அறிமுகமும் தமிழாக்கமும்: வ. கீதா - எஸ். வி. ராஜதுரை

கேரென் ப்ரெஸ்

ஆங்கிலத்தில் எழுதும் இந்தத் தென்னாப்பிரிக்கப் பெண் கவிஞர், தனது இளமைக்காலந்தொட்டே இனவெறியாட்சிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். தென்னாப்பிரிக்க சோசலிச அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்புடைய அவர். மக்கள் கல்வி தொடர்பான பல பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது கவிதைகள் நளினமானவை. அமைதியான, ஆனால் அழுத்தமான தொனியில் அவலம், சோகம், களிப்பு, நையாண்டி, மௌனம் முதலிய உணர்வுகளை வெளிப்படுத்துபவை. தான் வாழ நேர்ந்துள்ள நேர்மையற்ற, ஈனத்தனமான சமுதாயத்தில் தனக்கும் தன் கவிதைகளுக்குமான கண்ணியத்தையும் மதிப்பையும் தக்கவைத்துக் கொள்வதையே முதன்மையான கடமையாகக் கருதிக் கவிதைகள் எழுதி வருகிறார். அவரது மூன்று கவிதைகளின் தமிழாக்கங்கள் இங்கு தரப்படுகின்றன.



தென்னாப்பிரிக்கக் குடியுரிமை பெற ஒரு விண்ணப்பம்

நாடே
மலைத்தொடரில் விரியும் உனது நாட்கள்
எனது வருகையை அணைத்துக்கொள்ளுமா?
எதற்காகவோ காத்திருக்கும்
வெறுமையான சுவர்கள் உள்ள ஒரு அறையில் 
நான் காத்திருக்கிறேன்.
கடலிடையே, தெருக்களிடையே, வானத்திடையே
நான் செல்கிறேன்
என்னுடன் உரையாட அவற்றுக்கு நேரமில்லை.
நாடே
உனது நிலா வெளிச்சம் என்னைப் பருகுவதற்காக
நான்தூசியாக வேண்டுமா?
எனது ஜன்னலை நீ திறப்பதில்லை.
ஜன்னல் கண்ணாடி மீது சாய்ந்து கொண்டிருக்கிறேன்
இரவு முழுவதும் கடல் காகங்களுடன் நீ பேசிக்கொண்டிருப்பது
எனக்குக் கேட்கிறது.
நான்ஒளிமயமானவள்
ஓளியூடுருவ முடியாதவள்
உரத்துச் சொல்லப்படக் காத்திருக்கும் 
ஒரு மந்திரச் சொல்
நாடே, எனது நிழலாக மாறு
நான் உனது உடலாக அமைவேன்.
(From the collection Home, P.O. Box 1384 Sea Point 8060, South Africa) 

19 ஆம் நூற்றாண்டின் நன்றியுணர்வு

கப்பல் தளபதிகள் இங்குதான் வருவர்
நங்கூரம் பாய்ச்ச
இருண்ட குரூரங்களை உண்டு பெருத்த கனவுகளை
இறக்கி வைத்தவாறு
தமது தாடிகளிலிருந்து அற்பத்தனங்களின் துகள்களை 
தட்டியுதிர்த்தவாறு
அவர்களது மனைவியர் அமைதியான மண்ணைத் 
தோண்டுகின்றனர்
குழந்தைகளை, பணியாட்களை, கடவுளின் கருணை
என்ற பொறிகளை விதைக்கின்றனர்
சிறுத்தைகளும் காடுகளும் அண்டவிடாமல்
திருப்பி அனுப்பப்படுகின்றன.
கரகரப்பான குரலுடைய குதிரை வீரனிடமிருந்து
வாங்கப்பட்ட சிங்கத்தின் புட்டம் போன்ற நிலம்
வீடுகளின் வரவேற்பறையிலிருந்து பார்த்து ரசிக்கும்
ரோஜா மலர்களாய் துண்டு போடப்படுகின்றது 
உள்ளுர்க் குடிகளின் அம்மணத்தை மறைக்க
ஆடைகள் கொடுக்கப்படுகின்றன
ஆனால் அவர்கள் ஓயாது இடம் மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.
புகையிலைப் பை ஒவ்வொன்றையும் நிரப்புகிறது
நகராட்சி அதிகாரம்.
கடலுங்கூட மந்தமாக இருக்கக் கற்றுக்கொண்டுள்ளது.
இரவில் மட்டுமே மூடுபனி எழுகின்றது 
மணல் மீது மௌன நடை போட்டவாறு
பாறைகளின் மீது கப்பல்கள் மோதிச் சிதறுவது
கண்கூடாகத் தெரிகிறது 
மூழ்கிக் கொண்டிருப்பவர்களின் ஓலத்தைக் கேட்டு
கப்பல் தலைவர்கள் புருவத்தை நெறிக்கிறார்கள்
அவர்களது பேரப்பிள்ளைகளோ
அந்தக் காட்சியைப் பார்க்க கூடுகின்றனர்
மிட்டாய் வண்ணங்களிலான கோடுகள் போட்ட
தொப்பிகளை அணிந்தவாறு.
அவர்கள் யாருக்கேனும் நன்றி சொல்ல வேண்டுமோ?
தூக்கிலிடப்பட்டவர்களின் மலையிலிருந்து
வீசுகிறது காற்று
நீங்கள் தான் தப்பித்துவிட்டீர்களே
என்பதை நினைவுறுத்தியவாறு.
பொதுக் குளியலறைகளுக்குச் செல்ல
அவர்களை வண்டிகளில் வைத்து
நகர்த்திச் செல்கின்றன கறுப்புக் கைகள்
அவர்களது மனைவிமார்கள்
விதவிதமான சவமாலைகளைத் தொடுப்பது எப்படி
எனத் தமக்குள்ளேயே பேசிக்கொள்கின்றனர்
அவர்களது சருமத்தை வெய்யில் உரித்தெடுக்கிறது.

