சுயகல்வியைத் தொடர்ந்து பலப்படுத்திக் கொள்வதன் மூலம் ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையை சகலவழிகளிலும் மேம்படுத்திக் கொள்ள முடியும். அதற்கு மாறாக சுயகல்வியின் மீது பற்று இல்லாத அல்லது அதற்கான முயற்சிகள் கூட இல்லாதவர்களாக பலர் உள்ளனர். அவர்களின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால், பல்வேறு இன்னல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் உலகில் ஒருவித அச்சத்துடனேயே வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒருவித மன அழுத்தத்துடனேயே வாழ்க்கையை கடக்க வேண்டியவர்களாக உள்ளனர். அவ்வாறு உள்ளவர்கள் எதிலும் ஈடுபாடு இல்லாதவர்களாக காலப்போக்கில் மாறி வருகிறார்கள் அது ஒரு இயந்திரத்தனமாக வாழ்வை அவர்களிடம் ஏற்படுத்தி வருகிறது. எனவே சுயகல்விப் பயிற்சியை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் தனது வாழ்க்கையை உரிய வகையில் அமைத்துக்கொண்டு சமூக மாறுதலுக்கான பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்களாக மாற முடியும்.

தொடர்ந்து வாசிப்புப் பழக்கம் ஒரு மனிதனை மேம்படுத்தும். அதேபோல் நாம் கற்றுக் கொண்டதை வெளிப்படுத்துவதில் ஒரு முக்கியமான அம்சம் மற்றவர்களுக்கு கற்றுக்கொடுப்பது என்பதாகும். கற்றுக்கொடுப்பது என்பதில் நாம் படித்தவைகளைத் தொடர்ந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது அல்லது ஒருவிஷயத்தைப் பற்றி மற்றவர்களுடன் விவாதங்களை நடத்துவது, கூட்டாகப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பது போன்ற பணிகளையும் மேற்கொள்ளலாம்.

கற்பதும், கற்றுக்கொடுப்பதும் இணைந்ததாக வாழ்வு அமைந்தால் மனிதனின் வாழ்வு முன்னேற்றகரமாக அமையும். உதாரணமாக திருப்பூரில் அண்மையில் மார்க்சிய தத்துவம், மார்க்சிய அரசியல் பொருளாதார வகுப்புகள் மாவட்ட அளவிலும், பகுதி அளவிலும் காலை 6.30 முதல் 7.30 வரை தினசரி ஒருமணி நேரம் என 15 நாட்கள் தொடர்வகுப்பாக நடைபெற்றது. கற்பது குறித்தான ஆர்வம் இல்லாத பலரிடம் இந்நிகழ்வின் மூலம் மாறுதல் தெரிந்தது. ஒரு குறிப்பிட்ட கால அளவிலேயே மாறுதலைப் பார்க்க முடிகிறது என்கிற போது அது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தால் அது வாழ்க்கையின் ஒரு தனித்துவத்தை ஒவ்வொருவரிடமும் ஏற்படுத்தும். கற்பதும் கற்றுக்கொடுப்பதும் ஒரு உன்னதமான பணியாகும்.