ஆவடி மனோகரன் கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக திராவிடர் கழக மேடைகளில் தனது அனல் கக்கும் பேச்சால் தமிழகத்தை அதிர வைத்தவர். இந்தியா விற்கு உள்ளேயும் வெளி யேயும் தமிழீழப் பங் களிப்பில் கூட இவருக்குத் தனியிடம் உண்டு. கட்சி இயக்கம் என்கிற கட்டுப் பாடுகளுக்கு அப்பால் இன மொழி விடுதலைக்காக அதிகமாகக் களப்பணி யாற்றியதால் சிலகாலம் கட்சிக் குள்ளேயே கலகக்காரராகப் பார்க்கப்பட்டவர். தற்போது திராவிடர் கழகத்திலிருந்து இவர் விலகல் என்றும் விலக்கப்பட்டார் என்றும் மாறுபட்ட செய்திகள் வந்துள்ள நிலையில் உண்மை நிலை அறிய ‘மண் மொழி’ இதழுக்காக அவரை நேர் கண்டோம். இதோ மனம் திறக்கிறார் மனோகரன் . நேர்கண்டவர் அகஸ்டின் அவாப். 

1. திராவிடர் கழகத்தில் கலகம் என்றும் ஆவடியில் ஆரம்பித்து திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர் வரை பலர் தி.க.வில் இருந்து விலகல் என்றும் செய்திகள் வருகின்றதே என்ன காரணம்? 

தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட அறிவுப் புரட்சி இயக்கம் திராவிடர் கழகம். தற்போது அதன் தலைமைக்கு கொள்கைகளைப் பரப்புவதை விட தனது நிறுவனங்களின் பொருளியல் வளர்ச்சிக்கும் அதற்காக அரசியல் கட்சிகளை அண்டிப்பிழைக்கவுமே நேரம் சரியாக இருப்பதால் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து தடம் மாறிப் போய்க் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை செய்த கொலை வெறியன் ராசபக்சேவுக்கு ஆயுதமும், பணமும், படைகளும் அனுப்பிய சோனியா காந்தியின் காங்கிரசை கண்டித்து போராட வேண்டிய தி.க. இனப்படுகொலைக்கு முற்றிலும் காரணமான காங்கிரசுக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகள் கேட்டு பரப்புரை செய்தது மன்னிக்க முடியாத இனத்துரோகமாகும். 

தமிழ்நாடு முழுவதும் உள்ள உண்மை தி.க.வினர் இச்செயல் கண்டு அதிர்ச்சியுற்று வேதனையுடன் உள்ளனர். அந்த வேதனையின் வெளிப்பாடாகத்தான் 40 ஆண்டு காலம் எந்தக் கழகம் தமிழினத்தைக் காக்கும் என்று தொண்டு செய்து, 18 முறை சிறைசென்று, 3 முறை தமிழகம் முழுவதும் நடைப் பயணமாய் கொள்கைப் பரப்புரை செய்த என்னைப் போன்ற தொண்டர்கள் பலர் தி.க.வில் இருந்து வேதனையுடன் வெளியேறினோம்.எங்கள் விலகலைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சொந்த காசை செலவு செய்து இயக்கம் வளர்த்த தொண்டர்கள் பலர் தற்போது வேதனையுடன் வெளியேறத் தொடங்கி உள்ளனர். 

2. ஒரு இயக்கம் சமகாலத் தேவைகள் பல இருந்தும் பல கிளைகளாக பல்கி பெருகி ஆண்டுக்கு ஆண்டு தேய்ந்து சுருங்குவது ஏன்? 

அந்த இயக்கத்தின் தலைமை கொள்கை கோட்பாடுகளை விட்டு விட்டு திசைமாறிச் சுய நலப்போக்கோடு வேறுதிசைப் பயணம் மேற்கொள்ளும் போது உண்மைக் கொள்கை யாளர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தனி இயக்கம் காண்பதால்தான் இயக்கம் பல கிளைகளாகப் பிரிகிறது. தேய்ந்து சுருங்குகிறது. 

3. இலங்கைப் போர் இந்தியா நடத்திய போர் என்று பல்வேறு தரப்பினரும் கூறுகின்ற வேளையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியை தி.க. ஆதரித்தது ஏன்? 

இதற்கான விளக்கமான பதிலை முதல் கேள்வியிலேயே தெளிவாகக் கூறி உள்ளேன். 

4. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசில் பங்கேற்று ஆட்சி நடத்திய திராவிடக் கட்சிகள் இலங்கை பற்றிய வெளியுறவுக் கொள்கையில் ஈழ விடுதலைக்கு சாதகமான அணுகுமுறையை ஏன் முன்னெடுக்கவில்லை? 

தமிழக திராவிடக் கட்சிகள் ஈழப் போராட்டத்தை கையில் எடுத்தது போல் எடுத்து தங்களின் அரசியலுக்கு அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனவே தவிர உண்மை யான ஈழ விடுதலையில் எவருக்கும் அக்கறை இல்லாததே காரணம். இங்குள்ள திராவிடக் கட்சிகளின் போட்டி அரசியல் நாற்காலிச் சண்டைகளில் அவர்களுக்கு வெளியுறவுக் கொள்கையாவது, வெங்காயமாவது. 

5. உலகம் முழுவதும் ஆர்த்தெழுந்த தமிழர் போராட்டத்திற்கு இணையாக தமிழகத்தில் பள்ளி சிறார் முதல் உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் வரை இனப்படு கொலைக்கு எதிராகத் திரண்டு எழுந்த சக்தியை ஆட்சியாளர்கள் ஒடுக்கியது எதனால்? 

