காலமாக சாதீயப் பெருமித வரலாறுகளைக் கட்டமைப்பதில் ஒவ்வொரு சாதியினருக்கும் இடையே பெரும் போட்டியே நிலவிக் கொண்டிருக்கிறது. வரலாற்றைத் திரிப்பதில் சாதியவாதிகள் காட்டும் முனைப்புகள் வரலாற்றுத் துறையை மலினப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் போர் குறித்து வரலாறு என்ற பெயரில் சாதியவாதிகளால் பரப்பப்படும் கதைகள் விவாதத்திற்கு உரியவையாக மாறியிருக்கின்றன.

De Lannoy Surrenderதிருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1741 ஆம் ஆண்டு நடைபெற்ற குளச்சல் போரில் டச்சு படைகள் தோற்கடிக்கப்பட்ட வரலாற்றை தங்களது சாதியினரின் சாதனையாகவும், தங்களது சாதியைச் சேர்ந்த அனந்த பத்பநாபன் என்பவர் தலைமையிலேயே டச்சுப் படைகள் தோற்கடிக்கப்பட்டதாகவும் சில நாடார் சாதிய அமைப்புகள் தொடர்ந்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. ‘டச்சுப் படையை வென்ற மாவீரன்’ என்ற அடைமொழியோடு கடந்த சில ஆண்டுகளாக ‘அனந்த பத்பநாப நாடார் குருபூஜை’ என்ற பெயரில் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

அனந்த பத்ம‌னாபனைக் குறித்த வரலாற்று ஆதாரங்களாக ஒரு செப்பேடு ஒன்றும், ‘ஓட்டன் கதை’ எனும் கதைப்பாடலும் முன்வைக்கப்படுகின்றன. கொல்லம் ஆண்டு 923 (கி.பி.1748) வேணாடு மன்னர் ஆழினம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவால் அனந்தனுக்கு செப்புப் பட்டயம் ஓன்று வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது அந்த செப்பேடு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தச்சன்விளை பகுதில் வாழும் அனந்த பத்மநாபனின் வம்சாவழியினரின் கைவசம் உள்ளது. மார்த்தாண்ட வர்மாவிற்கும் அவரது எதிரிகளுக்குமிடையே நடந்த வாரிசுரிமை கலகத்தைப் பற்றி பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘ஓட்டன் கதை’ எனும் கதைப்பாடலிலும் அனந்த பத்மநாபனைப் பற்றி சில தகவல்கள் கூறப்பட்டிருக்கின்றன. 1982 ஆம் ஆண்டு ப.சர்வேஸ்வரன் எனும் பேராசிரியரால் ‘ஓட்டன் கதை’ புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டது. இந்த செப்பேடு மற்றும் கதைப்பாடல் வாயிலாக அனந்த பத்மனாபனைப் பற்றி அறிய வரும் தகவல்களையும், அதனோடு தொடர்புடைய வரலாற்றையும் சுருக்கமாகக் காண்போம்.

வேணாடு மன்னராக இருந்த ராம வர்மா 1729 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு மரணமடைந்ததை அடுத்து, வேணாட்டு அரச குடும்பத்தினர் பாரம்பரியமாக கடைப்பிடித்து வரும் ‘மருமக்கத்தாயம்’ வாரிசுரிமைப்படி மன்னரின் சகோதரி மகனான மார்த்தாண்ட வர்மா அதிகாரத்திற்கு வருகிறார். இதற்கு எதிராக ராமவர்மாவின் மகன்களான பத்ம‌நாபன் தம்பி மற்றும் ராமன் தம்பி ஆகிய இருவரும் கலகத்தில் இறங்கியதால் உள்நாட்டுப் போர் மூண்டது. தம்பிமார் என்றழைக்கப்பட்ட இருவரும் மருமக்கத் தாயத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து மன்னரின் மூத்த வாரிசான பத்மநாபன் தம்பியை மன்னராக்க வேண்டும் என்று உரிமை கோரினர். வேணாட்டில் அரச குடும்பத்திற்கு அடுத்தபடியாக அதிகார நிலையில் இருந்த ‘எட்டு வீட்டுப் பிள்ளைமார்’ எனும் நிலப்பிரபு குடும்பங்கள் தம்பிமாரை ஆதரித்ததால் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். மார்த்தாண்ட வர்மாவை கொலை செய்ய முயற்சிகள் நடந்ததால் அவர் சில காலம் தலைமறைவாகவும் இருக்க நேரிட்டது.

தம்பிமாருக்கு ஆதரவாக படையுடன் வந்த நெல்லையைச் சேர்ந்த நாயக்கர் தளபதி அழகப்ப முதலி என்பவர் இரு தரப்பினருக்குமிடையே சமரசம் செய்து வைத்தார். ஆனால் உடன்பாட்டை ஏற்க மறுத்த மார்த்தாண்ட வர்மா தனது ஆதரவாளர்கள் மூலம் தம்பிமார் இருவரையும் கொலை செய்துவிட்டார். தம்பிமாருக்கு ஆதரவளித்தவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்ட மார்த்தாண்ட வர்மா, பிற குறுநில அரசுகளைத் தோற்கடித்து நாட்டை விரிவுபடுத்தியதால் திருவிதாங்கூர் சமஸ்தானம் உருவானது.

வாரிசுரிமை கலகத்தின்போது, அன்றைக்கு சாணார் என்று அறியப்பட்டிருந்த நாடார் சமூகத்தைச் சேர்ந்த சில களரி ஆசான்கள் மார்த்தாண்ட வர்மாவுக்கு ஆதரவாக படை திரட்டிக் கொடுத்திருக்கின்றனர். அத்தகைய களரி ஆசான்களுள் முதன்மையானவராக அனந்த பத்மநாபனைக் குறிப்பிடலாம். மார்த்தாண்ட வர்மாவை கொலை செய்ய தம்பிமார்களின் ஆதரவாளர்கள் நடத்திய சில முயற்சிகள் அனந்த பத்மநாபனால் முறியடிக்கப்பட்டிருக்கிறது. எதிரிகளிடமிருந்து தனது உயிரைக் காப்பாற்றிய ஆனந்தனுக்கு மார்த்தாண்ட வர்மா செப்புப் பட்டயம் ஒன்றை வழங்கியிருக்கிறார். அதை ஓட்டன் கதை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது: ...‘ தீரன் ஆனந்தனை வருத்தி இறையிலி நிலங்கள் பட்டயமும் கொடுத்து அனந்த பல்பனாபன் என்ற பெயரும் சூட்டி அரண்மனையில் அவர் சொந்த பாதுகாவலாக்கிறார்’..... தன்னுடைய மெய்க் காவலராக அனந்த பத்மநாபனை மன்னர் நியமித்ததாக இந்த கதைப்பாடல் தெரிவிக்கிறது.

மன்னர் அனந்தனுக்கு வழங்கிய செப்பேட்டில், "நீ நம்முடைய உற்ற பெந்துவும் வலக் கையுமாகவே தினம் தினம் ராப்பகல் ஊணும் உறக்கமும் ஒழிஞ்ஞு நம்முடைய குணதோஷங்களில் பங்கு கொண்டும் ஒரு மெய்யாய் நின்று சத்துரு நிக்கிரகத்திலும் படையோட்டங்களுக்கும் மனசறிஞ்ஞு சகாயிச்சும் பலப்பொழுதும் நம்முடைய ஜீவனை ரெக்ஷிச்சு நடந்து வந்திருந்த மகிமையையும் தீரதையையும் அடிஸ்தானமாக்கி நமக்குண்டான அதிரற்ற சந்தோஷத்தினால் கரமொழிவாகவிட்டு கொடுக்கிறேன்" என்று கூறியிருப்பதிலிருந்து, மன்னரின் மெய்க் காவலராக அனந்தன் பணியாற்றியிருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது. எதிரிகளிடமிருந்து மன்னரின் உயிரை அனந்தன் காப்பாற்றியிருப்பதும், மன்னரின் படைகளுக்கு உதவிகள் செய்திருப்பதும் தெரிய வருகிறது. அத்துடன் பேச்சிப்பாறை அருகே 32,000 தண்ணு சுற்றளவு கொண்ட நஞ்சை நிலங்களை கரமொழிவு(வரி விலக்கு) தானமாகவே அனுபவித்துக் கொள்ளுமாறும் இந்த செப்பேட்டில் கூறப்பட்டிருக்கிறது.

