உலகளவில் சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் போன்ற கோட்பாடுகள் எல்லா மக்களுக்கும் பொதுவானவையாக இருப்பதுபோன்ற மாயையை ஏற்படுத்துகின்றன. ஆனால் இவை மேற்கத்திய நாடுகளின் ஏகபோக உரிமையாகவும், அதிகாரம் படைத்தவர்களின் செல்லப்பிள்ளையாகவும் தான் இருந்து வருகின்றன. மேலும் இவை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் மீதான கருத்தியல் வன்முறைகளாகவும், பொருளாதாரச் சுரண்டலாக விளங்கினாலும், இவற்றையெல்லாம் நியாயப்படுத்தவும் செய்கின்றன.

மூன்றாம் உலக நாடுகளில் செயல்படும் அதிகாரவர்க்கமும், மேற்கத்திய நாடுகளின் மாயைகளையும், மேலாதிக்கத்தையும் ஏற்றுக்கொள்ளவே செய்கின்றன. இதன்மூலம், மூன்றாம் உலகநாடுகள் சில சலுகைகளை எடுத்துக்கொள்கின்றன. தேசியம், தேசிய இனம் போன்ற கருத்தாக்கங்களைத் தங்களுக்கேற்றபடி வரையறை செய்துகொண்டு, தங்கள் நாடுகளில் உள்ள மற்ற தேசிய இனங்களின் மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இதன் தொடர்ச்சியாக மூன்றாம் உலக நாடுகளில் வாழும் அடித்தள மக்களின் வாழ்க்கை நிலையும், பாரம்பரியமாக அவர்கள் வளர்த்தெடுத்துள்ள பண்பாட்டுத் தோரணிகளும் இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன. இந்தியா போன்ற பல்வேறு தேசிய இனங்கள் வாழுகின்ற நாடுகளில் கூட, ஒற்றைத்தேசியம், ஒரே பண்பாடு, ஒரே தேசிய இன மக்கள் போன்ற நயவஞ்சகமான மாயைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதுபோலவே உலக அளவில், உலகமுழுமைக்கும் பொதுவான ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் போன்ற கோட்பாட்டு மாயைகளும் தற்போது தீவிரமாகவே பேசப்படுகின்றன.

இத்தகைய பிரச்சினைகளை நாட்டார் வழக்காற்றியல் புலம் சார்ந்து அணுகும் நாம், இவற்றிற்கு, நம், தமிழ்ச்சமூகப் பண்பாட்டுப் புரிதல்களிலிருந்து தீர்வுகள் காணமுடியுமாவென்று யோசிக்கிறோம். காரணம், பல நூற்றாண்டுகளின் ஊடாக, பல்வேறு சோதனை முயற்சிகளின் விளைவாக வளர்த்தெடுத்துள்ள பண்பாட்டு வாழ்க்கை, உலகமயமாதல் முதலாளித்துவம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் வழங்கக்கூடும் என்று கருதுவதாலேயே.

மண், நிலம் சார்ந்த உரிமைகளை விடுத்து, எல்லாச் சமூகப் பரப்பிற்குள்ளும் எல்லாப் புவியியல் பகுதிகளிலும் வாழப்பழகிக் கொண்ட மக்கள் குழுவினரை நடோடிகள் என்று சொல்கிறோம். உலகளவில் இத்தகைய நாடோடி (மக்கள்) குழுக்கள் ஏராளம் இருக்கின்றன. குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் நாடோடியினர் அதிகமாகவே வாழ்ந்து வருகின்றனர். அபர்ணா ராவும் மைக்கேல் கசிமீரும் தொகுத்தளித்துள்ள தெற்கு ஆசியாவில் நாடோடியம் என்ற நூலில், பாரம்பரியமாகவே நாடோடிகளாக வாழும் மக்கள் குழுக்களை (இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழுகின்ற பல்வேறு தேசிய இனங்கள்) மையப்படுத்திய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ராவும், கசிமீரும் மூன்று வகையாக நாடோடிக்குழுக்களை வகைப்படுத்துகின்றனர்.

  1. மேய்ச்சல் சமூகம்
  2. மரபாகவே அலைந்து திரியும் வியாபாரிகள், வியாபார சமூகத்தினர்
  3. வேட்டையாடி உணவு சேகரிக்கும் (பழங்குடி) சமூகத்தினர்

இந்நூலைப் போலவே, தமிழில் வெளிவந்துள்ள தமிழகத்தில் நாடோடிகள், சங்க காலம் முதல் சமகாலம் வரை (பக்தவத்சல பாரதி, 2003) என்ற நூல், தமிழகத்திலுள்ள நாடோடிச் சமூகங்கள் பற்றிய குறிப்பிடத்தக்க நூல். சுமார் 20 வகையான நாடோடிச் சமூகங்கள் பற்றிய செறிவான இனவரைவியல் தகவல்கள் இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இவ்விரு நூல்களையும் அணுகும்போது இடம்பெயர்ந்து வாழ்வதையே மக்களின் இடப்பெயர்ச்சியையே நாடோடியம், நாடோடித்தன்மை என்று வரையறை செய்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பளியர், சோழநாயக்கர் போன்ற பழங்குடிச் சமூகத்தினரை தெற்கு ஆசியாவில் நாடோடியத்திலும், இடையர், குறவர், பண்டாரம் போன்ற சமூகத்தினரை தமிழகத்தில் நாடோடிகள் நூலிலும் நாடோடிகளாக வகைப்படுத்தியுள்ளனர். அவற்றின் தொகுப்பாசிரியர்கள்.

மேற்குறிப்பிட்ட சமூகமக்களைப்பற்றிய கட்டுரைகளின் மீது விமர்சனம் செய்வதுபோல இக்கட்டுரை அமைந்தாலும், அது நம்முடைய முக்கிய நோக்கம் இல்லை. மாறாக, தமிழ்ச்சமூகப் பண்பாட்டுத்தளத்தில் இருந்து நாடோடியம் என்ற கருத்தாக்கத்தை வரையறை செய்வதை நோக்கிப் பயணிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

தமிழ்ச் சமூகம், பண்பாடு பற்றிய புரிதலில் நாடோடிகள், நாடோடியம் குறித்த கருத்தாடல் விரிவுபடுத்துவதற்குரிய களமாகவே இருந்து வருகிறது... சங்ககாலம் தொட்டே தமிழ்ச் சமூகத்தின் சமூகப்பண்பாட்டு உருவாக்கத்தில் நாடோடியினர் ஒருங்கிணைவு பெற்றுவந்துள்ளனர். சங்க இலக்கியப் பனுவல்கள் இதனை நுட்பமாகவே பதிவுசெய்துள்ளன.

சங்க காலத்திற்குப் பின்னருங்கூட, தமிழ்ச் சமூக அசைவியக்கத்தில் இவர்கள் ஒரு பகுதியினராக இயங்கிவந்துள்ளனர். சங்கம் மருவிய, இடைக்கால இலக்கியங்களில் கூட இவர்களைப் பற்றிய பதிவுகள் தொடர்ந்துள்ளன. கடந்த ஒரு நூற்றாண்டு இலக்கியங்களில் இவர்களைப்பற்றிய பதிவுகள் குறிப்பிடும்படியாக இல்லை. நவீன இலக்கியப் பாடுபொருள்களிலும் இந்நிலையே தொடர்கிறது. எனினும், தமிழ்ச்சமூகத்தின் சமூகப் பண்பாட்டு அசைவியக்கத்தில் சங்ககாலம் தொட்டு இன்றுவரை நாடோடியம் ஒரு பகுதியாகத் தொடர்ந்து வருகிறது... (பக்தவத்சலபாரதி, 2003:1)

நாடோடிகள் நாடோடியம் கட்டுரையை இப்படியாக ஆரம்பிக்கும் பக்தவத்சல பாரதி, இன்றைய காலகட்டத்தில் நாடோடியத்திற்கு உள்ள முக்கியத்தை மிகத் தெளிவாகவே முன்வைக்கிறார்.

