1. யாரிது

நீர்த் தாரை போல் ஒழுகும்
வார்த்தைகளைப் பற்றிக்கொண்டு
எங்கெங்கேதான் போவது

எல்லா வாசல்களும்
திறந்திருந்தாலும்
ஏன் இங்கே யாரும் வருவதில்லை

பூக்களும் இலைகளும்
உதிர்ந்துகொண்டிருக்கும்
மரத்தை இங்கே யார் வைத்தது.

இந்த மரம்தான் நானோ
உதிர்ந்துகொண்டே இருப்பதும்
பறந்துகொண்டே இருப்பதும் கூட
நான்தானா? 

2. வன்மம்

இருளின் கன்றுகள்
பெருவனங்களுக்குள்ளும்
நீண்ட அரண்மனைத் தாழ்வாரங்களிலும்
கோயிலிலும் குகையிலும்
அவிழ்த்து விடப்பட்டன.

அழிந்த இரவின் எச்சங்கள்
அழுதுகொண்டே இருந்தன.

பின்வாங்கிய இரவு
கறுவிக்கொண்டே இருந்தது.

காலம் வந்ததும்
இரவு சிரித்தது.

அதன் வன்மையான பாய்ச்சலில்
சூரிய ஒளியின்
ஒரு அணுகூட எஞ்சவில்லை. 

3.

கசந்து ஓடும்
இந்த நதியிலிருந்து
நீங்கள் ஒரு கைகூட
அள்ள முடியாது

மலர்களைப் போல் சில சொற்களை
ஒரு சடங்காக
இதில் தூவலாம்
ஆனால் நகர்ந்துகொள்ளுங்கள்
அந்தப் பூக்கள்
புதர் ஓரமாய் ஒதுக்கப்படுவதை
உங்களால் சகிக்க முடியாது.

ஒரு ஊதா நிறக் குருவி
இங்கிருந்து ஒரு மீனை எடுக்க
வட்டமிடுகிறது
நீங்கள் அதைப்போலச் சிந்தியுங்கள்.