அனந்த பத்மநாபனைப் பற்றிய ஆதாரங்களாக முன்வைக்கப்படும் இந்த செப்பேடு மற்றும் கதைப்பாடலில், மார்த்தாண்ட வர்மாவின் தளபதியாக அனந்தன் பணிபுரிந்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சிக் காலத்தைப் பற்றி குறிப்பிடும் வேறு எந்த ஆவணங்களிலும், அனந்த பத்மநாபன் என்பவர் மன்னரின் தளபதியாக பணிபுரிந்ததாக எந்தவித சான்றும் இல்லை. ஆனால் வேணாட்டின் முதன்மைத் தளபதியாக அனந்த பத்மநாபன் பணிபுரிந்ததாக சாதியவாதிகள் தொடர்ந்து கோமாளித்தனமான பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். குளச்சல் போரோடு அனந்தனை தொடர்புபடுத்திக் கூறுவதற்கும் எந்தவித ஆதாரமும் இல்லை.

களரி வீரர்கள்

பாரம்பரியமான சண்டைப் பயிற்சிகளை பயிற்றுவிக்கும் இடத்தை களரி என்பார்கள். நாடார் சமூகத்தினரிடையே வழக்கில் இருந்து வந்த களரிப் பயிற்றை தெக்கன் களரி என்றும், ஈழவர் சமூகத்தினரின் களரிப் பயிற்றை வடக்கன் களரி என்றும் அழைப்பர். களரி பயிற்றுவிப்பவர் ஆசான் என்றும், பணிக்கன் என்றும் அழைக்கப்படுவார். இடைக்காலத்தில் வேணாட்டில் ஓர் ஆதிக்க சாதியாக உருவெடுத்த நாயர் சமூகத்தினர் மன்னர்களுக்கு முதன்மை படை சேவையை அளிப்பவர்களாகவும், உள்ளூர் நிர்வாக அதிகாரங்களைப் பெற்றவர்களாகவும் இருந்தனர். தங்களுக்கென தனிக் களரிகளைக் கொண்டிருந்த நாயர்கள் தங்களது களரி ஆசானை குறுப்பு என்றழைப்பர். யுத்த காலங்களில் நாயர் படையுடன் பிற சமூகங்களிலிருந்தும் வீரர்கள் திரட்டப்படுவது வழக்கம். வேணாட்டில் பதினெட்டாம் நூற்றாண்டு வரைக்கும் போர்க் காலங்களில் நாயர் படையினருக்கு அடுத்தப்படியாக நாடார் மற்றும் ஈழவர் சமூகத்தினரிடமிருந்து அதிகப்படியான வீரர்கள் திரட்டப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. வேணாட்டு மன்னர்கள் நெல்லைச் சீமையிலிருந்து மறவர் படைகளையும், அவர்களது குதிரைப் படையையும் கூடுதல் படைத் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்வதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். ஐரோப்பிய பாணியிலான இராணுவக் கட்டமைப்பிற்கு திருவிதாங்கூர் மாறிய பிறகு பாரம்பரியமான களரிகள் வழக்கொழிந்து போய்விட்டன.

‘மார்த்தாண்ட வர்மா’ நாவல்

இன்றைக்கு அனந்த பத்மநாபன் என்ற பெயருக்குப் பின்னால் நாடார் என்ற பெயர் அழுத்தமாக கூறப்படுவதற்கு வேறு சில பின்னணிகளும் உண்டு. மார்த்தாண்ட வர்மாவிற்கும் தம்பிமாருக்குமிடையேயான வாரிசுரிமைத் தகராறை மையப்படுத்தி சி.வி.ராமன் பிள்ளை என்ற எழுத்தாளரால் எழுதப்பட்ட ‘மார்த்தாண்ட வர்மா’ எனும் பிரபல மலையாள நாவலானது 1891 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த நாவலில் அனந்த பத்மநாபன் எனும் கதாப்பாத்திரத்தை ஓர் அமானுஷ வீரரைப்போல் நாவலாசிரியர் சித்தரிக்கிறார். மார்த்தாண்ட வர்மாவை கொலை செய்ய எதிரிகள் முற்றுகையிடும் போதெல்லாம் அங்கே அனந்த பத்மநாபன் உடனடியாகத் தோன்றி எதிரிகளைப் பந்தாடிவிடுவதாக கதை போகிறது. அனந்தனை நாவலாசிரியர் திருமுகத்துப் பிள்ளை என்பவரின் மகன் என்றும், ‘பிராந்தன் சாணான்’ என்ற புனைப் பெயரில் அனந்தன் மாறுவேடமிட்டு நடமாடியதாகவும் நாவலில் குறிப்பிடுகிறார். இவ்வாறு இந்த நாவல் மூலம் அனந்த பத்மநாபன் என்பவர் நாயர் சமூகத்தைச் சேர்ந்தவராக அடையாளப்படுத்தப்பட்டது. இன்றைக்கும் அனந்தனை நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர் என வாதிடுபவர்களும் உள்ளனர்.

அனந்தனின் வம்சாவழிகள்

perunthalaivar makkal katchi posterகுமரி மாவட்டத்திலுள்ள தச்சன்விளை பகுதியில் வாழ்ந்து வரும் அனந்தனின் வம்சாவழியினர் மார்த்தாண்ட வர்மா காலத்தில் அனந்தனுக்கு ஏராளமான நிலங்கள் தானமாக வழங்கப்பட்டதாகவும், அந்த நிலங்களை பிறர் அபகரித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். நிலங்களை மீட்டுத் தரக் கோரி அவர்கள் 1950 ஆம் ஆண்டு முதல் மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து மனுக்கள் அனுப்பியிருப்பதை அவர்கள் வெளியிட்டிருக்கும் புத்தகங்களிலிருந்து அறிய முடிகிறது. அனந்தனின் வம்சாவழியைச் சேர்ந்த கெ.பி. வரதராஜன் என்பவர் அனந்த பத்மனாபனைக் குறித்து கட்டுரைகளையும், புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார். அவரது கட்டுரைகள் ஆய்வுப் பூர்வமாக இல்லாமல் வெறும் புனைவாகவே காணப்படுகின்றன.

குளச்சல் போருடன் அனந்தனை தொடர்புபடுத்திவிட்டால் ஐரோப்பியர்களுக்கு எதிராகப் போராடிய சுதந்திர போராட்ட வீரர்கள் வரிசையில் அவரைக் கொண்டுவந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். இதற்காகவே கெ.பி.வரதராஜன் 1999 ஆம் ஆண்டு ‘குளச்சல் போர்’ என்ற பெயரில் ஒரு சிறு பிரசுரத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார். அந்தப் புத்தகத்தில் அனந்தன் போரில் எதிரிகளை வீழ்த்திய விதம் குறித்து நூலாசிரியர் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்:

"போர் முகத்தில் அனந்தனும் எட்டு ஆசான்களும் காட்டிய தீரச் செயலைப் பார்த்தால் இந்த வையகமே அரண்டுவிடும், நடுங்கிவிடும். அவ்வளவு மாயா மந்திர தந்திர ஜாலம் காட்டி டச்சுப் படையினரைக் குருடாக்கி விட்டனர். டச்சுப் படையினரின் துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் செயலிழக்கச் செய்தனர். துப்பாக்கிச் சத்தமோ பீரங்கி சத்தமோ குளச்சல் போரில் கேட்டதில்லை.ஆசான்களின் ஆத்ம சக்தியினால் டச்சுப் படையினர் ஸ்தம்பனமாகி கற்சிலைகள் போன்று காட்சியளித்தனர். இப்போரில் யாரும் ரத்தம் சிந்தவோ பலியாகவோ இல்லை என்பது உறுதியிலும் உறுதியே. இதுதான் உண்மையுமாகும். கைதியாகப் பிடிக்கப்பட்ட டிலனாயின் மனமோ மாறிவிட்டது. குளச்சல் போரில் ஆசான்கள் காட்டிய மாயமந்திர ஜாலங்களைப் பார்த்து பிரமித்துவிட்டார்."