ஆயர் நாடோடியம், ஆயர் வாழ்வுசாரா நாடோடியம் என்று நாடோடியத்தை இருவகையாகப் பிரிக்கும் பக்தவத்சல பாரதி, ஆயர், கோவலர், இடையர் போன்றவர்களை முதல்வகைக்கும், பாணர், பாடினி, கூத்தர், பொருநர், விறலியர், இயவர், வயிரியர், அகவன்மகளிர் போன்றோரை இரண்டாவது வகைக்கும் உதாரணமாகக் காட்டுகிறார் (2003:2)

தொடர்ந்து தமிழ்நாடோடியம் பற்றிப் பேசும் பக்தவத்சல பாரதி இவர்களின் (இடையர்) வாழ்க்கைமுறை அரைநாடோடியம் அல்லது அதற்கு கீழாகக் கால் நாடோடியம் என்று கூறுமளவிற்கு அதன் தன்மையைக் குறைத்துக்கொண்ட நிலையிலேயே உள்ளது (பக்.3) என்கிறார்.

நாடோடியம் பற்றிய வரையறையில் உள்ள பிரச்சனைதான் இடையர் சமூகத்தை அரை நாடோடியமா கால் நாடோடியமா என்று கணக்குப் போடும் அளவிற்கு குழப்பத்தை உண்டுபண்ணுகிறது.

நா. வானமாமலை, கார்த்திகேசு சிவதம்பி ஆகியோரும் சங்ககாலக் கலைஞர்களின் வாழ்வை நாடோடி வாழ்வியலாகவே விளக்கம் செய்வதாக தி.சி. சத்தியம் குறிப்பிடுகிறார். (2003:39)

இடம் பெயர்ந்து வாழ்வதை அல்லது இடப்பெயர்ச்சியை நாடோடியத்தின் வரையறைக் கூறாகக் கருதுவதே இதுபோன்ற பிரச்சனைகளுக்கும் ஐயப்பாடுகளுக்கும் மூல காரணம்.

தமிழ்ச் சமூகத்தின் தனித்த அடையாளங்களைகளைக் காண, அதன் சமூகப் பொருளாதார பண்பாட்டு வாழ்வியலைப் பற்றிய நுட்பமான புரிதல் அவசியப்படுகிறது. தமிழ்ச் சமூகம் வாழ்க்கையைவாழ்வியலை எவ்வாறு கருத்தாக்கம் செய்கிறது? வாழ்க்கையின் ஒவ்வொரு கூறுகளையும் எங்ஙனம் வரையறை செய்கிறது? தமிழ்ச்சமூகத்தின் வாழ்க்கை பற்றிய கதையாடல்கள் எவ்வாறு பிறசமூகங்களிலிருந்து வேறுபடுகின்றன? இம்மாதிரியான கேள்விகளுக்குப் பதில் தேடும்போது, நாட்டார் வழக்காறுகளும், இலக்கியப்பதிவுகளும் நமக்குப் பெருந்துணை புரிகின்றன.

ஆனால் இலக்கியத்தில் குறிப்பிடப்படும் வாழ்வியல் செய்திகளுக்கும், நிகழ்காலத்தில் நமக்கு கிடைக்கும் நாட்டார் வாழ்க்கை சார்ந்த தரவுகளுக்கும் இடையில் இயல்பாக நிலவுகின்ற நீண்ட கால இடைவெளியினால், நம்மால் எந்த ஒரு முடிவிற்கும் வந்துவிடமுடிவதில்லை. ஏராளமான போராட்டங்களும் சமூக மாற்றங்களும் நிகழ்ந்து உருவாகியிருக்கின்ற சமகால வாழ்வின் புரிதல்களைக் கண்டறிவது மிகவும் சிக்கலான செயல்பாடே.

நாடோடியம் என்ற கருத்தாக்கத்தைத் தமிழ்ச்சமூகம் எவ்வாறு வரையறை செய்கிறது? இந்தக் கேள்வியை நாம் இருவிதமாக அணுகலாம்.

  1. நாடோடிகள் என்று சொல்லக்கூடிய சமூகங்களின் வாழ்வியலைக் கவனிப்பது.
  2. பொதுவாக தமிழ்ச்சமூகம் நாடோடிகள், நாடோடியம் போன்றவற்றை எவ்வாறு கற்பனை செய்கிறது?

பொதுவாக இடையர், குறவர், பண்டாரம், பளியர், சோழநாயக்கர் போன்ற சமூக மக்களும் நாட்டார் நிகழ்த்துக்கலைக்கலைஞர்களும் நாடோடிகளாக வாழ்வதாக அல்லது நாடோடிகள் போன்றதொரு வாழ்வை மேற்கொள்வதாக நம்பப்படுகிறது.

குறிஞ்சி நிலத்திற்குச் சொந்தக்காரர்களான குறவர் என்னும் பழங்குடிச் சமூகத்தினர் தமிழ்த்தொல்குடிகளுள் முக்கியமானவர்கள். இவர்கள் தற்காலத்தில் எந்தவொரு மலையிலும், பெரும்பாலும் வசிக்கவில்லை. பெரும்பாலும் கிராமம், நகரம் சார்ந்த சமவெளிப்பகுதிகளில்தான் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் முக்கியமான தொழில் கூடைமுடைதலும், குறிசொல்லுதலும் ஆகும். மணி. கோ. பன்னீர்செல்வத்தின் குறவர் கட்டுரை (2003), இச்சமூகம் பற்றி, வெளியான, நாட்டார் வழக்காற்றியல் புலம் சார்ந்த முதல்கட்டுரையாகக் குறிக்கலாம்.

தஞ்சை, திண்டுக்கல், நாகர்கோவில் ஆகிய வட்டாரப்பகுதிகளில் சேகரித்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இக்கட்டுரை, குறவர்களின் தோற்றத்தொன்மம், குலப்பிரிவுகள், தொழில்கூடைமுடைதல், திருமணம் போன்றவை பற்றி விரிவாகப் பேசுகிறது. ஆனால் இக்கட்டுரையின் எந்த இடத்திலும் குறவர் பற்றிய ஆய்வுக்கட்டுரை நாடோடிகள் பற்றிய தொகுப்பில் இடம் பெற்றதற்கான காரணத்தையோ தருக்க நியாயத்தையோ சுட்டவில்லை. தொகுப்பாசிரியர் கூட எதுவும் பேசவில்லை. குறவர்கள் நாடோடிகள் தானா என்ற சந்தேகம் இருவருக்குமே இருந்திருக்கக் கூடும்.

திருநெல்வேலி மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட கைலாசபுரம், டவுண், மேலப்பாளையம், சமாதானபுரம், கே.டி.சி நகர் போன்ற பகுதிகளில் மலைக்குறவர் எனப்படும் குறவர் இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கூடைமுடைதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களைச் செய்து வருமானம் ஈட்டுகின்றனர். சிலர் அரசுப்பணிகளிலும் இருக்கிறார்கள். ஆனால் கைலாசபுரத்தில் உள்ள குறவர் இனமக்கள் அனைவரும் கரகாட்டக்கலைஞர்களாக விளங்குகிறார்கள். தமிழகத்தின் எல்லாப்பகுதிகளுக்கும், தமிழகம் தவிர, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், புதுதில்லி போன்ற பிற மாநிலங்களுக்கும் மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் கூட சென்று, கரகாட்டம் நிகழ்த்தி வருகிறார்கள்.

