சம்ஹாரம்

தாள் வெறுமையாய் இருப்பதால் நாம் எழுதுகிறோம். அல்லது நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். அடித்தல் திருத்தல்களை ரப்பரைக் கொண்டு, அழித்து அழித்து எழுதுகிறேன். தாள் நிரம்பிக் கொள்ளும்போது, ஒரு குழந்தை என் அறையில் நுழைகிறது. நான் அழிக்கிறேன். எழுதுகிறேன். அழிக்கிறேன். அது ரப்பரைப் பார்க்கிறது. ரப்பர் என்பதால் அழிக்கிறோம். அல்லது குழந்தை, என்னைக் கேட்காமலே எழுதியபடி இருக்கும் என் நெற்றியை அழிக்கிறது. என் பார்வையை அழிக்கிறது. என் சுவாசத்தை அழிக்கிறது. கொஞ்சம் கீழிறங்கி, என் வார்த்தைகளை அழிக்கிறது. பிறகு, தன் கையைக், கழுத்தைக் கடந்து, இருதயத்திற்கு எடுத்து வருகிறது. திடீரென, அதன் கையை வலிமையாகப் பற்றுகிறேன். பிடியின் இறுக்கத்தில், வலியில், ரப்பரைத் தூக்கி மூலையில் எறிந்து, அறையில், இருந்து வெளியேறுகிறது. நான் என் இடப்பகுதியைத் தொட்டுப் பார்த்தேன். அவ்வளவு படபடப்புடன் இருதயம் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

(குழந்தை ஹரணிக்கு)

சாந்தநிலை

மேஜையின் மேல் ஒரு பெட்டி. நாற்காலியில் அமர்ந்திருப்பவனின் கை, எதேச்சையாய்த் தொடுகிறது. எதிர்பாராமல் அந்தப் பெட்டி தரையை நோக்கி விழுகிறது. அக்கணம், கண்களை மூடிக் கொள்கிறேன். தரையில் பெட்டி சிதறுகிறது. பெட்டியில் இருந்த பொருட்கள் சிதறுகின்றன. அவற்றின் ஓசை தொந்தரவு தருகிறது. எனது முகம் சுருங்கும் அக்கணத்தில், சப்தங்களை உள்வாங்கி, கண்களைத் திறக்கிறேன். சாந்தியில் மனம். பெட்டி தரைமேல் விழுகிறது. பொருள்கள் சிதறுகின்றன. என் கண்களுக்கு வெளியே, சப்தங்கள் எதுவும் எழவேயில்லை.

உருவகத்தின் சாபம்

அந்த நகரம் நெருக்கமான, இருளான கட்டிடங்களாலானது. அது எனக்கு, எப்போதும் மனதில் உளைச்சலையும், உடலில் படர்தேமலையுமே தந்திருந்தது. அதன் மனிதர்கள் தன்னலத்தை, பிசாசுத்தன்மையை, துரோக மனதை, பழிவாங்கும் தன்மையை, புழுங்கிய மனதைக் கொண்டவர்கள். அவர்கள் எப்போதும் விரக்தியையே தந்திருந்தனர். அதன் கடலும் மனிதர்களைப் போன்றதே. அதன் உப்புக் காற்றை, உப்பு நீரை, மரணத்தை நினைவூட்டும் நீல நிறத்தை, ஊழ்வினையின் அலைகளை வெறுத்திருந்தேன். கடல்தான் நகரம். அதன் மேல் காறித் துப்பினேன். எனது ஒரு துளி எச்சிலின் வழவழப்பில், கோழையில், துர்நாற்றத்தில் கடல் கொந்தளித்தது. நான் நகரத்திலிருந்து வெளியேறி, இந்தக் கிராமத்தில் வாழ்கிறேன். யாரும் என்னை ஏற்கவே இல்லை. என் உடலில் உப்புவாடை வீசுகிறது. வார்த்தையில் உவர்ப்புத் தெறிக்கிறது. என் தொடுதலில் யாவும் உப்பைப் பெறும், இக்கிராமத்தில், நாடோடியாய்த் திரிகிறேன். ஒவ்வொரு இரவும் தூக்கத்தில் கனவு காண்கிறேன். கடல் சாபமிடுகிறது: ‘என் அலைகளைப் போலவே திரிவாய்.’