இப்போதே தீர்மானியுங்கள் 21 ஆம் நூற்றாண்டுக்கான சோஷலிசம்

-மைக்கேல்

எ. லெபோலிச்

தமிழில்-: அசோகன் முத்துச்சாமி

பக்: 140 | ரூ. 50

பாரதி புத்தகாலயம்

-சென்னை- -_ 18

“சோஷலிசத்தின் லட்சியங்களையும் பிரச்சனைகளையும் பற்றிய தெளிவு இன்றைக்கு மாறிக்கொண்டிருக்கிற சமூகத்தில் முன் எப்பொழுதை விடவும் அதிகமாக தேவைப்படுகிறது. ஏனெனில், இன்றைய சூழ்நிலையில் , இந்தப் பிரச்சனைகளைப் பற்றிய சுதந்திரமான தடைகளற்ற விவாதங்கள் தீண்டப்படாதவைகளாகக் கருதப்படுகின்றன.......’’

- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1949)

அமெரிக்காவில் கம்யூனிஸ சித்தாந்தத்திற்கு எதிராகவும், அதன் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும், அரசின் தாக்குதல்கள், மெக்கார்த்தியிஸம் (Mccarthyism) என்ற பெயரால் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் இயற்பியல் மேதை உதிர்த்த வார்த்தைகள் இவை.

எட்டிப்பிடிக்கும் தூரத்தில் இருக்கிறது சோஷலிசம் என்ற நம்பிக்கை. அகிலம் முழுவதும் பரவியிருந்த காலம் கடந்து சென்று வெகுகாலம் ஆகி விடவில்லை. தொழிலாளர் இயக்கங்களின் வெற்றிகள் அதனூடாக வாழ்வின் தரத்தில் அடைந்த மேம்பாடுகள் மேலை நாடுகளில் இந்த நம்பிக்கைக்கு முக்கிய ஊற்றுக் கண்ணாக இருந்தன. மூன்றாம் உலக நாடுகளில் காலனியாதிக்கத்தை ஒழித்த வெற்றிகள் இந்த நம்பிக்கையை ஸ்திரப்படுத்தின. இது அனைத்திற்கும் மேலாக சோவியத் யூனியன் என்ற அரசமரத்தின் இருத்தலே இந்த நம்பிக்கை வேர்களைத் திடப்படுத்திக் கொண்டிருந்தது.

இன்றோ சோஷலிசக் கனவு உறங்கிக் கொண்டிருக்கிறது. ச. தமிழ்ச் செல்வன் எழுதிய ‘ஜிந்தாபாத் ஜிந்தாபாத்’ என்ற நூலில் சொல்வது போல இன்று யாரும் சோஷலிசத்தை நம்பி வீடு வாங்காமல் இருக்கப் போவதில்லை. இந்தக் கனவு தகர்ந்ததற்கான காரணங்கள் நாம் அறியாததல்ல. புதிய பொருளாதாரக் கொள்கைகள் உலகெங்கிலும் பரவியதன் ஊடாகப் பல போராட்டங்களில் வென்றெடுத்த வெற்றிகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், அரச மரம் சாய்க்கப்பட்டால் கூடு கட்டிய குருவிகள் அதிர்ச்சிக்குள்ளாவதில் ஆச்சரிய மில்லை. இதனின் தொடர்ச்சியாகக் கடந்த இரு பத்தாண்டுகளில் இடதுசாரிகள் தற்காப்பு நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டு வர வேண்டியிருக்கிறது.

ஆனால் ஒரு புதிய நம்பிக்கையளி தெரியத் துவங்கியிருக்கிறது. அந்த ஒளியின் மூலம்தான் தென் அமெரிக்காவில் இருக்கிறது. புதிய பொருளாதாரத்தின் தீவிர பாதிப்புக்கு உள்ளான மக்கள் அதனை வெல்லத் துவங்கியுள்ளனர். அதில் முன்னின்று சோஷலிசத்தை நோக்கி நடைபோடத் துவங்கியிருக்கும் வெனிசுலாவின் அனுபவங்களை வைத்து 21ஆம் நூற்றாண்டிற்கான சோஷலிசத்தின் தன்மையை ஆராய விழையும் நூல் இது.

இப்புத்தகத்தில் லெபோலிச் பல்வேறு இடங்களில் பேசிய மற்றும் எழுதிய விஷயங்களின் தொகுப்பாக ஆறு அத்தியாயங்களும், இந்தத் தொகுப்பிற்காகச் சிறப்பாக எழுதப்பட்ட ஓர் அத்தியாயத்தையும் சேர்த்து ஏழு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.