பொதுவாக ஒரு மாதத்தில் 15, 20 நாட்கள் அல்லது அதற்கும் மேலாகக்கூட பிற இடங்களுக்குச் சென்று நிகழ்த்தி வருகிறார்கள். இவர்களின் நிகழ்த்துதல் தொழில் கடல்கடந்து கூட செல்கிறது. இவர்களின் தொழிலை, அதிக இடப்பெயர்ச்சி கொண்ட தொழிலை மட்டுமே கருத்தில்கொண்டு இவர்களை நாடோடிகள் என்று கூறிவிட முடியுமா?

பழங்காலத்தில் ஊர் ஊராகச் சென்று பல்வேறு வகையான தொழில்களைச் செய்து வந்த பண்டாரங்கள் இன்று வெகுவாகத் தங்கள் நாடோடி வாழ்வைக் குறைத்துக் கொண்டுள்ளனர் என்ற குறிப்போடு, பண்டாரச் சமூகத்தினர் பற்றிய இரத்தின புகழேந்தியின் கட்டுரை துவங்குகிறது.

சங்கு ஊதுதல், ஜோதிடம் பார்த்தல், தாதை ஊதுதல், தப்பு, பூக்கட்டுதல், மந்திரித்தல்பாடமடித்தல் போன்ற தொழில்களைச் செய்யும் இவர்களை எங்ஙனம் நாடோடிகளாகக் கருதுகிறார்கள்? பொத்தாம் பொதுவாகத் துவங்கும் முன்னுரை, மிகச்சிலர் மட்டுமே சிறிய அளவு (எவ்வளவு?) இடம்பெயர்ந்து தொழில்செய்து வருவதாகக் குறிப்பிடுவது போன்றவை பண்டாரங்கள் நாடோடிகள் தானா என்ற சந்தேகத்தை வலுவாக்குகிறது.

நாடோடியம் என்பதையே தீர்மானிக்கின்ற மேய்ச்சல் வாழ்க்கை மேற்கொள்ளும் இடையர் சமூகம் பற்றிய மகரந்தனின் கட்டுரையில், இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சார்ந்த இடையர் மக்கள், வடமாவட்டங்களில் தற்காலிகமாகத் தங்கி வாழ்வதைக் குறிப்பிடுகிறார். இந்த இடப்பெயர்ச்சிதான் இடையர்களை நாடோடிகளாக எண்ண வாய்ப்பளிக்கிறது. அதனால் இடையர்களின் வாழ்க்கை பற்றிய தரவுகள் நமக்கு விரிவாகவே தேவைப்படுகின்றன.

ஆடு மாடு மேய்த்துக் கிடை வைத்து வாழ்ந்து வரும் கோனார் இன மக்களை இடையர் என்ற பதம் குறிக்கின்றது. பொதுவாக மாடுகளை வைத்துக் கிடை வைப்பவர்கள், ஆட்டுக்கிடை வைப்பவர்களைப் போல வெகுதூரம் சென்று கிடை வைக்க இயலாது. இதற்கு முக்கியகாரணம் ஆடுகளையும் (குறிப்பாக நாட்டுச் செம்மறி ஆடுகள்) மாடுகளையும் பராமரிப்பதில் உள்ள சிக்கல்கள் தான். ஆட்டுக்கிடை வைப்பவர்கள் தங்களின் சொந்த ஊரிலிருந்து சுமார் 300, 400 கி.மீ.கள் கூட சென்று, இடம்பெயர்ந்து கிடை வைக்கிறார்கள். இவ்வாறு வெளியூர்களில் சென்று கிடை வைக்கும்போது சில ஒழுங்குகள் அவர்கள் கிடை வைக்கும் முறைகளில் காணப்படுகிறது.

அந்தந்த வட்டாரங்களுக்கேற்ப, அவற்றின் சமூக அமைப்பு, பாதுகாப்பு நிலைகளைப் பொறுத்து நான்கைந்து பேர்களுடன் சேர்ந்து கூட்டுக்கிடையாகவோ அல்லது தனிநபராகவோ கிடை போடுகிறார்கள்.

அதுபோலவே, பருவமழைகளுக்கேற்ப, அந்தந்த வட்டாரங்களுக்கேற்ப, அவற்றின் புவியியல் சூழல்களுக்கேற்ப, அவர்களின் இடப்பெயர்ச்சியும் வேறுபடுகிறது. பெரும்பாலும் மழைக்காலங்களில் மலையடிவாரப்பகுதிகளுக்கும் சேறு விழாத அல்லது பொட்டல் மண் உள்ள மேட்டுப்பங்கான பகுதிகளுக்கும் இடம் பெயர்கிறார்கள். கோடைக்காலங்களில் அறுவடைக்காலங்களுக்குப் பிறகு சமவெளி பகுதிகளுக்கும் தோட்டங்கள் நிறைந்த பகுதிகளுக்கும் சென்று கிடை போடுகிறார்கள்.

திண்டுக்கல் கொடைரோடு அருகில் உள்ள சடையாண்டிபுரத்தில் சுமார் பத்துவருடங்களாகக் கிடை வைத்து வாழ்ந்து வரும் மாரிமுத்து சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலாக ஒரே தோட்டத்தில் குடியிருந்து வருகின்றார். இவரின் கிடை அந்தப்பகுதிகளில் அதிகபட்சம் 23 கி.மீ.களுக்குள்தான் இடம்பெயர்கிறது. சடையாண்டிபுரம் மலைப்பாங்கான புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளதால், இவர் மழைக்காலத்திற்கு வேறுஇடம் தேடிச் செல்ல வேண்டியதில்லை.

பாண்டி, ஒட்டன்சத்திரம்அம்பிளிக்கைப் பகுதிகளில் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாகக் கிடைவைத்து வாழ்ந்து வருகிறார். இவர் மழைக்காலத்தில் மலைப்பகுதிகளையொட்டிய சக்கம்பட்டி, மல்லையாபுரம், ஓடைப்பட்டி, கிருஷ்ணாபுரம் முதலிய அடுத்தடுத்த ஊர்களிலும், கோடைக்காலத்தில் அம்பிளிக்கையின் மேட்டுப்பகுதிகள் (பாறவலசு பிரிவு), ஆலனம்பட்டி போன்ற பகுதிகளிலும் கிடை வைக்கிறார்.

மேற்குறிப்பிட்ட அனைத்துப் பகுதிகளும் அதிகபட்சம் 15 கி.மீ.களுக்குள்ளேயே அமைந்திவிடுகின்றன. இன்னும் சொல்வதானால், இவர், திரும்பத்திரும்ப ஒரே தோட்டத்திலேயே கிடை போடுகிறார். அதாவது, ஆலனம்பட்டியில் அப்பன் என்பவரின் தோட்டம், அம்பிளிக்கையில் ஆலமரத்தார் எனப்படுபவரின் தோட்டம், மல்லையாபுரத்தில் அப்பன் என்பவரின் தோட்டம் என்று அந்தந்த பகுதிகளில் ஒரு சிலருக்கே வருடாவருடம் கிடை போடுகிறார். கடுமையான வறட்சி நிலவும் சில சமயங்களில் மட்டும் தாராபுரம் வட்டாரப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்கிறார்.

கோடைகாலத்தில் உசிலம்பட்டி வட்டாரத்தைச் சார்ந்த நாட்டாபட்டியில் கிடைவைப்பது வழக்கம். அதுபோலவே இவர், மழைக்காலத்தில் ஆண்டிபட்டி கணவாய்ப்பகுதிகளுக்கு செல்கிறார். 1999 ஆண்டுவாக்கில், வனத்துறையினர் ஆண்டிபட்டி கணவாய் மலைக்கன்றுகளில் தாவரப்பயிர்களைப் பயிர் செய்து, ஆடுமாடு மேய்வதைத் தடைசெய்கின்றனர். அதனால் அவர் மாற்றுப் பகுதிகளைத் தேட முனைகிறார். கடந்த நான்கைந்து வருடங்களாக ஏற்பட்ட தொடர்வறட்சியின் காரணமாக கோடைகாலத்தில் இவர் நாட்டாபட்டிக்கும் செல்ல வாய்ப்பில்லாது போய்விடுகிறது. கடந்த 30,40 வருடங்களாக நாட்டாபட்டியில் கிடைவைத்து வந்த இவர், தற்போது வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி போன்ற பகுதிகளுக்கு அடுத்தடுத்து இடம்பெயர்கிறார்.