இப்படித்தான் வரலாறு எழுதுகிறோம் என்ற பெயரில் கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். குளச்சல் போரின்போது கடற்கரையில் மாட்டு வண்டியை சாய்வாக நிறுத்தி அதன்மீது பனந்தடியை வைத்து பீரங்கி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி டச்சுப் படையை திருவாங்கூர் படை ஏமாற்றியதாக, ஒரு தகவல் புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த ஒரு தகவலை மட்டுமே கருவாகக் கொண்டு பனந்தடிகளை வைத்துதான் ஒட்டுமொத்த குளச்சல் போரே நடந்ததாக சாதிய அபிமானிகள் தங்கள் கற்பனையைத் தட்டிவிட்டு புதுப்புது கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் அனந்த பத்மநாபன் தலைமையில்தான் பனந்தடிகளை வைத்து போர் நட ந்ததாகவும் சிலர் கட்டுரைகளை எழுதியிருக்கின்றனர்.

குளச்சல் போர் நடைபெற்ற சமயத்தில் பதிவான டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் அறிக்கைகள், இரண்டு மாத காலம் போர் நடந்ததாகவும் இரு தரப்பினரும் பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் கொண்டு கடுமையாக மோதிக்கொண்டதில் உயிரிழப்புகள் நேர்ந்ததாகவும் குறிப்பிடுகின்றன. ஆனால் இங்கே மாயாஜால மந்திர வித்தைகள் காட்டி போர் நடந்ததாகவும், பனந்தடிகளைப் பார்த்து பயந்து போய் டச்சுப் படைகள் சரணடைந்துவிட்டதாகவும் பாமரத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசின் பள்ளி பாடத் திட்டத்தில் நாடார் சமுதாயத்தைப் பற்றி தவறான தகவல் இடம் பெற்றிருப்பதாக குற்றம் சாட்டிய சில சாதி அமைப்புகள், கடந்த 2012 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் பல கண்டனக் கூட்டங்கள் நடத்தி சர்ச்சைக்குரிய பாடப் பகுதிகளை நீக்க வேண்டுமென வலியுறுத்தி வந்தன. இத்தகைய கூட்டங்களில்தான் அனந்த பத்மநாபனைப் பற்றி அதிகமாகப் பேசப்பட்டன. இந்த பின்னணியில்தான் அனந்த பத்மநாப‌னின் நினைவாக விழாக்களும் நடத்தப்பட்டன. விழாக்களை நடத்தியோர் குளச்சல் போரானது அனந்த பத்மநாபன் தலைமையில் நடந்த போராக தொடர் பிரச்சாரங்களைச் செய்து வந்தனர். தங்களது பிரச்சாரங்களுக்கு அரசியல்ரீதியான அங்கீகாரத்தையும் பெறவும் முயற்சித்தனர். குளச்சல் போரில் டச்சுப் படைகளை தோற்கடித்த அனந்த பத்மநாபனுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டித் தருமாறு தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகளையும் முன்வைத்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு தமிழக அரசின் செய்தித்துறை சார்பில் இந்தக் கோரிக்கை தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனந்த பத்மனாபனைப் பற்றி கூறப்பட்ட தகவல்களுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துவிட்டது.

குளச்சல் போரும் கட்டுக்கதைகளும் :

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் போரைப் பற்றி விதவிதமான கட்டுக்கதைகள் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன. இந்த மாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் ஒரு புனிதராகக் கருதப்படும் தேவசகாயம் பிள்ளை என்பவர் குளச்சல் போரை நடத்தியதாகவும் கதைகள் கூறப்படுகின்றன. நாயர் சமூகத்தைச் சேர்ந்த இவர் நீலகண்ட பிள்ளை எனும் இயற்பெயரை உடையவர். இவர் கிறிஸ்தவ சமயத்தை தழுவியதற்காக மன்னரின் கோபத்திற்கு ஆளாகி கொலை செய்யப்பட்டவர். இவரைப் பற்றி வேத சாட்சியின் துயரப்பாடுகள் எனும் பழைய கதைப்பாடல் ஓன்று உண்டு. இந்த கதைப்பாடலில், நீலகண்ட பிள்ளை டச்சுத் தளபதி டிலனாயை குளச்சல் போரில் கைது செய்து பிடித்து வந்ததாக கூறப்பட்டிருக்கிறது. இந்த கதைப்பாடலை தழுவி எழுதப்பட்ட தேவசகாயம் பிள்ளை நாடகங்களிலும் இத்தகைய காட்சிகள் அரங்கேற்றப்பட்டதால், குளச்சல் போரானது தேவசகாயம் பிள்ளையால் நடத்தப்பட்டதாக மக்கள் மத்தியில் பரவலாக நம்பப்பட்டது.

மார்த்தாண்டவர்மா ஆட்சி காலத்தில் மறவர் படைத் தலைவராக இருந்த பொன்பாண்டித் தேவர் என்பவரே குளச்சல் போரில் வெற்றியைத் தேடி தந்தவர் எனும் பிரச்சாரமும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இவரைப் பற்றி குமரி மாவட்டத்தில் வாழும் தேவர் சமூகத்தினரால் கடந்த 2006 ஆம் ஆண்டு ‘மறக்கப்பட்ட மாவீரன் பொன்பாண்டித் தேவர் வீர வரலாறு’ எனும் நூல் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தில் பொன்பாண்டித் தேவன் தலைமையிலான குதிரைப் படையினர் டச்சு தளபதி டிலனாயை கைது செய்து மார்த்தாண்டவர்மாவின் முன்பாக சரணடைய வைத்ததாக கதையளக்கப்பட்டிருக்கிறது. திருவிதாங்கூர் அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கும் குளச்சல் போரை சித்தரிக்கும் பழைய ஓவியம் ஒன்றிலிருந்து ஒரு போர் வீரரின் உருவத்தை எடுத்து, அந்த உருவத்தை பொன்பாண்டித் தேவர் எனக் கூறி இந்தப் புத்தகத்தின் அட்டையில் அச்சிட்டிருக்கிறார்கள். இந்த புத்தகத்திற்குப் போட்டியாக அனந்த பத்மநாபன் ரசிகர்கள் ஒரு புத்தகத்தை எழுதி, அந்த ஓவியத்திலிருக்கும் உருவமானது அனந்த பத்மனாபனைக் குறிப்பதாகக் கூறி அதே உருவத்தை தங்களது புத்தகத்தின் அட்டையிலும் அச்சிட்டிருக்கிறார்கள்.

குளச்சல் போரை சித்தரிக்கும் அந்த ஓவியமானது பத்தொன்பதாம் நூற்றாண்டில் வரையப்பட்டதாகும். 1878 ஆம் ஆண்டு வெளிவந்த சங்குண்ணி மேனனின் திருவிதாங்கூர் சரித்திரம் நூலில் குளச்சல் போர் குறித்து கூறப்பட்ட தகவல் அடிப்படையில் இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஓவியத்தில் ஓவியர் பெயர் குறிப்பிடப்படவில்லை. கடற்கரைப் பகுதி ஒன்றில் மார்த்தாண்ட வர்மா சிம்மானத்தில் வீற்றிருக்கிறார். அவரது முன்பாக டச்சு வீரர்கள் மண்டியிட்டு சரணடைகிறார்கள். ஒவ்வொரு டச்சு வீரரின் அருகிலும் உள்நாட்டு வீரர் ஒருவர் கையில் வாள் ஏந்தியபடி காவல் காப்பதாக ஓவியம் சித்தரிக்கிறது. அதில் முதலாவதாக நிற்கும் உள்நாட்டு வீரரின் உருவம் பெரிதாக காட்டப்பட்டிருக்கிறது. அந்த உருவத்தையே சாதியவாதிகள் நாடார் என்றும் தேவர் என்றும் உரிமை கோருகிறார்கள். உள்நாட்டுப் போர் வீரர் ஒருவரின் மாதிரி தோற்றத்தையே அந்த ஓவியர் சித்தரிக்க முயன்றிருக்கிறார். அந்த ஓவியருக்கு பொன்பாண்டித் தேவனைப் பற்றியோ அல்லது அனந்த பத்மநாபனைப் பற்றியோ ஏதேனும் தெரிந்திருக்குமா என்பதே சந்தேகம்தான்.

