நான் ஒரு பட்டிக்காட்டான் என்று
பரிகாசம் செய்பவர்களே..
எனக்கு கொஞ்சம் கர்வம்தான்
நான் ஒரு விவசாயி மகன் என்பதில்
எனக்கு கொஞ்சம் கர்வம்தான்.

உங்கள் தந்தைகளோ
வாரம் இரண்டுநாள் தவறாமல்
செல்வார்கள்
கோவிலுக்கும், மருத்துவமனைக்கும்..

என் தந்தையோ
மழைக்கு கூட ஒதுங்கியதில்லை
பள்ளிக்கூடத்திற்கும், மருத்துவமனைக்கும்..

கணிப்பொறியை கையில்
வைத்திருக்கும் உங்கள் தந்தையைவிட
கலப்பையை கையில்
வைத்திருக்கும் என் தந்தைக்கு
சிவப்பாகவே இருக்கும்
உள்ளங்கை..

உங்களுக்கு ஒன்று தெரியுமா?
மனிதன் தனக்கான உணவை
தானே தயாரித்துக் கொண்டபோதுதான்
நாகரிகம் பிறந்ததாம்.
அப்படி பார்த்தால்
இங்கே நான் மட்டும்தான்
நாகரிக மனிதனின்
ஒரே வாரிசு.

வாகனத்தில் அமர்ந்து
நகரத்தை சுற்றிப் பார்த்த
நீங்கள் எங்கே புரிந்து கொள்ளப்போகிறீர்?
தந்தையின் சிம்மாசன தோளில் அமர்ந்து
உலகத்தையே அரசாண்ட
இந்த மன்னனின்
கர்வத்தை..

என் விடுதி நண்பர்களே!
நான் ஒரு பட்டிக்காட்டான் என்று
பரிகாசம் செய்பவர்களே..
எனக்கு கொஞ்சம் கர்வம்தான்
நான் ஒரு விவசாயி மகன் என்பதில்
எனக்கு கொஞ்சம் கர்வம்தான்.

அருண்மொழித்தேவன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It