இடப்பெயர்ச்சியை மையமாகக்கொண்டு, இதுவரை நாம் மூன்றுவகையான கிடை வாழ்க்கை முறைகளைப் பேசியிருக்கிறோம்.

  1. ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே நிலையாகத் தங்கிக் கிடை போட்டு வாழ்தல் (மாரிமுத்து)
  2. புவியியல் சூழல்களுக்கேற்ப, ஒரு குறிப்பிட்ட வாரத்திற்குள், சுழற்சியாக இடம்பெயர்தல் (பாண்டி)
  3. தம்முடைய வசதிகளுக்கேற்ப, வெவ்வேறு வட்டாரப் பகுதிகளில் இடம்பெயர்ந்து கிடைபோடுதல்.

இவை எல்லாவற்றிற்கும் நாம் ஏராளமான உதாரணங்களைச் சொல்ல முடியும். இந்த இடப்பெயர்ச்சியை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. மேலே குறிப்பிட்ட மாரிமுத்துவும், முத்துச்சாமியும் இராமநாதபுர மாவட்டத்தின் கடலாடி வட்டாரத்தைச் சேர்ந்த மீனங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் (பாண்டி இவர்களுக்குப் பக்கத்து ஊர்) இம்மாதிரி வெளியூர்களிலேயே தங்கிக் கிடைவைப்பது கடந்த 30,40 வருடங்களுக்கு முன்புதான் ஏற்பட்டதாக முத்துச்சாமி குறிப்பிடுகிறார்.

அதாவது 1960களுக்கு முன்பு, மதுரை, மேலூர் போன்ற பகுதிகளில், கோடைக்காலத்தில் சென்று கிடைவைத்து வந்துள்ளனர். காரணம், இராமநாதபுரத்தின் வறட்சி, அதுவும் கோடைக்காலத்தில் எல்லோருக்கும் தெரிந்ததுதான். மழைக்காலத்தில் மழைபெய்ய ஆரம்பித்தவுடன் தங்களின் சொந்தஊரான மீனங்குடிக்கு வந்துவிடுகின்றனர். இதற்கென தனியாக மேய்ச்சல் நிலங்களையும் வாடகைக்கு குத்தகைக்கு வாங்கி வைத்துக்கொள்கின்றனர். இப்படியான அமைப்பு மீனங்குடியை அடுத்துள்ள மேலச்செல்வனூர் கிராமத்தில் இன்றும் நிலவி வருகிறது. இவர்கள் கோடைகாலத்தில் தஞ்சை வட்டாரப்பகுதிகளுக்குச் செல்கின்றனர். மழைக்காலத்தில், பரந்த செம்மண் பகுதிகளை உள்ளடக்கிய மேலச்செல்வனூருக்குத் திரும்புகின்றனர். மழைக்காலத்தில் தஞ்சைப் பகுதிகளில் ஆடுமேய்ப்பதுவும், கிடைவைப்பதும் சாத்தியமில்லாத காரியம்.

இவ்வாறாக சொந்த ஊரிலிருந்து வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்து, ஆண்டின் (சாதகமான) மறுபாதியில் சொந்த ஊருக்குத் திரும்பும் மேலச்செல்வனூர் கோனார்களைப் போலவே, நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் கிடைவைத்துள்ள கோனார்களும் செய்கிறார்கள். நெல்லையின் ரெட்டியார் பட்டியிலிருந்து தென்காசிக்குச் சென்று கிடை வைக்கிறார்கள். தூத்துக்குடி வல்லநாடு வசவப்பபுரத்தைச் சேர்ந்த சங்கரன், கோவிந்தராசன் போன்றோர் சொந்த ஊரிலேயே அல்லது பக்கத்து ஊர்களில் கிடை வைக்கிறார்கள். மழைக்காலத்தில் பக்கத்து ஊர்களுக்கு அல்லது அருகில் உள்ள பறம்புப் பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றனர். மழைக்காலத்தில் பெரும்பாலும் கிடைவைப்பதில்லை. தொழுவில்தான் அடைக்கிறார்கள்.

பிறகு ஏன் இவர்களை நாடோடிகள் இல்லையென மறுக்கிறோம்? இடம்பெயர்ந்து வாழ்தலை நாடோடியமாகக் கருதுவதில் உள்ள சிக்கல் என்ன? அதிலும் குறிப்பாக தமிழ்ச்சமூகக் குடிகள் நாடோடிகளாக வாழமுடியாது என்று கூறுமளவிற்கு, இதில் என்ன மாதிரியான தருக்க நியாயம் இருக்கிறது? இறுதியாகத் தமிழ்ச்சமூகம் நாடோடியத்தை எவ்வாறு வரையறை செய்கிறது? யாரை நாடோடிகளாகத் தமிழ்ச்சமூகம் ஏற்றுக் கொள்கிறது?

மேலே குறிப்பிட்ட சமூகங்கள்குறவர்கள், பண்டாரம் இடையர்கள் எல்லோருக்கும் பூர்வீகம் சொந்த ஊர் இருக்கிறது. சுமார் 10, 20 அல்லது 30, 40 தலைமுறைகளுக்கும் மேலாகவே அவர்களின் சொந்த ஊருடன் பிணைப்பு இருக்கிறது. தற்சமயம், தங்களின் தொழில் சார்ந்து, வெவ்வேறு ஊர்களுக்கு சிலசமயம், 300,400 கி.மீகளுக்கு அப்பால் இடம்பெயர்ந்து சென்றாலும்கூட அங்கேயே நிலைத்துத் தொழில் செய்து வந்தாலும் கூட, சொந்தஊரைவிட அவை வசதியானவையாக விளங்கினாலும் கூட, தங்களின் சொந்த ஊரோடு மண்ணோடு உள்ள தொடர்பை அவர்களால் விடுவிக்க இயலவில்லை.

கூடைமுடைதல் செய்யும் குறவர்களாயினும் சரி, கரகாட்டக்கலைஞர்களாக விளங்கும் குறவர்களாயினும் சரி, குறிபார்த்தல், ஜோதிடம் பார்த்தல், தப்படித்தல் போன்றவை புரியும் பண்டாரங்களாயினும் சரி, ஆடு மாடு மேய்த்துக் கிடைவைத்து வாழ்கின்ற இடையர்களாயினும் சரி, இவர்கள் அனைவருக்கும் பூர்விகம், சொந்த ஊர் இருக்கிறது. இதில் ஆடு, மாடு மேய்த்துக் கிடை வைத்து வாழ்கின்ற கோனார்களில் பெரும்பாலும் எல்லோருக்கும் அவரவர் ஊரில் நிலபுலன்கள் இருக்கின்றன. அவற்றில் நெல், சோளம், கம்பு, கேழ்வரகு, குதிரைவாளி போன்ற தானியங்களையும், மிளகாய், பருத்தி, உளுந்து எள் போன்றவற்றையும் இவர்களுடைய பெண்கள் பயிரிட்டு விவசாயம் செய்கின்றனர்.

மீனங்குடியைச் சேர்ந்த சிலர் அருப்புக்கோட்டை, மதுரை, கொடைரோடு போன்ற இடங்களில் வீடு கட்டியிருக்கிறார்கள், சிலருக்கு அந்தப்பகுதிகளில் விவசாய நிலங்களும் உண்டு. ஆனால் தங்களின் சொந்த ஊரோடு உள்ள தொடர்பு அதே பிணைப்போடே இருக்கிறது. இவர்களின் வாழ்க்கை வட்டச்சடங்குகள் பெரும்பாலும் சொந்த ஊரிலேயே நிகழ்த்தப்படுகின்றன. வெளியூர்களில் ஒரு நபர் இறந்துவிட்டால் அவரை சொந்த ஊருக்கு கொண்டுவந்து இறப்புச் சடங்கினை முறையாக நிகழ்த்துகின்றனர்.

