இது மனித இனத்தின் மனங்களை உலுக்கும் ஓர் அமெரிக்க மனிதனின் உயிர்க்குரலாக வடிவம் பெற்றுள்ள ஒரு வரலாறு. தமிழில் உணர்ச்சி ததும்பும் மொழிநடையில் மொழியாக்கம் செய்யப் பட்டிருப்பது ஒரு தனிச்சிறப்பு. தொடக்கம் முதல் முடிவு வரை மனத்தைப் படபடக்கச் செய்யும் செய்திகளை இந்த நூல் உள்ளடக் கியிருக்கிறது. இயல்பான தமிழ் நடையில் சரளமாகச் செய்திகளை விறு விறுப்புடன் வெளிப்படுத்தும் நோக்கத்தில் இந்த நூல் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கும் அசோகன் முத்துசாமி வியப்புக்கு உரியவர். ஒரு மொழிபெயர்ப்புக் கூட, ஒரு படைப் பாக்கத்தின் தன்மையைப் பெறமுடியும்  என்று உணரச் செய்கிறது இது. உண்மையில் மொழி பெயர்ப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அடுத்து, இந்த வரலாற்று நூலின் தனிச்சிறப்பு என்பது அமெரிக்காவை எந்த விதத்திலும் கொச்சைப் படுத்திவிடக்கூடாது என்ற எச்சரிகையோடு விழிப்புடன் இருந்து வரும் தமிழ் ஊடகங்களுக்கு இது அதிர்ச்சியைத் தரக்கூடியதாக இருக்கிறது. அமெரிக்கா பற்றிய கற்பனைகள¬யும், கனவு களையும், ஊகங்களையும், மதிப்பீடுகளையும் அடியோடு தகர்க்கக் கூடியதாக இந்த நவீன வரலாறு அமைந்திருக்கிறது.

மக்களாட்சி நடைபெற்று வரும் நம்முடைய நாட்டில் நம்முடைய வாழ்க்கை நம்மால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதைத் தகுந்த ஆதாரங்களோடும், ஆவணங்களோடும் இந்த வரலாறு உறுதிப்படுத்துகிறது. வருகின்ற 2020-ல் இந்தியா உலகில் ஒரு 'சூப்பர் பவர்' ஆகும் என்ற கற்பனையையும், கனவையும் கேள்விக்குறியாக்குகிறது.

இந்தியாவின் நில வளமும், நீர் வளமும், மனித வளமும் மண்ணின் மைந்தர்களுக்குச் சொந்தமாக இருக்குமா என்று சந்தேகம் கொள்ளச் செய்கிறது. உலகமயமாதலும், தாராளமயமாதலும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் இந்திய மக்களைக் கடைத்தேறச் செய்யுமா? நவீன காலனி ஆதிக்கம் இந்தியாவில் நிறுவப்படுமா? இந்தியாவின் தனித்தன்மை வாய்ந்த வாழ்க்கை முறைகளும், கலாசாரங்களும், பண்பாடுகளும் தொடர்ந்து நிலைத்திருக்குமா? அறியாமையிலும், ஏழ்மையிலும் வதைப்பட்டுக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான வாழ்க்கை என்னவாகும்? நவீனகால அடிமைகளாக இந்திய மக்கள் பிழைப்புக்காக தூர தேசங்களை நோக்கிச் சிதறிப் போய்விடுவார்களா? இப்படிப் பல கோணங்களிலும் சிந்தித்துப் பார்ப்பதற்கு ஒரு தூண்டுகோலாக இந்த வரலாற்று நூல் அமைந்துள்ளது.

ஜான் பெர்க்கின்ஸின் மனக்குமுறல் களை "ஒரு பொருளாதார அடிமையின் வாக்குமூலம்" நூலில் கண்ட பலருக்கு, அதன் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள இந்தப் புதிய வரலாறு, இன்னும் கூடுதலான அச்சம் தரக்கூடிய செய்திகளை நமக்குத் தெரிவிக்கிறது.

நம்மைச் சுற்றிலும் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய ஒரு கணிப்பு நம் ஒவ்வொருவருக்குமே இருக்கிறது. அவையெல்லாம் எப்படி எதற்காக, எவரால், எங்கிருந்து ஏவப்படுகிறது என்பதைப் பற்றி எதையும் அறிந்து கொள்ள முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். இந்த நிகழ்கால வரலாற்று நூல் எவ்வளவோ புதிர்களுக்கு விடையளிக் கிறது. கற்பிக்கப்படும் கருத்துகளெல்லாம் எந்த அளவிற்கு மாயையானவை என்பதை இந்த வரலாறு நமக்குப் புலப்படுத்துகிறது. நமது ஊடகங்கள் அமெரிக்காவின் நடவடிக்கைகளை யெல்லாம் எந்த அளவுக்கு நியாயப்படுத்து கின்றன என்பதை நமக்குப் புரிய வைக்கின்றன. அவை கம்யூனிச எதிர்ப்பை எப்படியெல்லாம் தந்திரமாகச் செய்கின்றன என்று அடையாளம் காட்டுகிறது.

அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து ஜான் பெர்க்கின்ஸ் வெட்கமும், வேதனையும், அவமானமும் அடைகின்றார். இது, கோடிக்கணக்கான அமெரிக்கர்களின் மன வெளிப்பாடாகவே உள்ளது. அமெரிக்கா ஆற்றிய ஆளும் பணிகளை  ஜான் பெர்க்கின்ஸ் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்:

"ஜனநாயகத்திற்கும், நீதிக்கும் உதாரணமாக இருநூறு ஆண்டுகாலம் அமெரிக்கா திகழ்ந்தது. எங்களது சுதந்திரப் பிரகடனம் மற்றும் அரசியல் சட்டம் ஒவ்வொரு கண்டத்திலும் சுதந்திரப் போராட்டங்களுக்கு உத்வேகம் அளித்தன. எங்களது இலட்சியங்களைப் பிரதிபலிக்குக்கூடிய உலகளாவிய அமைப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை நாங்கள் வழி நடத்தினோம்.

இருபதாம் நூற்றாண்டில் ஜனநாயகத்தையும், நீதியையும் ஊக்குவிக்கும் இயக்கங்களில் எங்களது தலைமைப் பாத்திரம் அதிகரித்தது. ஹாகில் சர்வதேச நீதிமன்றம் அமைத்தது; நாடுகளின் கூட்டமைப்புக்கான ஒப்பந்தம்; ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம்; அனைவருக்குமான மனித உரிமைகள்; ஐ.நா. சபையின் மரபுகளை உருவாக்குவதில் நாங்கள் முக்கியமான பங்கு வகித்திருக்கிறோம்."

எனினும், உலகிற்கு ஒரு முன்மாதிரியாக இருந்த எங்கள் நாடு பேரரசை நிறுவத் துடிக்கும் நிறுவன அதிகார வர்க்கத்தின் முயற்சிகளால் களங்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போர் முடிந்ததிலிருந்து உலகத் தலைவர் என்கிற எங்கள் நிலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஈக்வடார் மக்கள் மற்றும் அதன் அண்டை நாட்டு மக்கள் எங்களது கொடூரம் கண்டு கொதித்துப் போயிருந்தார்கள்.

எங்களது கொள்கைகளில் இருந்த வெளிப்படையான முரண்பாடுகள் கண்டு குழப்படைந்தார்கள் என்பதை 'அமைதிப்படை' தொண்டனாக இருந்தபோது அறிந்திருந்தேன். வியட்நாம் போன்ற இடங்களில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாக நாங்கள் கூறிக் கொள்கிறோம்; அதே நேரத்தில் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர்களைத் தூக்கி எறிகிறோம். படுகொலை செய்கிறோம். சிலியின் அலேண்டே, கவாதமாலாவின் ஆர்பென்ஸ், ஈரானின் மொஸ்ஸாத், பிரேசிலின் கோலோர்ட், இராக்கின் காசிம் ஆகியோரை அமெரிக்காதான் பதவியிலிருந்து தூக்கி எறிந்தது என்பதை லத்தீன் அமெரிக்கா முழுவதும் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். நம்முடைய மாணவர்களுக்கு அத்தகைய விஷயங்கள் பற்றி தெரியாது என்ற போதும், வாஷிங்டனின் கொள்ளை உலகில் ஒரு குழப்பமான செய்தியைப் பரப்புகிறது.

பரிசுத்தமான நமது இலட்சியங்களுக்கு விரோதமாக நமது செயல்கள் இருக்கின்றன. தங்களது நாடுகளைத் திவாலாக்கி, தங்களுக்குப் பெருமளவு சொத்துச் சேர்த்துக் கொண்ட அந்த ஊழல் தலைவர்களுக்கு எதிர்ப்பு பெருகி வந்தபோதும், அமெரிக்கா அவர்களைப் புகழ்ந்தது. இன்னும் மோசம் என்னவென்றால் எல்சால்வடார், குவாதமாலா, நிகாரகுவா ஆகிய நாடுகளில் வலதுசாரி சர்வாதிகாரிகளை அமெரிக்கா ஆதரித்தது. (பக். 139-140)

