“அரசு ஊழியர் வரலாற்றில் எம்.ஆர். அப்பன்’’ என்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த நூலை நெ. இல. சீதரன், ஆர். முத்துசுந்தரம், ஏ. நிசார் அகமது ஆகியோர் எழுதியுள்ளனர். புத்தகத்தின் தலைப்பே ஒரு தனிநபர் வாழ்க்கை எப்படி ஒரு வரலாற்றுக்குள் அடங்கியது என அடக்கமாக சுட்டிகாட்டி விடுகிறது. அரசு ஊழியர் சங்கத்தை உருவாக்க¤யதிலும், ஊழியர்களின் கோரிக்கைகளையும் வென்றெடுப்பதிலும் மகத்தான பங்களிப்பை நல்கிய தோழர் எம்.ஆர். அப்பனின் தனிநபர் பங்கு பாத்திரத்தை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. மேலும் மிகச்சுருக்கமான மனிதகுல வரலாறு, இந்தியா அடிமைப்பட்ட வரலாறு ஆங்கில அரசு உருவான விதம், அரசு ஊழியர்கள் நியமனம், ஊழியர் சங்கங்கள் தோற்றம், வளர்ச்சி, போராட்டம், உரிமைகள் பெறுதல் அரசியல் போக்குகள் என பல விஷயங்களை கால வரிசைப்படி தக்க ஆதாரங்களோடு ஏராளமான முக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளனர்.M.R.Appan

படிப்பதற்கு ஏதுவாக மொத்த வரலாற்றையும் சிறு சிறு 98 பாகங்களாக தொகுத்திருப்பது நல்ல வடிவம்!

எம்.ஆர். அப்பனின் பிறப்பு, சிறு வயதில், பிச்சையெடுப்பதை கண்டு ஏன், எதற்காக என்பதை கேள்வியெழுப்பி வீட்டிலிருந்து பணத்தை கொண்டு போய் அவர்களுக்கு வழங்குவது, மேல் படிப்பு, அரசுப் பணியில் சேர்ந்தது, அவருடைய போதனா ஆற்றல், பேச்சாற்றல், அவருடைய திருமணம் விருந்தோம்பல், தலைமையேற்று நடத்தும் போராட்டம், ஒற்றுமைக்காக அவரின் வழிகாட்டுதல், ஆளுமை, ஊழியர்களை வளர்த்தெடுத்தல், புத்தக ஆர்வம், தொடர்ந்து படித்தல், பிரச்சனையை எதிர்கொள்ளும் விதம், துணிச்சல், சக தோழர்களை மதித்தல், அரசின் அடக்குமுறை கண்டு அஞ்சாமை, அரசின் பிரித்தாளும் சதியை எதிர் கொள்ளும் விதம், நிலமைக்க தகுந்தாற்போல முடிவெடுத்தல், எளிமை, அர்ப்பணிப்பு, சங்கத்தின் வளர்ச்சி குறித்த அக்கறை இப்படி அவருடைய ஏராளமான சிறப்புகளை சங்கத்தின் இயக்கப்போக்கோடு இணைத்து சொல்லப்பட்டிருப்பது அவரோடு இயங்குகிற, பேசுகிற உணர்வை ஏற்படுத்துகிறது.

இயக்கம் வேறல்ல, எம்.ஆர். அப்பன் வேறல்ல இரண்டறக் கலந்ததுதான் அவர் வாழ்க்கை என்பதை தெரிய முடிகிறது. வெள்ளி ஜரிகை இழை பின்னி நெய்யப்பட்ட பட்டாடை!

முதன் முதலாக 31.01.1920 NGO யூனியன் உருவாக்கப்பட்டது முதல், வளர்ச்சிப் போராட்டம், காலவரிசைப்படி கூட்டம், இயக்கம், அதனுடைய பலம், பலகீனம், சந்தித்த துரோகம் பெற்ற படிப்பினைகள், பங்கெடுத்தவர் பட்டியல் என முழு விபரங்களோடு அரசு ஊழியர் சங்க வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் இப்புத்தகத்தை படித்தால் போதுமானது.

அதேபோல் ஆளுகிற கட்சி, ஆட்சிக்கு வருமுன் என்ன சொல்கின்றன. வந்த பின் எப்படி நடந்து கொள்கின்றன என காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள், அரசு ஊழியர்கள் பிரச்சனையிலும், தொழிற் சங்கத்தை அணுகும் முறையிலும், நடந்து கொண்ட விதம் பற்றி தக்க ஆதாரத்தோடு அவர்களின் வர்க்க ‘‘முகங்களை’’ அம்பலப்படுத்தியுள்ளது.

16.10.1947 உள்துறை அமைச்சராக இருந்த டாக்டர் பி. சுப்பராயன் அரசு ஊழியர்கள் பற்றி விவாதிக்க அனுமதிக்கக்கூடாது என்று சட்டமன்றத்தில் வாதாடியது. 15.12.1947 இல் அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தை காங்கிரஸ் அரசு கடுமையாக கையாண்டது. காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. கே. காமராஜ் அவர்களை கண்டித்து அறிக்கை வெளியிட்டது.

மத்திய அரசிற்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என 1968 காலகட்டத்தில் கோரிக்கை வந்தபோது என்னிடம் கருணை இருக்கிறது. நிதிதான் இல்லை என்று கருணாநிதி அவர்கள் நிராகரித்தது.

1982_இல் NGO போராட்டம் நடத்தினால் பதவியை விட்டு விலகி எதிர்போராட்டம் நடத்துவேன், இனியும் என்னை பயமுறுத்த முடியாது என திரு. எம்.ஜி.ஆர். எச்சரிக்கை செய்தது.