செத்தாலும் இந்த மண்ணுலதான் சாகணும் என்ற தொடர் வெறும் உணர்ச்சி மட்டும் கொண்டதல்ல, அத்தொடருக்குப் பின் சமூகப்பண்பாட்டுத்தளம் சார்ந்தும், உளவியல் சார்ந்தும் ஏராளமான கதையாடல்கள் செயல்படுகின்றன.

தமிழ்ச் சமூகத்தின் குடிகளை நாடோடிகளாகக் கருதுவதில் உள்ள இன்னொரு முக்கியமான சிக்கல், அவர்கள் தங்களின் சொந்த ஊரைத் தவிர, வேறு எதனையும் சொந்த ஊராக்கிக் கொள்வதில்லை. மேலே குறிப்பிட்ட மீனங்குடியிலிருந்து வெவ்வேறு இடங்களில் வீடுகட்டிக் கொண்டுள்ளவர்கள் எல்லோரும் குட்டி மீனங்குடிகளைத்தான் உருவாக்குகிறார்களேயொழிய, அங்குள்ள ஊர் மக்களோடு கலந்து போய்விடுவதில்லை. தங்களுக்கென்று சில தனித்த அடையாளங்களை வெளியில் தெரியாமல் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால்தான் கடல்கடந்து வெளிநாடுகளுக்குச் சென்ற தமிழர்களும் அங்கேயே தங்கிவிடுவதில்லை. அங்கு உள்ள மக்களோடு அவர்கள் தமிழர்களோடு இருந்த போதிலும் கலந்துவிடுவதில்லை. கல்வி, தொழில் நிமித்தமாகச் செல்பவர்களாயினும் சரி, லேபர் பணிகளுக்குச் செல்பவர்களாயினும் சரி, தாங்கள் செல்வது படிக்க அல்லது தொழில் புரிய மட்டுமே என்பதை நன்கு பிரக்ஞையில் வைத்திருக்கிறார்கள். சில சமயங்களில் வெளிநாடுகளிலேயே தங்கி வாழநேர்ந்து விடுகின்ற போது அங்கே தனக்கென அடையாளங்களை நிறுவ முயற்சித்து, தமிழ் மணத்துடனேயே வாழ விரும்புகின்றனர்.

இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்வது, பிரிட்டிஷ் காலனியாட்சியின் போது இலங்கையின் தேயிலைத்தோட்டங்களுக்குப் பணிபுரியச் சென்ற மலையகத் தமிழர்களே. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிலவிய பஞ்சம், வறட்சி இவற்றையும் மீறி அக்காலத்தில் தலைவிரித்தாடிய சாதியக் கொடுமைகள் காரணமாக, இலங்கைக்கு, கங்காணிகளை நம்பிச்சென்ற தமிழகத்தின் அடித்தளமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆட்பட்டனர்.

அவர்கள்தான், வெறும் காடுகளாகக் கிடந்த மலைப்பிரதேசங்களை நாடாக பொன்கொழிக்கும் தேயிலைத்தோட்டங்களாக பரிணமிக்கச் செய்தனர். இதற்குப் பரிசாக அவர்களுக்குக் கிடைத்தவை வன்கொடுமைகளே. அவர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டனர். இலங்கையும் இந்தியாவும் அவர்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. சுதந்திரத்திற்குப் பின்னர், கணிசமான மக்கள் அகதிகளாக சொந்த மண்ணிற்குத் திரும்புகின்றனர். ஆனால் பெரும்பாலோர் எதிர்காலத்தை நம்பி, இலங்கையிலேயே இருந்து வருகின்றனர்.

இன்றும் கூட, இந்தியத் தமிழர்களாகவே இவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். ஈழத்தமிழர்களையே முன்னிறுத்திப் பேசிய நம்மவர்களின் தமிழகத்தமிழர்களின் கண்களுக்கோ காதுகளுக்கோ மலையகத் தமிழர்கள் என்ற பதம் கூடப் புரிந்திருக்கவோ தெரிந்திருக்கவோ வாய்ப்பில்லை. இவர்கள் இலங்கையின் வரலாற்றிலும் கூட மறைக்கப்பட்டவர்கள், மறைக்கப்படுபவர்கள்.

சுமார் 100, 150 வருடங்களுக்கு முன்பு இலங்கையின் தோட்டங்களில் பணிபுரியுச் சென்ற அவர்கள், மலைத்தோட்டங்களிலேயே தங்குகின்றனர். தங்களின் குடியிருப்புகளுக்கும், தோட்டங்களுக்கும், முக்கியமான புவியியல் பகுதிகளுக்கும் பெயர் சூட்டுகின்ற தமிழர்கள், அதில் தங்களின் பண்பாட்டு நிலவியல் அறிவை வெளிப்படுத்துகிறார்கள். (கடந்த புதுவிசை இதழில் வெளியான இராபர்ட் ஜாணின் காட்டை நாடாக்கிய கதை பூரணமாக விளக்குகிறது.)

பொதுவாகத் தமிழர்கள் தங்களுடைய ஊர்களுக்குப் பெயர்வைக்கும்போது அவற்றின் இறுதிப்பெயர் குடி, குளம், ஏரி,பட்டி, நாடு, ஊர் போன்ற சொற்களில்தான் முடிவுபெறும். ஆனால் மலையகத் தமிழர்களின் குடியிருப்புகள் எதுவும் தமிழகத்தின் ஊர்ப்பெயரைக் கொண்டு முடியவில்லை. (இராபர்ட் ஜாண், 2005:56) தமிழகத்தில் இருந்து இடம்பெயர்ந்து சென்ற மக்கள், அந்தப்பகுதியில் தங்களின் குடியிருப்புகளுக்கு அவர்களின் சொந்த ஊர்ப்பெயரினையே, சொந்த மண்ணை நினைவுபடுத்தும் எதனையும் பெயராக வைக்காதது ஆச்சரியமாகத் தோன்றுகிறது. பல்வேறு இன்னல்களை அனுபவித்த வேளையிலும், வன்கொடுமைகளேயே பெயராக இட்டு ஞாபகம் செய்துகொள்கின்றனர். ஏன் இவர்கள் தங்களின் ஊர்களை, ஊர், பட்டி, குளம், நாடு, குடி போன்ற சொற்களைக் கொண்டு நிறைவுசெய்யவில்லை?

இவர்கள், தற்போது, இலங்கை தேசியத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், எப்போதும், இவர்களின் பூர்விகம், சொந்த ஊர் தமிழகத்தில்தான் இருக்கிறது. (2005:56) காடுகளாகக் கிடந்த மலைப்பகுதிகளை நாடாக மலையகமாக மலரச் செய்த அவர்கள், மலையக மண்ணை சொந்த ஊராக ஒருபோதும் கருதியதில்லை. தற்போது, ஏராளமான கொடுமைகளுக்குப் பிறகும், தமிழகத்திற்குத் திரும்பவே முடியாத போதும், தமிழகத்தில் இருந்து இலங்கைச் சென்ற நூறு, நூற்றைம்பது வருடங்களுக்குப் பிறகும், மலையக மண்ணை சொந்த ஊராகவே கருதவில்லை. தற்காலிகமாக அவர்கள் இலங்கையில், தொழில்புரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு எப்போதும் தமிழகம் தான் பூர்வீகம்.