மண்டைக்காட்டைச் சேர்ந்த கெ.திரவியம் என்ற பேராசிரியர் எழுதிய ‘டச்சுப்படை வென்ற குமார உதய மார்த்தாண்டன் நாடார்’ எனும் நாவல் 1987 ஆம் ஆண்டு வெளிவந்தது. தனது முன்னோரான உதய மார்த்தாண்டன் என்பவரே குளச்சல் போரை நடத்தி டினலாயை கைது செய்ததாக கெ.திரவியம் நம்புகிறார். அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்த அவரிடம் ஆதாரங்கள் எதுவும் இல்லாததால், தனக்கு விருப்பமான விதத்தில் ஒரு வரலாற்றைக் கட்டமைத்து அதை ஒரு நாவலாக எழுதியிருக்கிறார். நாவலாசிரியரிடம் வெளிப்படும் அதீதமான சாதிய சார்பும், மிதமிஞ்சிய கற்பனைகளும் நகைச்சுவை மிகுந்தவை. ஏதேனும் காமெடி நாவல் வாசிக்க விரும்புபவர்கள் கட்டுரைத் தன்மையுடன் இருக்கும் இந்த நாவலை ஒருமுறை சிரமப்பட்டு வாசித்துப் பார்க்கலாம்.

A History of Travancore from the Earliest Timesகுளச்சல் கடற்கரையில் வசிக்கும் மீனவ சமூகத்தினரும் தங்களது முன்னோர்கள் இந்த போரில் முக்கிய பங்கு வகித்ததாக கட்டுரைகளை எழுதி வருகின்றனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மெல்வின் வினோத் என்பவர், மீனவர்களின் கடற்படை டச்சு கப்பல்களை எதிர்த்து கடலுக்குள் சென்று போர் புரிந்ததாகவும், மீனவர்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாத டச்சுப் படையினர் மீனவர்களிடத்தில் சரணடைந்ததாகவும் புதுப் புது கதைகளை பரப்பி வருகிறார். குமரி மாவட்டத்தில் குளச்சல் போர் குறித்து பரப்பப்படும் கட்டுக்கதைகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமெனில், நாகர்கோவிலைச் சேர்ந்த திருத்தமிழ் தேவனார் எழுதிய ‘ குளச்சல் போர் – கட்டுக்கதைகளும் கற்பனைக் குதிரைகளும்’ எனும் நூலை வாசித்துப் பார்க்கலாம்.

குளச்சல் போரும் ஆதாரங்களும் :

குளச்சல் போர் நடைபெற்ற காலகட்டத்தில் திருவிதாங்கூர் தரப்பினர் போரைக் குறித்து தெளிவான விபரங்களை பதிவு செய்திருக்கவில்லை. ஒரு சில ஓலைச்சுவடி குறிப்புகள் உள்ளதாக சங்குண்ணி மேனன் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தினர் குளச்சல் போரைப் பற்றிய விரிவான தகவல்களை தங்களது அறிக்கைகளில் பதிவு செய்திருக்கின்றனர். ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் ஆவணங்களிலும் இந்த போரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. திருவிதாங்கூருக்கும் டச்சுவுக்கும் இடையேயான உறவினைக் குறித்து ஆய்வு நூல்களை எழுதிய எம்.ஒ.கோஷி மற்றும் எஸ்.கிருஷ்ணய்யர் ஆகியோர் ஐரோப்பியர்களது ஆவணங்களிலிருந்து குளச்சல் போரைப் பற்றிய தகவல்களை ஓரளவுக்கு அறியத் தருகின்றனர். டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆவணங்கள் அனைத்தும் நெதர்லாந்து நாட்டின் தேசிய ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

நெதர்லாந்தைச் சேர்ந்த மார்க் டி லெனாய் எனும் வரலாற்றாளர் டச்சு ஆவணங்கள் அடிப்படையில் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சிக் காலத்தை ஆய்வு செய்து புத்தகம் எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தில் குளச்சல் போரைப் பற்றிய விரிவான தகவல்களை அறியத் தருகிறார். குளச்சல் போர் குறித்து மார்க் டி லெனாய் எழுதிய அத்தியாயம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.

டச்சு தரப்பினரின் பதிவுகள்படி குளச்சல் போர் குறித்து கூறப்படுவது யாதெனில், 1741 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 அன்று டச்சுப் படையினர் கொச்சி தலைமைத் தளபதி கொலேனஸ் தலைமையில் குளச்சலில் தரையிறங்கி அருகாமையிலுள்ள இடங்களை வசப்படுத்திக் கொண்டனர். குளச்சல் கடற்கரையில் டச்சுப் படையினர் சிறிய கோட்டை ஒன்றையும் கட்டியிருக்கின்றனர். கொலேனஸ் தலைமையிலான ஒரு படை அணியினர் கொச்சிக்கு திரும்பிச் சென்ற பிறகு, ரிஜிட்டல் என்பவர் குளச்சலில் தங்கியிருந்த படையினருக்கு தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். 1741 ஆம் ஆண்டு ஜூன் மாத துவக்கத்திலிருந்து திருவிதாங்கூர் படை தீவிரமான தாக்குதலைத் தொடுத்து குளச்சலை நோக்கி முன்னேறியிருக்கிறது.

ஆங்கிலேயர்கள் தங்களது வணிகப் போட்டியாளரான டச்சுப் படையை தோற்கடிக்க பீரங்கிகள், துப்பாக்கிகள், வெடிமருந்து உள்ளிட்ட தளவாடங்களை திருவிதாங்கூருக்கு பெருமளவில் அளித்து வணிக ஆதாயங்களைப் பெற்றிருக்கின்றனர். ஐரோப்பிய கம்பெனிகளிலிருந்து விலகி வந்த 24 ஐரோப்பிய வீரர்களை மார்த்தாண்டவர்மா தமது படையில் இணைத்து ஐரோப்பிய பாணியில் தமது இராணுவத்தைக் கட்டமைத்திருக்கிறார். நாயர் படை மற்றும் மறவர் படையினருடன் பிற சாதிகளைச் சேர்ந்த வீரர்களும் திருவிதாங்கூர் படையில் இருந்திருக்கின்றனர். 1741, ஆகஸ்ட் 2 அன்று டச்சுத் தளபதி ரிஜிட்டல் யுத்தத்தில் கொல்லப்பட்ட பிறகு டச்சுப் படை கட்டுக்கோப்பை இழந்திருக்கிறது. ஆகஸ்ட் 9 அன்று டச்சு தரப்பினரின் வெடிமருந்து கிடங்கு வெடித்துச் சிதறியதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட டச்சுப் படையினர் மார்த்தாண்ட வர்மாவின் முன்பாக சரணடைந்திருக்கின்றனர்.

திருவிதாங்கூர் படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஐரோப்பிய வீரர்களுக்கு டியுவன்சாட் என்பவர் தலைமை தாங்கி திருவாங்கூர் படையை வழிநடத்தியிருக்கிறார். டியுவன்சாட் திருவிதாங்கூர் படையினருக்கு பயிற்சி அளித்த தகவலை, மலபாரில் டச்சுக்காரர்களின் ஆதிக்கத்தை குறித்து ஆய்வு செய்த எ.கல்லெட்டி மற்றும் பி.சி. அலெக்சாண்டர் ஆகியோரும் தங்களது புத்தகங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.

குளச்சலில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் கன்னியாகுமரி டச்சு முகாமிலிருந்து வெளியேறி திருவிதாங்கூர் படையில் இணைந்து கொண்டவரே எசுதாக்கியஸ் டி லெனாய். டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தில் ஒரு கடைநிலை வீரராக பணிபுரிந்த இவர் டச்சு இனக் குழுவை சாராதவர். டச்சு நிறுவனத்தில் இவருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் மறுக்கப்பட்டதாலேயே இவர் டச்சுப் படையிலிருந்து வெளியேறி திருவிதாங்கூர் படையில் சேர்ந்திருக்கிறார். மார்த்தாண்ட வர்மாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகிவிட்ட டி லெனாய் 1744 ஆம் ஆண்டு டியுவன்சாட் மரணமடைந்த பிறகு, திருவிதாங்கூரின் தளபதியாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

குளச்சல் போர் குறித்து கதை எழுதுபவர்கள் கூறுவது போன்று, டச்சுப் படை டி லெனாய் தலைமையில் குளச்சல் மீது படையெடுத்து வரவுமில்லை; டி லெனாய் குளச்சல் போரின் முடிவில் திருவிதாங்கூரிடம் சரணடையவுமில்லை. ஆனால் இங்கே டிலனாயை கைது செய்தது தங்களது சாதியைச் சேர்ந்தவர்தான் என சாதிப்பதற்கு சாதியவாதிகள் மெனக்கெடுகிறார்கள். சாதிய வரலாறு எழுதுபவர்களுக்கு ஆதாரங்களைப் பற்றி எந்தவிதக் கவலையும் இல்லை. கற்பனை மட்டும் அவர்களுக்கு போதுமானது.

