புதிய உலகின் ஒரு புதிய சூழலில் உலக கவனத்தைக் கவர்ந்து வரும் நாடு ஈரான்.அறிவியலும், தொழில் நுட்பமும் பழைய வாழ்க்கையைத் தகர்த்துவருகின்ற ஒரு சூழலில் நிலைப்படுத்தப்பட்ட தன்னுடைய செறிவான வாழ்க்கை முறையைத் தகர்ந்து விடாமல் அது பாதுகாத்து வருகிறது. மதவெறி, மத அடிப்படை வாதம், பயங்கரவாதம் போன்ற போக்குகளை விடாப்பிடியாக நிலைநிறுத்துவதில் தீவிரமாக இருந்து வருகிறது அது. அதற்கென்றே வடிவமைக்கப்பட்ட அரசியல் அதிகார வலிமையுடன் மக்களை அது அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறது. மனித இனத்தின் வாழ்க்கை வளர்ச்சிப் போக்கில் பல வகையான பின்னடைவு களுக்குக் காரணமாக உள்ள இந்த நிலைமையை எதிர்த்து இளைய தலைமுறை யினர் தங்களது படைப்புக்களின் ஊடாக எதிர்க்குரல் எழுப்புகிறார்கள்.

இதைத்தான் ஈரானிய இலக்கியங்கள் இப்போது துணிச்சலாக வெளிப்படுத்தி வருகின்றன. ஈரானியத் திரைப்படங்களும் கூட மிகுந்த தனித்தன்மையுடன் இறுக்கமான நெருக்கடி மிகுந்த வாழ்க்கை முறையைச் சித்தரித்துக் காட்டுகின்றன. கலை, இலக்கிய வெளிப்பாடுகளில் இன்றைய ஈரானின் உள்முகப் போராட்டத்தைக் காண முடிகிறது. கலைஞர்களும், சிந்தனையாளர்களும் அந்த வகையான பண்பாட்டுப் போராட்டத்தை நிகழ்த்தி வருகிறார்கள்.

வழக்கமாகவே, மாறுபட்ட தனித்துவமான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் விடியல் பதிப்பகம் ஈரானிய வாழ்க்கையை வெளிப்படுத்தும் விதத்தில் இரண்டு நூல்களைச் சித்திரக்கதை வடிவத்திலேயே வெளியிட்டிருக்கிறது. இவை சித்திரக்கதை வடிவத்திலுள்ள சீர் அசலான தன் வரலாறு என்று குறிப்பிடுவதுதான் மிகவும் பொருத்தம். இவற்றை எழுதியுள்ள மர்ஜானே சத்ரபி ஒரு வரைபடக் கலைஞர். குழந்தைகளுக் கான கதைகள் பலவற்றை வரைபட வடிவங்களில் எழுதியுள்ளவர். ‘தி நியூ யார்க்கர்’, ‘நியூயார்க் டைம்ஸ்’ போன்ற பத்திரிகைகளில் அவை வெளியாகி உள்ளன. அதன் காரணமாகவே அவர் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை ஒரு முழுக் கதையை வரைபடங்களின் ஊடாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதை, அப்படியே மொழி மாற்றம் செய்து தமிழுக்குக் கொண்டு வந்து சாதனை படைத்திருக்கிறது விடியல் பதிப்பகம்.

வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் செய்திகளைத் தெரிந்து கொள்வதிலேயே பயிற்சி பெற்றிருக்கிறார்கள். மனதிற்குள் அவற்றைக் காட்சிப்படுத்தி உள்வாங்கிக் கொள்ள முயற்சிப்பதில்லை. ஆழ்ந்த வாசிப்புக்கு அவர்கள் தங்களைப் பயிற்சி செய்து கொள்வதில்லை. அந்த வகையான பயிற்சியை உருவாக்குவதற்காகவே குழந்தைப் பருவத்தில் சித்திரக் கதை வடிவத்தில் பாடம் கற்பிக்கும் முறை இருந்து வருகிறது. இது, வாசிப்பில் ஏற்படும் புரிதலை ஆழப்படுத்துகிறது. அழுத்தமான பதிவுகளை மனதில் இருத்துகிறது. இந்த உத்தி முறையைப் பின்பற்றியே ஒரு வாழ்க்கைக் கதையை வடிவப் படுத்தியிருக்கிறார் மர்ஜானே சத்ரபி.