தாங்கள் குடியிருக்கும் இடங்களைத் தோட்டம் என்றழைக்கும் மலையகத்தமிழர்கள், தாங்கள் வாழுகின்ற இடங்களுக்கு அண்மையில் உள்ள சிங்களக் கிராமங்களை நாடு என்று அழைக்கின்றனர். மேலும் அக்கிராமங்களில் வாழும் சிங்களப் பெண்களை நாட்டுப் பொம்பளைகள் என்றும், ஆண்களை நாட்டான் என்றும் மலையகத்தமிழர்கள் அழைக்கின்றார்கள் (2005:56)

காட்டை நாடாக்கிய கதையில் இராபர்ட் ஜாண் விவரிக்கின்ற மலையகத்தமிழர்களின் பண்பாட்டு நிலவியல் அறிவு, இடப்பெயர்களில் வெளிப்படுவதை அறியும் நாம், இதிலிருந்து இன்னொரு முக்கியமான விசயத்தைப் புரிந்துகொள்கிறோம். அதாவது, தமிழர்கள் பிழைப்புத்தேடி எங்கெங்கு சென்றாலும் அங்கெல்லாம் தமிழ்ப் பண்பாட்டைக் கட்டமைக்க முயல்கின்றனர். இலங்கைக்குத் தமிழர்கள் மட்டுமே சென்றதால் இது அவர்களுக்கு மிக எளிதாயிற்று.

இவற்றுடன் இன்னொரு முக்கியமான விசயத்தையும் சேர்த்துப் பார்க்கலாம். திருச்செந்தூர் வட்டாரத்தில் குதிரைமொழி கிராமத்தில் தேரிக்காடு எனும் பரந்த நிலப்பரப்பு அமைந்திருக்கிறது. செம்மண் தேரிகளால் ஆன இப்பகுதியில் கருக்குவேல் அய்யனார் கோயில் ஒன்று அமைந்திருக்கின்றது. இப்பகுதியில் குடியிருந்த மக்கள் தற்போது பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர். ஆனால் வருடாவருடம் பங்குனிமாதம் நடக்கும் கள்ளர்வெட்டுத் திருவிழாவில் கலந்துகொள்வதற்கு இவர்கள் அனைவரும் தவறாது வருகை புரிகின்றனர்.

பாளையங்கோட்டை, திருநெல்வேலி, வள்ளியூர், இராமநாதபுரம், அருப்புக்கோட்டை, விருதுநகர், கோவில்பட்டி, தென்காசி, சிவகாசி, இராஜபாளையம், வத்லக்குண்டு, நிலக்கோட்டை, பெரியகுளம், தேனி, மாயவரம், சென்னை எல்லாப்பகுதிகளிலிருந்தும் வந்து கள்ளர் வெட்டுத்திருவிழாவில் கலந்துகொள்கின்றனர். பல தலைமுறைகளுக்கு முன்னரே தேரிக்காட்டிலிருந்து இடம் பெயர்ந்து சென்றுவிட்டாலும், அவரவர் வாழிடங்களில் தேரிக்காட்டிலிருந்து பிடிமண் எடுத்துச் சென்று அங்கே பிடிமண் தெய்வங்களை அமைத்து வழிபட்டுவந்தாலும் கள்ளர்வெட்டுத் திருவிழாவிற்கு வருவதை அவர்களால் விடமுடியவில்லை.

தவிரவும், கருக்குவேல் அய்யனார் கோவிலுக்கு வந்துதான் தங்கள் குடும்பத்தின் முக்கியச்சடங்குகளை நிகழ்த்துகின்றனர். குழந்தைகளுக்கு மொட்டையிடுதல், காதுகுத்தல் போன்ற சடங்குகளை இங்கு நடத்துகின்றனர். பூப்புனித நீராட்டுவிழா, திருமணம், புதுவீடுகட்டுதல் போன்ற சடங்குகளைச் செய்யும் முன்னர் அய்யனாருக்கு முதல் பத்திரிகை வைக்கின்றனர். அய்யனாரின் அனுமதி பெற்ற பின்னரே அவற்றைச் செய்கின்றனர்.

இதனை எவ்வாறு அணுகுவது? இந்நிகழ்வுகள் வெறும் கோயில், சமயம், தெய்வ நம்பிக்கை, சடங்கு சார்ந்தவை தானா? அல்லது ஒவ்வொருமுறை கள்ளர்வெட்டுத் திருவிழாவிற்கு வரும்போதும் தங்களின் பூர்வீகமான இடத்தோடு பூர்வீகத்தோடு உள்ள தொடர்பை, நெருக்கத்தைப் புதுப்பித்துக் கொள்கிறார்களா? வெளியூர்களிலிருந்து வருகின்ற பெருவாரியான மக்களுள் எவரும் வசதிக் குறைந்தவர்கள் அல்லர், அவர்களுக்கு எல்லாவிதமான வசதிகளும் இருக்கின்றன. அந்தந்த இடங்களில் கருக்குவேல் அய்யனார் கோவிலையோ அல்லது குலதெய்வமாக விளங்கும் பரிவார தெய்வங்களையோ பிடிமண் தெய்வமாக அமைத்துக்கொண்டுள்ளனர். பிறகு ஏன் அவர்களால் தேரிக்காட்டிற்கு வருவதை நிறுத்திக்கொள்ள இயலவில்லை. இதனை வெறும் குடும்பச் சுற்றுலா போல நினைக்கிறார்களா?

ஊடூதடிஞீ குடிஞ்ணண் என்ற நூலில் வாலண்ட்டைன் டேனியல் குறிப்பிடும் செய்தியும் ஓரளவு பயன்படக்கூடும். காஞ்சியில் இருந்து இடம்பெயர்ந்து வரும் ஆறுநாட்டு வேளாளர்களுக்கு (கவுண்டர்), திருச்சி வட்டாரத்தில் உள்ள தொட்டிச் சமூகத்தினர் ஆதரவளிக்கின்றனர். ஒரு கட்டத்தில், உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வதுபோல, ஆறுநாட்டு வெள்ளாளர்கள், தொட்டியச் சமூகத்தினரை ஆதிக்கம் செலுத்த முயலும் போது பிரச்னை ஏற்படுகிறது. இரு சமூகத்தவரும் மண்ணிற்குச் சொந்தம் கொண்டாடுகின்றனர்.

முடிவில் ஆறுநாட்டு வெள்ளாளர், அந்த ஊர் மண்ணை, இது எங்களின் சொந்த மண் என்று அம்மனுக்கு முன்னர் சத்தியம் செய்ய வேண்டுமென முடிவாகிறது. இதைச் சற்றும் எதிர்பாராத ஆறுநாட்டு வெள்ளாளர்கள், தயங்காமல் ஒத்துக்கொள்ளவும் செய்கின்றனர். இரவோடிரவாக ஒரு ஆளை அனுப்பி, சொந்த ஊரிலிருந்து ஒரு பானை நிறைய மண் எடுத்துவரச்செய்து, இந்த மண் எங்கள் மண் என்று பானையில் உள்ள மண்ணைக்காட்டிச் சத்தியம் செய்கின்றனர்.

இவர்களின் தந்திரத்தைப் புரிந்துகொள்ளாத தொட்டியச் சமூகத்தினர் தங்களின் சொந்த ஊரை விட்டு வெளியேறுகின்றனர். தந்திரத்தாலும், சூழ்ச்சியாலும், தொட்டியச் சமூகத்தினரை ஏமாற்றிய வெற்றிகொண்ட பின்னர், அப்பானை மண்ணை ஆறுநாடுகளிலும் தூவி, தொட்டியர்களுக்குச் சொந்தமான மண்ணை, தங்களுக்குச் சொந்தமானதாக மாற்றுகின்றனர். மண்ணுரிமை சம்பந்தப்பட்ட இந்தச் சம்பவம் மிகமுக்கியமானது. இதைப் பல்வேறு கோணங்களில் அணுகிப் பொருள் கொள்ள முடியும் என்றாலும், ஆறுநாட்டு வெள்ளாளர்களைப் பொய்சொல்ல விடாமல் தடுத்தது எது? சத்தியத்திற்குக் கட்டுப்பட வேண்டும் என்பதாலா? தங்களுக்குரிய மண், பூர்வீகம் வேறு என்பதாலா?