உதவிய நூல்கள் :

1. குளச்சல் போர் , பதிப்பாசிரியர் – எஸ்.ஆன்றனி கிளாரட் , 2017.
2. குளச்சல் போர் ( 1740 – 1741 ), மார்க் டி லெனாய், தமிழாக்கம் – திருத்தமிழ் தேவனார், 2019.
3. குளச்சல் போர் : கட்டுக்கதைகளும் கற்பனைக் குதிரைகளும், திருத்தமிழ் தேவனார், 2018.
4. THE KULASEKHARA PERUMALS OF TRAVANCORE : History and state formation in Travancore from 1671 to 1758, MARK DE LANNOY, 1997.
5. A History of Travancore from the Earliest Times, P.SHUNGOONNY MENON, 1878.

- என்.டி.தினகர்

Pin It

கோடம்பாக்கம் சிவலிங்கம்

kodampakkam sivalingam'சின்னச்சாமிபோல பத்துத் தமிழனாவது செத்தால் தான், தமிழ் சாகாமல் இருக்கும்'. திருச்சியில் சின்னச்சாமி தீக்குளித்த செய்தி அறிந்தததிலிருந்து, உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பாராம் சிவலிங்கம்.

சென்னை கோடம்பாக்கம் விசுவநாதபுரத்தில் 1941  இல் பிறந்தார். அண்ணன் வீட்டில் தங்கியிருந்தார். சென்னை மாநகராட்சி ஊழியராக 75  உரூபா ஊதியத்தில் பணியாற்றி வந்தார்.

தமிழகம் முழுவதும் மாணவர் பேரணி 25.1.1965 ஆம் நாள் மாவட்டந்தோறும் நடந்தது. மதுரைப் பேரணியில் மாணவர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட செய்தி சிவலிங்கத்தைச் சினங் கொள்ள வைத்தது .

வானொலியில் செய்தி கேட்ட சிவலிங்கம் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்: "நாளைக்கு இந்தி ஆட்சி மொழி யாகப் போகிறது. அன்று நமக்குத் துக்க நாள். நான் கறுப்புச் சின்னம் அணியப் போகிறேன்."

வீட்டுத்திண்ணையில் தூங்கும் சிவலிங்கத்தை அண்ணன் காளிமுத்து விடியற்காலையில் பார்த்தபோது காணவில்லை. எதிரே உள்ள திடலில் எவரோ தீப்பிடித்து எரிவதுபோல் தெரிந்தது. ஓடினார், 'உயிர் தமிழுக்கு! உடல் தீயிற்கு' என எழுதப்பட்ட தாள்கள் சிதறிக்  கிடந்தன.

'இந்தி ஆட்சிமொழி ஆவதைக் கண்டித்துத் தீக்குளித்துச் சாகிறேன்"

சிவலிங்கத்தின் எழுத்தைத் தெரிந்துகொண்ட அண்ணன், கருகிக் கிடந்த உடலைக் கட்டிப்பிடித்துக் கதறினார். இருபத்து நான்கு வயது சிவலிங்கம் 26.11.1965 இல் தமிழுக்காகச் சாம்பலானார். இந்தச் செய்தியறிந்து, இந்தியத் தலைமையமைச்சர் இலால்பகதூர் சாத்திரி அறிக்கை வெளியிட்டார்.

"சென்னை மாகாணத்தில் இருவர் தீக்குளித்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்தி குறித்து எழுந்துள்ள சிக்கல்களை நாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்”.

"வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
    விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!

சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
     தொகையாக எதிர்நிறுத்தித் தூள்தூ ளாக்கும்
காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!

    கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!

- பாவேந்தர் பாரதிதாசன் (பாவேந்தம் - 17 , பக்கம் – 28)

- புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை

Pin It

விருகம்பாக்கம் அரங்கநாதன்

virukambakkam aranganathanகோடம்பாக்கம் சிவலிங்கம் உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தச் சென்ற அரங்கநாதன், தானும் களப்பலியாக அப்போதே தீர்மானித்து விட்டார்.

தமிழ் அழிவதைப் பற்றி கவலைப்படாமல் தமிழர்கள் இருக்கிறார்களே எனக் கலங்கியுள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொலைபேசிக் கிடங்கில் பணியாற்றி வந்தவர் அரங்கநாதன். ஒய்யாலி - முனியம்மாள் இருவரின் மகனாக 27.12.1931 இல் பிறந்தவர்.

மனைவி மல்லிகா, அமுதவாணன், அன்பழகன், இரவிச் சந்திரன் எனக் குழந்தைகள் மூவர்.

சிலம்பாட்டம், சுருள் கத்தி வாசல், மான் கொம்பு சுழற்றல் முதலிய வீர விளையாட்டுகளில் வல்லவராய்த் திகழ்ந்தார். உடற்பயிற்சிக் கூடம் ஒன்றையும் நடத்தி வந்தார். விருகம்பாக்கத்தில் அனைவரும் இவரைக் 'குரு' என்றே அழைப்பார்கள்.

இந்தியைத் திணிக்கும் நடுவணரசின் நடவடிக்கை இவரைக் கொந்தளிக்க வைத்தது . தன்னை எரித்துக் கொண்டாவது தமிழை வாழ வைக்க விரும்பினார்.

விருகம்பாக்கம் நேசனல் திரையரங்கம் அருகே உள்ள மாமரத்தினடியில் 27.1.1965 புதன் கிழமை இரவு 2  மணிக்குத் தன்னுடலில் தீயிட்டுக் கொண்டார்.

எரிந்த உடலுக்கு அருகில் கிடந்த அட்டைப் பெட்டியில் இந்தித் திணிப்பைக் கண்டித்து நடுவணரசுக்கும் தமிழக அரசுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் எழுதிய கடிதங்கள் இருந்தன. அவற்றின் நகல்களை பதிவஞ்சலில் அனுப்பி யதற்கான பற்றுச் சீட்டுகளும் இருந்தன.

அமெரிக்க நியூயார்க் நகரில் கூடிய உலக நாடுகள் ஒன்றிய (ஐ. நா) அவைக் கூட்டத்தில் சிவலிங்கம், அரங்கநாதன் தீக்குளித்த அதிர்ச்சிப் பின்னணி விவாதிக்கப்பட்டது.

அரங்கநாதன் பெயர் தாங்கிய சுரங்கப்பாதை சென்னையில் இப்போதும் அவரை நினைவுபடுத்தியபடி உள்ளது.

வழிகாட்டும் திவேலரா

அயர்லாந்து வாழ் அய்ரிஷ் மொழியைக் காத்து நில்லுங்கள் என்று தி. வேலரா (Éamon de Valera) கூறியதை நீ உவகை பொங்கும் நிலையில் ஏற்றுக்கொள்ளுவாய். தம்பி! அந்த ஆற்றல் மிக்கோன் கூறிய அறிவுரை "மொழியை இழந்திடாதீர். பிறகு விடுதலைக் காண வழி அழிந்துவிடும்.."

'கடைசிச் செய்தி யாது தருகிறீர்?' என்று கேட்டபோது தி.வேலரா (Éamon de Valera) "அய்ரிஷ் மொழியைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்போது தான் அயர்லாந்து நாடு நிலைக்கும்" என்று கூறினார்.

- அறிஞர் அண்ணா (26.6.1960 தம்பிக்குக் கடிதம்)

- புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை

Pin It

மேலப்பாளையத்தைப் பற்றி டிவிட்டரில் எழுதி எப்படியோ எங்க ஊரின் பெருமையை உலகத்துக்கே தெரிய வைத்துள்ளார் எச். ராஜா. இதுதான் சமயம் மேலப்பாளையத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வதற்கு.

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணிக் கரையோரம், வயல்கள் சூழ்ந்த நகர் மேலப்பாளையம். இது பாளையங்கோட்டைக்கு மேல் பகுதியில் இருப்பதால், மேலப்பாளையம் என்று பெயர் பெற்றிருக்கிறது.

indian muslimsபாண்டிய மன்னனின் துறைமுகத் தலைநகரமான கொற்கை கடலுக்குள் மூழ்குவதால், அங்குள்ள கரையோர மக்கள் பரவலாக தாமிரபரணி நதிக்கரைக்கு வர ஆரம்பித்துள்ளார்கள். அங்கு பெரும் வணிகம் நடைபெறும் பகுதி பேட்டை என்னும் பகுதியாகும். வணிகம் நடைபெறும் பகுதியை பேட்டை என்று அழைப்பது பண்டைய மரபு.