வார்த்தைகளில் கதை சொல்லுவதை விடவும், வரைபடங்களின் வாயிலாகக் கதை சொல்லுவது மிகுந்த அளவுக்குக் குழந்தைமையை மேற்கொள்ள வேண்டிய ஒரு செயல். அதைச் சாதித்திருக்கிறார் மர்ஜானே சத்ரபி. அதைச் சிறப்பாக மொழிபெயர்த்துத் தமிழ்வரிவடிவில் கொண்டுவந்திருப்பது இன்னொரு தனிச்சிறப்பு. குழந்தைகள் முதல் பெரியவர் உட்பட எவரும் எளிதில் வாசிக்கலாம். அந்த அளவிற்குக் காட்சி வடிவத்தில் ஒவ்வொரு நிகழ்வும் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. நிகழ்வின் பின்னணி அசைவுகள், முகபாவங்கள், தோற்றங்கள், சாதனங்கள் என்பவை எல்லாமே சரியான விகிதாச்சாரங்களோடு துல்லியமாக உள்ளன. குழப்பம் சிறிதும் இல்லாத தெளிவான மொழி பெயர்ப்பில் உரையாடல்களும், விளக்கங்களும் உள்ளன.

மர்ஜானே சத்ரபியின் பத்தாவது வயதில் தொடங்கும் அனுபவங்கள் தொடர்ந்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொகுப்புக்களிலும் காணப்படுகின்றன. ஒன்று ‘ஒரு குழந்தைப் பருவத்தின் கதை’ என்ற அளவில் உள்ளது. இரண்டாவது ‘திரும்பும் காலம்’ என்ற வகையில் உள்ளது.

கருப்பொருளையும் அதற்குரிய வாழ்க்கைச் சூழல்களையும் மொழிபெயர்ப்பாளர் சுருக்கமாகச் சொல்லுகிறார்: “ஒரு சோசலிச சமூக அமைப்பை நிறுவுவதற்கான போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் மரபில் வந்த முற்போக்கான குடும்பத்தில் பிறந்து, இஸ்லாமியப்புரட்சி நடைபெற்ற காலத்தில் அங்கு தனது குழந்தைப் பருவத்தைக் கழித்த ஒரு பெண் என்ற முறையில் சத்ரபியின் அனுபவங்களைச் சித்தரிக்கின்றது இந்நூல்’’

கல்விச் சூழல், குடும்பச் சூழல், சமூகச் சூழல் போன்றவற்றிற்கு இடையில் மகிழ்ச்சியான, சுதந்திரமான ஒரு தார்மிக வாழ்க்கை அனுபவங்களே இந்த இரண்டு புத்தகங்களிலும் சித்திரிக்கப்படுகின்றன. ஒவ்வொருவரின் தனித்தன்மைகளும், மனப்போக்குகளும், உறவுகளும் மர்ஜானே சத்ரபியின் வாழ்க்கையை எப்படியெல்லாம் வடிவமைக்கின்றன என்பதைத் துல்லியமாகச் சித்திரித்திருக்கிறார் சத்ரபி. இதன் பின்னணியில் ஈரானியச் சமுதாயத்தின் நிலைமையைப் புரிந்துகொள்ள முடிகிறது.

சமூகம் என்ற கட்டமைப்பிற்குள் ஒரு பெண்ணின் இயல்பான விருப்பங்களும் தார்மீகமான பார்வைகளும், நேர்மையான நடைமுறைகளும் எப்படி மறுக்கப்பட்டு அவளை மனத் துயரங்களுக்கும், தவிப்புகளுக்கும் இடையில் சிதைவடையச் செய்கின்றன என்ற உண்மையை இவை புலப்படுத்துகின்றன. தாய் நாட்டையே வெறுத்து வெளியேறும் ஒரு நிலைமைக்கு ஈரான் நாட்டுச் சூழல்கள் அமைந்திருக்கும் ஓர் அபத்த நிலையை அடையாளம் காட்டுகின்றது இந்தத் தன் வரலாறு. வசதிகள் இருந்தும் சுதந்திரமாக வாழ்வதற்குரிய சூழல் இல்லாமல் நாட்டைத் துறந்து அகதியாக வெளியேறுகிறார் மர்ஜானே சத்ரபி.

