ஆங்கிலத்தின் முதல் அகராதியை உருவாக்கிய சாமுவேல் ஜான்சனும், அதனை வெளியிட பொருளுதவி செய்த ஐந்து பெரிய மனது படைத்த சமூக ஆர்வலர்களும் கடனாளிகளாகவும் நோயாளிகளாகவும் எத்தகைய குறைந்த பட்ச அங்கீகாரமும் இன்றி மடிந்தனர். சாமுவேல் ஜான்சனின் வாழ்க்கை வரலாறு ஒன்றை எழுதி ஜேம்ஸ் போஸ்வெல் நோபல் பரிசு பெற்றார்! ஆனால் சாமுவேல் ஜான்சன்... கடன்களை அடைக்கப் போராடி இறுதி வரை கரை சேர முடியாமல் துயரமே வாழ்வாய் நொடித்தாலும் 1,36,000 சொற்களை பொருளுடன் தொகுத்து, இன்று ஆக்ஸ்போர்டு அகராதிவாதிகளின் செல்வச் செழிப்பிற்கு வழி வகுத்துச் சென்றதை வரலாறு பதிவு செய்துள்ளது.

தமிழில் நிகண்டுகளின் வழியே அகராதிகள் வருகின்றன.. அபிதான சிந்தாமணி தொகுதி மட்டுமல்ல... இன்றைய அகராதி முயற்சிகள் வரை எதற்குமே சரியான அங்கீகாரம் கிடையாது. படைப்பிலக்கியத்திற்கு வழங்கப்படும் விருதுகள், பரிசுகள்.. பதவிகள்.. அகராதி, கலைக்களஞ்சியம் தயாரிக்கும் அந்த துறைப்பக்கம் எட்டிப் பார்ப்பது கூட இல்லை. தமிழின் அறிவியல் அகராதியை உருவாக்கிய பேரா. அ.இ.மூர்த்தி முதல் க்ரியாவின் அகராதி வரை எல்லோருக்கும் அதுதான் நிலை. கடும் உழைப்பு தேவைப்படும் இத்துறைதான் நமது தமிழ் மொழியின் பயன்பாட்டை அடுத்த நிலைக்கு உயர்த்த முடியும்...

அரசு நடத்தும் பல்கலைக் கழகங்களில் அகராதி தயாரிப்பு என ஏராளமான தொகை ஒதுக்கி மூன்று அரசு நிறுவனங்கள் (சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம்) தனித்தனியே மூன்று அகராதிகளை தயாரிக்க பல ஆண்டுகளாக தொகை ஒதுக்குவதோடு சரி... எதற்காக மூன்று தனி முயற்சிகள் ... ஏன் ஒரே கூட்டு முயற்சியாக இருக்கக்கூடாது... இப்படி பல கேள்விகள் நமக்குத் தோன்றினாலும் அகராதிகள் வந்தால் சரி என்று பதற வேண்டிய நிலை.. இதில் அரசு சாராத தனி பதிப்பகங்களும், தனி மனிதர்களும் ஆர்வலர்களும் கடும் உழைப்பில் உருவாக்கும் அகராதிகளும் கலைக்களஞ்சியங்களும் போதுமான அங்கீகாரம் பெற்று... ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பது இன்றைய தேவை.

பல கோடி செலவு செய்து ராஜராஜ சோழனுக்காக ஒரு ஆயிரம் ஆண்டு விழா கண்ட நமது அரசு... ஒரு அகராதியின் உருவாக்கம் என்பது... மொழியில் ஒரு பெரிய கோயிலை உருவாக்குவதுதான். அதுதான் சிறப்பான காரியம். தமிழ் ஆர்வலர்களும் பரந்துபட்ட வாசகர்களும் ஈடுபடாமல் தள்ளி வைக்கப்பட்டு வெறும் பேராசியர்களே எத்தனை விலை உயர்ந்த தாளில் அச்சிட்டு அகராதி போட்டாலும் அது நூலகங்களில் தூங்குவதைத் தவிர வேறு எவ்விதத்திலும் பலன் அளிக்கப் போவதில்லை என்பதே நாம் காணும் உண்மை நிலை.

-ஆசிரியர் குழு