மராட்டியத்தில் சிவசேனாவின் நடவடிக்கைகள் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சிவசேனாவின் நடவடிக்கைகள் இனவெறியைத் தூண்டுபவை, இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிப் பவை என ஒரு சாராரும், மராட்டிய தேசிய இன உரிமை நோக்கில் சிவ சேனாவின் நடவடிக்கைகள் சரியே என ஒரு சாராரும் ஆக இவர்களது கருத்துகள் இரண்டு விதமாக நிலவு கின்றன.

இந்நிலையில் தேசிய இன உரிமைகள், சிறுபான்மை உரிமைகள் சார்ந்து அறிவியல் நோக்கில் சில புரிதல்களை ஏற்படுத்திக் கொள்வது அவசியமாகிறது.

உலகம் முழுவதும் மிகப் பெரு மளவும் தேசிய இன அடிப்படையில் தேசங்கள் அமைந்திருந்தாலும், எந்த ஒரு தேசமும், முற்றாக அத்தேசிய இன மக்களை மட்டுமே கொண்டதாக அமைந்து விடவில்லை. அமையவும் முடியாது. மாறாக, அத்தேசிய இனத் துடன் சிறுபான்மை தேசிய இனங் களையும் கொண்டதாகவே அமைந் திருக்கின்றன.

இச்சிறுபான்மை தேசிய இனம் ஒரு தொகுப்பாக இல்லாமல் நாடு முழுவதும் சிதறி இருந்தால் அவர்கள் சிறுபான்மை உரிமைகளைக் கோர முடியாது. அவர்கள் பெரும்பான்மை இனத்துடன் சங்கமித்து விட வேண்டி யதுதான். மாறாக இச் சிறுபான்மை தேசிய இனம் தொடர்ச்சியான நிலப்பரப்பில் ஒரு தொகுப்பாக இருந் தால், அவர்கள் தங்கள் சிறுபான்மை உரிமைகளைக் கோரலாம். கோர உரிமையுண்டு. அதை நிறைவேற்றவும் பெரும் பான்மைத் தேசிய இனம் கடமைப் பட்டிருக்கிறது.

காட்டாக சிறுபான்மை தேசிய இனம், தன் தாய் மொழியில் கல்வி கற்க, பணியாற்ற அரசுக்குத் தங்கள் தாய் மொழியிலேயே கடிதங்கள் அனுப்ப, பதில் பெற, தங்கள் பண்பாடு பழக்க வழக்கங்களைப் பாதுகாத்துக் கொள்ள உரிமையுண்டு. ஆனால் அதே வேளை, அவர்கள் தாங்கள் வாழும் தேசிய இன மொழியை, ஒரு மொழிப் பாடமாக வேனும் கட்டாயம் படித்திருக்க வேண்டியதும் அம்மொழியை அறிந்திருக்க வேண்டுவதும் அவசியம்.

அதேபோல பண்பாடு, பழக்க வழக்கங்களும், இதில் சிறுபான்மை உரிமை எனத் தங்கள் அடையாளம் காக்க முற்படும் அதேவேளை இவை அந்தந்த மண்ணின் சட்டத்துக்கும் சனநாயக சமத்துவ உரிமைகளுக்கும், நாட்டு மக்களின் சுதந்திரத்திற்கும் உட்பட்டுதான் இருக்க வேண்டுமே யழிய அவற்றை மீறுவதாக இருந்து விடக்கூடாது. இது பொது நியதி.

இந்தப் பொது நியதியின் அடிப் படையில் மராட்டியத்தில் சமீபத்தில் எழுந்துள்ள இரு பிரச்சினைகளை நோக்குவோம். ஒன்று சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தியில் பதவிப் பிரமாணம் செய்தார் என்பதற்காக தாக்கப்பட்டது, மற்றொன்று மராட்டியத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுபவர் மராட்டிய மொழி தெரிந்தவராக இருக்கவேண்டும் என்பது.

முதலில் பதவி ஏற்பு பிரச்சினை. ஒரு தேசிய இன, மக்கள் மன்றத்தில் அத்தேசிய இன மொழியில்தான் பதவி ஏற்க வேண்டும் என்பது பொது நியதி. இதில் சிறுபான்மை மக்கள் வாழும் தொகுதிகளில் நின்று அச்சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு உறுப்பினர் பதவி ஏற்கிறார் என்றால் அவருக்கு அவர் தாய்மொழியில் பதவி ஏற்க உரிமை இருக்கவேண்டும். இதில் போய் பெரும்பான்மைத் தேசிய இன மொழியில்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. அவர் விரும்பினால் எடுத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான்.