இந்த பேட்டையின் ஒரு பகுதியினைப் பாண்டியபுரம் என்றும், மற்றொரு பகுதியை திருமங்கை நகர் (மேலப்பாளையம்) என்றும் அழைத்தார்கள்.

திருமங்கை நகரின் கிழக்கெல்லையில் அமைந்துள்ளது வீரராகவபுரம். வீரராகவ முதலியார் என்பாரின் நினைவுக் குறியாக விளங்கி வருகிறது. நாயக்கர் ஆட்சியில் நெல்லைப்பகுதியை அதிகாரம் பெற்று ஆண்டு வந்த தளவாய் அரியநாயக முதலியாரின் வழித்தோன்றலாகிய வீரராகவ முதலியாரின் பெயரால் அப்பகுதி அமைந்துள்ளது. வெள்ளையர்கள் ஆட்சியின்போது மேலப்பாளையம், கீழ வீரராகவ புரம் என்றும் அழைக்கப்பட்டது.

நெடுமாறனாகிய பாண்டிய மன்னன், நெல்வேலியைக் காணுதற்கு வந்த நாளில் அவனை நெல்லை மக்கள் எதிர்கொண்டு வரவேற்ற இடம் பாண்டியபுரமாயிற்று (பேட்டை).

அவன் மனைவியாகிய மங்கையர்க்கரசியை பெண்கள் எல்லாம் திரளாக வந்து உபசரித்த மற்றொரு இடத்தை திருமங்கை நகர் (மேலப்பாளையம்) என்னும் பெயர் பெற்றது.

பண்டைய ஏடுகளில் இது திருமங்கை நகர், மங்கா நல்லூர், மங்கையர் நாடு என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த பாண்டிய மன்னன்தான் அரபு நாட்டு வணிகர்களுக்கு ஆதரவு வழங்கினான் மற்றும் மதுரை மற்றும் திருநெல்வேலியில் அவர்களது குடியிருப்பு அமைவதற்கு உதவினான்.

இதே போன்று சோழ நாட்டின் தலைநகரான உறையூரிலும் முஸ்லிம் வணிகர்கள் தங்குவதற்கு சோழ மன்னன் உதவினான். அவர்களது வழிபாட்டுத் தலம் ஒன்று உறையூரில் அமைவதற்கும் ஆதரவு நல்கினான். அந்தப் பள்ளிவாசல் (கி.பி.726) திருச்சி கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்றும் இருக்கிறது.

மிஸ்ர் தேசம் என்று அழைக்கப்படும் எகிப்தில் 'ஹலரத் மவ்த்' என்ற ஊர் இருந்தது. அங்கு நெசவுத் தொழில் செய்து வந்த, சில அரபு வணிகர்களும் ஹிஜ்ரி 232ல் புறப்பட்டு, கப்பல் மூலம் இந்தியாவின் தெற்கு பகுதியில் உள்ள கேரளா மாநிலத்திலுள்ள கொச்சியை வந்தடைந்து நதிக்கரையோரம் உள்ள மேலப்பாளையத்தில் குடியேறி சகோதரத்துவமாய் வாழ்ந்து வந்தனர்.

வணிகத்திற்காக வந்த முஸ்லிம்களை ஆரம்ப காலத்தில் யவனர், சோனகர், துலுக்கர் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். தமிழர்களுடன் அவர்கள் கொண்டிருந்த வணிகத் தொடர்பில் உள்ள நேர்மை, சிந்தனைகள், செயல்பாடுகள், வணக்க வழிபாடுகள் ஆகியவை தமிழ் மக்களைக் கவர்ந்தன. இனிய பேச்சும் இயல்பான வணிகத் தொடர்பும், சாதாரண மக்களை மட்டுமல்லாமல், சோழ பாண்டிய மன்னர்களையும் கவர்ந்தன.

இறைவன் ஒருவனே என நம்புதல், நாளொன்றுக்கு ஐந்து முறை இறைவனுக்கு வணக்கம் செலுத்துதல், ஆண்டுக்கு ஒரு மாதம், நாள் முழுவதும் உண்ணா நோன்பிருத்தல், சாதி சமய பேதமின்றி அனைத்து மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து , அன்பு செலுத்துதல் ஆகிய புதிய கோட்பாடுகள் தமிழக மக்களிடையே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தின.

நாளடைவில் இந்த அரபு இஸ்லாமியர்கள் வணிகத்தோடு தமிழர்களின் சமூக நிலையுடனும் ஒன்றி, வர்த்தக மொழியினைக் கற்று, கலந்து, தமிழ் முஸ்லிம்களாக மாறிப் போயினர்.

வாணிபத்திற்கான தமிழ், வாழ்க்கைக்கான தமிழாக மாறிப் போயின. இவர்களது அணிகலன்கள், உணவு முறைகள், ஆடைகள், கலாச்சாரங்கள் எல்லாம் தமிழ் மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்கள் போன்று இஸ்லாமும் தவிர்க்க முடியாததாக மாறிப்போய் தமிழ் முஸ்லிம்களாகவே மாறிப்போயினர்.

ஆரம்ப கால கட்டத்தில் கைத்தறித் தொழில்தான் முதன்மைத் தொழில். பர்மா, இலங்கை என்று பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து சிறந்து விளங்கியது. பின்னர் விசைத்தறி வந்ததால், அந்த தொழில் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து, பின்னர் பிழைப்பு தேடி, ஏற்றுமதி செய்த நாட்டுக்கு, தாங்களே ஏற்றுமதியாகி செல்ல ஆரம்பித்தார்கள்.

மலேசியா, சிங்கப்பூர், பர்மா என்று ஆரம்ப காலக் கட்டத்தில் சென்று , பின்னர் பெட்ரோல் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு சவுதி அரேபியா, குவைத் என்று வளைகுடா நாடுகளுக்கு பயணம் செய்ய ஆரம்பித்தனர்.

பொருளாதார வசதி அதிகம் இல்லாததாலும் ,கல்வி அறிவில் பின்தங்கியதாலும், இட ஒதுக்கீட்டுப் பிரச்சனைகளாலும் வேறு வழியில்லாமல் அந்த வளைகுடா பயணம் தொடர ஆரம்பித்து இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் பீடித் தொழிலில் மேலப்பாளைய பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகமாய் ஈடுபட ஆரம்பித்தார்கள். மேலப்பாளையத்தில் முன்னரெல்லாம் குடும்பத்தின் ஒட்டு மொத்த தேவையுமே பீடித்தொழிலால் மட்டுமே சாத்தியமாயிற்று.

கைத்தறி பீடியாக மாறியது. பீடி கேன்சராக மாறியது.

கல்விதான் நம்மை முன்னேற்றும் என்று உணர்ந்து கல்வியறிவினை வளர்த்து, பிள்ளைகள் படிக்க ஆரம்பித்த பிறகு, இப்பொழுதான் பீடித் தொழிலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

முன்பெல்லாம் என்ஜினியர் வீடு எங்கேயிருக்கிறது என்றால் எல்லாரும் அழைத்துச் சென்று காட்டுவார்கள். இப்பொழுது அந்த எல்லாருமே என்ஜினியராகி விட்டார்கள் என்னுமளவிற்கு கல்வியில் 60 சதவிகிதத்தையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்றோம்.

இஸ்லாமியர்கள் 80 சதவிகிதமும், இந்து கிறித்தவ சகோதரர்கள் 20 சதவிகிதமும், இன்னமும் மாமன் மச்சான்களாக, தொழில் தொடர்பில் உடன் பிறக்காத உறவுகளாய் அமைதியாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் இது.

எச்சைகள் வந்து துப்ப நினைத்தால், இந்தியர்களாய் நின்று விரட்டி அடிக்கும் பாளையக்காரர்களை ஒத்த மேலப்பாளையக்காரர்கள் நாங்கள்.

மேலப்பாளையத்தில் பாகிஸ்தான் கொடி பறந்ததாக புளுகு மூட்டையை வழக்கம்போல அவிழ்த்து விட்டிருக்கும், போட்டோஷாப் கட்சி பாஜகவின் தேசியத் தலைவர் எச். ராஜா, சுதந்திரம் வாங்கி 3 வாரத்திற்குப் பிறகு பிறந்த மோடிஜியிடமிருந்து டிஜிட்டல் கேமிரா வாங்கி ஒரு செல்ஃபி எடுத்திருக்கலாமே? கண்டுபிடிக்கப்படாத இமெயிலையே அனுப்பியவர்களுக்கு இது சாத்தியப்படாதா என்ன?

