1.         வெயிலானால் எரியும்

            மழையானால் கரையும்

            காற்றானால் பறக்கும்

            பகையானால் இடியும்

            குடிசைகள்.

            மிஞ்சுவதோ

            கண்ணீர் மட்டும்!

 

2.         குடிசைகளை மட்டுமே

            கொளுத்தவில்லை

            நெருப்பு.

 

3.         வெயிலானாலும்

            மழையானாலும்

            புழுங்கிக் கிடக்கும்

            இடம் ஒன்றுதான்

 

4,         தொடு விரல்களுக்கு

            மனதை விதைக்கும்

            மொழி தெரிந்திருக்கிறது.

 

5.         மேகங்களை

            மேய்ந்து கொண்டிருந்தேன்

            மழைத் தாரை நின்று போயிற்று

            வார்த்தைகளைத்

            தின்று கொண்டிருந்தேன்

            உறவு நூல் அறுந்து போயிற்று.

 

6,         எப்படித்தான் தெரியுமோ

            காளான்களுக்கு

            எங்கள் வீட்டுச் சுவர்கள்

            கரையுமென்று.

            மழைவந்தால்

            குடை பிடித்து நிற்கின்றன!

 

7.         யார் மனதை

            யார் அறியக்கூடும்?

 

8,         ஒளிர்கிற

            நிலவுக்குத் தெரிவதில்லை

            மனதின் இருட்டு.

- புதுவை பி.மதியழகன்