ஆக, தமிழர்களுக்குப் பூர்வீகம், சொந்த ஊரோடு உள்ள தொடர்பு போன்றவை மிக மிக முக்கியமானவை. ஊர் என நாம் குறிப்பிடுவது கிராமத்தை அல்ல, உதாரணமாக ஒருவர் தன்னுடைய கிராமம் அம்பிளிக்கை என்று சொல்லிவிட முடியும். இந்தக்கேள்வியின் பதில் எப்போதும் மாறாது. ஆனால் அவரின் ஊரைக் கேட்பீர்களானால் (ஊர் எது?) அதற்கான பதில், அம்பிளிக்கைக் கிராமத்தின் உட்கிராமங்களான அம்பிளிக்கை, சாணார்பட்டி, செங்காட்டுப்புதூர் போன்றவற்றில் ஆரம்பித்து, ஒட்டன்சத்திரம், பழனி, திண்டுக்கல், கோயமுத்தூர், மதுரை, தமிழ்நாடு இந்தியா என நீண்டுகொண்டே போகும்.

எதிரே இருக்கும் அல்லது கேள்விகேட்ட நபரைப்பொறுத்தும், தான் எங்கே இருக்கிறோம் என்கிற சூழலைப்பொறுத்தும் அது மாறுபடுகிறது. ஊர் மிகவும் நெகிழ்வுத்தன்மை கொண்டது. அதனாலேயே பூர்வீகம், சொந்த ஊர் முதலியன தமிழர்களின் வாழ்வில் இன்றியமையாத இடத்தைப்பெற்று நிற்கிறது. தமிழ்ச் சமூகக் குடிகளை நாடோடிகளாக அடையாளப்படுத்துவதில் உள்ள மிக முக்கியமான சிக்கலும் இதுதான்.

தமிழகத்தில் வாழும் நாடோடிச் சமூகங்கள் எல்லோரும் பிறமாநிலங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள். அவர்களுக்குப் பூர்வீகமோ சொந்த ஊரோ பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம். அப்படியே இருந்தாலும் அவற்றோடு நெருக்கமான பிணைப்பு இல்லை எனலாம். தங்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகளை நிகழ்த்தவோ கருக்குவேல் அய்யனாரின் கள்ளர்வெட்டுத் திருவிழா போன்ற சடங்குகளில் வருடம் ஒருமுறையோ அல்லது எப்போதாவது கலந்துகொள்ள தங்களின் சொந்த ஊருக்கு அல்லது பூர்வீகமான இடத்திற்குச் செல்வதோ அவர்களுக்கு இயலாத காரியம். பூம்பூம் மாட்டுக்காரர்கள், லம்பாடிகள், போன்ற அனைத்துச் சமூகத்தினரிடமும் பெரும்பாலும், அவர்களின் நாடோடி வாழ்க்கையை நியாயப்படுத்த ஒரு புராணக்கதை (தோற்றத் தொன்மம்) செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள நாடோடிச் சமூகங்களாக இவர்களை நாம் அடையாளப்படுத்தலாம்.

அப்படியானால் தமிழ்ச்சமூகத்திடம் நாடோடி என்ற கருத்தாக்கமே கிடையாதா? பிறகு எப்படி நாடோடிப்பாடல், நாடோடிப்பாட்டு, நாடோடிக்கதை, நாடோடி போன்ற சொற்கள் எல்லாம் நம் வழக்கில் வந்தன? சற்றுக் கூர்ந்து கவனிக்கும் போது, இச்சொற்களின் நேரடியான பொருளிலிருந்தே, நாடோடி என்ற சொல் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்பதைப் புரிந்து கொள்கிறோம். நாடோடி என்பவர் ஊர், பேர் போன்ற எந்தவிதமான அடையாளங்களும் இல்லாதவர். மேலும் இச்சொல், நாடோடி, ஆணா பெண்ணா என்பதைக்கூடத் தெளிவாகக் குறிக்கவிலை. தமிழ்ச்சமூகம் நாடோடியத்தை இந்த வழியில்தான் கற்பனை செய்கிறது. அதாவது, யாரெல்லாம் தன்னுடைய ஊர், பேர் போன்ற சொந்த அடையாளங்களைத் துறந்துவிடுகிறார்களோ அவர்களைத் தமிழ்ச்சமூகம் நாடோடிகளாகக் குறிப்பிடுகிறது.

இதனோடு இன்னொரு முக்கியக் கருதுகோளையும் இதிலிருந்தே வருவிக்கலாம். அதாவது, தன்னுடைய சொந்தப் பெயரையோ, ஊரையோ துறப்பவர்கள் நிச்சயமாக இல்லற வாழ்வில் ஈடுபட்டவர்களாக இருக்க முடியாது. இல்லற வாழ்வும் நாடோடித்தன்மையைத் தீர்மானிக்கக்கூடிய முக்கியக் காரணியாகச் செயல்படுகிறது.

இதே பார்வையில் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் கலைஞர்களான பாணர், பாடினியர், கூத்தர், பொருநர், எயினர் போன்றவர்களை அணுகும்போது, அவர்கள் நாடோடிகளாக வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்று புரிந்துகொள்ள முடிகிறது. சங்ககாலக் கலைஞகள் குடும்பத்தோடு இடம்பெயர்ந்ததற்கு முக்கியக்காரணம், அவர்களின் குடும்பத்தினர் துணைக் கலைஞர்களாக விளங்கியதாலேயே என்று கருத இடமிருக்கிறது. இதற்குத் தற்கால உதாரணமாக தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களைக் குறிப்பிடலாம்.

ஆடு மேய்த்துக் கிடை வைத்து வாழும் (இராமநாதபுர மாவட்டக்) கோனார்களும்கூட தங்களின் குடும்பம் சுற்றத்தினருடன் இடம்பெயர்கின்றனர். மேலும் பாணான்குடி, பாணான் குளம் போன்ற ஊர்களும்கூட நம்மிடையே இன்றும் காணப்படுகின்றன. இதனால் சங்ககாலக் கலைஞர்களுக்குச் சொந்த ஊரும், அதில் நிலைத்த இல்லற வாழ்க்கையும் இருந்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் யாருக்கும் வரப்போவதில்லை. சங்ககாலக் கலைஞர்களின் வாழ்வியலை, நா.வானமாமலை, கா.சிவத்தம்பி போன்ற அறிஞர்கள் குறிப்பிடும் நாடோடிகளின் வாழ்வியலாகப் பார்ப்பதைவிட, தொழிலுக்காக இடம்பெயர்ந்து, தங்களின் சொந்த ஊருக்குத் திரும்பி, அங்கேயே நிலைத்து வாழ்ந்த கலைஞர்களின் வாழ்வியலாக கருத வாய்ப்பிருக்கிறது. இன்றும் திருநெல்வேலி கைலாசபுரம் கரகாட்டக்கலைஞர்கள் கடல்கடந்தும் மும்பைக்கும், தென்னிந்தியா முழுமைக்கும் அடிக்கடி சென்று வருவதை ஒப்பிட்டுப் பார்ப்பதில் தவறில்லை என்பது கருதுகிறேன்.

அப்படியானால் நாடோடிகளாக வாழ்ந்தவர்கள் யார்? சங்ககாலப் புலவர்கள் அனைவரும் நாடோடிகள்தான் என்று கருத ஏராளமான சாத்தியப்பாடுகள் இருக்கின்றன. புலவர்கள் எந்த ஒரு ஊரையும், தங்களின் சொந்த ஊராக எண்ணி நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளவில்லை. அவர்களிடம் தங்களின் சொந்த ஊர், சொந்த மண், பூர்வீகம், போன்றவற்றில் பற்று இருந்ததாக யோசிக்க முடியாது.