இதுதான் இந்த வரலாற்று நூலின் உள்ளடக்கம்! இதை எந்த ஓர் அரசியலையும் சார்ந்திராத மனிதா பிமானியான ஜான் பெர்க்கின்ஸ் தன்னுடைய நூலின் வாயிலாக நிரூபணம் செய்ய முனைகிறார். அதற்கான ஆவணங்களையும், தரவுகளையும் தன்னுடைய நேரடி யான சொந்த அனுபவங்களிலிருந்தே அடையாளப்படுத்து கிறார். நானூறு பக்கங்களில் அறுபத்தைந்து அத்தியாயங் களில் உலக அரசியலின் நடைமுறைகளையும், போக்கு களையும் நமக்கு அடையாளப்படுத்தியிருக்கிறார் ஜான் பெர்க்கின்ஸ். ஒரு பொருளாதார அடியாளாக இருந்து கொண்டு கடந்த பல பத்தாண்டுகளில் தான் நிகழ்த்திய அநியாய, அக்கிரமச் சூழ்ச்சிச் செயல்களை முன்வைத்து மனம் திறந்து வாசகனோடு உரையாடுகிறார். அரசியல் தளங்களில் உலக அளவில் அமெரிக்கா நிகழ்த்தும் சதுரங்க விளையாட்டை ஜான் பெர்க்கின்ஸ் வெளிச்சத் திற்குக் கொண்டு வருகிறார். ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன், அமெரிக்கா போன்ற கண்டங்களில் உள்ளடங் கியிருக்கும் நாடுகளில் நிறைந்திருக்கும் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக அமெரிக்காவும், அதன் உளவு நிறுவனங்களும் செய்துவரும் சகலவிதமான சதிகளையும் அவர் அம்பலப்படுத்துகிறார்.

கனிவளங்களும், எண்ணெய் வளங்களும், இயற்கை வளங்களும் எப்படியெல்லாம் கொள்ளையடிக்கப்படுகின்ற என்பதைத் தகுந்த ஆதாரங்களோடு நிறுவுகிறார். விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசியல் இயக்கங்களை அமெரிக்கா எப்படியெல்லாம் அழித்தொழிக்கின்றது என்பதை வெளிப்படுத்துகிறார்.

ஓர் அமெரிக்கர் என்ற நிலையில் தன்னுடைய தாய் நாட்டைப் பற்றியும், தன்னுடைய மக்களைப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் கவலைப்படும் ஜான் பெர்க்கின்ஸ் அமெரிக்காவின் தேசியக் கடன் 2006-ஆம் ஆகஸ்ட் மாதம் 8.5 டிரில்லியன் டாலர்கள். (அமெரிக்க அரசாங்கத்தின் கடன் பத்திரங்களை வைத்துக்கொண்டு கடன் கொடுத்திருப்பவர்களுக்கு அமெரிக்க அரசாங்கம் கொடுக்கவேண்டிய தொகை) இது உலகிலேயே மிக அதிகமாகும். சராசரியாக ஒவ்வொரு அமெரிக்கர் தலையிலும் 28,500 டாலர்கள். அது ஒவ்வொரு நாளும் 17 பில்லியன் டாலர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கடனின் பெரும்பகுதி ஜப்பான் மற்றும் சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் மத்திய வங்கிகளால் கொடுக்கப்பட்ட கடனாகும். இது அவர்கள் முன் நம்மை பலவீனமாக்குகிறது. (பக் . 359)

"உலகை மாற்ற வேண்டுமானால் நிறுவன அதிகார வர்க்கத்தை மாற்ற வேண்டும்; இந்தச் சொற்ப மனிதர்கள் உலகின் தலைவிதியை நிர்ணயிக்க தொடர்ந்து அனுமதிக்கக் கூடாது. பனிச்சிகரங்கள், பனிப்பாறைகள், இலையுதிர்கால அற்புதக் காட்சி மற்றும் நம் சந்ததியினர் மீது அவர்கள் நடத்தும் தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும்." என்ற செய்தியைத் தெரிவிக்கிறார்  ஜான் பெர்க்கின்ஸ்.

மண்ணிலிருந்து இந்தப் புவிக் கோளத்தின் அழகைப் பார்ப்பதைவிட விண்ணிலிருந்து அதன் அழகைப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார் அவர். அனைவரும் அவசியமும் படித்துணர வேண்டிய அருமையான நூல் இது.

இன்றைய உலகின் உண்மைத் தோற்றத்தை இது காட்டுகிறது.

- சி.ஆர்.ரவீந்திரன்