இந்தியாவில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 1948ல் பதிவு செய்யப்பட்ட முஸ்லீம் லீக் கட்சியின் கொடியைக் கூட, பாகிஸ்தான் கொடி என்று புரிந்து கொள்ளும் அளவுக்கு முட்டாள்களாக இருக்கிறார்கள் என்றால் இவர்களின் தலைமையில் எப்படி இந்தியாவின் வரலாறு திரிக்கப்படும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

அப்போது மேலப்பாளையத்தில் பறந்து கொண்டிருந்தது இந்திய சுதந்திரத்திற்காக, காங்கிரசுடன் இணைந்து பாடுபட்டு, பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில், முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரஸ் கொடிகள் தான் அவைகள்.

மேலப்பாளையத்துக் காரர்களின் வரலாற்றை எச் ராஜா போன்ற பொய்யர்கள் - தமிழகத்தில் எங்கே கலவரத்தை உண்டு பண்ணலாம் என்று விஷமத்துடன் கருத்துக்களை வெளியிடும் ராஜாக்கள் தெரிந்து கொள்வது அவசியமோ இல்லையோ நாம் மேலப்பாளையத்துக்காரர்களாவது நிச்சயம் தெரிந்து கொள்ளவேண்டும்.

இந்தியாவிற்காக அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டத்தில், ஆங்கிலேயர்களின் ஆங்கிலத்தைக் கூட படிக்கக்கூடாது, "ஹராம்" என்று உலமாக்களால் பத்வா விடப்பட்டு, அதனையும் நம்பி தமது கல்வியறிவினைப் பாழாக்கி, வளைகுடாவை நம்பிக்கொண்டு இப்போது சுதந்திர இந்தியாவில் மூன்றாம் தர குடிமக்களாக, இட ஒதுக்கீட்டுக்குப் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் இஸ்லாமியர்களாவது இந்த வரலாற்றினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது அவசியமாய்படுகிறது.

இந்தியா நமது மண். நமது உரிமை. காட்டிக் கொடுத்தவர்களுக்கே இவ்வளவு உரிமை இருக்கும்பொழுது போராடியவர்களுக்கு எவ்வளவு இருக்க வேண்டும்? எப்பொழுதும் விட்டுக் கொடுக்கக்கூடாது.

பாளையக்காரர்களுக்கு சமமாக மேலப்பாளையத்துக்காரர்களும் போராடினார்கள் என்கிற வரலாறு தெரியுமா எச் ராஜாவுக்கு?

பாளையக்காரர்களோடு மேலப்பாளையத்துக்காரர்கள் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் போரிட்டதன் சாட்சியாக உள்ள வீர வாள், வேல் கம்பு, ஈட்டி, குதிரைப் படை வீரர்கள் பயன்படுத்திய வாள் சூரி ஆயுதக் கம்பிகள் என்று இன்னமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

1920ம் ஆண்டு தாமிரபரணி நதிக்கரையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் காயிதே மில்லத் அவர்களின் தலைமையில் , மேலப்பாளையத்தின் முஸ்லிம் இளைஞர்கள் பெரும்பாலோனோர் கலந்து கொண்டு இந்த அடிமைத் தனத்திலிருந்து இந்தியாவை மீட்டு வெள்ளையனை வெளியேற்றுவதற்கான திட்டத்தின் ஆலோசனையில் பங்கு பெற்றார்கள்.

இந்தியாவின் சுதந்திரத்திற்காக ஒரு தலைமுறையே ஆங்கிலம் கற்காமல் இன்னமும் அதற்கான பலனை அனுபவித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்களின் தேசபக்தியை, வெள்ளையனுக்கு அடிபணிந்தவர்கள் வந்து நியாயம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

எச் ராஜா வகையறாக்களைப் போல இந்தியாவைக் காட்டிக் கொடுத்து முன்னேறியவர்கள் அல்ல. அட்மினை வைத்து வேலை வாங்கும் எச் ராஜா போன்றோர்களெல்லாம் மதச் சார்பின்மை பற்றி பேசுவதுதான் வியப்பாக இருக்கிறது

பீடி சுற்றியோ
பிரியாணி கி்ண்டியோ
பிழைத்துக் கொள்கிறோம்
ஆனால்
இந்தியா
மதசார்பற்ற நாடென்று மட்டும்
பிதற்றாதீர்கள்

என்ற ப செல்வகுமாரின் கவிதைதான் ஞாபகம் வருகின்றது.

இந்தியாவின் சுதந்திரத்திற்கான தமிழக போராட்ட வீரர்களின் வரலாற்றை, மேலப்பாளைய இளைஞர்களின் பங்குகள் இல்லாமல் நீங்கள் எழுதிவிட முடியாது ராஜா.

அந்த வரலாறு எல்லாம் பிரிட்டிஷ்காரர்களுக்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கும் உங்களது ஆர்எஸ்எஸ் ஏடுகளில் இருப்பதில்லை. இது தியாகிகளுக்கான வரலாறு, துரோகிகளுக்கானதல்ல.

VST Tahamsu thaseenஅன்றைய வெள்ளையனின் கடல் ஆக்ரமிப்பை எதிர்த்து, வெள்ளையனை எதிர்த்து, கப்பல் விடுவதற்கு ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிக்கப்பட்டு, இந்திய நாளிதழில் பாராதியாரால் விளம்பரம் போடப்பட்டது. ஆனால் சில அனாக்களும், நூறு ரூபாய்களும்தான் அவருக்கு கிடைத்தது.

அந்த நேரத்தில் கைத்தறி தொழிலில் வந்த காசில், தங்களால் முடிந்தவரை பங்குகளையும், நன்கொடைகளையும் வழங்கியவர்கள் மேலப்பாளையத்துக்காரர்கள்.

ரங்கூனில் வசித்த உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஹாஜி பக்கீர் முகமது ராவுத்தர் அவர்கள் கப்பலை வாங்குவதற்கு சுமார் 800 பங்குகளை (கப்பல் வாங்குவதற்கான கால்வாசிப் பணம்) அன்றைய மதிப்பில் ரூ. 10 லட்சம் வழங்கினார்.

மேலப்பாளையத்தில் இருக்கும் பழமையான மிகப்பெரிய குடும்பம் வி.எஸ்.டி குடும்பம். அந்தக் குடும்பத்தின் மூத்தவரான வி. எஸ்.டி முகமது இப்ராகீம், 1942 ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அம்பை ரோட்டில் உள்ள தனது பங்களாவில் வைத்து இரகசியமாக கே.பி.மருஷவாலா வெளியிட்ட கிராம சுதந்திரப் பிரகடனத்தை தனது கைகளால் எழுதி பிரதிகள் எடுத்து விநியோகம் செய்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டு போலிசாரால் தடியடி செய்யப்பட்டு மயக்கமடைந்த எம்.ஆர் உலகநாதனுக்கு துணிந்து சிகிச்சை அளித்தவர். சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரசுடன் இணைந்து , இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு துணை நின்றவர்.

அது மட்டுமல்ல இவரது தந்தையார் சம்சுதாசீன் தரகனார், கிலாபத் போரில் தீவிரங்காட்டி இந்திய சுதந்திரத்தில் மேலப்பாளையத்திலிருந்து படைகளைத் திரட்டியவர்.

இப்படி மேலப்பாளையத்துக் காரர்கள் வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கான பிரகடனத்தை பரப்பிக் கொண்டிருந்தபொழுதுதான், உங்களது பாரத ரத்னா வாஜ்பாய், வெள்ளையனுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். "அய்யா என்னய மன்னிச்சு விட்டுருங்கய்யா..நான் சும்மாக்காட்டியும் தெருவுல வந்து நின்னு வேடிக்கைப் பார்த்தவனை, ரவுடின்னு நினைச்சு தப்பா பிடிச்சிட்டீங்க" ன்னு வெள்ளக்காரன் கால்ல விழந்த வரலாறு இங்கே இருக்கு பாருங்க…(பிரண்ட் லைன் ஆங்கில பத்திரிகை (பிப்ரவரி 7-20, 1998) 

vajpaayee apologyமேலப்பாளையம் மட்டுமல்ல அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்களும் சுதந்திர வேட்கையில் உந்தப்பட்டு எங்களுடன் இணைந்து சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றனர். ஒரு ஆள் ஆர் எஸ் எஸ்ஸிலிருந்து ஒரு ஆளையாவது எச். ராஜாக்களால் சுட்டிக் காட்ட முடியுமா?