காரணம், பதவி ஏற்பு என்பது, உணர்ச்சி சார்ந்தது. நம்பிக்கை சார்ந் தது. ஒரு பகுதி மக்களால் பிரதிநிதித் துவப்படுத்துவது. ஒரு சிறு பான்மை தேசிய இனம் தன் தாய் மொழியில் பயலலாம், அரசோடு தொடர்பு கொள்ளலாம் என்றால் பதவு ஏற்பும் செய்யலாம் என்பதே பொருள். ஆனால் மற்ற உரிமை யெல்லாம் உண்டு. பதவி ஏற்பு உரிமை மட்டும் கிடையாது என்பது சனநாயகமாகாது. ஆகவே அந்த வகையில் சிறுபான்மை உரிமையை மதிக்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும்.

ஆனால் இப்படி சிறுபான் மையாக இல்லாமல் வீம்புக்கு, வாதத்துக்கு, நான் ஆங்கிலத்தான் அல்லது ‘தேசிய மொழி’ என்பதால் இந்தியில் தான் பதவி ஏற்பேன் என்பது கண்டிக்கத் தக்கது. சட்டத்தில் அதற்கு இடம் இருந்தாலும், அது பெரும் பான்மைத் தேசிய இன மக்களை அவமதிப்பது அவர்களது கோபத்தைத் தூண்டுவது. எனவே, அது சட்டத் திற்கு உட் பட்டோ, மீறியோ தன் வெளிப் பாடுகளை நிகழ்த்தவே செய்யும். எனவே இந்த வகையிலேயே இந்தப் பிரச்சி னையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்தது ஓட்டுநர் உரிமம், மராட்டிய மண்ணில் பிறந்த ஒருவர், அல்லது வேறு எங்கோ பிறந்து மராட்டியத்தில் வாழும் ஒருவர், மராட்டிய எல்லைக்குட்பட்ட போக்குவரத்து அதிகாரி அலு வலகத்தில் ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும், பெறுகிறார் என்றால் அவர் மராட்டிய மொழி தெரிந்த வராக இருக்க வேண்டும் என்பது கட்டாயம். இதில் போய் எனக்கு மராத்தி தெரியாது. ஆனால் மராட்டிய மாநி லத்தில் ஓட்டுநர் உரிமம் வேண்டும் என்று கேட்பது நியாயமாகாது.

காரணம் மராட்டிய மாநிலத்தில் வாழும் எவரும் அவர் எந்த மொழிச் சிறுபான்மையினராயிருந்தாலும் அவர் மராத்திய மொழியைப் பாடமாகப் படித்திருக்க வேண்டும். படித் திருப்பார். ஆகவே அவர் மராத்திய மொழி தெரிந்தவர் ஆகிறார். ஆகவே அந்த அடிப்படையில் அவர் ஓட்டுநர் உரிமம் பெறுவதில் தடையில்லை.

ஆனால் வேறு மாநிலம் எங் காவது கல்வி கற்று அல்லது பட்டமும் பெற்று பல்வேறு பணி நிமித்தமாக மராட்டிய மாநிலம் வந்து, இங்கு ஓட்டுநர் பயிற்சி பெற்று, இங்கு ஓட்டுநர் உரிமம் கோரும் பட்சத்தில் அவர் மராத்திய மொழி அறியாத வராக இருப்பின், அவர் மராத்திய மொழி அறிந்தவராக இருக்க வேண்டும் என்பது நியாயமானது, கட்டாயமானது. அவர் ஓட்டுநர் பயிற்சி பெறும் போதே மொழிப் பயிற்சியையும் பெற்றிருக்க வேண் டும், பெறுவது அவசியமானதும்.

காரணம், பதவி ஏற்பு போல அந்த நிமிடத்தோடு தீர்ந்து போகிற ஒரு பிரச்சினை அல்ல இது. ஓட்டுநர் உரிமம் பெறுவது சொந்த தேவைக்கே ஆனாலும், பணி வாய்ப்புக்கே ஆனாலும் இது ஒரு தொழில். மராட் டிய மண்ணில் மராட்டிய சாலைகளில் மராத்திய பெயர்ப் பலகைகளைப் படித்தும், மராட்டிய மக்களோடு ஊடாடியும், ஆற்ற வேண்டிய ஒரு பணி. சொந்த வாகனம் ஓட்டுப வருக்கு இந்தப் பணி குறைவாயிருக் கலாம். ஆனால் பொது வாகனம், சரக்கு வாகனம், பயணிகள் வாகனம், வாடகை வண்டிகள் ஓட்டுபவருக்கு இதன் தேவை அதிகம். ஆகவே அவர் மராட்டிய மொழி தெரிந்தவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