தமிழ் ஈழம் மலர்வதை மத்திய மாநில அரசுகள் அறவே விரும்பாததுதான் முதல் காரணம். தமிழக முதல்வர் கருணாநிதி விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் மாவீரன் பிரபாகரனையும் எந்தக் காலத்திலும் ஆதரித்தது கிடையாது. ஈழம் மலர்ந்தால் தனக்கு மரியாதை குறைந்து விடும் என்ற மனப்பான்மை முதல்வருக்கு உண்டு. எனவேதான் இலங்கைத் தமிழருக்கு தன்னை விட யாரும் தலைமை தாங்கி போராடுவதை அவர் விரும்ப வில்லை. இதனால்தான் மனித சங்கிலி போராட்டம், சட்டமன்றத் தீர்மானம், அய்யகோ இறுதி தீர்மானம், 4 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் என்று தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். 

இதையும் மீறி பீறிட்டுடெழுந்த மாணவர்கள் போராட் டத்தை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுதலை அளித்து பிசுபிசுவிக்க வைத்தார். உயர்நீதிமனறத்தில் ஆர்த்தெழுந்து போராட்டம் நடத்திய இனவுணர்வுள்ள வழக்கறிஞர்களை உலக வரலாற்றில் இல்லாத அளவுக்கு காவல்துறையை ஏவி அடக்குமுறை செய்து ஒடுக்க முயன்றார். உணர்ச்சியுடன் ஈழத்திற்கு ஆதரவாக எழுச்சியுரை ஆற்றிய கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், அமீர், நாஞ்சில் சம்பத், போன்றவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தார். தமிழ் இன எழுச்சி ஏற்பட்டால் ஆட்சியாளர்களுக்கும் பதவிக்கும் ஆபத்து என்பதை அவர்கள் உணர்ந்த காரணத்தால் ஒடுக்கினார்கள். 

6. ஈழத் தமிழர் இனப்படுகொலை தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றங்கள் கூட விவாதம் நடத்தும் போது தாய்த் தழிகத்தில் சட்டமன்றமும் மக்கள் மன்றமும் சலனமற்று இருத்ததே ஏன்? எதனால்? 

சட்டமன்றம்தான் அய்யகோ தீர்மானம் போட்டதே - கொதித்து எழுந்த மக்கள் மன்றத்தை ஈழ விடுதலைப் பற்றி பேசுவதே இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று பூச்சாண்டி காட்டியதால் மக்கள் மன்றமும் அமைதியானது. ஆனால் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மக்கள் மன்றம் தன் உள்மனதில் உள்வாங்கி நீருபூத்த நெருப்பாக உள்ளது. 

7. தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் மாவீரன் பிரபாகரன் பற்றி நாள்தோறும் மாறுபட்ட செய்திகள் வருகின்றதே? உண்மை நிலைதான் என்ன? 

“தம்பி மீண்டு வருவார். நம்பி இருங்க. தமிழ் ஈழம் வென்றெடுப்பார்”  

இது காலத்தின் கட்டாயம். எனவே கவலை வேண்டாம். இந்திய இலங்கை உளவுத் துறைகளின் பித்தலாட்ட அறிக்கைகளை புறந்தள்ளுங்கள். 

8. இந்திய தேசியம் என்ற பெயரில் தேசிய சுய நிர்ணய உரிமைகள் நசுக்கப்பட்டது போல திராவிடம் என்ற பெயரில் தமிழ்த்தேசிய உணர்வுகள் புறந்தள்ளப்பட்டது தான் ஈழ விடுதலை கேள்விக் குறியானதற்குக் காரணமா? 

ஆம், முற்றிலும் உண்மை. சூரிய மாயையில் இருந்து திராவிடர்களை மீட்டது போல், திராவிட மாயையில் இருந்து தமிழ்த் தேசியத்தை மீட்பது மிகவும் அவசியம். 

9. இந்திய தேசியத்தில் அதிருப்தியுற்றும், சுயநலமிக்க திராவிட இயக்க அரசியலில் வெறுப்புற்றும் இருக்கின்ற பல லட்சம் இளைஞர்களுக்கு என்று மாற்று திட்டம் என்ன வைத்திருக்கிறீர்கள்? 

ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்குப்பின் தனிமனித துதிபாடும் அயோக்கியத்தனமான அரசியலில் இருந்து விடுபட்டு தமிழ் இன இளைஞர்கள் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் கொதித்துப் போய் எரிமலையாய் உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்களை ஒருங்கிணைத்து தமிழ் தேசிய அரசியலைப் புரியவைத்து மிகப் பெரிய தமிழ்தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு இளைஞர்களை அணியப்படுத்த வேண்டிய வரலாற்றுக் கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு. எமது தோழர்களின் கூட்டு முயற்சியில் விரைவில் உருவாக இருக்கும் தமிழர் தன்மானப் பாசறை அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்யும். 

10. தி.க.வின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கருதுகிறீர்கள்? 

விடுதலைப் பத்திரிக்கையின் முகப்பில் உள்ள தி.க. கொடியை தற்போது அகற்றி விட்டார்கள். இயக்கத்திற்கு உழைக்காத வெறும் சம்பளம் வாங்குகின்றவர்கள் தான் கல்வி நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். எனவே, உண்மையான பெரியார் தொண்டர்களுக்கு அங்கே மரியாதை இல்லை. பல பேர் அமைதியாக இயக்கத்தை விட்டு ஒதுங்கிவிட்டார்கள். இதனால் இயக்கத்தின் அடிக்கட்டுமானம் குலைந்து, வெறும் கல்வி நிறுவனங்கள் நடத்துகின்ற ஒரு அமைப்பாக மட்டுமே எதிர் காலத்தில் தி.க. இருக்கும். 

Pin It