மேலப்பாளைத்திலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள பணகுடி இராதாபுரத்திலிருந்த அம்ஜியான் சாஹிப், கள்ளிகுளம் முகைதீன் ஆகியோர்கள் 1926-ல் சுதந்திரப் போரில் தீவிரப் பங்கெடுத்துக் கொண்டு அரசின் அடக்குமுறையை எதிர்த்து தேசியப் பிரச்சாரம் வெற்றிகரமாக நடைபெற இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்தவர்கள்.

திருநெல்வேலியில் பிறந்த செய்யது ஜலால், 1932ல் கள்ளுக்கடை மறியலிலும், அந்நியத் துணி எதிர்ப்பு தனி நபர் சத்தியாக்கிரகம் ஆகியவற்றிலும் பங்கேற்று, பாளையங்கோட்டை ஜெயிலில் வாடியவர்.

மேலப்பாளையத்தை ஒட்டியுள்ள பேட்டை முஹம்மது நயினார் பள்ளிவாசல் தெருவில் 1909-ல் பிறந்த வி.கே. அப்துல்ஹமீது, 1929 போராட்டத்திலும், மதுரையில் கள்ளுக்கடை மறியலில் 1931லும் கலந்து கொண்டு சிறை சென்றவர்

செங்கோட்டை மேலுரைச் சேர்ந்த சாகுல் ஹமீதுவின் மகனாக 1907-ல் பிறந்த அப்துல்மஜித், 1927 போராட்டங்களிலும் சட்ட மறுப்பு இயக்கப் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்.

கம்மது இஸ்மாயில் புதல்வராக 3-7-1904-ல் 175 நடுப்பேட்டைத் தெரு தென்காசியில் பிறந்த அப்துல்சலாம், 1922-ல் அந்நியத்துணி எதிர்ப்பு போரிலும் நாக்பூர் கொடிப்போரிலும் கலந்து கொண்டு ஒரு வருடத்திற்கு மேல் நாக்பூர் சிறையில் வாடியவர்.

திருநெல்வேலி பேட்டை ரகுமானியா பள்ளிவாசல் சன்னதி தெருவில் வாழ்ந்த அப்துல் ஹமீதுவின் புதல்வராக 1900-ல் பிறந்த முகம்மது இப்ராகிம், 1922 போராட்டத்தில் கலந்து கொண்டு கடலூர் சிறையில் வாடியவர்.

திருநெல்வேலி பேட்டை ரகுமானியா பள்ளிவாசல் மேலத்தெருவைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் 1897ல் பிறந்தவர் 1921 போராட்டத்திலும், நாக்பூர் கொடிப்போரிலும் கலந்து கொண்டு நாக்பூர் சிறையில் வாடியவர்.

தென்காசி எஸ்.எல்.எஸ் முஹம்மது முகையதீன் 1941-ல் போர் எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு சிறைத் தண்டனை பெற்றவர்.

திருநெல்வேலி எம். முகையதீன் இப்ராகிம் மரைக்காயர் 1894-ல் பிறந்தவர். 1921-ல் ஒத்துழையாமைப் போரிலும், 1922-23-ல் கள்ளுக்கடை மறியலிலும் கலந்துக் கொண்டு திருச்சி சிறையில் வாடியவர்.

25-11-1923ல் பிறந்த தூத்துக்குடி 47 ஜெயலானி தெருவைச் சேர்ந்த முகையதீன் ஷரீப் , 1942 ஆகஸ்ட் புரட்சியில் பங்கேற்றவர்.

தென்காசி தாலுகா விசுவநாதபுரத்தைச் சேர்ந்த முகம்மது உசைன் புதல்வராக 1915ல் பிறந்த நாகூரப்பா இராவுத்தர் , 1936ல் கள்ளுக்கடை மறியலிலும், அந்நியத்துணி எதிர்ப்பு போரிலும் கலந்து கொண்டவர்.

வெள்ளை இராவுத்தரின் மகனாக 1906-ல் தென்காசியில் பிறந்த சாஹித், 1942 ஆகஸ்ட் புரட்சியில் பங்கேற்று வேலூரிலும், தஞ்சாவூர் சிறப்பு ஜெயிலிலும் வாடியவர்.

செய்யது மீராசாகிப் புதல்வராக 1918ல் பிறந்த பணகுடி செய்யது அகமது கபீர் 1942 ஆகஸ்ட் போரில் கலந்து கொண்டு அலிப்புரம் ஜெயிலில் வாடியவர்.

எனக்குத் தெரிந்து நான் திரட்டிய தகவல்கள்தான் இந்த வரலாறு. இன்னமும் தியாகிகள் பென்ஷன் வாங்கிக் கொண்டு தள்ளாடியபடி கலெக்டர் ஆபிஸ் சென்று வரும் எங்கள் வாப்பாக்களின் வாப்பாகளை எல்லாம் விசாரித்தால் இன்னும் இந்தப் பட்டியல் நீளும்.

நாங்கள் பாகிஸ்தான் கொடியை ஏற்றினோம் என்று பொய் சொல்லி எந்த கலவரத்தையும் எச்.ராஜாக்களால் செய்துவிட முடியாது.

இந்த சரித்திரங்கள் வரலாறுகளை நீங்கள் அழித்திட முயன்றாலும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் தியாகத்தில், நாங்கள் எப்போதும் இருப்போம், இந்த வரலாற்றை நாங்கள் கடைசி வரை ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்போம் எங்கள் கடைசி உயிர்வரை.

பள்ளிக்கூடத்தில் பள்ளித் தோழர்களாக, கல்லூரித் தோழர்களாக மற்றும் வியாபாரத் தொடர்பில் சகோதரத்துவத்தில் இந்து முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறோம்.

பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வந்த குவியும் பலகாரங்கள், ரம்ஜானுக்கு மறக்காமல் கொடுத்தனுப்பும் பிரியாணிகள், பண்ட மாற்று முறைகளை இன்னமும் பின்தொடர்கின்றோம். எச் ராஜாக்களைப் போல காவிகளும், அரசியல் வியாபாரிகளும், கலவரங்களை உண்டு செய்ய நினைத்தால் கூட, அவற்றை தவிடு பொடியாக்கி எங்கள் ஒற்றுமையைக் காட்டுவோம்.

திருநெல்வேலியில் சுலோச்சனா முதலியார் பாலத்தில் இருந்து வலதுபக்கம் கலெக்டர் அலுவலகத்திலிருந்து மேலப்பாளையம் செல்லும் தூரம் 4 கிமீ வழியெல்லாம் வயல்களும் வயல் சார்ந்த இடங்களும்.

பைக்கில் அந்தப் பாதையில், டாஸ்மார்க் பக்கம் திரும்பாமல் பயணப்பட்டு பாருங்கள்... அந்த சுத்தமான வயல்வெளிக் காற்று, நீங்கள் எந்த கெட்ட எண்ணம் மனதில் இருந்தாலும் அதனையெல்லாம் அந்த காற்று எடுத்துக் கொண்டு, சுத்தமாக உங்களை ஊருக்குள் அனுப்பும்.

எவ்வளவு இந்துத்வா சக்திகள் பிரிக்க நினைத்தாலும், எவ்வளவு டிவிட்டுகள் போட்டாலும், பெரிய தெரு மாரி கடையில்தான் கறி வாங்குவோம். அம்பை ரோடு ஜான் கடையில்தான் டீ குடிப்போம். பஜார் நாடார் கடையில்தான் பலசரக்கு வாங்குவோம். ஏனென்றால் நாங்கள் இந்தியர்கள்
இந்தியா எங்கள் தாய்நாடு
இஸ்லாம் எங்கள் வழிபாடு
தமிழே எங்கள் மொழியாகும்
தன்மானம் எங்கள் உயிராகும்.

யாரடா சொன்னது
எங்களை அந்நியன் என்று யாரடா சொன்னது?

பட மற்றும் தகவல்கள் உதவிக்கு நன்றி Lks Meeran Mohideen.
Reference: (http://www.tamilislamicaudio.com, http://lks-meeran.blogspot.com/,http://melapalaiyam.blogspot.com/ & விடுதலைப் போரில் தமிழக முஸ்லீம்கள்' (ஆசிரியர் - செ.திவான்)

- ரசிகவ் ஞானியார்

Pin It