ஏன், வெளி மாநிலத்தவர் பலர் மராட்டியம் வரவில்லையா, வண்டி ஓட்டவில்லையா, அவர்களுக்கெல் லாம் மராத்தி மொழி தெரிந்தா இருக்கிறது என்று சிலர் கேட்கலாம். நியாயம். வெளி மாநிலத்தவர் அந்தந்த நேரத்துக்கு வந்து அவ்வப்போது திரும்பிச் சென்று விடக் கூடியவர்கள். ஆனால் மராத்தியிலேயே உரிமம் பெற விரும்புபவர்கள் இந்த மண் ணிலேயே இருந்து வாழ முனைபவர் கள். ஆகவே அவர்களுக்கு மராத்தி மொழி கட்டாயத் தேவை. இதில் பொதுவாக 90 விழுக்காட்டுப் பேர் இயல்பாக மராத்தி தெரிந்தவர் களாகவே இருப்பார்கள். விதி விலக்காக பத்து விழுக்காடு பேர் தெரியாதிருக்கலாம். அவர்கள் மராட்டிய மொழி பயின்று கொள்ள வேண்டியதுதான்.

சரி, மராட்டியத்திற்குள் இருப் பவர்களுக்கு இது சரி. ஆனால் வேறு மாநிலத்தில் உரிமம் பெற்று மராட் டியத்தில் வந்து தங்கி விட்டவர்களுக்கு என்கிற அடுத்த கேள்வி எழலாம். நியாயம். ஆனால் வாழ்க்கைத் தேவை அவர்கள் இயல்பாகவே தாங்கள் வாழும் மண்ணின் மொழியைக் கற்றுக் கொள்வார்கள். இல்லாவிட்டால் அவர்களுக்கு ஒரு வாரம், 10 நாள் குறுகிய காலப் பயிற்சி அளித்து, மராத்திய மொழி கற்பித்து சான்றிதழ் வழங்க வேண்டியதுதான். அதாவது அவர்கள் நடைமுறைத் தேவைக்கான வரம்பிற்காவது அம்மொழியை அறிந் திருக்க வேண்டும் என்பதுதானே தவிர, அவர் மராட்டிய மொழியில் பண்டித ராக ஆக வேண்டும் என்பதில்லை.

இதில், இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்தில் ஓட்டுநர் உரிமம் பெற்றாலும் இந்திய ஆட்சிப் பரப் பெங்கணும் வண்டி ஓட்டலாம் என் பதற்கு சட்டத்தில் இடம் இருந்தாலும், சுற்றுலாப் பயணிகளுக்கு, பணி நிமித்தமாக வந்து போகிறவர்களுக்கு போன்றவர் களுக்குத்தான் இந்த உரிமத்தை நியாயப்படுத்த முடியுமே யல்லாது, ஒரு மாநிலத்தில் உரிமம் பெற்று இன்னொரு மாநிலத்தில் போய் நிலையாய்த் தங்க நேர்பவர் களுக்கு, விழைபவர்களுக்கு இந்த நியாயத்தை ஏற்க முடியாது.

ஆகவே மேற்குறித்த இரு சிக்கல்கள் மட்டுமன்று, தேசிய இனம், மொழி, சிறுபான்மை ஆகிய எந்தச் சிக்கலானாலும் அவற்றை அறிவியல் நோக்குக்கு உட்படுத்தியும், சன நாயகம், சமத்துவம், சுதந்திரம் போன்ற கோட்பாட்டு நோக்கிலும் தான் அணுகவேண்டும். அதற்குரிய தீர்வைக் காண முயல வேண்டுமே யல்லாது சும்மா எந்தவித அறிவியல் நோக்கும், கோட்பாட்டு வரை யறையும் அற்ற ‘இந்திய தேசியம்’, ‘இந்திய ஒருமைப்பாடு’ என்கிற கோணத்தில் இதைப் பார்க்கமுடியாது. இதற்கான தீர்வையும் தேடமுடியாது.

எனவே, மொழி, இனப்பற்று - வெறி, சனநாயகம் - சர்வாதிகாரம், சமத்துவம் - அசமத்துவம், சுதந்திரம்- அடிமைத்தனம் ஆகியவற்றுக்கான வேறுபாடுகளை இந்த வகையிலேயே அணுக, புரிந்து கொள்ள, தீர்வு காண முயல வேண்டுமேயல்லாது, வெற்று முழக்கங்களிலோ, உணர்ச்சி வயப் பட்ட கூச்சல்கள், கூப்பாடுகளிலோ அல்ல. அப்படி அவற்றுக்குத் தீர்வு காணவும் முடியாது.

- சேயோன்