 

 

அன்ட்யெ க்ரோக் :

தென்னாப்பிரிக்காவின் நிகழ்கால முக்கியக் கவிஞர்களிலொருவராகக் கருதப்படும் இப்பெண் கவிஞர், "ஆப்பிரிக்கான்ஸ்' மொழியில் கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள் எழுதி வருகிறார். அண்மைக்காலம் வரை தென்னாப்பிரிக்காவில் ஆட்சியதிகாரமும் செல்வாக்கும் பெற்றிருந்த "ஆப்ரிக்கானர்' இனத்தில் (இவர்கள் டச்சுக்காரர்களின் ஒல்லாந்தியர்களின் வம்சாவழியினர்) பிறந்திருந்தாலும் அவ்வினத்தினரின் இனவெறியையும் இனவெறியாட்சியையும் தன் இளையப் பருவத்திலிருந்தே எதிர்த்து வந்துள்ளார். 

இனவொதுக்கல் (Apartheid) ஆட்சி முடிந்த பின் அவ்வாட்சியின் கீழ் நடந்த கொடூரமான சித்திரவதைகள், ஒடுக்குமுறைகள் போன்ற மனித உரிமை மீறல்களையும் இனவெறிக்கு எதிராகப் போராடிய குழுக்களும் அமைப்புகளும் கையாண்ட வன்முறைகளையும் தீர விசாரித்து, நீதியையும் உண்மையையும் நிலைநாட்ட அமைக்கப்பட்ட உண்மையறியும் ஆணையத்தின் செயற்பாடுகள் குறித்து விரிவாக, விமர்சன நோக்குடன் எழுதியுள்ளார். இவரது கவிதைகள், தூய்மை, காதல், ஊடல், கூடல் போன்றவற்றைப் பேசும் அகப்பாடல்களாக ஒரு புறமும் அரசியல், தத்துவம், அழகியல், வரலாறு முதலியவற்றை விவாதிக்கும் புறப்பாடல்களாக மற்றொரு புறமும் விரிவடைகின்றன. முழுக்க முழுக்க அரசியலின் தர்க்க வாதங்களுக்குள்ளேயே சிக்கிப்போய்விட்ட ஒரு சமுதாயத்தில் கவிதையிள் அடையாளம். இருப்பு என்ற பிரச்சினைகள் அவரது கவிதைகளில் அலசி ஆராயப்படுகின்றன. அவரது கவிதையொன்று (ஆங்கிலம் வழி) தமிழாக்கம் செய்யப்பட்டு இங்கு தரப்படுகின்றது.



