Slaveஒப்பிட முடியாத என்
தகப்பனே

என் பாதங்கள் இடறியபோது
கைப்பிடித்து நடையைத் தொடரச்செய்தவனே

நான் வறுமைக் கோட்டை
உன் வயிற்றிலே பார்த்தேன்

உன் அம்மணத்தையே
நான் உடுத்தினேன்

அம்மா சொல்லியிருக்கிறாள்
எனக்கு படிப்பு எதற்கு என ஆண்டை கேட்டபோது
நீ ஆத்திரப்பட்டதாய்

உன் கோடாரியின் வேகத்தையும்
உன் கலப்பையின் கூர்மையையும்
கண்டிருந்தும் அவன்
உனக்குக் கோபம் வராதென்று
எண்ணியிருக்கலாம்

உன் உக்கிரத்தின்
உருவமாய்
இப்போது நான் தெரிவேன்

உயர்த்திய என் கைகளிடம்
இரக்கம் யாசிக்கவோ
என் தோள் துண்டின் தயவுக்கோ
என் பேனாவின் கருணைக்கோ
அவன் ஒரு நாள்
என்னிடம் வருவான்
அப்போது அவனை
உன் கோபம் சுடும்
என் கையெழுத்தினால்
அவன் காரியங்களெல்லாம்
தீட்டுப்படும்

அழகிய பெரியவன்
Pin It