NGO போராடினால் அதைச் சந்திக்க தெருவிலே இறங்குவோம் என்று முதலமைச்சர் கலைஞர் பேசுவது.... ஆளும் கட்சியிலே இருக்கிற தொண்டர்கள் குண்டர்களாக மாறினால் அவர்களை தடுப்போம், எதிர்ப்போம் என்று சொன்னால், பெரியவர் கல்யாணசுந்தரம் நாங்கள் பூப்பறித்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று சொன்னார் அதை நான் வழி மொழிகிறேன்.

05.11.1982ல் கலைஞர் கருணாநிதி

அழைத்துப் பேசி விவகாரங்களை தீர்ப்பதற்குக் கூட தயாராக இல்லாத நிலைமை இம்மாநிலத்தில் உள்ளது. அது மாத்திரமல்ல கோரிக்கை எழுப்பினாலே அவன் விரோதி, தன்னுடைய கருத்துகளை எடுத்து வைத்தாலே அவன் பகைவன் என்பது மாத்திரம் அல்ல. அவன் ஒழித்துக்கட்டப்பட வேண்டியவன். அப்படிப்பட்ட இயக்கம் இந்த மாநிலத்தில் இருக்கவே கூடாது என்று பழி தீர்க்கிற முனைப்போடு ஒரு பரிபாலனம் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற காரணத்தால்தான் ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும் பாடிக் கறக்குற மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும். அடித்துக்கறக்கின்ற மாட்டை அடித்துக் கறக்க வேண்டும் என்ற பழமொழியில் மூன்றாவது வழியைத்தான் அரசு ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இது கலைஞர் 13.09.1986 இல் ஆற்றிய உரை:

(2009_ஆம் ஆண்டில், சத்துணவு ஊழியர் உண்ணாவிரத போராட்டம் நடத்த அறிவித்தபோது, “நானும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை’’ -கலைஞர்.)

அரசு ஊழியர், ஆசிரியர்கள் நல்ல நிலையில் இருக்கிறீர்கள். உங்களுடைய சம்பளத்திற்கும், பென்சனுக்கும் அரசின் வரி வருமானத்தில் 94% செலவாகி விடுகிறது. மீதி 6% ஐ வைத்து எப்படி ஏழைஎளிய மக்களுக்கு நலத்திட்டங்களை அறிவிப்பது 24.07.2001--இல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா.

அ.தி.மு.க. ஆட்சியில் 04.07.2003 ஊழியர்கள் 1,70,241 பணிநீக்கம். எஸ்மா, டெஸ்மா, வீடு புகுந்து கைது. அதை எதிர்த்து CITU தலைவர் T.K.ரங்கராஜன் உயர்நீதி மன்றத்தில் வழக்கு. இப்படி ஏராளமான ஆதாரங்களோடு பட்டியலிடப்பட்டுள்ளது.

1 1/2 வருடமாக MGRஐ பார்க்க முடியாத நிலைமையில் தமிழகத்திலிருந்து சென்ற அரசு ஊழியர் சங்கத் தலைவர்களை 8 நிமிடத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா சந்தித்தது.

CITU 11_வது அகில இந்திய மாநாட்டில் “அரசு ஊழியர்களும், அமைச்சர்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். எனவே எங்களால் அரசு ஊழியர்களுக்கும் எதிராக போர்தொடுக்க கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.....’’ மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா பேசியது.

மத்தியில் இடதுசாரித் தலைவர்கள் இந்திரஜித் குப்தா ஆட்சியில் இருந்த காரணத்தாலும், ஹரிகிஷன் சிங் சுர்ஜித் தலையீட்டாலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 40% ஊதிய உயர்வு வழங்கப்பட்ட சம்பவம் போன்ற இடதுசாரி தலைவர்கள் அரசு உழியர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட விதம் பற்றி மிகச் சரியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தவிர சங்கத்தை பலப்படுத்த தமிழகம் முழுவதும் சென்று ஊழியர்களை சந்தித்து, M.R. அப்பனும் மற்ற தோழர்களும் செயல்பட்ட விதம், சங்கத்தைக் கட்ட அவர்கள் பட்ட கஷ்ட நஷ்டங்களை விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டு இருக்கிறது.

புத்தகம் முழுவதும் அவ்வபோது ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், தேர்தல் முடிவுகள், அரசு அமைந்த வரலாறு, முக்கிய தலைவர்கள் மரணம். அரசின் வர்க்கப் பார்வை என ஏராளமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதோடு “நிகழ்ச்சிகளின் கால வரிசை’’ என்ற தலைப்பின் கீழ் வருட வாரியாக நிகழ்ச்சித் தொகுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இப்புத்தகத்தை மீண்டும் அசை போடுவதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. தோழர் D. லட்சுமணன் அவர்கள் அணிந்துரை புத்தகத்திற்கு வலு சேர்த்துள்ளது.

பொதுவாக ஆட்சியமைப்பு, அரசின் சம்பவங்கள், அரசு ஊழியர் போராட்ட இயக்க வளர்ச்சியில் M.R. அப்பன் மற்றும் மற்றவர்கள் பங்கு அமைப்பை எப்படி கட்டுவது போன்ற விஷயங்களை படிப்பதற்கு இதமாக இலகுவாக புதிய பாணியில் இப்புத்தகம் எழுதப்பட்டிருப்பது பாராட்டிற்குரியதாகும். அரசு ஊழியர், ஒவ்வொருவரும், தொழிற்சங்க ஊழியர் ஒவ்வொருவரும் 1980 _ 2008 தமிழகத்தின் அரசியல் வரலாற்றைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவரும் வாங்கி படித்து பயனுற வேண்டிய நூல்.