விரிவாக எழுதப்பட வேண்டிய ஒரு பிரச்சினை இது.  இதழைப் பெருமளவு இறுதிப்படுத்திவிட்டபின், இதற்கு போதுமான இடமற்ற நிலை யில் சுருக்கமாகவேனும் இது பற்றி சிலவற்றைச் சொல்ல வேண்டி யிருக்கிறது.

உலகத் தமிழ் மாநாடு அறிவிக்கப் பட்ட கையோடே அது பற்றி ‘ஊரை ஏய்க்க அறிவித்திருக்கும் உலகத் தமிழ் மாநாடு’ என்கிற தலைப்பில் மண்மொழி இதழில் ஒரு கட்டுரை எழுதினோம். இதுபோன்று உலகத் தமிழ் மாநாட்டை எதிர்த்தும் விமர்சித்தும் ஆங்காங்கே உணர்வாளர்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதுபோன்ற எதிர்ப்புகளை சமாளிக்க, விழுப்புரம் அருகே தண்டவாளத்தில் குண்டு வெடித்தது. தமிழக மெங்கும் அதிசயிக்கத்தக்க வகையில் ஆங்காங்கே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு, நல்வாய்ப்பாக ஓட்டுநர்களின் சாதுர்யத்தால் விபத்து நேராமல் தவிர்க்கப்பட்டது. விழுப்புரம் சம்பவத்தை யட்டி, விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள் அச்சகம் பாபு, ஜோதி நரசிம்மன், எழில் இளங்கோ, ஒலியமைப்பு கணேசன், ஏழுமலை, பாலமுருகன், லலித்குமார், செயராமன், சிவராமன் மற்றும் செஞ்சி பகுதியைச் சார்ந்த ராசநாயகம், சக்திவேல் ஆகியோர் விசாரணை என்கிற பெயரில் அலைக்கழிக்கப்பட்டு சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டனர். வீடுகள் சோதனையிடப்பட்டன.  குடும்பத்தினர் அச்சுறுத்தப்பட்டனர். இதைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய தோழர்கள் ஏற்கெனவே விசாரணை என்கிற பெயரில் அச்சுறுத்தப்பட்ட பாபு, ஜோதி நரசிம்மன், ஏழுமலை, லலித்குமார் ஆகியோருடன் மா.பெ.பொ.க. தங்கராசு, சுவரொட்டி ஒட்டும் தொழிலாளர் முருகன் ஆகிய அறுவர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப் பட்டனர்.

இதேபோல உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை விமர்சித்து சுவரொட்டி ஒட்டிய  பு.இ.மு. தோழர்கள் திருப்பூர் சந்திசேகர ஆசாத், கதிரவன், அருணாசலம், கோவையில் மாரி உள்ளிட்டு 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 40 பேர்மீது தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இப்படிப்பட்ட போராட்டங்களுக்குக் காரணமான ஊற்றை அடைக்க வக்கற்ற அரசு, விமர்சிப்பவர்கள் மீது பாய்வதும் அவர்கள் மீது அடக்குமுறை ஏவுவதுமாக இருக்க, இச்சூழலில் வழக்கம்போல தமிழக மீனவர் சிங்கள வெறிப் படையால் கொல்லப்பட, இதைக் கண்டித்துப் பேசிய சீமான் கைது,  இக் கண்டனத்தைத் தெரிவிக்க சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் நோக்கி ஊர்வலமாகச் செல்ல இருந்த பழ.நெடுமாறன், வைகோ, எம். நடராஜ், விடுதலை இராசேந்திரன், மண்மொழி இராசேந்திரசோழன், துரையரசன், தன்னுரிமை பாவலர் இராமச்சந்திரன் உள்ளிட்ட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தோழர்கள் சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைப்பு. பிணையில் வெளி வர முயன்ற சீமானை வெளியே விடாமல் முடக்கிப்போட அவர்மீது தேசப் பாது காப்புச் சட்டம் ஏவப்பட்டிருக்கிறது.

அடக்குமுறை மூலம் எதிர்ப்புகளை ஒடுக்கிவிடலாம், உண்மைகளை மறைத்துவிடலாம் என்று நினைக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.  தன் தொடக்க கால அரசியல் வாழ்வில் அடக்கு முறைகளைச் சந்தித்து வளர்ந்தவர் அவர்.  அடக்கு முறைகள் ஒருபோதும் வென்றதில்லை. வெல்லாது என்பது அவர் அறியாததல்ல.  இருந்தும் அவர் இப்படிச் செய்கிறார் என்றால், யானை கொழுத்தால் என்ன செய்யுமென்று பழமொழிச் சொல்லுகிறதோ, அந்த வேலையைத் தற்போது அவரும் செய்யத் தொடங்கி யிருக்கிறார் என்றே பொருள்.  இதற்கான பலனை அவர் விரைவிலேயே அறுவடை செய்வார்