இன்னும் சொல்லப்போனால் தங்களின் பெயர்களைக்கூடத் துறந்து விட்ட அல்லது முன்னிலைப்படுத்தாத நிலையே காணப்படுகின்றது. தொடித்தலை, விழுத்தண்டினார், வெள்ளி வீதியார், காக்கை பாடினியார், நச்செள்ளையார், மீனெறித் தூண்டிலார், செம்புலப்பெயல் நீரார், விட்டகுதிரையார் போன்று நம்மாலேயே புலவர்களுக்கு பெயர் வைக்கப்பட்டது. இவர்கள் அனைவரும், சொந்தப் பெயர் இருந்தாலும் கூட, அதனை முன்னிலைப்படுத்தாது, புலவர் என்ற பொது அடையாளத்தோடு வாழ்ந்து வந்துள்ளனர்.

இவ்வாறு தங்களின் ஊர், பேர், சாதி, சமூகம் போன்ற எந்தவிதமான தனிநபர் சார்ந்த அடையாளங்களையும் முன்னிலைப்படுத்தாது அவற்றைத் துறந்து தமிழ்பேசும் நல்லுலகம் முழுமைக்கும் சொந்தக்காரர்களாக விளங்கிய சங்ககாலப் புலவர்கள், சித்தர்கள், துறவிகள் ஆகியோரைத் தமிழ்நாடோடிகளாகக் கருதலாம். இவர்களுக்குச் சொந்த ஊரின் மீது எள்ளளவும் பிணைப்பு இல்லை. யாதும் ஊரே, யாவரும் கேளீர், எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே! பெரும்பாலான தமிழ்ப்புலவர்களுக்குக் குடும்பம் இருந்ததாகவோ, அவர்கள் இல்லறவாழ்வில் ஈடுபட்டதாகவோ உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. அவ்வையார் உள்ளிட்ட பெண்பாற் புலவர்கள் நாடோடி வாழ்க்கை மேற்கொண்டதை நம்மால் உணர முடிகிறது.

தமிழ்ச்சித்தர்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் தங்களின் எந்த அடையாளங்களையும் வைத்துக் கொள்ளவில்லை, தங்களின் பெயர் உட்பட. சமண பௌத்தத் துறவிகளும் அப்படியே. குறிப்பாக, அயோத்திதாசர் கட்டமைக்கின்ற அவ்வையார் பௌத்தத்தன்மங்களை, கல்வி, மருத்துவம் போன்ற வாழ்வியல் கூறுகளோடு இணைத்துப் போதித்து வந்ததை நாம் புரிந்து கொள்கிறோம். அவர் பற்றிய நினைவுகள் அம்மன் வழிபாடாகப் பரிணமிப்பதற்கு, அவருடைய நாடோடி வாழ்க்கை பெரும்பங்கு ஆற்றியிருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

மேலும் தமிழ்ச் சமூக வாழ்வியலைப் பொறுத்தமட்டில், சொந்த ஊரோடு உள்ள தொடர்பு, இல்லற வாழ்க்கையின் எல்லாவிதமான பரிமாணங்களோடும் நெருங்கிய தொடர்புடையது. அது ஒரு குறிப்பிட்ட நபரின் பெயரோடு, குடும்பம், சாதி, சமூகம், பொருளாதார நிலை போன்ற எல்லாவற்றையும் குறிப்பீடு செய்கின்றது. உலகின் பல்வேறு நாடுகளோடு வாணிகத் தொடர்பு வைத்திருந்த தமிழர்கள், அந்தந்தப் பகுதிகளில் சென்று குடியேறாததைக் கவனிக்க வேண்டும். காரணம், அவற்றைத் தொழிலாக மட்டுமே தமிழர்கள் கருதினர். திரைகடல் ஓடியும் திரவியம் தேடிய தமிழர்கள், தங்களின் சொந்த ஊரில்தான் இல்லற வாழ்வை நடத்தினர். ஊர் என்பதும், இல்லற வாழ்வும் ஒன்றொடொன்று இணைந்தவை. இவை தமிழ்ச் சமூகத்தினரின் வாழ்வில் நெருங்கிய பிணைப்புடையதாக இன்றும் தொடர்ந்து வருகின்றது.

இவற்றை மீற நினைத்தவர்கள் நாடோடிகளாகவே வாழ்ந்தனர். சிலர் நாடோடிகளாக அடையாளப்படுத்தப்பட்டனர், சிலர் கிறுக்குகளாக, சிலர் ஞானக்கிறுக்குகளாக, புலவர்கள் , துறவிகள், சித்தர்கள் போன்ற இவர்கள், தங்களின் சொந்த அடையாளங்களைத் துறந்துவிட்டு பொது அடையாளங்களை உருவாக்க முனைந்தனர். இவர்களைத்தான் தமிழ்ச்சமூகத்தின் நாடோடிகளாக, நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டவர்களாக வகைப்படுத்துகின்றோம்.

தமிழ்ச் சமூகப் பண்பாட்டுச் சூழலில், நாடோடித்தன்மையை வரையறுக்கும் முக்கியக்கூறாகத் தொழில்சார்ந்த இடப்பெயர்ச்சியைக் கருதுவதில் ஏற்பட்ட சிக்கல்களினால், ஊர், பூர்வீகம், இல்லற வாழ்க்கை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நாம் தமிழ்நாடோடியத்தை வரையறுக்க முயல்கின்றோம். அதாவது, தங்களின் சொந்த ஊர், பூர்வீகம் சார்ந்த எல்லாவிதமான அடையாளங்களையும், இல்லற வாழ்வினையும் துறந்து, வாழ்க்கைக்குத் தேவையான கல்வி, மருத்துவம், ஒழுக்கம் போன்றவற்றை மக்களுக்கு போதித்து, தமிழ்ச்சமூகத்திற்கே பொதுவான அடையாளங்களை உருவாக்க முனைந்தவர்களை (அல்லது முனைபவர்களை) நாடோடிகளாகத் தமிழ்ச்சமூகம் வரையறுப்பதைப் புரிந்துகொள்கின்றோம்.

தமிழ் நாடோடியத்தை, இவ்வாறு வரையறுக்கும் போது தமிழ்ச் சமூகத்திற்குப் பொதுவான (அல்லது அடிப்படையான) பண்பாட்டுக் கூறுகளை நாம் அடையாளம் காட்டமுடியும். மேலும் தமிழ்ச்சமூக வாழ்வியலை இத்தகைய போக்கில் அணுகுவது, நாட்டார் வழக்காற்றியல் புலம் சார்ந்து பிரச்சனைகளை அணுகுவது, அதற்கேற்ற விவாதத்தளங்களை உருவாக்குவது போன்றவற்றை இன்றைய காலகட்டத்தின் கட்டாயத் தேவையாகக் கருதுகின்றோம்.

  1. அலாய்சியஸ். ஞான (1999) அயோத்திதாசர் சிந்தனைகள் III, பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுமையம்
  1. இராபர்ட் ஜாண்,. (2005) காட்டை நாடாக்கிய கதை, புதுவிசை மே- ஜீன் 2005
  1. இராபர்ட் ஜாண். . (2005) போராட்டங்களில் உயிர் நீத்த மலையகத் தமிழ் தியாகிகளின் வாய்மொழி வரலாறு. பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி, நாட்டார் வழக்காற்றியல் துறைக்கு, முதுகலைப் பட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடு.
  2. பக்தவத்சல பாரதி (2003) தமிழகத்தில் நாடோடிகள் சங்ககாலம் முதல் சமகாலம் வரை. இந்நூலில் உள்ள பத்தவத்சல பாரதி, தி.சி.சத்தியம், மணி. கோ. பன்னீர்செல்வம், இரத்தின புகழேந்தி, மகரந்தன் ஆகியோரின் கட்டுரைகள்.