பேச்சுமொழி

சொற்களில்
பயனற்ற யுகங்களில்
நான் அப்பட்டமாக
ஊறித் திளைப்பதால்
பொய் சொல்கிறேன்
என்று எனக்குத் தோன்றுகின்றது
இத்தனை அநீதிகளுக்கு நடுவே
கவிதை ஒரு சொகுசாக நீடித்தால்
அதுவும் கூட ஒரு பொய்யாகி விடுகிறது.
நான் அநீதிகளின்
எதிர்க்கரையில் வாழ்கிறேன்
அதனால்தான்
எனக்குள்ளே
குரல் நரம்புகளை மீட்டி
சுருதி சேர்க்க
எனக்கு நேரமிருக்கிறது.
நான் இதைச் செய்வதில்
என்ன தவறு?
இந்த நாடு ஏற்கனவே பாழடைந்துவிட்டது.
கட்டளையிடுகிறார்கள்
சொற்கள் ஏ.கே. 47களாக வேண்டும்
சொற்கள் எப்போதும் போராட வேண்டும்
கவிதை பயனுள்ளதாக இருக்க வேண்டும்
செயலாக வேண்டும்
போராட்டங்களை விபரிக்க வேண்டும்
நிலைப்பாடு மேற்கொள்ள வேண்டும்
களைகள் ரோஜாக்களைவிட வலிமையானவை
விதைக்கப்பட்ட கவிதை
ஒலி மழையில் நனைந்து
காடாக வளர்கிறது.
(அரசியலின் மூடத்தனத்திலிருந்து
இந்த கவிதையை
நான் எப்படி பாதுகாப்பது?
சோகத்தில் நான் ஆழ்ந்திருக்க
என்னை சந்தேகிக்கிறார்கள்
எனது சாதாரணச் சொற்களைக்கூட
ஏற்க மறுக்கிறார்கள்.)
உனது கண்பார்வையின் வீச்சு நிற்கும் இடத்தில்
மூச்சுக் காற்றுக்கு அந்தப் பக்கமாக இரைகின்ற
கவிஞனின் கேட்கப்படாத கவிதை
என்னை வெட்கமுறச் செய்கிறது.
அங்கு கற்கள் பாவிய சாலையில்
கறுப்பர் குடியிருப்பில் உள்ள கடைக்கு அருகே
விடியலுக்கு முன்னே
யாரேனும் ஒருவர் காணாமல் போயிருக்கலாம்.
ஏதொவொரு போரில் சண்டையிடுவது போல
காற்று வீசுகிறது.
உலகின் முக்கால் வாசிப்பேர் வாழும்
நகரக் குடியிருப்புகளில்
குழந்தைகள் கால்பந்து ஆடுகின்றன.
அங்கு அவர்கள் நியாயமாகவே
சமத்துவத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
உன்னைப் போலவே
கூச்சத்துடன், தைரியத்துடன் அல்லது
மடத்தனமாக
அல்லது ஒருவேளை நம்மைப் போலவே
சோம்பேறிகளாக, ஊழல் படிந்தவர்களாகக்
காத்திருக்கின்றனர்.
அவர்கள் கையிலிருந்து தொங்குகின்றது
நம்பிக்கை, பசி, கனவு ஆகியவற்றால்
பின்னப்பட்ட இந்த வஞ்சகக் கம்பளம்
ஆனால் கவிஞனோ
ஒதுங்கி நிற்கிறான்.
கோரிக்கை மனுக்கள்
அநீதியான தீர்மானங்கள்
அவன் காதுக்கு எட்டுகின்றன.
அவன் கவிதைகள் எழுதுவதை நிறுத்திவிட்டான்
கவிதைக்கு இடமில்லை
குளிரில் நீலம் பாரித்து நிற்கிறான்
சிந்திக்கும் கவிஞன்.
மிக மெல்லிய குரலில்
தான் கைது செய்யப்பட்டதை
அவள் மீண்டும் விவரிக்கிறாள்
அவளது சொற்கள்
நாக்கிலேயே கரைந்து விடுகின்றன
அவை
அச்சில் இல்லை
புகைப்படங்களில் இல்லை
புள்ளிவிவரங்களில் இல்லை
எல்லா இடங்களிலும் ஈரம் படிந்துள்ளது.
காணாமல் போனவர்கள்
சித்திரவதைகள்
அனாமதேய மரணங்கள் பற்றிய
வதந்திகள்.
மரநிழல் படிந்த புறநகர்ப்பகுதிக்குள்
போராட்டம்
வடிந்து விழுகிறது
காதுகளுக்கு எட்டாத
கோபக் கூச்சல்களின் ஊடாக
இது வதந்திகளின் நாடாகிவிட்டது.
எனது புலன்களால்
இலைகளிலிருந்து ஓலங்களைப்
பிரித்து எடுக்க முடியாமல் போனால்
மளிகைக் கடைகளுக்கு வெளியே உள்ள
தடுப்பு வேலிகளிலிருந்து இரத்தத்தைப்
பிரித்து எடுக்க முடியாமல் போனால்
அல்லது
எனது மேசைக்கு அருகே உள்ள தடுப்புகளிலிருந்து
மரணத்தைக் கொத்தி எடுக்க முடியாமல் போனால்
உண்மைக்காக எப்போதும் போராடும்
எழுதுகோலும் தாளும் நடத்தும்