இப்புத்தகத்தின் நோக்கம் முதலாளித்துவம் ஏன் சுரண்டலமைப்பு என்பதும், சோஷலிசம் அதற்கான மாற்று என்பதும், அந்த சோஷலிசம் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் விவாதத்தை முன்னிறுத்துவதாகும். இந்தப் புத்தகத்தின் முதல் இரண்டு அத்தியாயங்கள் மிகவும் சிறப்பானவை. உபரியின் தோற்றம், சுரண்டல், முதலாளித் துவத்தின் தன்மை, அந்த நோக்கத்திலிருந்து வேறுபட்டிருக்கும் மனிதரின் தேவை போன்ற எளிதாகப் பிடிபடாத விஷயங்களை மிகவும் நேர்த்தியுடன் முன்வைக்கிறது முதல் அத்தியாயம். அடிப்படையில் நாம் காண விழைகின்ற சோஷலிசச் சமூகம் மற்றும் அதன் நோக்கம் முதலாளித்துவ சமூகத்தினின்று எங்ஙனம் வேறுபட வேண்டும் என்று எடுத்துரைக்கும் இரண்டாம் அத்தியாயமும் மிகச் சிறப்பானது.

இதோடு நின்றுவிடவில்லை லெபோலிச் முதலாளித்துவ அமைப்பிற்கு மாற்றாக அமைக்கப்படும் ஒரு மாற்று அரசின் தன்மை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற தீவிர விவாதத்தை மேற்கொள்கிறார். யுகோஸ்லேவி யாவின் தொழிலாளர் கூட்டமைப்பு முறை ஆராயப்படுகிறது. அதன் அடிப்படையான சிக்கல்கள் தெளிவாக வரையறுக்கப்படுகின்றன. சோஷலிசப் புரட்சியில் அரசியல் மாற்றத்தின் போதே மனிதரின் மன மாற்றம் எவ்வாறு ஏற்பட வேண்டும். அப்படி ஏற்படத் தவறினால் ஏற்படும் விளைவுகள், என்று விரிந்து செல்கிறது. இறுதியாக, வெனிசுலாவின் அனுபவங்களை முன் வைத்து 21 ஆம் நூற்றாண்டின் சோஷலிசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுடன் நிறைவடைகிறது நூல்.

லெபோலிச்சின் வெற்றிகளில் முக்கியமானது சோஷலிசத்தைப் பற்றிய விவாதங்களின் தேவையை உணர்த்துவது. குறிப்பாக இந்தியா போன்று மிகப்பெரிய இடதுசாரி இயக்கங்கள் இருக்கின்ற நாட்டில் இன்று சோஷலிசம் பற்றிய விவாதங்கள் அருகிவிட்டன. தற்காப்பு நிலையில் இருக்கும் இடதுசாரி இயக்க நகர்த்தலை நோக்கி செல்வதற்குச் சோஷலிசம் என்ற கனவை விதைப்பது இன்றியமையாத தேவையாகும். அதற்கான சிறிய உந்துதலையேனும் லெபோவிச் அளிக்கிறார். தமிழிலும் சோஷலிசம் பற்றிய சீரிய ஆழ்ந்த விஷயங்களைப் பேசும் நூல்கள் மிகக் குறைவு. அந்த வகையிலும் இந்நூல் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இதன் எளிய நடையும் இன்னொரு சிறப்பம்சம்.

லெபோலிச்சின் கருத்துகளில் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. பாரிஸ் கம்யூனிலிருந்து கற்ற மார்க்ஸை சுட்டிக்காட்டும் லெபோலிச்சிற்கு சோவியத் புரட்சியிலிருந்தும் அதன் முக்கிய சூத்திரதாரியான லெனினிடமிருந்தும் கற்றுக் கொள்ள ஒன்றுமில்லாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. 21 ஆம் நூற்றாண்டிற்கான சோஷலிசத்தைக் கட்டமைக்கும் விவாதத்தில் ஏகாதிபத்தியத்திற்கும் உலக நிதி மூலதனத்திற்கு எதிரான போராட்டங்களின் தேவையையும் சிக்கலையும் பற்றிய ஆழ்ந்த விவாதங்கள் இல்லாதது, இந்த நூலின் முழுமையை நிச்சயம் குறைத்துவிடுகிறது.

இது அனைத்திற்கும் மேலாக லெபோலிச் சோஷலிசக் கனவு காணும் ஒவ்வொருவராலும் படித்து விவாதிக்கப்பட வேண்டியவர். தீக்கதிர் நாளிதழ் இந் நூலைப் பற்றிய விவாதத்திற்கான தளம் அமைத்து ஒரு முன்னோடியாக இருப்பது பாராட்டுக்குரியது. இந்தப் புத்தகத்தின் தேவையை அதனுள்ளிருக்கும் ஒரு சிறப்பான வாசகத்தின் வாயிலாகக் கூறுவது சிறப்பாக இருக்கும்.

“எங்கே போவது என்பது உங்களுக்குத் தெரியவில்லை என்றால் எந்தப் பாதையும் உங்களை அங்கு கொண்டு சேர்க்காது.’’

சோஷலிசத்திற்கான தேவை முன்னெப்போதையும் விட இப்போது அதிகம். அந்த சோஷலிசத்திற்கான விவாதத்தை நிச்சயம் துவக்கும் இந்நூல்.

Pin It