டெஹ்ரான், வியன்னா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் கல்வி கற்ற மர்ஜானே சத்ரபி தன்னுடைய தாய்நாடான ஈரானுக்கு வெளியே சுதந்திரமாக மூச்சுவிட விசாலமான உலகம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்கிறார். அவருடைய பெற்றோர்களும், மூத்த தலைமுறையைச் சேர்ந்த அவருடைய பாட்டியும் சுதந்திரத்திற்கான அவருடைய விருப்பத்தைப் புரிந்து கொண்டு அவர் நாட்டை விட்டு வெளியேறப் பல வகைகளிலும் அவருக்கு உதவுகிறார்கள்.

நாட்டைவிட்டு முதல்முறையாக வெளியேற விருக்கும் மர்ஜானே சத்ரபியிடம் அவருடைய பாட்டி இப்படிச் சொல்கிறார்! ‘‘வாழ்க்கையில் பல ஏற்ற இறக்க வரிசைகளைச் சந்திக்கப் போகிறாய். அவற்றால் வருந்த நேரிட்டால் அவை முட்டாள் தனமானவை என்று உனக்கு நீயே சொல்லிக் கொள்! அவற்றின் குரூரத்தை எதிர் கொள்ள அது உதவும். ஏனென்றால், வெறுப்பையும், பழிவாங்கும் வெறியையும் விட மோசானது எதுவுமில்லை சுயமரியாதையை ஒரு போதும் விட்டுக் கொடுக்காதே. உனக்கு நீ உண்மையாக இரு!’’

மர்ஜானே சத்ரபி ஆஸ்திரியாவில் கண்ட அனுபவங்கள் அவருடைய பாட்டியின் கருத்துகளை நிருபிக்கக் கூடியவையாகவே இருந்தன. அடக்கு முறையும், ஒடுக்கு முறையும் நிறைந்த ஈரானுக்கு வெளியேயும் வாழ்க்கை அவருடைய மனத்தை அவலப்படுத்தியது.

வியன்னாவில் நான்கு ஆண்டுகாலம் வாழ்க்கையைக் கழித்த மர்ஜானே சத்ரபி ஐரோப்பியக் கலாச்சாரத்தின் ஆரவாரத்தையும், அவலத்தையும் கண்டு மனம் வெதும்புகிறார். மீண்டும் டெஹ்ரானுக்குத் திரும்புகிறார். அடிப்படை வாதத்திற்குக் கட்டுப்பட்டிருக்கும் ஈரானிய மக்கள் ஐரோப்பாவைக் குறித்தும், அதனுடைய நவீன வாழ்கையைக் குறித்தும் கண்டு வரும் கனவுகளைக் கண்டு வருத்தமடைகிறரர். மதவாத நாட்டு வாழ்க்கைக்கும் நவீனமான கட்டுப்பாடில்லாத வாழ்க்கைக்கும் இடையில் மர்ஜானே சத்ரபி அகப்பட்டுத் தவிக்கிறார்.

அமைதியிழந்த அவர் மீண்டும் நாட்டைவிட்டு வெளியேற விரும்புகிறார். அவருக்கான ஒர் உலகத்தைக் கண்டடைவதற்கான பயணத்தை அவர் மேற்கொள்கிறார். ‘‘என் நாட்டில் ஆக்கபூர்வமாக எதுவும் செய்ய முடியாத நிலையில் அங்கிருந்து வெளியேற மீண்டும் தயாரானேன். ஸ்ட்ரால் போர்க்கிலுள்ள கலைக்கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வை எழுதுவதற்காக 1994 ஜூனில் நான் முதன் முதலில் பிரான்சுக்கும் சென்றேன்.’’

ஈரான் - ஒரு குழந்தைப் பருவத்தின் கதை பக்: 154 | ரூ.100

ஈரான் - திரும்பும் காலம்

பக்: 188 | ரூ.100

- மர்ஜானே சத்ரபி

தமிழில்: எஸ். பாலச்சந்திரன்

விடியல் பதிப்பகம்

கோவை - 15