துப்பாக்கி சண்டையில்
மனம் இறுகி நான் இறப்பேன்.
எல்லா எழுத்தாளர்களும்
மடிந்துவிட்டனர் அல்லவா
அவர்களால்
ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றியோ
ஒடுக்கப்பட்டவர்களுக்காகவோ
எழுதமுடியாது
ஒடுக்கப்பட்ட எழுத்தாளன்
கோபத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறான்
இதைத்தான் சொல்கிறார்கள்
""அழகியல் மட்டுமே ஒரே அறநெறி''
என்றும் அவர்கள் சொல்கிறார்கள்
ஆனால் காலத்தின் தேவைகளோ
நடுநிலை எதையும் சகித்துக்கொள்வதாக இல்லை
இரன்டு தீமைகளில்
எதையும் நான் தெரிவு செய்யவில்லை.
பேராசையும் இழித்துரைப்பும் மண்டிக்கிடந்த
ஒரு குலத்தில் நான் பிறந்தேன்
எப்பொழுதும் நான் தனிமையானவளாகவே
என்னை உணர்ந்தேன்
எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு புதர்.
எனக்கும் படுகொலைகளுக்குமிடையே ஒரு புதர்.
பசி, வீடின்மை, நிலமின்மை ஆகியவற்றை எதிர்கொள்ள
என்னை எதுவுமே ஒரு போதும் ஆயத்தப்படுத்தியதில்லை.
இணைப்புப் பாலமொன்று அமைக்க
நான் முயற்சி செய்கிறேன்
ஆனால்
எல்லாமே பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன
நான் ஒரு வழிகாட்டியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
பிரச்சாரம், வாய்வீச்சு
ஆகியவற்றில் எச்சரிக்கையாக இருங்கள்
தன்னுணர்வோடு சொல்லப்படும் நயம் கூட இல்லாத
பொய்கள் எனும் சாட்டையடியின் கீழ்
வெளிவரும் முரட்டுத்தனமான சொற்றொடர்களில்
எச்சரிக்கையாக இருங்கள்
அழகியலால் எப்போதேனும் பயனுண்டா?
உயிர் பிழைத்தலை ஆய்ந்தறிவதை
நான் ஒருபோதும் நிறுத்துவதில்லை
இந்த நொய்மையான மென்மையான
அளவுகோலைக் கொண்டு
நான் ஒவ்வொரு உறவையும்
நேர்மையாக ஆய்வு செய்கின்றேன்
மூச்சுவிட, மூச்சுவிட, ஆம்! மூச்சு விடுவதற்காகவே
இதைச் செய்கிறேன்
மொழி ஒரு போதும்
பயனற்றதாகவோ
போலியானதாகவோ இருந்ததில்லை
ஆனால் கவிஞன் தன் கவித் தொழிலை
மேற்கொள்ள விரும்பினாலும்
அரசியல் சொற்கள் அணிவகுத்து முன் சென்றாலும்
அநீதிகள் என்னவோ நிஜமானவையே.
நான் எழுதுவதில்
எனக்குப் பிறகும் எஞ்சுபவை
பொய்க்கும் ஆரவார வெடிகுண்டுக்கும்*
இடையே நடக்கும் பழங்காலச் சண்டையினுடாகத்
துளிர்விடும்.

* ஆரவார வெடிகுண்டு: தென்னாப்பிரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டிலிருந்து தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் முதலிரண்டு ஆண்டுகள் முடிய, அங்கு குடிபெயர்ந்த டச்சு (ஒல்லாந்திய) வம்சாவழியினரான போயர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்குமிடையே நடந்த போரில் இது போயர் யுத்தம் என அழைக்கப்படுகிறது பயன்படுத்தப்பட்ட ஒரு நூதனமான வெடிகுண்டின் பெயர் லிட்டெட்(Lyddite) புழுதியையும் மண்ணையும் கிளப்பிக்கொண்டு பேரொலியோடு வெடிக்கும் அந்த குண்டு பல சமயங்களில் குறி தவறவும் செய்யும். மூலக் கவிதையில் பயன்படுத்தப்பட்டுள்ள Lyddite என்ற சொல் இங்கு "ஆரவார வெடிகுண்டு' எனத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

- வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை

(From the collection Down to the Last Skin. Random Poetry (Random House), Johannesburg, 2000)